உயிர்ப்போடு தான் இருக்கிறது பிரபாகரனின் அரசியல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன், ‘மீண்டும்’ ஒருமுறை அறிவித்திருக்கிறார்.   ‘தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் பிரபாகரன் அறிவிக்க இருக்கிறார்’ என்றும் தனது சமீபத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பழ.நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார். 

2009 முள்ளிவாய்க்கால் இறுதிப் போர்ச் சூழலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை வீழ்த்தியதாக அறிவித்த இலங்கை அரசு, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் போரில் கொல்லப்பட்டார் என அறிவித்தது.

2009 மே19-ம் தேதி வரை இலங்கை ராணுவத்தால் தமிழர்கள் மீதான இன அழிப்பு தாக்குதல் நிகழ்ந்தேறியது. 1,46,679 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக சொல்லப்படும் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் கடைசி இரண்டு நாட்களான மே 18, 19-ல் மட்டும், சற்றேறக்குறைய நாற்பதாயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

ஆயுதங்களை மவுனிக்கிறோம்


இந்த குறிப்பிட்ட இரு நாட்களுக்கு முன்னரே அதாவது மே 17 அன்று, தமிழர்களின் பாரிய உயிரிழப்பை தவிர்க்கும் நோக்கில் போரின் ஒரு தரப்பான விடுதலைப் புலிகள் சண்டையை நிறுத்துவதாக அறிவித்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சார்பாக ‘ஆயுதங்களை மவுனிக்கிறோம்’ என வெளியிடப்பட்ட அறிக்கையில், 

“இந்த போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றது. எமது மக்களின் முடிவில்லாத ஆதரவையும் உதவியையும் தவிர எமக்கு எந்த உதவியும் இல்லாத நிலையில் சிங்களப் படையினர் முன்னேறியபோது நாம் பின்வாங்க வேண்டியேற்பட்டது.

எமது மக்கள்தான் இப்போது குண்டுகளாலும் எறிகணைகளாலும் நோய்களாலும் பட்டினியாலும் மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மேலும் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

எம்மிடம் இப்போது கடைசியாக ஒரே தெரிவுதான் இருக்கின்றது. எமது துப்பாக்கிகளை மெளனிக்கச் செய்வதற்கு நாம் தீர்மானித்திருக்கின்றோம்”

என குறிப்பிடப்பட்டது.

சேனல் 4-க்கு அளித்த பேட்டி


விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக தொடர்பாளர் குமரன் பத்மநாதனால் வெளியிடப்பட்ட மேற்கூறிய அறிக்கை பற்றி அவர் சேனல்-4க்கு வழங்கிய பேட்டியில்,

சேனல்-4 ஊடகவியலாளர்: நீங்கள் அவருடன் (பிரபாகரனுடன்) பேசினீர்களா, அவர் சரணடையத் தயாராக இருக்கிறாரா?


பத்மநாதன்: நாங்கள் ஆயுதங்களைத் தான் மெளனிக்கிறோம், சரணடையவில்லை.
(‘அதாவது நாங்கள் எங்களது விடுதலைக்காக நடத்தி வந்த ஆயுத வழியிலான போராட்டத்தையே கைவிடுகிறோம். எங்களது விடுதலைக்கான போராட்டத்தை கைவிடவில்லை’ என்னும் பொருளில் பதிலளிக்கிறார்.)

சேனல்-4 ஊடகவியலாளர்: ஏன் சரணடையவில்லை?


பத்மநாதன்: … நாங்கள் எங்களது விடுதலைக்காகவே ஆயுதத்தை எடுத்தோம்- அதை ஏன் சரணடையச் செய்ய வேண்டும். நாங்கள் (தமிழர்களின் தரப்பாக நின்று) அவர்களுடன் வேலை செய்யத் தயராக இருக்கிறோம், ஆனால் சரணடைதல் இல்லை.


சேனல்-4 ஊடகவியலாளர்: … ஆக விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுதத்தை கைவிடுகிறது. ஆனால் சரணடையவில்லை?


பத்மநாதன்: ஆமாம் சரணடையவில்லை. ஆயுதத்தை கைவிடத் தயராக இருக்கிறோம். ஆனால் சரணடையவில்லை.
(இங்கு ‘சரண்டைதல்’ என்ற பொருளில் கேட்கப்படுவது விடுதலைப் போராட்டத்தினை, அதன் கோரிக்கையை சரணடையச் செய்தல், கைவிடுதல் என்கிற அர்தத்தில் ஆகும்)


சேனல்-4 ஊடகவியலாளர்: அப்படியென்றால் போர் முடிவுறுகிறதா, மாறுகிறதா?


பத்மநாதன்: போர் முடிவுக்கு வரலாம் அல்லது (ஆயுத வழியில்லாத) அரசியல் ரீதியாக மாறலாம். இன்னும் சில மணிநேரங்கள் என்ன நடக்கிறது என்பதை பொறுத்தது. நாங்கள் கூறுவது… ஆயுதங்களைக் கைவிடத் தயராக இருக்கிறோம்…மற்றும் எங்களது (தமிழீழ) தேசத்திற்கான  அரசியல் தீர்வை கண்டடைவோம்” என கூறியிருந்தார். 

நடேசன், புலித்தேவன் வெள்ளைக்கொடி ஏந்திய அரசியல்

விடுதலைப் புலிகள் அமைப்பு தங்களது ஆயுதங்களை மெளனிப்பத்தாக அறிவித்த பிறகு, அதனுடைய அரசியல் துறைப் பொறுப்பாளர்கள் நடேசனும், புலித்தேவனும் வெள்ளைக் கொடியுடன் சிங்கள ராணுவத்திடம் சென்றார்கள்; வெள்ளைக் கொடியுடன் சென்ற புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர்கள் போர் விதிகளுக்கு எதிராக படுகொலை செய்யப்பட்டார்கள். ’அரசியல் ரீதியாக மாறலாம்’ என்ற பத்மநாதனின் கருத்து அரசியல் துறைப் பொறுப்பாளர்களான  நடேசன், பூலித் தேவனும் ’பேச்சுவார்த்தைக்கான வெள்ளைக் கொடியுடன்’ சென்றதன் வழி உறுதிப்படுத்தப்படுகிறது. விடுதலைப் புலிகள் போரினை ஆயுத போராட்ட ரீதியிலிருந்து, அரசியல் ரீதியாக மாற்றினார்கள்.

ஆயுதப் போராட்டம் உருவான இடம்


இலங்கைத் தீவில் ‘தமிழர்கள் மீதான இன அழிப்புக்கான தீர்வு, தமிழீழ தனி நாடே!’ என்பதை நோக்கமாக, கொள்கையாகக் கொண்டு தொடங்கப்பட்ட அமைப்பே தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகும்.

தமிழீழ தனிநாட்டுத் தீர்வானதும் கூட ஆயுத வழியிலான போராட்டங்கள் தோன்றும் முன்னரே,  தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக தங்களின் மீதான இன ஒடுக்குமுறைக்கு கண்டடைந்து கொண்ட தீர்வாகும். பாராளுமன்ற ஜனநாயக முறையில் இயங்கி வந்த தமிழ்க் கட்சிகள் ‘தமிழீழ தனிநாட்டு கோரிக்கையை’ தீர்மானமாக நிறைவேற்றி, அதனை தேர்தல் ஜனநாயகத்தின் கோரிக்கையாக தமிழ் மக்களிடத்தில் முன்வைத்தன; ’தமிழீழ தனிநாட்டுக்கான’ ஆதரவை தேர்தல்- பாராளுமன்ற ஜனநாயகத்தின் வழி தமிழர்களிடத்தில் பெற்றன.

சிங்கள மையவாத இலங்கை பாராளுமன்ற அமைப்பானது தமிழர்களின் பாராளுமன்ற ஜனநாயக வழியிலான கோரிக்கையை பாராளுமன்ற அமைப்பு முறைக்குள் தங்களின் மீதான இன ஒடுக்குமுறைக்குரிய தீர்வைப் பற்றிய தமிழர்களின் பேரம் பேசும் (Negotiation) பிரதிநிதித்துவத்தை மறுதலித்த இடத்திலே தான் ஆயுதப் போராட்டத்திற்கான தேவை உருவானது; தமிழ் ஆயுதப் போராட்ட குழுக்கள் உருவாகின. 

சுதுமலையில் அறிவித்த பிரபாகரன்

13-வது சட்டத்திருத்தம் தரும் தீர்வுகளை ஏற்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கைவிடக் கோரப்பட்ட சூழலில், சுதுமலைப் பிரகடனத்தில் பேசிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், 

”நான் தமிழ் மக்களின் விடுதலை கோரிக்கைக்காகவே ஆயுதம் ஏந்தியிருக்கிறேன். கோரிக்கை மக்களுடையது. அதனைக் கைவிடும் தார்மீக உரிமை தமக்கில்லை’ 

எனப் பேசினார்.

சிங்கள அரசுடன் தமிழர்களின் இனப் பிரச்சனைக்குரிய தீர்வை பாராளுமன்ற ஜனநாயகத்தின் வழி பேரம் (Negotiation) பேசுகின்ற வாய்ப்பிழந்த நிலையில், ஆயுத வழியிலான போராட்டத்தின் மூலம் அதனை நிகழ்த்திட விடுதலைப் புலிகள் முயன்றார்கள். 

சிங்கள அரசை பேச்சுவார்த்தை மேசைக்கு இழுத்துவந்த புலிகள்

1999-களில் இலங்கை ராணுவத்துக்கு இணையான ராணுவச் சமநிலையை எட்டிய நிலையில், சிங்கள அரசுடன் தமிழர்களின் இனப்பிரச்சனையை சமப் பங்காளனாக பேசித் தீர்ப்பதற்கான பேர வலிமையாக விடுதலைப் புலிகள் பயன்படுத்திக் கொண்டனர். விடுதலைப் புலிகளது ஆயுதப் போராட்டம் என்பது தங்களது அரசியல் கோரிக்கைக்கான தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை சம பங்காளன் நிலையிலிருந்து சிங்கள அரசுடன் பேசித் தீர்ப்பதற்கான வழிமுறையே ஆகும்.

1999-ம் ஆண்டின் போது சிங்கள ராணுவத்திற்கு எதிரான தொடர் வெற்றிகளை ஈட்டி சிங்கள ராணுவத்தைக் காட்டிலும், மிக வலிமையான ராணுவ நிலையில் விடுதலைப் புலிகள் இருந்த பொழுது, டிசம்பர் மாதம் ‘அமைதிப் பேச்சுவார்த்தைக்கான’ ஒருதலைப்பட்ச போர் நிறுத்த அறிவிப்பை செய்தனர். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து ஒரு மாத காலம் ஒருத்தலைப்பட்ச போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டு கடைப்பிடித்து வந்த நிலையிலும், சிங்கள அரசு பேச்சுவார்த்தைக்கு இணங்க மறுத்தது. 


மேலும் இருமாத காலம் போர் நிறுத்தத்தை கடைப்பிடித்தும் சிங்கள அரசு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இணங்காத நிலையில் விடுதலைப் புலிகள் போரை மீண்டும் துவக்கினர்; கொழும்பு சர்வதேச நிலைய தாக்குதல் மற்றும் கட்டுநாயக விமானப் படைத்தள தாக்குதல் மூலம் சிங்கள அரசுக்கு பாரிய பொருளாதார, இராணுவ இழப்புகளை ஏற்படுத்தி, சிங்கள அரசை அமைதி பேச்சுவார்த்தை மேசைக்கு இழுத்து வந்தனர்.

மெய்நடப்பு அரசின் முக்கியத்துவம்

2002-ம் ஆண்டைய அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளானது விடுதலைப் புலிகளினுடைய ஆயுதப் போராட்டத்திற்கான நோக்கத்தினை வெளிப்படுத்தக் கூடியதாகும். அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தமிழர்களின் தாயகப் பகுதிகளுக்கான தற்காலிக எல்லைகளை உறுதிப்படுத்திக் கொண்ட தமிழர் தரப்பு, தங்களுக்கான மெய்நடப்பு அரசையும் (Defacto State) அமைத்துக் கொண்டது. எந்த கோரிக்கைக்காக ஆயுதமேந்தினார்களோ அந்த கோரிக்கையின் குறைந்தபட்ச செயல்பாட்டு வடிவத்தை தங்களது ஆயுத போராட்டத்தின்  மூலம் கிடைத்த பேர வலிமையின் வழி உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.

உறுதிப்படுத்திக் கொள்வதற்கான பேர வலிமைக்கும், உறுதிப்படுத்தி பெற்றுக் கொண்டதை பாதுகாப்பதற்குமான முன்னணி படையணி என்ற வகையில் தான் விடுதலைப் புலிகளது ராணுவப் படையணி செயல்பட்டது. அரசியல் கோரிக்கைக்கான குறைந்தபட்ச நடைமுறை செயல்பாட்டு வடிவத்தை பெற்றுக் கொடுத்திட்ட இடத்தில், ராணுவப் படையணியின் செயல்பாடு விடுதலைப் போராட்டத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கான முழுமைப் புள்ளியை (Fullfilling Point) எட்டியதாகக் கொள்ளலாம். 

அமைதி பேச்சுவார்த்தையில் தமிழீழ மெய்நடப்பு அரசின் பிரதிநிதியாக விடுதலைப் புலிகள் அமைப்பின் ராணுவப் படையணி பின்னகர்ந்து, அரசியல் துறைப் பிரிவு முன்னணிக்கு வந்தது; போராட்டத்தை ஆயுதப் போராட்ட ரீதியிலிருந்து, அரசியல் (பேச்சுவார்த்தை) ரீதியாக மாற்றினார்கள்.

விடுதலைப் புலிகளின் அரசியல் துறையும், படையணியும்

இலங்கைத் தீவிலும், சர்வதேச நாடுகளிலும் நடந்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பிரிவே பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்தது; தமிழர் இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வுகளை வாதிட்டது. சர்வதேச அளவிலான பேச்சுவார்த்தை மேசைகளில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பிரிவு பங்கேற்றதானது, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றது எனலாம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சர்வதேச மட்ட அரசியல் பேச்சுவார்த்தை வெளிக்கு இட்டுச் சென்றது.

இலங்கை பாராளுமன்ற அமைப்பு முறையால் மறுதலிக்கப்பட்ட தமிழ் மக்களினுடைய விடுதலைக் கோரிக்கையை, சர்வதேச மத்தியத்துவத்தின் கீழான அமைதி பேச்சுவார்தையின் மூலம் குறைந்தபட்ச நடைமுறை வடிவமாக மாற்றி, அதனை அடுத்தகட்டமாக சர்வதேச மட்ட பேச்சுவார்த்தை வெளிக்குள் நிறுத்தியதன் வழி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும், அதன் தலைவர் பிரபாகரனும் தங்களது வரலாற்றுப் பாத்திரத்திற்கு முழுமை சேர்த்துள்ளனர் என்றே சொல்லலாம். 

இந்நிலையில் தான் 2006-ம் ஆண்டு அமைதி ஒப்பந்தத்தை முறித்து சிங்கள அரசு தமிழீழ மெய்நடப்பு அரசின் மீது போரைத் தொடுத்தது. சர்வதேச மட்டத்தில் நடந்த அரசியல் பேச்சுவார்த்தையை குலைக்கும் விதமாக, பேச்சுவார்த்தைக்கான தமிழர் தரப்பின் பிரதிநிதியும், விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளருமான தமிழ்ச்செல்வனை படுகொலை செய்தது.  

முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்டத்திலும் கூட ராணுவப் படையணியே தங்கள் ஆயுதங்களை மெளனித்தது; அரசியல் துறைப் பிரிவு வெள்ளைக் கொடியேந்தி அரசியல் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான தமிழர் தரப்பு பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய முன்வந்தது. ஆனால் இலங்கை அரசும், அதனது தமிழினப்படுகொலை கூட்டாளிகளும் போர் விதிகளுக்கு மாறாக அவர்களை படுகொலை செய்தார்கள். ஆயுதப் போராட்ட ரீதியிலிருந்து, அரசியல் ரீதியாக மாற்றப்பட்ட தமிழரின் இனப் பிரச்சனை பற்றிய அரசியல் பேச்சுவார்த்தைக்கான பிரதிநிதிகள் அழிக்கப்பட்டார்கள்.  

புலிகள் உருவாக்கிய வெளி இன்னும் அப்படியேதான் இருக்கிறது

விடுதலைப் புலிகளினுடைய அதிகாரப்பூர்வ இறுதி அறிக்கையான ‘ஆயுதங்களை மெளனிக்கிறோம்’ அறிக்கை குறிப்பிடுவது போல, மெளனிப்பது என்பது ஆயுதங்களைக் கைவிடுதல் என்றளவில் மட்டுமே; சர்வதேச மட்ட அரசியல் பேச்சுவார்த்தை வெளிக்கு விடுதலைப் புலிகளால் நகர்த்தப்பட்ட விடுதலைக் கோரிக்கைக்கான பேச்சுவார்த்தை வாய்ப்புகள் அப்படியே தான் இருக்கிறது. 

சர்வதேச மட்டத்திலான அரசியல் பேச்சுவார்த்தை வெளிக்குரிய தமிழர் தரப்பு பிரதிநிதிகளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர்களை அழித்ததானது பிரதிநிதிகளுக்குரிய இடத்தினை, வாய்ப்புகளை அழிக்க நினைத்த முயற்சியே ஆகும். ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கித் தந்த தமிழர் இனப் பிரச்சனைக்கான சர்வதேச மட்ட அரசியல் பேச்சுவார்த்தை வெளி இன்னும் அப்படியே தான் இருக்கிறது; தேவை, பிரதிநிதிகளே!  

’தமிழீழ மெய்நடப்பு அரசையும், அதற்கு உத்திரவாதப்படுத்திக் கொடுத்திட்ட எல்லைகளையும்’ முன்னிட்டு மீண்டும் சர்வதேச மட்ட அரசியல் பேச்சுவார்த்தைக்குரிய வாய்ப்புகளை மீள உறுதி செய்ய வேண்டியதே விடுதலைப் புலிகள் அமைப்பும், அதன் தலைவர் பிரபாகரனும் வகுத்தளித்திட்ட அடுத்தகட்ட திட்டமாகும்.

சர்வதேச மட்ட அரசியல் பேச்சுவார்த்தைக்கான வெளியை இருத்திச் சென்றதன் வழி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது அரசியல் இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது. பேச வேண்டியதும், செயற்படுத்த வேண்டியதும் உயிர்ப்போடு இருக்கும் அவரது அரசியலையே!!

– பாலாஜி தியாகராஜன்

2 Replies to “உயிர்ப்போடு தான் இருக்கிறது பிரபாகரனின் அரசியல்”

  1. மிக அற்புதமான கட்டுரை!

    பிரபாகரன் அவர்களைப் பற்றிப் பல கட்டுரைகள் படித்திருக்கிறேன். அவரது போராட்டம், வாழ்க்கை, ஈகம் (sacrifice), திறமை, பெருந்தன்மை என எத்தனையோ விதயங்களைப் பற்றி அக்கட்டுரைகள் பேசியுள்ளன. ஆனால் அவை எல்லாவற்றையும் தாண்டி வரலாற்றுப் பார்வையில் அவர் வகித்த இடத்தையும் அவர் பதித்த தடத்தையும் பேசும் இக்கட்டுரை தமிழர் – ஈழ அரசியல் வரலாற்றில் முக்கியமான படைப்பு! அதுவும் ஒரே கட்டுரையில் விடுதலைப்புலிகளின் ஈழப் போராட்ட வரலாற்றையே சுருக்கமாக அடக்கிய எழுத்தாற்றல் வியப்புக்குரியது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *