சென்னை வாக்குப்பதிவு

சென்னையின் வாக்குப்பதிவு குறைவாக இருப்பதன் காரணம் என்ன?

தமிழ்நாட்டின் நடந்து முடிந்த 16-வது சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவில்  ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டிலேயே குறைந்த வாக்குப்பதிவு தலைநகர் சென்னையில் தான் நடந்துள்ளது. தமிழ்நாட்டின் மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 72.78%. ஆனால் சென்னையில் 59.06% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டின் மொத்த சராசரியை விட தலைநகர் சென்னையில் 13 சதவீதம் குறைவாகப் பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும் இது குறைவானதாகும். 

கடந்த இரண்டு தேர்தல்களில் பதிவான வாக்குகள்

2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 60.99% வாக்குகளும், 2011-ம் ஆண்டு தேர்தலில் 68.2% வாக்குகளும் பதிவாகி இருந்தன.

வெளியூர் வாக்காளர்களின் இரண்டு வாக்குகள்

சென்னையில் பெரும்பாலும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் அதிகம் என்பதால் அவர்களுக்கு இரண்டு இடங்களில் வாக்குகள் இருப்பதால் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்று விடுவதாக கடந்த காலங்களில் தேர்தல்களில் வாக்கு சதவீதம் குறைந்தபோது கூறப்பட்டது. தற்போது இந்த இரட்டை வாக்கு சிக்கல் பெரும்பான்மையாக தீர்க்கப்பட்டுள்ளதாகக் கூறினாலும் இன்னும் பலருக்கு   இரண்டு இடங்களில் வாக்குகள் இருக்கிறது என்ற காரணத்தினை அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு திரும்பாதவர்கள்

கொரோனா பெருந்தொற்று காரணமாக வேலைவாய்ப்பை இழந்த பல குடும்பத்தினர் இன்னும் சென்னைக்கு திரும்பாததும், பலர் குடும்பத்தினை ஊரில் விட்டுவிட்டு தனியாகவே சென்னைக்கு திரும்பியதும் கூட சென்னையில் வாக்குப்பதிவு குறைய முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

உயர் நடுத்தர வர்க்க மனநிலை

அதேபோல சென்னையில் உள்ள நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்தவர்களில் கணிசமானோர் இந்த தேர்தல் முறையில் வாக்காளர்களாக பங்கெடுக்க விரும்புவது இல்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.  

மாநகரின் மையத்திலிருந்து அகற்றப்பட்ட குடிசைப் பகுதி மக்கள்

சென்னை பெருநகரில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் கண்ணகி நகர் மற்றும் பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளுக்கு கொண்டுசெல்லப்பட்ட மக்களுக்கு இன்னும் அவர்கள் ஏற்கனவே குடியிருந்த பகுதிகளில் தான் வாக்குரிமை இருக்கிறது. அவர்கள் பல கி.மீ தூரம் பயணித்து வந்து வாக்களிக்க பேருந்து வசதி கூட வாக்குப்பதிவு நாளன்று சரியாக இல்லாததும் ஒரு முக்கிய காரணம் என்று பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சமுக ஆர்வலர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

தர்மபுரியில்தான் அதிகம்

படித்தவர்கள் அதிகமிருக்கும் சென்னை, தமிழகத்திலேயே குறைந்த வாக்குப்பதிவு நடந்த மாவட்டமாக இருக்கும் அதேவேளையில் தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக அறியப்பட்ட தர்மபுரி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குப்பதிவு நடைபெற்ற மாவட்டமாக இருக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் 82.35% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இது ஒட்டுமொத்த மாநில சராசரியை விட 10% அதிகமாகும்.

முக்கிய அமைச்சர்களின் தொகுதிகளில் அதிக வாக்குப்பதிவு

அதேபோல தமிழ்நாட்டின் பத்து முக்கிய அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதிகள் 80 சதவீத வாக்குப்பதிவைத் தாண்டியுள்ளது. முதலிடத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் போட்டியிட்ட பாலக்கோடு தொகுதி உள்ளது. அங்கு மாநிலத்திலேயே அதிகமாக 87.3% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் 85.6% வாக்குகளும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்ட விராலிமலை தொகுதியில் 85.4% வாக்குகளும், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பண்ணன் போட்டியிட்ட பாவானி தொகுதியில் 83.7 % வாக்குகளும், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போட்டியிட்ட கரூர் தொகுதியில் 83.5% வாக்குகளும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் போட்டியிட்ட கோபிசெட்டிப்பாளையத்தில் 82.5% வாக்குகளும், அமைச்சர் சரோஜா போடியிட்ட ராசிபுரம் தொகுதியில் 82.1% வாக்குகளும் பதிவாகியுள்ளது. 

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் போட்டியிட்ட நன்னிலம் தொகுதியில் 82% வாக்குகளும், வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிட்ட ஜோலார்பேட்டை தொகுதியில் 80.9% வாக்குகளும், கைத்தறி நெசவுத்துறை அமைச்சராக உள்ள ஓ.எஸ்.மணியன் போட்டியிட்ட வேதாரண்யம் தொகுதியில் 80.6% சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது. 

அமைச்சர்கள் போட்டியிட்ட தொகுதிகளில்  வாக்கு சதவிகிதம் கூடியிருக்கும் போதும், சென்னையில் நிதியமைச்சர் ஜெயக்குமார் போட்டியிட்ட ராயபுரம் தொகுதியில் 62.31% வாக்குகளே பதிவாகியுள்ளது. இது மாநில சராசரியை விட 10% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 60.52% வாக்குகளே பதிவாகியுள்ளது. சென்னையில் உள்ள பதினாறு தொகுதிகளில் அதிகபட்சமாக ஆர்.கே.நகர் தொகுதியில் 66.57% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதுவும்கூட மாநில சராசரியை விட 6% குறைவு தான்.

மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு விபரம்

திருவள்ளூர் -70.56%

சென்னை -59.06 %

காஞ்சிபுரம் – 71.98%

வேலூர் – 73.73%

கிருஷ்ணகிரி – 77.30%

தர்மபுரி – 82.35%

திருவண்ணாமலை – 78.62%

விழுப்புரம் -7856%

சேலம் – 79.22%

நாமக்கல் – 79.72%

ஈரோடு – 77.07%

நீலகிரி – 69.68%

கோவை – 68.70%

திண்டுக்கல் – 77.13%

கரூர் – 83.92%

திருச்சி  – 73.79%

பெரம்பலூர் – 79.09%

கடலூர் – 76.50%

நாகை – 75.48%

திருவாரூர் – 76.53%

தஞ்சை – 74.13%

புதுக்கோட்டை  – 76.41%

சிவகங்கை – 68.94%

மதுரை  -70.33%

தேனி  71.75%

விருதுநகர்  – 73.77%

ராமநாதபுரம் – 69.60%

தூத்துக்குடி -70.20%

திருநெல்வேலி – 66.65%

கன்னியாகுமரி – 68.67%

அரியலூர் – 82.47%

திருப்பூர் – 70.12%

கள்ளக்குறிச்சி – 80.14%

தென்காசி – 72.63%

செங்கல்பட்டு -68.18%

திருப்பத்தூர்  – 77.33%

ராணிப்பேட்டை  – 77.92%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *