பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்

வரலாற்றுத் துறையின் மீது வன்முறையை ஏவுகிறது பாஜக – பேரா ஆ.சிவசுப்பிரமணியன்

இந்தியாவின் 12,000 ஆண்டு கால வரலாற்றை மீண்டும் எழுதுவதற்காக கலாச்சார நிபுணர் குழு ஒன்றினை இந்திய அரசு அமைத்துள்ளது. அக்குழுவில் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களும், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இல்லை என்ற விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மேலும் ஒரு குறிப்பிட்ட உயர் சாதியினர் மட்டுமே அக்குழுவில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. பல்வேறுபட்ட நிலப்பரப்பைக் கொண்ட இந்தியாவிற்கு ஒரே வரலாற்றை எழுதுவது சாத்தியமா என்று Madras Radicas-லிருந்து பேராசிரியரும் ஆய்வாளருமான ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களை அணுகினோம். 

பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் சமூகவியல், நாட்டுப்புறவியல், பண்பாட்டியல் என பல தளங்களில் இயங்கிவரும் மிக முக்கியமான நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் ஆவார். ஊர் ஊராக தேடிச் சென்று பல்வேறு நாட்டுப்புறக் கதையாடல்கள் மற்றும் வழக்காறுகளை சேகரித்து எளிய மக்களின் வரலாற்றினை வெளிக்கொண்டு வந்தவர். அடித்தள மக்கள் வரலாறு, நாட்டார் வழக்காற்றியல் அரசியல், வரலாறும் வழக்காறும், தமிழகத்தில் அடிமை முறை உள்ளிட்ட பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். 

அவரிடம் காலனிய காலம் முதல் தற்போது வரை இந்திய வரலாறு எவ்வாறு எழுதப்பட்டது என்பது குறித்த கேள்விகளை வைத்தோம். 

Madras Radicals: காலனிய காலத்தில் இந்திய வரலாறு எழுதப்பட்டதில் போதாமை இருக்கிறதா? 

பேரா ஆ.சிவசுப்பிரமணியன்: ஆம் இருந்தது. போதாமையைத் தாண்டி தவறு என்றே சொல்லலாம்.  வரலாறு என்கிற அறிவுத்துறை ஐரோப்பாவில் புத்தொளி காலத்தில் தோன்றியது போல நம் நாட்டில் தோன்றவில்லை. நம்மமுடைய வரலாறு கோயில், கல்வெட்டு, இலக்கியம், பாடல்கள் என்று புதையுண்டு கிடக்கிறது.  இவை ஒரு அறிவுத் துறையாக முழுமையாக வளரவில்லை. எனினும் நமக்கு வரலாறு இருந்தது. இருந்தும் இந்திய வரலாற்றை எழுதியவர்கள் இதனை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

ஏனென்றால் காலனிய காலத்தில் இந்திய வரலாறு என்பது தன்னின உயர்வு மனநிலை கொண்ட ஆங்கிலேயர்களால் எழுதப்பட்டது. மில் போன்ற ராணுவ அதிகாரிகள் எழுதினார்கள். மெக்காலே போன்றவர்கள் இந்தியர்களுக்கு பெரிய இலக்கியப் பாரம்பரியமோ, வரலாற்றுப் பாரம்பரியமோ இல்லை என்ற கருத்தோட்டம் உடையவர்கள். இந்தியாவின் வரலாற்றை ஒரு சிறு பேழைக்குள் அடக்கி விடலாம் என்று மெக்காலே கூறினார். இப்படிப்பட்ட புரிதல் உள்ளவர்கள்தான் இந்திய வரலாற்றை வடிவமைத்தனர். எனவே தொடக்கத்தில் இருந்தே இந்திய கல்விப்புல வரலாறு தன்னின உயர்வுவாத மனநிலை கொண்ட ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது எனலாம்.

ஆங்கிலேர்கள் அவர்கள் எழுதிய வரலாற்றை தங்கள் ஆட்சிக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொண்டார்கள். உலக வரலாறு குறித்த காலப்பகுப்பினை தொடக்க காலம், மத்திய காலம், நவீன வரலாறு என்று பிரித்தார்கள். இதுதான் உலக நடைமுறை. 

ஆனால் இந்த மூன்று காலங்களும் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. ஆனால் ஆங்கிலேயர்கள் தொடக்க கால வரலாறு என்பதை எழுதிவிட்டு, மத்திய கால வரலாற்றை இஸ்லாமியர் காலம் என எழுதினர். நவீன கால வரலாறு என்பதை பிரிட்டிஷ் காலம் என்று எழுதினார்கள். முகலாயர்களை அழித்து ஆங்கிலேயர்கள் நமக்கு விடுதலை கொடுத்தனர் என சித்தரிக்கும் வண்ணம்தான் ஆங்கிலேயர்கள் நம் வரலாற்றை எழுதினார்கள். அப்படி அவர்களின் பார்வையில் எழுதப்பட்ட வரலாற்றைத் தான் இன்றுவரை நாம் பின்பற்றுகிறோம்.

தமிழர்களுக்கு மத்தியகால வரலாறு என்பது இடைக்கால சோழர் வரலாறு ஆகும். இக்காலத்தில்தான் கலைகள், இலக்கியம், கட்டடவியல் ஆகியவை வளர்ந்திருந்தன. இக்காலத்தில் தான் தமிழகத்தில் சமயத்தின் தாக்கம் அதிகமாக பரவி இருந்தது. ஆனால் இந்த காலகட்டத்தில் இஸ்லாமியர்கள் ஆட்சி தமிழ்நாட்டில் வரவில்லை. எனவே இடைக்கால வரலாறு என்பதே இஸ்லாமியர் வரலாறு என்று சொல்வது தமிழகத்திற்கு பொருந்தாது.

இந்தியப் பரப்பு முழுவதும் ஒரே காலம், ஒரே நூற்றாண்டுகளில் ஒரே மாதிரியான வரலாறு தான் இருந்தது என்ற அடிப்படையில் காலத்தை பிரிப்பது தவறானது. எனவே ஆங்கிலேயர்கள் உருவாக்கிய வரலாறு என்பது அவர்களின் கண்ணோட்டத்தில் உருவானதே தவிர, நம்முடைய வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை அல்ல. நாகரீகத்தின் ஒளியை ஆங்கிலேயர்கள் தான் நமக்கு கொடுத்தார்கள் என மறைமுகமாக தெரிவிக்கும் வண்ணம் அவை எழுதப்பட்டிருக்கிறது.

Madras Radicals: காலனிய கால பாதிப்பு நமது ஆய்வாளர்களுக்கும் இருந்ததா? காலனியத்திற்குப் பின் எழுதிய வரலாறு மற்றும் அதன் தாக்கம் எப்படி இருந்தது?

பேரா ஆ.சிவசுப்பிரமணியன்: நமது ஆய்வாளர்களுக்கு காலனிய கால வரலாற்றுப் பார்வையின்  தாக்கம் இருந்தது என்றோ அல்லது முழுமையாக இல்லை என்றோ சொல்லிவிட முடியாது. காலனிய காலத்தில் கிடைத்த புதிய வெளிச்சத்தில் நவீன கல்வியின் அடிப்படையில் இந்திய வரலாற்றை எழுதினார்கள். அவர்களிடம் இரண்டு விதமான போக்கு இருந்தது. 

ஒன்று தேசிய இயக்கத்தின் தாக்கம். இந்திய தேசியப் போராட்டம் வலுவாக இருந்த காலகட்டத்தில் நாமே நமது வரலாற்றை எழுதுவது என்ற போக்கு இருந்தது. தேசிய இயக்கத்தின் தாக்கத்தால் ஒரு வரலாறு எழுதப்படும்போது அதில் எல்லா பெருமைகளும் நாம் கொண்டிருந்தோம் என்று மிகைப்படுத்தி எழுதப்படும். அப்படியே இங்கும் எழுதப்பட்டது. 

இரண்டாவது இந்து மத சார்புடையவர்கள் எழுதிய வரலாறு. இந்து மத சார்புடையவர்கள் ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் நம்மிடம் எல்லாமே இருந்தது என எழுதினார்கள். மண் சார்ந்த வரலாறு என்ற கருத்தியலுக்கு உட்பட்டு மதம் சார்ந்த வரலாற்றை எழுதினார்கள். உதாரணத்திற்கு இந்து வானியல், இந்து வேதியியல் என இந்து அடைமொழியுடன் எழுதும் போக்கு உருவானது. 1857-ம் ஆண்டு சிப்பாய் எழுச்சி குறித்து ”எரிமலை” என்ற தலைப்பில் சாவர்க்கர் எழுதிய நூலில் இஸ்லாமியர்களின் பங்களிப்பை மறைக்காது பதிவு செய்திருப்பது வியப்பிற்குரிய செய்திதான். ஆனால் இதுகுறித்து இன்றைய பாஜகவினர் பேச மாட்டார்கள்.

இந்த இரண்டு போக்குகளையும் தவிர்த்து தமிழ்நாட்டின் வரலாற்றை எழுதிய ஒரு பிரிவினரும் இருந்தனர். அந்த வகையில் வரலாற்றை எழுதியவர்கள் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர். அதில் இராமச்சந்திர தீட்சிதர், சத்தியநாத ஐயர், நீலகண்ட சாஸ்திரி, பி.டி.சீனிவாச ஐயங்கார் என இவர்கள் அனைவரும் நவீன ஆங்கில அறிவைப் பெற்று காலனிய கால வரலாறு மற்றும் உள்நாட்டு சான்றுகளை சேகரித்து அவற்றை ஒருங்கிணைத்து புதிய கருத்துப் புள்ளியை உருவாக்கியவர்கள். இவர்களின் தரவுகள் சேகரிப்பும், விவாத ஆற்றலும் போற்றுதலுக்கு உரியது. இவர்களின் முடிவுகள் மற்றும் அவதானிப்புகளில் கருத்து வேறுபாடுகள் நமக்கு இருக்கலாம். ஆனால் இவர்களின் பங்களிப்பை புறந்தள்ளிவிட முடியாது. சுருங்கக்கூறின் பிராமண சமூகத்தைச் சார்ந்தவர்களும் இவர்களை அடுத்திருந்த வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர்களும் தமிழ்நாட்டின் தொடக்கால வரலாறு வரைவில் ஆதிகம் செலுத்தி வந்துள்ளனர்.

சுதந்திரத்திற்குப் பிறகு எழுதப்பட்ட வரலாற்று ஆய்வுகளும், காலனிய காலம் உருவாக்கிய வகைப்பாட்டு முறைகளின் அடிப்படையில்தான் அமைந்தது. இந்திய வரலாற்றை எழுதுவதற்கு முன் நாம் அதை எவ்வாறு வகைப்படுத்திக் (Periodisation) கொள்ளப் போகிறோம் என்கிற கேள்வி வரும்போது அவர்களும்  பழைய தடத்தையே பயன்படுத்த முடிவு செய்தனர். பண்டைய கால வரலாறு,  மத்திய கால வரலாறு, நவீன வரலாறு, தற்கால வரலாறு என்று பிரித்து  நம்முடைய வரலாற்றையும் எழுதினார்கள். 

பண்டைய வரலாறு மன்னர்களைப் பற்றியது. அவர்களின் படையெடுப்புகள், கட்டிய கோயில்கள், வளர்த்த கலைகள்,  இலக்கியங்கள் என்று எழுதினார்கள். மத்தியகால வரலாறு என்பதில் மன்னர்கள் மாறினார்களே தவிர மற்றவை அனைத்தும் அப்படியே தொடர்ந்தது. 

நமது வரலாற்றை எழுதுவதில் சில அடிப்படைகள் உள்வாங்கப்படவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் பிரிட்டிஷ் காலனிய காலத்திற்கு முன்னரே நாம் நாகரிகமடைந்திருந்தோம். நகரமயமாக்கல் என்பது காலனியம் இந்தியாவில் கால் பதிப்பதற்கு முன்பே உருவாகிவிட்டது. குறிப்பாக தமிழில் மதுரைக்காஞ்சி மற்றும் பட்டினப்பாலை போன்ற இலக்கியங்கள் இங்கிருந்த நகரங்களின் வளத்தைப் பற்றி சொல்கிறது. மதுரைக் காஞ்சியில் மதுரையின் வாணிப வளம் சொல்லப்படுகிறது.  பட்டினப்பாலையில் காவேரிப் பூம்பட்டினத்தின் வாணிப வளம் பதிவுசெய்யப்பட்டுளது. சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தில் ஊர்காண் காதையில் கோவலன் மதுரையைப் சுற்றிப் பார்க்கச் செல்லும்போது, மதுரையின் வாணிப வளம் சொல்லப்படுகிறது. 

எனவே நகரமயமாக்கல் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே இங்கு இருந்துள்ளது. அத்தோடு  சமயம் தொடர்புடைய நகரங்களும் இங்கு உருவாகியிருந்தது. ஆனால் இதே காலகட்டத்தில் ஐரோப்பாவில் நகரங்கள் உருவாகவில்லை. எனவே இதுபோன்ற அடிப்படைகளை உள்வாங்கிக்கொண்டு நமது வரலாற்றை வகைபடுத்த வேண்டும். 

எப்போது எழுத்தின் புழக்கம் நடைமுறைக்கு வருகிறதோ, அப்போதுதான் வரலாறு துவங்குகிறது. அதற்கு முந்தையது வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்று வரையறுக்கப்படுகிறது. அவை தொல்பொருள் ஆய்வில் கிடைத்த தரவுகளினூடாக எழுதப்படும். இதை கற்கால வரலாறு என்று வகைபடுத்துவர். அப்படி பார்க்கும்போது நமக்கு கற்கால வரலாறுகள் குறித்த சான்றுகள் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் கிமு 300-ம் நூற்றாண்டிலிருந்து வரலாறு தொடங்குகிறது. இப்பொழுது கிடைத்துள்ள ஆதாரத்தின்படி கி.மு 600 வரை செல்கிறது. இதை வரலாற்றின் வளர்ச்சிக் காலம் என்று சொல்லலாம். 

இதற்குப் பிறகு நிலஉடமை சமூகம் உருவாகிறது. நிலத்தை மானியமாகத் தரும் சமூகம்தான் நிலஉடமை சமூகம் என்று கூறுவார்கள். இதை நிலமானிய சமூகம் என்றும் மொழிப்பெயர்க்கலாம். இது சங்க காலத்தில் இல்லை. சங்க காலத்தினை வேளாண் வளர்ச்சி காலகட்டம் என்று கூறலாம். பல்லவர் காலத்தில் வேளாண்மை உருப்பெற்ற பிறகுதான் நிலமானிய சமூகம் இங்கு உருப்பெறத் துவங்குகிறது. பிற்காலச் சோழர் காலத்தில் நிலமானிய சமூகம் வளர்ச்சியடைகிறது. 

பின்னர் படையெடுத்து வந்த விஜயநகரப் பேரரசின் ஆட்சியாளர்கள் நிலமானிய முறையை சிதைக்கிறார்கள். அவர்கள் பாளையக்காரர் முறையைத் தோற்றுவித்தார்கள். அதனைத் தொடர்ந்து காலனிய காலம் உருவாகிறது. அதில் போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் வருகை தருகின்றனர். கிழக்கிந்திய கம்பனி 1858 வரை ஆட்சி செய்கிறது. பின்னர் இந்தியா நேரடியாக ஆங்கிலேய அரசின் ஆட்சியின் கீழ் வருகிறது. இந்த வகைபடுத்துதலின் அடிப்படையில்தான் சுதந்திரத்திற்குப் பிறகான வரலாறு எழுதப்பட்டது. 

இது போன்ற வகைப்பாடு முழுவதும் நூற்றாண்டுகளை மையமாக வைத்த ஆள்பவர்களின் வரலாறாகவே அமைகிறது. இது வெறும் பரம்பரைகளின் வரலாறு. மக்களின் பொருள் உற்பத்தி முறையை, அது எப்படி விநியோகம் செய்யப்படுகிறது என்பதை அடிப்படையாக வைத்து மக்களுடைய  நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை மையமாக வைத்து வரலாறு எழுதப்பட வேண்டும். ஆளப்பட்ட மக்களின் வரலாறு எழுதப்படவில்லை. காலப் பகுப்பு என்பது பொருள் உற்பத்தியின் அடிப்படையில் செய்யப்படவில்லை. அதனால் தான் நம் வரலாறு மன்னர்களுக்கு பிறகு வைசிராய்கள், அதற்குப் பிறகு கவர்னர் ஜெனரல், அதனைத் தொடர்ந்து பிரதமர் என ஆள்பர்களை மட்டுமே மையமாக வைத்து அமைந்துவிட்டது. 

சமூகத்தின் வரலாறு  எழுதப்படவில்லை. சமூகம் என்பது வரைபடமோ, நிலமோ இல்லை. நிலத்தில் வாழ்ந்த மக்கள். அந்த மக்களின் வரலாறு எழுதப்பட வேண்டும். மக்கள் சார்ந்த வரலாறு முறையாக இங்கு எழுதப்படவில்லை. டி.டி.கோசாம்பி போன்றவர்கள் எழுதினாலும் அது கல்விப் புலத்திற்குள் வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி வழியாகத்தான் பெரும்பான்மையாக வரலாறு கற்றுக் கொள்ளப்படுகிறது. அப்படி இருக்கிறபோது அந்த கல்விப்புலத்தில் இந்த முறையான வரலாறு அனுமதிக்கப்படவில்லை. எனவே இதுவரை எழுதப்பட்ட வரலாற்றில் போதாமை உள்ளது என்றே சொல்வேன்.

”இதுவரை எழுதப்பட்ட வரலாறுகள் திருத்தி எழுதப்பட வேண்டியவை” என்ற டி.டி.கோசாம்பியின் கூற்றும், ”வரலாறு என்பது ஒரு சமூக அமைப்பில் இருந்து மற்றோரு சமூக அமைப்பிற்கு மாறுவதுதான்” என்ற ரொமிலா தாப்பரின் கூறறும், ”வரலாறு என்பது வர்க்கங்களுக்கு இடையில் நடக்கும் போராட்டம்” என்ற மார்க்சின் கூற்றும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. கூறியவர்கள் யார் என்று பார்ப்பதை விட, கூறியுள்ள கருத்தின் ஆழத்தையும் தேவையையும் உணர்ந்து கொள்வது நன்மை பயக்கும். 

Madras Radicals: ஆளுகிற பாரதிய ஜனதா கட்சி ஒரு குழுவை அமைத்து 12,000 ஆண்டுகால வரலாறை மீண்டும் எழுத வேண்டியதன் நோக்கம் என்னவாக இருக்கும்?

பேரா ஆ.சிவசுப்பிரமணியன்: வரலாற்று வரைவு என்பது எப்பொழுதும் ஒரு சித்தாந்த சார்புடையது. வரலாற்றை எழுதுகிறவர்கள் அறிந்தோ, அறியாமலோ ஒரு சித்தாந்தம் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அது மதம் சார்ந்த சித்தாந்தமாக இருக்கலாம். அரசியல் சார்ந்த சிந்தாந்தமாக இருக்கலாம். நம்மைப் போன்ற நாடுகளில் ஜாதி சார்ந்த சிந்தாந்தமாகக் கூட இருக்கலாம். அரசுகளும் சித்தாந்த சார்புடையதாகத்தான் இருக்கிறது. எனவே அதனுடைய அரசியல் கொள்கைகள் சார்ந்துதான் செயல்படும்.

எனவே இதுபோன்ற ஒரு குழுவை அமைத்தால் கட்டாயம் அதனுடைய சார்புத் தன்மைதான் வெளிப்படும். அதனுடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் கல்வித் துறையில் அவர்கள் எழுதும் வரலாறுதான் நுழைக்கப்படும். இப்படி இருக்கும்போது வரலாறு என்பது நேர்மையான வரலாறாக எந்த காலத்திலும் இருக்க முடியாது.

தங்களுக்கு ஆதரவான கல்வியைத்தான் அரசு புகுத்த நினைக்கும். எனவே அதை எளிமையாகக் கடந்துவிடக் கூடாது. சில அடிப்படைக் கூறுகள் இருக்கிறது. அதில் மாற்றம் இருக்கக் கூடாது. அதேபோல அரசு ஒரு குழுவினை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறபோது வரலாறு திரிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. வரலாறு திசைமாறி விடும் ஆபத்தும் இருக்கிறது. 

சில உண்மைகள் மறைக்கப்படலாம். சில பொய்கள் அரங்கேறலாம். இந்த வரலாற்றை எழுதுகிற போது எல்லோரும் அவரவருடைய பங்களிப்பை செய்ய ஜனநாயக ரீதியாக வாய்ப்பளிக்கப்பட வேண்டும். கற்றுக் கொள்வோர் கற்றுக் கொள்ளட்டும். தர்க்க ரீதியாக எது பொருத்தமாக இருக்கிறது, எது உண்மை சார்ந்து இருக்கிறது என்பதை புரிந்து தேர்வு செய்து கொள்ளப்பட வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு இங்கு கொடுக்கப்படவில்லை. 

Madras Radicals: பல்வேறு மொழி, இனம், பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உள்ளடக்கிய இந்தியாவில் மைய அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கலாச்சாரத் துறையை வைத்துக்கொண்டு ஒரு வரலாற்றை எழுதுவது சாத்தியமா?

பேரா ஆ.சிவசுப்பிரமணியன்: இந்தியா போன்ற பல்வேறு நிலவியல் அமைப்பு, மொழி, கலாச்சாரம், பண்பாட்டை கொண்டுள்ள இடத்தில் மத்திய பாஜக அரசு வரலாறு குறித்து எழுத முயற்சிப்பது அறிவுத்துறை மீதும் வரலாற்றுத் துறை மீதும் ஏவப்படும் வன்முறை என்று கூறலாம். 

இந்தியாவின் வரலாற்றில், இந்தியாவின் நில அமைப்பில் இங்கு பெரும்பான்மையான மக்கள் நெல்லை விளைவிக்கும் அரிசியைப் பயன்படுத்துகிறார்கள். கன்னியாகுமரி துவங்கி ஆந்திரா, ஒரிசா, வடகிழக்கு மாநிலங்கள் வரை இவை எல்லாம் நெல் விளைவிக்கும் பகுதிகள். ஆனால் இந்த நான்கு மாநிலங்களில் ஒரே நேரத்தில் நாற்று நட்டு அறுவடை செய்வது இல்லை. வடகிழக்கு மாநில நெல் வகைகள் நம்மிடம் கிடையாது. நம்மிடம் உள்ள நெல் வகைகள் அவர்களிடம் கிடையாது. இன்னொரு பக்கம் அரிசி என்பதே அறியாத மக்கள் வாழ்கிறார்கள். இரண்டும் கலந்து விளைவிக்கக் கூடிய பகுதிகள் இருக்கிறது. பஞ்சாபில் பாசுமதி அரசியும், கோதுமையும் விளைவிக்கிறார்கள். இப்படி உணவுப் பொருட்களைப் பயிரிடுவதிலேயே வேறுபாடுகள் உள்ளன. அதனால்தான் நாம் ’வேற்றுமையில் ஒற்றுமை’ என்று கூறி வந்தோம். ஆனால் இப்போது வேற்றுமைகள் எல்லாம் மறைக்கப்பட்டு ஒற்றுமை என்ற ஒன்று மட்டும் முன்வைக்கப்படுகிறது. 

இதில் தங்கள் தனித்துவத்தை பாதுகாக்க நினைப்பவர்கள் பிரிவினைவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். வேற்றுமையை சுட்டிக் காட்டுபவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. அவர்கள் தங்கள் அடையாளத்தை முன்னெடுக்க நினைக்கிறார்கள். அதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்.  

இந்தியாவிற்கு ஒரே பண்பாடு என்று சொல்வது வேடிக்கையானதாக இருக்கிறது. மஞ்சள் தமிழர்களுக்கு மிகவும் மங்களகரமான பொருள். ஆனால் சில வட மாநிலங்களில் மஞ்சள் விதவைகள் உடுத்தும் ஆடையின் நிறம் என்று இந்திய மானுடவியல் கழகம் வெளியிட்டுள்ள ஒரு நூல் சொல்கிறது. தமிழகத்தில் வெள்ளை என்பது விதவைகளின் ஆடை. ஆனால் கேரளத்தில் நாயர் பெண்களின் திருமண ஆடை வெள்ளை. இவை அனைத்தையும் மறைத்துவிட்டு ஒரே நிறத்தை ஏற்றுக்கொள்ளும்படி சொல்வது எந்த வகையில் சரி? 

எனவே வரலாற்று வரைவியலில் ஒவ்வொரு பகுதியும் தனக்கென்று தனித்துவமான வரலாற்றைக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் சில பகுதிகளில் வரலாறு உச்சத்தை அடைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தான் சில பகுதிகளில் வரலாறு  தோன்றுகிறது. இதனால் நாம் அவர்களை தாழ்வாக பார்க்க வேண்டியதில்லை. இந்தியாவிற்கு என்று ஒரே வரலாறு கிடையாது என்பதை சொல்ல வேண்டும்.

Madras Radicals: பாஜக போன்ற ஒரு இந்துத்துவ வலதுசாரி கட்சிக்கு இந்த காலகட்டத்தில் ஏன் ஒரு குழுவை அமைக்க வேண்டிய தேவை எழுகிறது?

பேரா ஆ.சிவசுப்பிரமணியன்: அவர்களுக்கு தேவை இருக்கிறது. அவர்களுக்கு அவர்களுடைய மதவாத அரசியலைப் பரப்ப வேண்டும். எனவே அது குறித்தான வரலாற்றை புகுத்த முயற்சி செய்கிறார்கள். இந்தியா ஒரே மதத்தைக் கொண்ட நாடாக எல்லா காலத்திலும் இருந்தது கிடையாது. நமது விடுதலைக்குப் பிறகு தமிழ் உள்ளிட்ட வளர்த்து எடுத்திருக்கப்பட வேண்டிய மாநில மொழிகள் வளர்த்தெடுக்கப்பட வில்லை. இதுகுறித்து கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த மாநில அரசுகளும் கூட முழுமையாக இதனை செய்யவில்லை. எனவே இதை அழிக்கும் நிலையை பாஜக இப்பொழுது எடுக்கிறது. 

இந்தியாவின் அரசு மதமாக இந்து மதத்தை அறிவித்தால் ஆச்சரியபடுவதற்கு இல்லை. ஏனென்றால் இன்றைய கொரோனா காலகட்டத்தில் மந்திரி சபை ஒன்று கூடி சட்டங்களை நிறைவேற்றி விட்டாலே போதுமானதாக உள்ளதே!

Madras Radicals: இந்த குழுவில் தென்னிந்திய வரலாற்று அறிஞர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை. எனவே தென்னிந்திய வரலாற்றை இக்குழு பொருட்படுத்துமா?

பேரா ஆ.சிவசுப்பிரமணியன்: முற்றிலும் புறக்கணிக்க மாட்டார்கள். அவர்களின் இந்துத்துவ சித்தாந்தத்திற்கு ஆபத்தில்லாத விடயங்களை எடுத்து சேர்த்துக் கொள்வார்கள். ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவில் கட்டியதை பதிவு செய்வார்கள். அது அவர்களுக்கு ஆபத்து கிடையாது. அனால் அத்தோடு நிறுத்திக் கொள்வார்கள். இதுபோன்று தென்னிந்தியாவில் அவர்களுக்கு சாதகமான விடயத்தை எடுத்துக்கொண்டு மீதத்தை விட்டுவிடுவார்கள். கட்டாயம் அவர்கள் எழுதுவதில் நேர்மை இருக்காது. ஏற்கனவே ஒரு வரைவை அவர்கள் உருவாக்கி வைத்திருப்பார்கள் இந்த குழு அந்த வரையை ஒப்புதல் செய்வதற்காக போடப்பட்ட கண்துடைப்புதான்.

Madras Radicals: அவர்கள் எழுதும் வரலாற்றில் இருந்து நமது அடையாளத்தை நாம் எப்படி பாதுகாத்துக் கொள்ள முடியும்?

பேரா ஆ.சிவசுப்பிரமணியன்: அரசியல் அதிகாரத்தைப் பெற்றால் தான் முடியும். அது இல்லாத வரை ஒன்றும் செய்ய முடியாது. 

Madras Radicals: தங்களது தனித்துவமான வரலாற்றை பாதுகாக்க ஆய்வாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

பேரா ஆ.சிவசுப்பிரமணியன்: வரலாறு குறித்து நமக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் எழ வேண்டும். அதில் நமக்குள் எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லோருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும். எந்த விருப்பு வெறுப்பும் இல்லாமல் எழுத வேண்டும். அதனை மக்களிடம் சிறு குறு நூலாக மலிவு விலையில் கொண்டு செல்ல வேண்டும். 

யாழ்ப்பாண நூலகத்தை எரித்தார்கள். இந்தியாவிலும் சில நூலகங்கள் எரிக்கப்பட்டது. அதுபோல இப்போது அழித்துவிட முடியாது. இந்த நவீன உலகத்தில் அனைத்து தகவல்களும் கணினியில் உள்ளது. உலகம் முழுக்க பல்வேறு தளங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த தகவல்களை யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்த முடிகிறது. இனி வருகின்ற காலத்தில் முற்றாக எதையும் மறைத்துவிட முடியாது.

என்று உறுதியுடன் முடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *