குமரித் தந்தை மார்சல் நேசமணி பிறந்தநாள் இன்று

பிறந்தநாள் சிறப்பு பதிவு

இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு வட்டத்தைச் சார்ந்த பள்ளியாடி என்னும் ஊரில் 12 சூன் 1895 ம் ஆண்டு அப்பாவு-ஞானம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

 பிறந்து வளர்ந்த பகுதியிலும், அவரது அம்மாவின் பிறந்த ஊர் பகுதியிலும் இவருக்கு நில உடமையாளர்களாக இருந்த நாயர்களின்  சாதி ஆதிக்கத்தை நேரடியாக உணர்ந்தவர்.

நேசமணி இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர். நாகர்கோவில் ஸ்காட் உயர்நிலைப்பள்ளியில் படித்துவிட்டு, பின்னர் நெல்லை சி.எம்.எஸ்.கல்லூரியில் பட்ட முன்படிப்பில் சேர்ந்து படித்தார். திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் பட்ட மேல் படிப்பைத் தொடர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார்.

திருச்சியில் ஆசிரியர் பணி புரிந்த நிலையில், பாதிக்கப்படும் மக்களுக்குப் பணியாற்ற விரும்பி திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சேர்ந்து பி.எல். பட்டம் பெற்றார்.

சாதி ஆதிக்கத்திற்கு எதிராக நேசமணி

நாகர்கோவில் நீதிமன்றத்தில் 1921 ஆம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்து பணியாற்றினார். நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆதிக்க  சாதி வழக்கறிஞர்கள் உட்கார கையுள்ள நாற்காலியும் ஒடுக்கப்பட்ட சமூக வழக்கறிஞர்களுக்கு ஸ்டூலும் இடப்பட்டிருந்தது.

தான் நீதிமன்றம் சென்ற முதல் நாளன்றே, தீண்டாமையுடன் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு போடப்பட்டிருந்த ஸ்டூலை காலால் உதைத்துத் தள்ளிவிட்டு, நாற்காலியில் உட்கார்ந்து நீதிமன்றத்தில் இருந்த சாதி்க் கொடுமையை ஒழித்தார்.

அதே போன்று நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் ஆதிக்க ஜாதி வழக்கறிஞர்களுக்கும் ஒடுக்கப்பட்ட ஜாதி வக்கீல்களுக்கும் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்த குடிநீர்ப் பானையை உடைத்துவிட்டு, அனைத்து வக்கீல்களுக்கும் பொதுவாக ஒரே பானையை வைத்தார். குமரி மண்ணில் சாதி ஆதிக்கத்துக்கு எதிராக சமுதாய சீர்திருத்தத்தில் ஈடுபட்டவர் மார்சல் நேசமணி.

பொது வாழ்க்கையில் ஈடுபட்ட பின்பு நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராக இருந்தார். பின்னர் தேர்தலில் போட்டியிட்ட அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டசபைக்கும் சென்றார். அதைத் தொடர்ந்து நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தான் இறக்கும் வரை பணியாற்றினார்.

குற்றவியல் வழக்குகளில் திறம்பட பணியாற்றியதால் மக்களிடையே செல்வாக்குப் பெறத் தொடங்கினார். இதன் காரணமாக 1943ஆம் ஆண்டில் நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருவிதாங்கூரில் சொத்துரிமை உள்ளவர்கள் சொத்துவரியின் அடிப்படையில் நிர்வாக சபைத் தேர்தல்களில் போட்டியிடவோ, வாக்களிக்கவோ முடியும் என்கின்ற நிலையை மாற்றியமைக்கும்படி திவான் சர்.சி.பி. இராமசாமி அய்யரிடம் போராடி வெற்றி பெற்றார். பின்னர் அதே ஆண்டில் நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகப் பொறுப்பேற்றார். முதன் முதலாக கல்குளம், விளவங்கோடு வட்டங்களின் பிரதிநிதியாக திருவிதாங்கூர் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தெற்கெல்லை போராட்டம்

தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு ஆகிய தாலுகாக்களில் தமிழர்கள் பெருவாரியாக வசித்து வந்தனர். தமிழர் பகுதிகளில் மலையாளம் அலுவல் மொழியாக இருந்தமையும், தமிழ்ப் பள்ளிகள் மிகக் குறைவாக இயங்கி வந்ததும் தமிழர்களுக்கு பல இன்னல்களை தோற்றுவித்து வந்தன. மொழி சம்பந்தமாக தமிழர்கள் விடுத்த கோரிக்கைகளை திருவாங்கூர் அரசு தொடர்ந்து புறக்கணித்து வந்தது.

மலையாள மொழி பேசப்படும் பகுதிகளை ஒருங்கிணைத்து கேரள மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ‘திருவாங்கூர் சமஸ்தான காங்கிரஸ்’ கட்சி ஆதரவு அளித்து வந்ததால், அக்கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தலைவர்கள் சிலர் அக்கட்சியை விட்டு வெளியேறினர். அவர்கள் 1945 ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று நாகர்கோவிலில் கூடி வழக்கறிஞர் சாம் நத்தானியேல் தலைமையில் ‘அகில திருவாங்கூர் தமிழர் காங்கிரஸ்’ எனும் அரசியல் இயக்கத்தை தொடங்கினர். திருவாங்கூரின் தமிழர் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

திருவாங்கூர் சமஸ்தானத்தில் தமிழர்கள் சாதி, மொழி, இன அடிப்படையில் புறக்கணிக்கப்படும் நிலைக் கண்டு, கொதிப்படைந்து 9.12.1945இல் நெய்யூர் எட்வின் நினைவு அரங்கத்தில் ஒரு கூட்டத்ததை ஏற்பாடு செய்தனர்; அதில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் குரல் கொடுக்கும் இயக்கமொன்றைத் தொடங்க மார்ஷல் நேசமணி விரும்பினார். புகழ் பெற்ற வழக்கறிஞர் பர்ணபாசு தலைமையில்

‘திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்’ எனும் அரசியல் இயக்கத்தை தொடங்கினர்.

திருவாங்கூர் தமிழர்களுக்கென்று தனி மாகாணம் அமைத்திட அரசியல் கட்சி ஒன்று தேவையெனக் கருதினார். ஆலன் நினைவு அரங்கத்தில் 8.9.1947ஆம் ஆண்டு சிவதாணுப்பிள்ளை, சிதம்பரம் பிள்ளை, அப்துல்ரசாக் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்திற்குத் நேசமணி தலைமை வகித்து திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றினார்.

தமிழர்கள் மீது துப்பாக்கிச் சூடு

1948-இல் நடைபெற்ற திருவிதாங்கூர் சட்டமன்றத் தேர்தலின் போது, கேரள அரசு, மாங்காடு தேவசகாயம் மற்றும் கீழ்க்குளம் செல்லையா என்ற இரு தமிழர்களை சுட்டுக் கொன்றது.  1948  தேர்தலில் 14 இடங்களில் திருவாங்கூர்  தமிழ்நாடு காங்கிரஸ் வெற்றி பெற்றது.

1952 ஆம் ஆண்டு இந்திய ஒன்றியம் முழுவதும் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தி.த.நா.கா. எட்டு சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றியது.  நாகர்கோவில் மக்களவை தொகுதியில் ஏ. நேசமணியும், மாநிலங்களவை தேர்தலில் எ. அப்துல் ரசாக்கும் வெற்றி பெற்று தி.த.நா.கா. உறுப்பினர்களாக பாராளுமன்றத்திற்கு சென்றனர்.

1952 தி தா காங்கிரஸ் போராடடம்

காங்கிரசு ஆதரவுப் பெற்ற பட்டம் தாணுப்பிள்ளை தேவிகுளம், பீர்மேடு பகுதி தமிழர்கள் மீது அடக்கு முறையை ஏவினார். தமிழ் மக்களுக்கு ஆதரவாக மூணாறு சென்ற நேசமணி, சிதம்பரநாதன், அப்துல்ரசாக் ஆகியோரை கைது செய்து ஆறு வார காலம் சிறையிலடைத்தார்.

1954 ஆகஸ்ட் 11ஆம் நாள்  ‘விடுதலை நாள்’ போராட்டம் திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸால் அறிவிக்கப்பட்டது. திருவிதாங்கூர் தமிழர் பகுதிகளில் வேலை நிறுத்தம், கடையடைப்பு, சாலை மறியல் நடந்தது.

போராட்டத்தின் போது, மார்த்தாண்டம் மற்றும் புதுக்கடை என்ற இரு இடங்களில் பட்டம் தாணுப்பிள்ளை தலைமையிலான‌ கேரள அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் பின்வரும் தமிழர்கள் பலியாயினர்.

புதுக்கடைத் துப்பாக்கிச் சூட்டில்,

வண்ணான் விளை A.அருளப்பன் நாடார்,

கிள்ளியூர் M.முத்துசுவாமி,

புதுக்கடை N.செல்லப்பாப் பிள்ளை மற்றும்

அம்சி A.பீர் முகமது ஆகிய நான்கு தமிழர்கள் பலியாயினர்.

 மார்த்தாண்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில்  தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் மலையாள காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு மொத்தம் 11 தமிழர்கள் பலியாகினர்.

பட்டம் தாணுப்பிள்ளையின் அடக்குமுறைகளின் தமிழர்களின் வீடுகள், கடைகள், அடித்து நொறுக்கப்பட்டன; சொத்துகள் சூறையாடப்பட்டன. சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் கடும் சித்திரவதைக்குள்ளாயினர். அவப்பெயர் வருவதைக் கண்ட பின்னரே பிரசா சோசலிசுட் கட்சியின் தலைமை, பட்டம் தாணுப்பிள்ளையின் அடக்கு முறையைக் கண்டித்து பதவி விலகும்படி கூறியது.

 அவரும் வேறு வழியின்றி பதவி விலகினார். பின்னர் விடுதலை செய்யப்பட்ட நேசமணி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் அளித்தும், சட்டப்படி அம்மக்களுக்கு எதிராகப் போடப்பட்ட வழக்குகளுக்குத் தானே நேரில் வாதாடி விடுதலையும் பெற்றுத் தந்தார்.

நேருவின் பிரச்சாரத்தை தோற்கடித்த தமிழர்கள்

 1954இல் திருவிதாங்கூர் கொச்சியில் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது ஒன்றிய தலைமை அமைச்சர் நேரு கேரள காங்கிரசு கட்சிக்கு ஆதரவாகவும், நேசமணிக்கு எதிராகவும் தமிழர் பகுதிகளில் பரப்புரை செய்தார். தமிழர்களோ திருவிதாங்கூர் தமிழர் காங்கிரசு கட்சியை 12 இடங்களில் வெற்றி பெறச் செய்தனர். இதன் மூலம் நேருவுக்கும், இந்திய அரசுக்கும் தமிழர்கள் மார்சல் நேசமணியே தமிழர்களுக்கானவர் என்பதை உணர்த்தினர்.

அதைத் தொடர்ந்து நேசமணி தலைமையில், திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த தமிழர் பகுதிகளை தமிழ் நாட்டுடன் இனைக்கும் போராட்டம் எழுச்சி பெற்றது.

குமரி தமிழ்நாடு உடன் இணைப்பு

இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் முக்கியமானவர் நேசமணி. இதனால் மார்ஷல் நேசமணி என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். பல்வேறு கட்ட, நீண்ட போராட்டத்துக்குப் பின் கேரளா ஆளுகைக்குள் செல்ல இருந்த கன்னியாகுமரி மாவட்டம் 1956 நவ.,1 ல்  தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது.

தேவிகுளம், பீர்மேடு நெய்யாற்றங்கரை, செங்கோட்டை வனப்பகுதி உள்ளிட்ட பகுதிகளை தமிழ்நாடு இழந்தாலும் தென் எல்லையாகக் குமரிமாவட்டம்  தமிழ்நாட்டின் எல்லையாக மாறியது.  அதன் பின், குமரி மாவட்டம் பல்வேறு வளர்ச்சிகளைப் பெற்றது. இந்தியாவின் தென் எல்லை குமரி மாவட்டம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சாதிய ஒடுக்குமுறை, மலையாள மொழித்திணிப்பு, தாயக மண்பறிப்பு ஆகிய மூன்று நிலைகளிலும் தமிழர் விடுதலை காண வேண்டுமென்று போர்க்குரல் எழுப்பிய பெருமகனார் மார்சல் நேசமணி ஆவார். அவரது பிறந்த நாள் இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *