ஜார்க்கண்ட் மாநில அரசு தற்போது தங்கள் மாநிலத்திற்குள் சி.பி.ஐ மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணை மேற்கொள்வதற்கு வழங்கபட்டிருந்த அனுமதியை ரத்து செய்துள்ளது.
பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தொடர்ச்சியாக சி.பி.ஐ விசாரிப்பதற்கான உரிமையை ரத்து செய்து வருகின்றன. சி.பி.ஐ அமைப்பு பாஜக-வின் அரசியல் கருவியாக பயன்படுத்தப்படுவதாகவும் அவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
கடந்த மாதம் அக்டோபர் 21-ம் தேதி மகாராஷ்டிரா சிவசேனா அரசும், நேற்று முன்தினம் நவம்பர் 4-ம் தேதி கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசும் சி.பி.ஐ-க்கு வழங்கப்பட்ட உரிமத்தை திரும்பப் பெற்ற நிலையில் தற்போது ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் அரசு அந்த வரிசையில் இணைந்துள்ளது.
இதுவரை 8 மாநிலங்கள் தங்கள் மாநிலத்திற்குள் சி.பி.ஐ விசாரிப்பதற்கான உரிமத்தை ரத்து செய்துள்ளன.
“டெல்லி சிறப்பு காவல் அமைப்பிற்கு அளித்த ஒப்புதலை ஜார்க்கண்ட் அரசு இந்த அறிவிப்பின் மூலம் திரும்பப் பெறுகிறது” என ஜார்க்கண்ட் அரசின் இணைச் செயலாளர் அனில் குமார் சிங் கையெழுத்திட்ட அறிக்கை சுருக்கமாக தெரிவித்துள்ளது.
மம்தா ஆளும் மேற்கு வங்காளம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் கெலோட் ஆளும் ராஜஸ்தான், வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களும் இந்த உத்தரவை ரத்து செய்துள்ளனர்.
2018-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தன் சொந்த நலன்களுக்காக இந்த அமைப்புகளைப் பயன்படுத்தி வருவது நம்பகத்தன்மையை குறைத்துள்ளதாக குற்றம்சாட்டி ஆந்திரப் பிரதேச மாநிலம் சிபிஐ-க்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை ரத்து செய்தது. ஆனால் பின்னர் வந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் நீக்கபட்ட அனுமதியை வழங்கி உத்தரவிட்டது .
ரிபப்ளிக் டிவியின் TRP முறைகேடு தொடர்பான வழக்கினை முதலில் மகாராஷ்டிர மாநில காவல்துறை விசாரித்து வந்தது. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் இது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்பட்டது. பின்னர் இந்த முறைகேடு தொடர்பான வழக்கினை விசாரிப்பதற்கு சி.பி.ஐ வழக்கு பதிவு செய்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் சிபிஐக்கு வழங்கி இருந்த அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டது. TRP முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரிபப்ளிக் செய்தி நிறுவனத்தின் அர்னாப் கோஸ்வாமியை காப்பாற்றுவதற்காக மத்திய பாஜக அரசு சி.பி.ஐ-யைப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டி இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
சமீபகாலங்களில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசாங்கங்கள் ஒன்றிய அரசு மற்றும் சி.பி.ஐ ஆகியவற்றுடன் முரண்பட்டுள்ளன. மத்திய புலனாய்வு அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு ஒன்றிய அரசு அதன் அரசியல் லாபத்திற்காக இயக்கி வருவதாக கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.