பொதுத்துறை நிறுவனங்கள்

PMCARE நிதிக்கு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பொதுத்துறை நிறுவனங்கள் அளித்த 155 கோடி

நூற்றுக்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இணைந்து கிட்டத்தட்ட 155 கோடி ரூபாய் அளவிலான தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை ‘PM CARES’ நிதிக்கு அளித்துள்ளதாக ஆர்.டி.ஐ தகவல் வெளிவந்துள்ளது. 

‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியின் ஆர்.டி.ஐ கேள்விகளுக்கு பதிலளித்துள்ள பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக இந்த தகவல்கள் வெளிவந்துள்ளது. மொத்தம் 121 பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆர்.டி.ஐ பதில்களைப் பெற்றுள்ளது.

சம்பளத்திலிருந்து 155 கோடி, CSR பணத்தில் 2423 கோடி

ஆர்.டி.ஐ தகவலில் 101 பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ரூ154.70 கோடியும், 98 பொதுத்துறை நிறுவனங்கள் சி.எஸ்.ஆர் நிதியில் இருந்து ரூ.2,422.87 கோடியும் வழங்கியுள்ளனர். இவற்றில் 71 நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளம் மற்றும் சிஎஸ்ஆர் நிதி ஆகிய இரண்டிலிருந்தும் பங்களித்ததும் தெரிவித்துள்ளது.

24 பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து கிட்ட்தட்ட 1 கோடிக்கும் அதிகமாக நிதி அளித்துள்ளனர்.

அதிகபட்சமாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் தங்கள் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து மட்டும் 29.06 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது. மேலும் CSR நிதியிலிருந்து ரூபாய் 225 கோடியும் வழங்கி உள்ளது.

இரண்டாவது அதிகபட்சமாக தேசிய அனல் மின் கழகம் சி.எஸ்.ஆர் நிதியில் இருந்து ரூ250 கோடி ரூபாய் அளித்துள்ளதாகவும், ரூ7.58 கோடி ரூபாய் ஊழியர்களின் சம்பளத்தை கொடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் முதல் ஏழு பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவன ஊழியர்களின் சம்பளத்திலிருந்து இருந்து ரூ 204.75 கோடி நிதியும், மத்திய கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து இருந்து ரூ.21.81 கோடி ரூபாய் நிதியும் ‘PM CARES’ வங்கிக் கணக்கில் பெறப்பட்டதாக “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” இன் ஆர்.டி.ஐ அறிக்கை தெரிவிக்கிறது. 

தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் அதன் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ரூ 88,072 பங்களித்துள்ளது.

‘PM CARES’ நிதிக்கணக்கு

கடந்த மார்ச் 28 ஆம் தேதி  கொரோனாவைக் காரணம்காட்டி பொதுமக்களிடம் நிதி பெற பிரதமர் ‘PM CARES’ எனும் பெயரில் புதியதாக வங்கிக் கணக்கைத்  தொடங்கினார். இந்த கணக்கைத் தொடங்கிய மூன்றே நாளில் (மார்ச் 31-க்குள்) 3,076.62 கோடி ரூபாய் பெறப்பட்டது. அதில் 3,075.85 கோடி ரூபாய் “தன்னார்வ பங்களிப்பு” என பட்டியலிடப்பட்டது.

ஏற்கனவே பேரிடர் வைப்பு நிதிக்காக பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி (PMNRF- PM National Relief Fund) இருக்கும் சமயத்தில் புதியதாக ‘PM CARES’ தொடங்கப்பட்டது பெரும் விமர்சனத்தை ஈர்த்தது. 

‘PM CARES’ நிதியை நிர்வகிக்கும் பிரதமர் அலுவலகத்திடம் கடந்த ஆகஸ்ட் மாதம் நிதி பெறப்பட்ட விவரங்களை கேட்ட பொழுது “தகவல் அறியும் உரிமைச் சட்ட பிரிவு 2ன் கீழ் ‘PM CARES’ நிதி ஒரு பொது அதிகாரம் அல்ல” என கூறி தகவல் தர மறுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *