திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ்காந்தி உயிரியல் தொழில்நுட்ப மையத்தில் (Rajiv Gandhi Centre for Biotechnology) புதிதாக ஒரு ஆய்வு வளாகத்தை உருவாக்கப் போவதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். அந்த புதிய வளாகத்திற்கு “ஸ்ரீ குருஜி மாதவ் சதாஷிவ் கோல்வால்கர் தேசிய புற்றுநோய் மற்றும் வைரஸ் தொற்றுக்கான மையம்” (“Shri Guruji Madhav Sadashiv Golwalkar National Centre for Complex Disease in Cancer and Viral Infection”) என்று முன்னால் ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பெயரை சூட்டப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
யார் இந்த கோல்வால்கர்?
ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவராவராக இருந்தவர் மாதவ் சதாஷிவ் கோல்வால்கர். இவர் இந்துத்துவா கருத்தியலை வகுப்பதில் மிக முக்கியமான பங்காற்றியவர். இந்து மகாசபா மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தீவிர உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவராக கோல்வால்கர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது (1940-1973). காந்தி கொலை குற்றத்திற்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தடைசெய்யப்பட்டது. மேலும் கோல்வால்கரும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தியாவின் ஜனநாயக-மதச்சார்பற்ற அரசியலமைப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும், மனுஸ்மிருதியை அரசியலமைப்பாக ஏற்க வேண்டும் என்றும் கோல்வால்கர் பலமுறை வெளிப்படையாக கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் சிறுபான்மையினர் பிரச்சினையை தீர்ப்பதற்காக ஹிட்லரின் இனஅழிப்பு வழிமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று இந்துக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
தென்னிந்தியர்களை இழிவுபடுத்திய கோல்வால்கரின் இனவெறிக் கோட்பாடு
கோல்வால்கர் டிசம்பர் 17, 1960 அன்று குஜராத் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் படிக்கும் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற அழைக்கப்பட்டார். அன்று அவர் ஆற்றிய உரையின் சாரத்தை கவனமாகப் பார்த்தால் கோல்வால்கர் எம்மாதிரியான கொள்கை உடையவர் என்பது வெளிப்படையாகத் தெரியும். அந்த உரையில் இனவெறிக் கோட்பாட்டின் மீது தனது உறுதியான நம்பிக்கையை கோல்வால்கர் வெளிப்படுத்தினார்.
“இன்று கலப்பினம் (cross breed) உருவாக்கும் சோதனைகள் அனைத்தும் விலங்குகள் மீது மட்டுமே நடத்தப்படுகிறது. இதுபோன்ற சோதனைகளை மனிதர்கள் மீது செய்வதற்கான தைரியம் இன்றைய நவீன விஞ்ஞானத்திற்கு இன்னும் வரவில்லை. மனிதர்களுக்கு இடையே காணப்படும் சில கலப்பினங்கள், விஞ்ஞான பரிசோதனைகளின் விளைவாக நடக்கவில்லை. மாறாக அது காம இச்சையினால் உருவானது.
இதுபோன்ற கலப்பினத்தை உருவாக்குவதற்காக நம் முன்னோர்கள் செய்த சோதனைகளைப் பார்ப்போம். கலப்பினத்தின் மூலம் மனித இனத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியாக, வட இந்தியாவின் நம்பூதிரி பிரமாணர்கள் கேரளாவில் குடியேற்றப்பட்டர்கள். ஒரு நம்பூதிரி குடும்பத்தின் மூத்த மகன் கேரளாவில் உள்ள வைஷ்ய, சத்ரிய அல்லது சூத்திர சமூகப் பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு விதி உருவாக்கப்பட்டது.
இன்னுமொரு தைரியமான விதி உருவாக்கப்பட்டது. அது என்னவென்றால், திருமணமான ஒரு பெண் எந்தவொரு வர்ணத்தினராக இருந்தாலும் முதல் குழந்தை ஒரு நம்பூத்ரி பிராமணருக்குப் பெற்றெடுக்க வேண்டும். பின்னர் அவள் கணவனுடன் சேர்ந்து குழந்தைகளைப் பெற்றெடுத்துக் கொள்ளலாம். இன்று இந்த சோதனை விபச்சாரம் என்று அழைக்கப்படும். ஆனால் முதல் குழந்தைக்கு மட்டும் என்பதால் அது அவ்வாறு கருதப்படத் தேவையில்லை”.
[எம். எஸ். கோல்வால்கர் (ஆர்கனைசர் பத்திரிக்கை) ஜனவரி 2, 19610]
சாதி அமைப்பு தொடர்ந்தால் தான் திறன்மிகு சமுதாயம் என்றவர்
கோல்வால்கர் வர்ண அமைப்பு அல்லது சாதி அமைப்பை நியாயப்படுத்துவது குறித்து அவரது பின்வரும் கருத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
“இன்று நாம் அறியாமையின் மூலம் வர்ண அமைப்பை இழக்க முயற்சிக்கிறோம். ஆனால் இந்த அமைப்பின் மூலம்தான் உடைமையைக் கட்டுப்படுத்த முடியும்…சமுதாயத்தில் சிலர் அறிவுஜுவியாக இருக்கலாம், சிலர் உற்பத்தி மற்றும் செல்வத்தை உருவாக்குவதில் திறமையானவர்களாக இருக்கலாம் மற்றும் சிலருக்கு உழைப்புத் திறன் இருக்கலாம். இந்த நான்கு பரந்த பிளவுகளை நம் முன்னோர்கள் கவனமாகக் கண்டறிந்து வர்ண அமைப்பை உருவாக்கினார்கள்.
இந்த பிரிவுகள் சரியான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டால் ஒரு திறன்மிகு சமூகத்தை உருவாக்க முடியும். இந்த முறையானது பரம்பரையாக தொடர்ந்தால், ஒவ்வொரு நபருக்கும் அவரது பிறப்பிலிருந்தே வாழ்வாதாரத்திற்கான வழிமுறைகள் உறுதி செய்யப்படும்.”
[எம்.எஸ்.கோல்வால்கர் (ஆர்கனைசர் பத்திரிக்கை), ஜனவரி 2, 1961, பக். 5 & 16]
இனவெறிக் கோட்பாட்டின் உருவம்
மேற்கண்ட கருத்துக்களின்படி, கோல்வால்கர் இந்திய சமுதாயத்தில் உயர்ந்த இனம் மற்றும் தாழ்ந்த இனம் என்ற பாகுபாடு இயற்கையாகவே உள்ளது என்று சொல்கிறார். இந்த பாகுபாட்டை இனக்கலப்பின் மூலம் மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார். வடஇந்திய பிராமணர்கள் குறிப்பாக நம்பூதிரி பிராமணர்கள் ஒரு உயர்ந்த இனத்தைச் சார்ந்தவர்கள் என்றும், தென்னிந்தியர்கள் இழிவான தரம் குறைவான இனத்தைச் சார்ந்தவர்கள் என்றும் வலியுறுத்துகிறார்.
மேலும் கோல்வால்கர் ஒரு ஆணாதிக்கவாதியாக இருந்துள்ளார். என்பதை அவரது வார்த்தைகளில் இருந்தே நாம் உணரலாம். வடக்கிலிருந்து வந்த உயர் இனத்தைச் சார்ந்த ஆண்கள், அதாவது நம்பூதிரி பிராமண ஆண்கள், தெற்கிலிருந்த தரக்குறைவான பெண்களுடன் ஒன்றிணைவதினூடாக தென்னிந்திய இந்துக்களை மேம்படுத்த முடியும் என்று கூறுகிறார்.
இவரது பெயரையா மருத்துவ நிறுவனத்திற்கு சூட்டுவது?
கோல்வால்கரைப் பொறுத்தவரையில் கேரளாவின் இந்துப் பெண்களின் கருப்பைகள், இனத்தை மேம்படுத்துவதற்கான ஒரு கருவி மட்டுமே. புதிதாக திருமணமான கேரள பார்ப்பனர் அல்லாத பெண்கள் தனது முதல் இரவை பார்ப்பனர்களுடன் கழிக்க வேண்டும் என்ற மிக மோசமான நடைமுறை கடைபிடிக்கப்பட்டதையே அவர் உறுதிபடுத்துகிறார்.
இனவெறி, பெண் வெறுப்பு, ஆணாதிக்கம் மற்றும் சமத்துவமற்ற கருத்துக்களை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிரம்பி இருந்த ஒரு பல்கலைக்கழக கூட்டத்தில் கோல்வால்கர் வெளிப்படுத்தியது அதிர்ச்சியாக உள்ளது.
தென்னிந்தியர்களையும், கேரளப் பெண்களையும் பகிரங்கமாக இழிவுபடுத்தும் இத்தகைய குற்றவியல் கருத்துக்களைக் கொண்ட கோல்வால்கரின் பெயரை ஒரு முக்கிய அறிவியல் மையத்திற்கு சூட்ட எப்படி பாஜக ஆட்சியாளர்களுக்கு துணிவு வந்தது. இது கேரளாவிற்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஜனநாயக-மதச்சார்பற்ற அரசியலுக்கே இழுக்கானதாகும்
நன்றி- Sabrang India, சாகுல்
இந்த தளத்தில் கூறப்பட்ட விஷயங்கள் அனைத்தும் பொய்யாக திரிக்கப்பட்டவைகளே. உண்மைக்கு மாறானவை!!!