புகை பழக்கம்

கொரோனா சூழலில் புகை பழக்கத்தை கைவிட விரும்புவோர் 29% அதிகரிப்பு – ஆய்வு

உலகெங்கும் சுவாசம் தொடர்பான கொரோனா தொற்று கடுமையாக பரவி வரும் சூழலில் புகை பிடிப்பவர்களை ஒருவித அச்சம் சூழ்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் புகை பழக்கம் உள்ளவர்கள் மோசமான பாதிப்பிற்கு உள்ளாவதும், புகை பழக்கம் இல்லாதவர்களைக் காட்டிலும் புகை பழக்கம் உள்ளவர்கள் அதிகமாக மரணத்திற்கு தள்ளப்படுவதும் நடக்கிறது. இதுவே அவர்களின் அச்சத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

பெரும்பாலும் புகை பிடிப்பவர்களுக்கு அந்த பழக்கத்தில் இருந்து மீள்வதற்கு சில சந்தர்ப்பங்கள் தேவைப்படும். அந்த சந்தர்ப்பங்களுக்காக காத்திருப்பார்கள். அந்த வாய்ப்பினை புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா வழங்குவதாக Journal of Addiction Medicine நடத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த புகை பிடிக்கும் பழக்கம் உடைய 1204 இளைஞர்களிடம் எடுக்கப்பட்ட அந்த ஆய்வு, புகை பழக்கத்தை கைவிட விரும்புபவர்களின் சதவீதம் கொரோனா பரவலுக்கு முன்னர் 10% ஆக இருந்தததாகவும், தற்போது (ஏப்ரல் மாதத்தில்) அந்த எண்ணிக்கை 29% என்ற வேகத்தில் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கிறது. 

ஏராளமானோர் புகை பிடிப்பதை கூடிய விரைவில் விட்டுவிட எண்ணுவதாகவும், அவர்களில் பலருக்கு அதைச் செய்வதற்கு ஆலோசனைகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் புகை பழக்கத்தை தவிர்ப்பது கொரோனா தொற்றில் இருந்து தம்மைப் பாதுகாக்க உதவும் என்பதை புரிந்து கொண்டுள்ளனர் என்றும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

புகை பிடிப்போருக்கு கொரோனாவால் ஏற்படும் விளைவுகளை தெரிந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள்

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இளைஞர்களிடம் புகை பிடிப்பவர்களுக்கு கொரோனாவால் ஏற்படும் தீமைகள் குறித்தான தகவல்கள் தேவைப்படுகிறதா? என்கிற கேள்விக்கு கிட்டத்தட்ட பாதி(45%) இளைஞர்கள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளனர். இளைஞர்களின் இந்த ஆர்வத்திற்குக் காரணம் அவர்கள் இந்த பழக்கத்தை கைவிட ஆவலாக இருப்பதே என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த தகவல்கள் யார் மூலமாக தெரிவிக்கப்பட வேண்டும் என்கிற கேள்விக்கு 59% பேர் அரசு மூலமாகவும் 47% பேர் மருத்துவர்கள் மூலமாகவும் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட 60%-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் புகை பழக்கத்தைக் கைவிட நிகோடின் மாற்று சிகிச்சை முறையை விரும்புவதாக தெரிவித்தனர். மேலும் 51% இளைஞர்கள் தனிப்பட்ட முறையில் அறிவுரை மற்றும் ஆதரவு கொடுப்பதன் மூலம் தாங்கள் இந்த பழக்கத்தில் இருந்து வெளிவர உதவும் எனவும் தெரிவித்துள்ளனர். 

கொரோனா காலத்தில் ஏற்பட்ட தனிமை உணர்வு சிலரை அதிகமாக புகை பழக்கத்திற்கு தள்ளி விடும் சூழலும் இருப்பதால் அவர்களைப் போன்றவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் இறக்கும் 8 மில்லியன் மக்கள்

ஆஸ்திரேலியா நாடு புகை பிடிப்பதற்கு எதிரான பிரச்சாரங்கள், புகையிலை வரி மற்றும் சுற்றுச்சூழல் சட்டம் போன்ற வலுவான வடிவங்களின் மூலம் 11% வரை வெளியிடப்படும் புகை பிடிப்போர் அளவைக் குறைத்துள்ளது. இருந்தாலும் இன்னும் ஆஸ்திரேலியா மக்களை அதிகமாகக் கொல்லும் காரணங்களில் புகை பழக்கம் முதன்மையாக இருக்கிறது. உலகம் முழுவதையும் சேர்த்து கிட்டத்தட்ட 8 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் புகை பழக்கத்தால் உயிரிழக்கின்றனர்.

கொரோனாவிலிருந்து மட்டுமின்றி பலவிதமான தொற்று நோய்களில் இருந்து புகை பிடிப்பவர்களுக்கு வரும் அபாயத்தைக் குறைக்க புகை பழக்கத்தில் இருந்து அவர்களை வெளியேற ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை சுகாதார முகவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பரவல் உச்சநிலையில் இருக்கும்போது புகை பழக்கத்தை கை விடுவதற்கான எண்ணம் இளைஞர்களிடம் அதிகமாக இருப்பதை உணர்ந்து அரசாங்கங்களுக்கும், சுகாதார நிறுவனங்களுக்கும் அவர்களுக்கு தேவையான உதவியை செய்து மீட்டெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *