இந்தியா : மோடி எனும் பிரச்சினை – யமுனா ராஜேந்திரன்

”இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது, காவல்துறையை பின்வாங்கச் செய்வதிலும், இந்து தீவிரவாதிகளை மறைமுகமாக ஊக்குவிப்பதிலும் முதல்வர் மோதி முன்வந்து செயல்படும் பங்கைக் கொண்டிருந்தார் என்பது மிகவும் தீவிரமான கூற்று. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காக காவல்துறையினர் தங்கள் வேலையைச் செய்வதைத் தடுப்பதற்கான அரசியல் தலையீட்டுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.”

– ஜாக் ஸ்ட்ரா, பிரித்தானிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர்

ஆவணப்படத்தில் ஜாக் ஸ்ட்ரா

1

இன்றைய தகவல் தொழில்நுட்ப, செயற்கை நுண்ணறிவுச் சூழலில் எந்தப் படத்தையும் ஒருவர் விரும்பினால் காண்பதிலிருந்து தடைசெய்ய முடியாது. இது உள்ளார்ந்த ஒரு உண்மை. 2021 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட ஊடகச் சட்டத்தின் அடிப்படையில் அவசரச் செயல்பாடாக ஆவணப்படம் தடை செய்யப்பட்டிருக்கிறது. தடை முழுத் திரைப்படத்திற்கு மட்டுமல்ல, காட்சித் துண்டுகளுக்கும் சேர்த்து அமலாக்கப்பட்டிருக்கிறது. மோடி அரசு குறித்த விமர்சன ஊடகங்களான வயர், ஸ்குரோல், காரவான் போன்றனவும் ஊடக ஆளுமைகளும் படம் குறித்து விமர்சனமாக எழுதுகிறார்களேயல்லாது காட்சிகளைப் பகிர்வதில்லை.

யூடுயூப், டுவிட்டர் மற்றும் பல சர்வதேச ஊடகங்கள் இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க காட்சிகளை அகற்றிவிட்டன. இந்தியாவில் இது சட்டமீறல் என்பதால் பகிரும் முகநூல், டுவிட்டர், இணையதளங்கள் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடக்கப்பட முடியும். எழுதுவதை அந்த அவசரகால அறிவிப்பு தடைசெய்யவில்லை. அப்படித் தடைசெய்யும்போது சந்தேகமற அது அவசரநிலைப் பிரகடனமாகவே இருக்கும்.

குஜராத் இனப்படுகொலை குறித்து பல ஆய்வாளர்கள் கள ஆய்வின் அடிப்படையில் பல நூல்களை எழுதியிருக்கிறார்கள். ஆவணப்படங்களும் முழுநீளக் கதைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. இந்திய அரசியல் வரலாற்றின் பகுதியாக இவை என்றும் இருக்கும். இதனது தொடர்ச்சியாக வந்திருப்பதுதான் பிபிசி ஆவணப்படம். இது இரு பகுதிகளால் ஆனது. இரண்டாம் பாகம் திரையிடலுடன் பிபிசி ஆவணப்படம் துவங்கிய காட்சியுடன் முடிவடைகிறது. ‘இந்துத்துவவாதிகள் இஸ்லாமியரை இனக்கொலை செய்வதைத் திட்டமாகக் கொண்டிருக்கிறார்கள். மோடி அரசு இதற்குச் செயல்வடிவம் தருகிறது’. இதுவே ஆவணப்படத்தின் செய்தி.

பிபிசி ஆவணப்படத்தில் மோடி

இந்திய அரசின் தடையையும் தாண்டி, சிபிஐஎம்-மின் இந்திய வாலிபர் சங்கமும் மாணவர் சங்கமும்  ஆவணப்படத்தைக் கேரளா, தமிழமெங்கும் எங்கும் திரையிடுவதாக அறிவித்திருக்கிறது. விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தமிழ்த் துணைத்தலைப்புகளுடன் தமிகமெங்கும் ஆவணப்படம் திரையிடப்படும் என அறிவித்திருக்கிறார்.

இவ்வேளையில் பிபிசியின் ஊடகக்கொள்கை குறித்தும் நாம் பேச வேண்டியிருக்கிறது. பிறநாடுகள் குறித்த விஷயங்களில் சமநிலை பேணும் பிபிசி பிரித்தானியாவின் வெளிநாட்டுக்கொள்கை- உள்நிலையில் சமநிலை பேணுவதில்லை. இடதுசாரித் தலைவரான ஜெரமி கோர்பினைத் தோற்கடித்ததில் பிபிசிக்கு கணிசமான பங்கு உண்டு. பாலஸ்தீனம், ஈராக், உக்ரைன் பிரச்சினைகளில் அது அமெரிக்க-பிரித்தானிய அரசுகளின் ஒரு பக்கச்சார்பான ஊதுகுழல். இப்படி பிபிசியின் ஊடகக்கொள்கை குறித்த தெளிவுடன்தான் நாம் இந்த ஆவணப்படத்தை அணுக வேண்டும்.

அமெரிக்க-மேற்கத்திய ஊடகங்கள் குறித்துத் தெரிந்துகொள்ள நாம் சோம்ஸ்க்கியின் ஊடகம் குறித்த மதிப்பீடுகளில் இருந்து துவங்க வேண்டும். இவர்களது வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஒப்ப ‘உள்நாட்டு-வெளிநாட்டு’ இணக்கத்தை உற்பத்தி செய்வதுதான் இந்நாடுகளது பெரும் ஊடகங்களின் கொள்கை.

மோடி குறித்த ஆவணப்படத்தில் அன்றைய வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரா இரண்டு விஷயங்கள் சொல்கிறார். ஒன்று, குஜராத் படுகொலைக்கு எவ்வாறு நேரடியாக அன்றைய முதலமைச்சர் மோடி பொறுப்பாகிறார் என்பது, மற்றையது, இதனை வைத்து அவர் சொல்கிறபடி பிரிட்டிஷ் அரசு இந்தியாவுடன் தனது ராஜீய உறவுகளை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்பது.

இப்படி யோசித்துப் பாருங்கள்: இதுபோல கியூபாவில், சீனாவில் நடந்திருந்தால் பிரிட்டிஷ் அரசு என்ன செய்திருக்கும்? சரி, இது அரசு பற்றியது. ‘ஈராக்கில் அணு ஆயுதங்கள் இல்லை, அது அமெரிக்க-பிரிட்டிஷ் உளவுத் துறைகளின் பொய்கள்’ என இன்று நிறுவப்பட்டுவிட்டது. இதனை பிபிசியோ, சிஎன்என்னோ சொல்லாது. இதனை சொல்ல சோம்ஸ்க்கி அல்லது ஜான் பில்ஜர் வரவேண்டும்.

2

இந்திய வரலாற்றை அறிந்தவர்க்கு மோடி எனும் பிரச்சினையின் வேர்கள் 1925 செப்டம்பர் 27 ஆம் தேதியில் ஆரம்பிக்கிறது என்று தெரியும். ஆம், அன்றுதான் இந்து ராஜ்யத்தை அமைப்பது எனும் பிரகடனத்துடன் ராஷட்ரியம் ஸ்வயம் சேவக் சங் எனும் இந்திய பாசிச அமைப்பு ஆர்எஸ்எஸ் தோற்றம் பெற்றது. இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், கம்யூனிஸ்ட்டுகளே அதன் எதிரிகள் என்று அறிவித்தது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் (கோப்பு)

இரண்டுமணி நேரம் ஓடும் இந்தியா : மோடி எனும் பிரச்சினை எனும் பிபிசி ஆவணப்படம் மோடி எனும் பாசிசப் பிரச்சினையின் இருபது ஆண்டுகால வரலாற்றைப் பற்றியதாக இருக்கிறது.

குஜராத் முதல்வராக மோடி தலைமை தாங்கிய 2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லீம் இனக்கொலை முதல் 2019 ஆம் ஆண்டு பிரதமராக மோடி அரசு கொண்டுவந்த குடியேற்றத் திருத்தச் சட்டமும் அதன் பின்னாக நிலைத்த முஸ்லீம்களை அடித்துக் கொல்லுதுல், நாடற்றவர்களாக ஆக்குதல், முஸ்லீம் பெண்களை கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தக் கோருதல் என்பது வரையிலான இருபதாண்டுக் காலகட்டத்தை இந்தியா : மோடி எனும் பிரச்சினை ஆவணப்படம் இந்திய அரசு பயங்கரவாதத்தின் வரலாறாகப் பதிவுசெய்கிறது.

2002, குஜராத்

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மோடியின் எழுச்சி என்பது வாஜ்பேயி தலைமையில் பிஜேபி அரசு தலைமையேற்ற 1998 மார்ச் 19 ஆம் திகதி துவக்கம் பெறுகிறது. வாஜ்பேயி அரசில் 2002-2004 காலகட்டத்தில் துணைப் பிரதமராகப் பதவியேற்ற அத்வானி தொண்ணூறுகளில் இந்தியாவின் இரண்டாவது இரத்த வேட்டையை ராம ரதயாத்திரை எனும் பெயரில நடத்தியதின் விளைவாக இஸ்லாமியரின் புனித இடமான பாப்ரி மஜீத் 1992 டிசம்பர் 6 ஆம் நாள் இடிக்கப்பட்டது.

பாப்ரி மஜீத் இடிப்பை நேர்காட்சி ஒலிபரப்பாக அன்று முதன்முதலில் உலகுக்கு அறிவித்துது பிபிசி செய்திகள்தான்.

பிற்பாடுதான் அதனை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் அக்காட்சியை ஒளிபரப்பின. பாப்ரி மஜீத் இடிப்பின் முன்னர் இந்துத்துவ வெறி ஊட்டப்பட்ட வரலாற்றை அன்று அனந்த் பட்வர்த்தன் ’இன் த நேம் ஆஃப் காட்’ எனும் ஆவணப்படத்தில் பதிவு செய்தார். இதனது தொடர்ச்சியாகவே அன்றைய குஜராத் முதல்வர் மோடி தலைமையில் 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 துவங்கி மூன்று நாட்கள் இஸ்லாமிய மக்களின் மீதான இனக்கொலை நிகழ்த்தி முடிக்கப்பட்டது.

இன் த நேம் ஆஃப் காட் ஆவணப்படம்

2000 பேர் கொல்லப்பட்டனர், 5000 பேர் வீடிழந்தனர். பன்னூறு பெண்கள் வல்லுறவுக்கு ஆளாகினர். மனிதர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்கள். பிறவாத குழந்தைகள் வயற்றைக் கிழித்து எடுக்கப்பட்டு தரையில் அடித்துக் கொல்லப்பட்டன. ராகேஷ் சர்மா இந்த நாட்களைத் தனது ’த பைனல் சொல்யூஷன்’ எனும் ஆவணப்படத்தில் பதிவுசெய்தார்.

ராகேஷ் ஷர்மாவின் த பைனல் சொல்யூஷன் ஆவணப்படம்

குஜராத் இனப்படுகொலை இந்தியாவின் மனசாட்சியுள்ள திரைக்கலைஞர்களை உலுக்கியது. நந்திதா தாஸ் ’பிராக்’ எனவும், ’தொலாக்கிய பர்சானிய’ எனவும் இந்த வரலாற்றை ஆதாரமாகக் கொண்ட கதைப்படங்களை உருவாக்கினார்கள். இந்தியா : மோடி எனும் பிரச்சினை எனும் ஆவணப்படம் இந்தத் திரைமரபின் தொடர்ச்சியாக வந்திருக்கிறது.

பிராக் திரைப்படம்

3

2002 முதல் 2022 வரையிலான இருபது ஆண்டுகளில் மோடி எனும் பிரச்சினையை ஒட்டி இந்தியாவில் நிகழ்ந்த வெறுப்பரசியலைத் தொகுத்துக் கொள்வோம்.

ஆர்எஸ்எஸ் உறுப்பினராக இருந்து அரசியல் தலைவராக வளர்ச்சி பெற்றவர் மோடி. 2002 இல் அவரது தலைமையில் குஜராத் இனப்படுகொலை நடத்தி முடிக்கப்படுகிறது. இதனைச் சாட்சியமாக இருந்து வெளியுலகுக்குச் சொன்ன அரசு அதிகாரியான சஞ்சீவ் பட் சிறையில் வாடுகிறார். ரானா அய்யூப், சித்தார்த் வரதராஜன் போன்றவர்கள் குஜராத் படுகொலை நிகழ்வுகளை தமது நூல்களில் விரிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.

2014 ஆம் ஆண்டு மோடி இந்தியப் பிரதமராகப் பதவியேற்கிறார். 2019 ஆம் ஆண்டு மறுபடியும் பிரதமராகப் பதவியேற்கிறார். பிபிசி ஆவணப்படம் 2002 துவங்கி 2022 வரை நீள்கிறது. மோடி பிரதமரான பின் 8 ஆண்டுகளில் இந்தியாவில் நிகழ்ந்த படுகொலைகள் என்னென்ன? கல்புர்கி, பன்சாரே, கௌரி லங்கேஷ் போன்ற கம்யூனிஸ்ட்டுகள், இடதுசாரிகள், மனித உரிமையாளர்கள் இந்துத்துவவாதிகளால் கொல்லப்படுகிறார்கள். கிரகாம் ஸ்டுவர்ட் ஸ்டெயின்ஸ் எனும் கிறித்தவப் பாதிரியார் சிறுவர்களான தனது இரண்டு புதல்வர்களுடன் எரித்துக் கொல்லப்படுகிறார்.

ஜார்க்கண்ட், தாத்ரி பேன்ற இடங்களில் மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என 7 முஸ்லீம்கள் அடித்துக் கொல்லப்படுகிறார்கள். தலைநகர் டில்லியில் முஸ்லீம் இளைஞர் காவல்துறையால் அடித்துக் கொல்லப்படுகிறார். காஷ்மீரில் இஸ்லாமியச் சிறுமி இந்துத்துவவாதிகளால் வல்லுறுவுக்கு உள்ளாகி மரணமடைகிறார். முஸ்லீம்களை நாடற்றவர்களாக்கும் குடியேற்றத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது. காஷ்மீரின் தனி அந்தஸ்து பறிப்புச் சட்டம் வருகிறது.

பீமா கொரகான் என ஜோடிக்கப்பட்ட வழக்கில் தொகையான மனித உரிமையாளர்கள், கல்வியாளர்கள், அறிவுஜீவிகள் கைது செய்யப்படுகிறார்கள். தணிக்கை வாரியம், ஜேஎன்யூ, புனா திரைப்படக் கல்லூரி போன்றவற்றின் நிர்வாகங்களை பிஜேபி அரசியலின் கீழ் கொணர்கிறார்கள். இந்திய வரலாற்றுக் கழகம், நீதித்துறை அரசியல்மயப்படுத்தப்படுகிறது. இந்தியா முழுக்கவும் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊடக மேலாண்மையை பிஜேபி அரசு உருவாக்குகிறது.

4

பிபிசி ஆவணப்படம் பன்மைத்துவப் பார்வையிலான அலசல் எனும் அளவில் சமநிலையைக் கடைப்பிடித்திருக்கிறது. ஆவணப்படம் சொல்முறை எனும் அளவில் மூன்று தாரைகளால் ஆனது. 2002 முதல் 2022 வரையிலான மூஸ்லிம்கள் மீதான மோடி நிர்வாகத்தின் தாக்குதல்களை, கொலைவெறியாட்டத்தை குஜராத், ஜார்க்கண்ட், உத்திரப்பிரதேசம், புதுதில்லி, காஷ்மீர் போன்ற இடங்களில் நிகழந்தவற்றை வைத்து ஆவணப்படுத்துகிறது.

டெல்லியில் CAA போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்

இரண்டாவதாக இந்த மானுடப்பேரழிவில் தமது தகப்பன்-கணவன்-மகன் என உறவுகளை இழந்த தாய்மார்களின், மனைவியரின் உணர்ச்சிவசமான வலிகளைக் காட்சிகளாக  வெளிப்படுத்துவதின் ஊடே முன்வைக்கிறது. நீதி வேண்டி காவல் நிலையங்களுக்கும் வழக்கு மன்றத்திற்கும் சிறைகளுக்கும் இவர்கள் அலைந்து கொண்டிக்கிறார்கள். ஜமியா மிலியா பல்கலைக்கழகத்தினுள் காவல்துறை நிகழ்த்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணி மாணவி தனது பாடுகளை விவரிக்கிறார்.

மூன்றாவதாக, இந்த நிகழ்வுகளின் அரசியல், கருத்தியல் பரிமாணங்களை பிரித்தானிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜாக் ஸ்ட்ரா, கல்வித்துறை ஆய்வாளரும் பிரெஞ்சு இந்தியவியலாளருமான கிறிஸ்தோர் ஜெபரலாட், சர்வதேசிய மனித உரிமை அமைப்பான அம்னஷ்டி இன்டர்நேஷனலின் இந்தியப் பொறுப்பாளரான ஆகார் பட்டேல், பிஜேபி பாராளுமன்ற உறுப்பினரும் ஆர்எஸ்எஸ் கருத்தியலாளரும் ஆன ஸ்வபன்தாஸ் குப்தா, பிஜேபி தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி ஆகியோர் முன்வைத்து உரையாடுகிறார்கள்.
 

பிஜேபி கருத்தியலாளர்கள் கருத்துச் சுதந்திரத்திற்கும் சிறுபான்மையினர் உரிமைக்கும் எல்லைகள் உண்டு என்கிறார்கள். அம்னஷட்டி இன்டர்நேஷனல் ஆகார் பட்டேல் ஊடகங்களில் தனது மேலாண்மையை நிறுவுவதன்வழி உண்மைகளை மூடிக்கட்ட மோடி அரசு முயல்கிறது என்கிறார். பிரித்தானிய முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரா குஜராத் இனப்படுகொலையில் மோடியின் நேரடியான பொறுப்பைப் பேசுகிறார். இநதியவியல் ஆய்வாளரான கிறிஸ்தோபர் ஜெபர்லாட் மேற்கத்திய அரசுகளின் இந்தியா பாலான நீக்குப்போக்கான கொள்கைளை விமர்சிக்கிறார். உச்சமாக உலக அளவில் புகழ்பெற்ற எழுத்தாளரும் மோடி-ஆர்எஸ்எஸ் அரசின் கடுமையான விமர்சகரும் ஆன அருந்ததிராய் தனது மதநீக்க மனிதாபிமானக் கருத்துக்களை அழுத்தமாக முன்வைக்கிறார்.

நிகழ்வுகள், காட்சிப்பிம்பங்கள் எனும் அளவில் கடந்த எட்டாண்டு கால மோடி ஆட்சியின் அலங்கோலங்களை அறிந்தவர்க்கு பிபிசி ஆவணப்படம் புதிதாக எந்த நிகழ்வுகளையோ உண்மைகளையோ முன்வைக்கவில்லை என்பது தெரியவரும்.

குஜராத் முதல் ஜார்க்கண்ட், புதுதில்லி வரையிலான போராட்டக்காரர்களின் கைத்தொலைபேசிப் பதிவுகள், வழிப்போக்கர்களின் பதிவுகள், பிபிசியின் பழைய ஆவணக்காப்பகப் பதிவுகள்தான் ஆவணப்படமெங்கிலும் தொகுக்கப்பட்டிருக்கிறது. படுகொலைகக்கு நீதி வேண்டி இன்றும் அலைந்து கொணடிருப்பவர்களின் சமகால நேர்காணல்கள் எனும் இற்றைப்படுத்தப்பட்ட உரையாடல்களே மேலதிகமாக ஆவணப்படத்தில் இடம்பெறுகின்றன.

அரசியல் செய்தி எனும் அளவில் இந்த ஆவணப்படம் முன்வைக்கும் புதிய விஷயம் இருபது ஆண்டுகளின் முன்பு, 2002 ஆம் ஆண்டே ஒரு ஆய்வுக்குழுவை பிரித்தானிய அரசு இனக்கொலை நடைபெற்ற குஜராத்துக்கு அனுப்பி அக்குழு ஒரு ஆய்வறிக்கையை பிரித்தானிய அரசுக்கு அளித்திருக்கிறது என்பதும், முஸ்லீம் படுகொலைகளில் அன்றைய குஜராத் முதல்வரான மோடி நேரடியாகப் பொறுப்பேற்றிருந்தார் என்று அந்த அறிக்கை முன்வைத்திருக்கிறது என்பதும்தான்.

அனறைய பிரதமரான வாஜ்பேயியுடன் இது குறித்துப் பேசியிருப்பதாக அன்றைய வெளிவிவகார அமைச்சர் ஜாக் ஸ்ட்ரா குறிப்பிடுகிறார். பிரித்தானிய வெளியுறவுத்துறை சார்ந்தவர்களும் இதனை உறுதிப்படுத்துகிறார்கள். இத்தனையும் சொல்லிவிட்டு இந்திய அரசுடன் ராஜீய உறவுகளை சிக்கல்படுத்திக்கொள்ள தாம் விரும்பவில்லை எனவும் ஜாக் ஸ்ட்ரா சொல்கிறார்.

மோடியின் துவக்ககால ஆர்எஸ்எஸ் கருத்தியலை இந்த ஆவணப்படம் குறிப்பிட்டாலும் கூட, மோடி எனும் தனிமனிதரது தலைமையின் கீழ் இந்தியா மனித உரிமை மீறலைச் செய்திருக்கிறது, அது எதேச்சாதிகாரமாக ஆகிக் கொண்டிருக்கிறது என்பதை மட்டுமே இந்த ஆவணப்படம் முன்வைக்கிறது. தனிமனித ஆளுமைக் கோளாறு தொடர்பானதாக இந்தப் பிரச்சினையை பிபிசி ஆவணப்படம் பார்க்கிறதேயொழிய நூறாண்டு கால ஆர்எஸ்எஸ் கருத்தியலின் பிரச்சினையாக நிகழ்ந்த பேரழிவுகளை ஆவணப்படம் பார்க்கவில்லை.

இந்தப் படத்திற்கான இன்றைய பிரித்தானியப் பிரதமரும் இந்திய வம்சாவழியினருமான ரிஷி சுனக்கின் ஆட்சேபனை கூட மோடி எனும் ஆளுமையின் குணச்சித்திரத்தை கீழானதாக இப்படம் சித்தரிப்பது ஒப்பத்தக்கது அல்ல என்கிறார்.

5

நாடுகளை தமது அரசியல் நலன்களின் பொருட்டுப் பாவிப்பதற்காகவும் தமது அணியில் அவற்றை நிறுத்த அழுத்தத்தைப் பிரயோகிக்கவும் இவ்வாறான மனித உரிமைப் பிரச்சினைகளை எழுப்புவது என்பது அமெரிக்க மேற்கத்திய அரசுகளின் கொள்கையாகவே இருந்து வருகின்றன. இலங்கைத் தமிழர் இனக்கொலைப் பிரச்சினையை இவ்வாறான மனித உரிமை மீறலாகவே அமெரிக்க-மேற்கத்திய அரசுகள் பாவித்தன. பிற்பாடு தமது கட்டுக்குள் அந்நாட்டைக் கொண்டுவர அவை முயன்றன.

கிறிஸ்டோபர் ஜெபர்லாட் அது குறித்துப் பேசும்போது பிரித்தானிய அரசு சீனப் பிரச்சினையில் இந்தியாவை தமக்குச் சாதகமாகக் கையாளவே இப்படியான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது என்று சொல்கிறார். உக்ரேன் பிரச்சினையில் ரஷ்யச் சார்பு நிலையிலிருந்து இந்தியாவை விலக்கவும் இத்தகைய நெருக்கடியை இந்தியா மீது பாவிக்க முடியும்.

இரண்டாயிரம் மக்கள் கொல்லப்பட்ட ஒரு இனக்கொலை நடவடிக்கையை இருபது ஆண்டுகள் கழித்து இன்றைய உலகச் சூழலில் இத்தகையதொரு ஆவணப்படம் வெளியிடுவதற்கான காரணத்தை இவ்வாறன்றி வேறு வகையில் புரிந்துகொள்ள முடியாது. இன்று நாடுகளுக்கு இடையிலான உறவுகள் சர்வதேசிய அரசியல் முன்னுரிமைகளால் தீர்மானிக்கப்படுகிறது. கார்ப்பரேட்டுகளின் இடையிலான போட்டி என்பது இன்று உலகு தழுவியது. அதானியின் முதலீடுகள், பங்குச்சந்தை ஊழல்கள் தொடர்பாக அமெரிக்க நிறுவனமான ஹின்டர்பெர்க் ஆய்வறிக்கையைக் கூட இவ்வாறு நாம் புரிந்துகொள்ள முடியும். ஒரே தருணத்தில் அதானியின் பொருளாதார மோசடி, மோடியின் மனித உரிமை மீறல் பிரச்சினையை மேற்கத்திய-அமெரிக்க நாடுகள் எழுப்புகின்றன என்பதன் சர்வதேசியப் பரிமாணம் என்பது இவ்வாறுதான இருக்க முடியும்.

மேற்கத்திய நாடுகளும்-அமெரிக்காவும் விரும்பும் மோடிக்கு மாற்று என்பது ஆர்எஸ்எஸ் இந்துத்துவ பாசிசம் எனும் கருத்தியல் களைந்த இந்தியா அல்ல, மாறாகத் தமது உலக அரசியல் அணிசேர்க்கைக்கு உகந்த ஒரு அரசியல் தலைமையை இந்தியாவில் கோருவதாகவே அமையும். இதுவே இருபது ஆண்டுகளின் பின்னான பிபிசி ஆவணப்படத்தின் நோக்கமாக இருக்க முடியும்.

மனித உரிமை மீறல் எனும் பிரச்சினையை, பொருளாதார ஊழல் எனும் பிரச்சினையை தமக்கு உகந்தவாறு நாட்டைத் திருப்புவதற்காகவே இன்றுவரையிலும் மேற்கத்திய-அமெரிக்க அரசுகள் பாவித்து வருகின்றன. இதுவே மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தின் இன்றைய அரசியல் நோக்கமாக இருக்கமுடியும்.

6

பிபிசி ஆவணப்படத்தின் இந்திய அளவிலான உள்நாட்டுப் பரிமாணமும் அதன் விளைவுகளுமே இந்திய நோக்கிலிருந்து பார்க்கப்பட வேண்டும். மோடி அரசின் மனித உரிமை மீறலாகவோ, இந்து-முஸ்லீம் பிரச்சினை சார்ந்த வெறுப்பாக மட்டும் இதனைக் குறுக்காமல், ஆர்எஸ்எஸ்சின் இந்தியா தழுவிய பாசிசக் கருத்தியலை அம்பலப்படுத்துவதாகவே இந்த ஆவணப்படத்தை இடதுசாரிகள் பயன்படுத்த வேண்டும். இதற்கான தர்க்கம் என்பது இந்த ஆவணப்படத்தையும் தாண்டியதாக இருக்க வேண்டும். மோடி எனும் பிரச்சினை தனிநபரின் பிரச்சினை அல்ல, அது ஆர்எஸ்எஸ் எனும் கருத்தியலின் பிரச்சினை என்பதை நாம் சொல்லவேண்டும்.

மோடி எனும் பிரச்சினையின் அனைத்தும் தழுவிய முதலாளித்துவக் கார்ப்பரேட் ஆதரவுத்தன்மையை, பாசிச அரசியல் திட்டத்தை நாம் பேச வேண்டும். இதற்கான வாதத்தை இப்படத்தில் கிறிஸ்டோபர் ஜெபர்லாட், ஆகர் பட்டேல் போன்றவர்களையும் தாண்டித் தருகிற ஆளுமையாக அருந்ததிராய் இருக்கிறார். அருந்ததிராய் மோடி அரசின் வெறுப்பரசியல் கொள்கைகளை, ஆர்எஸ்எஸ் இந்துத்துவ பாசிசத்தின் ஒரு பகுதியாகப் பார்ப்பவர். அதனை எழுதி வருபவர். உலக அரங்கில் இவற்றை நடவடிக்கையாளராக இருந்து பேசிவருபவர். அமெரிக்க-மேற்கத்திய வெளியுறவுக் கொள்கைகளின் மறைதிட்டங்களின் எல்லைகளையும் அறிந்தவர். இந்த ஆவணப்படத்தில், ”நடக்கும் படுகொலைகளைச் சித்திரவதைகளைப் பார்த்துக்கொண்டிருப்பதால் இந்த நாட்டைச் சேர்ந்த பிரஜையாக இருப்பதற்கு நான் அவமானமடைகிறேன்” என்று செல்கிறார் அருந்ததிராய்.

ஆவணப்படத்தில் அருந்ததி ராய்

‘இந்தியா : த மோடி குவஷ்சன்’ எனும் தலைப்புக்கு விதவிதமான மொழிபெயர்ப்புகள் பார்க்க முடிகிறது. மேற்குலக நோக்கில் இத்தலைப்புக்கு ஒரேயொரு அடர்ந்த ராஜாங்கரீதியிலான பொருள்தான் உண்டு. நேரடியாக மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிற எதேச்சாதிகாரியான மோடியை ஏன் மேற்குலக அரசுகள் ஆதரிக்கின்றன? என்பதுதான் அந்தப் பொருண்மை. 

முன்னாள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஜாக் ஸ்ட்ரா, பிரெஞ்சு இந்திய ஆய்வாளரான கிறிஸ்டோபர் ஜெபர்லாட், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சக அதிகாரி போன்றவர்கள் இந்த ஆவணப்படத்தில் முன்வைத்து விடைகாண விரும்பும் கேள்விகள் இவைதான். இந்தக் கேள்விகள் மோடி அரசின் ரஸ்யா, சீனா சார்ந்த கொள்கைகளுடன் தொடர்பு கொண்டது. சர்வதேசிய அரசியலில் தமக்குச் சார்பாக நிலைபாடு எடுக்க அரசுகளை மனித உரிமை- எதேச்சாதிகாரம் என்பதை முன்வைத்து இவ்வாறு பணியச்செய்வது மேற்கு மற்றும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் பகுதி. இதுவே இந்தத் தலைப்பின் இலக்கு.

‘இந்தியா : மோடி எனும் பிரச்சினை’. எனும் இந்தத் தலைப்பின் இந்தியப் பரிமாணம் என்பது இப்படம் பேசும் மையப்படுத்தும் இந்து-முஸ்லீம் பிரச்சினையை விடவும் விரிந்தது. மோடி எனும் பிரச்சினை இந்திய பாசிசம் குறித்த, இந்திய சமூகத்தின் அனைத்தும் தழுவிய ஜனநாயகக் குடியரசுக்கான பிரச்சினை.

– யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன் அவர்கள் தமிழ்ச் சூழலில் அரசியல் கோட்பாடு, திரைப்படங்கள், இலக்கியம், மொழிப்பெயர்ப்பு என பன்முக அடையாளத்துடன் பல்வேறு நூல்களை எழுதியுள்ள குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார்.

(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *