கடந்த 26ம் தேதி கோவையில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்ட தேர்தல்
பிரச்சார கூட்டத்தில் வைக்கப்பட்ட கட்அவுட் களில் காமராஜர் படம்
பயன்படுத்தப்பட்டது, அது எப்படி சுதந்திரப்போராட்டத்தில் இருந்து
சாகும்வரைக்கும் காங்கிரஸ் கட்சியில் இருந்தவரை காங்கிரசை எதிர்க்கும் பாஜக தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்துகிறது? எந்த கூச்சமும்
இல்லாமல் பாஜகவால் எப்படி பிறரின் அடையாளங்களை திருட முடிகிறது?
காமராஜர்-பாஜக அரசியல் உறவு எப்படிப்பட்டது?
காமராஜர் சிறுவயதிலேயே இந்திய சுதந்திர போராட்டத்தின் பால்
ஈர்க்கப்பட்டவர், சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காந்தியடிகளின்
காங்கிரஸ் அரசியலை ஏற்றுக்கொண்டு அந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு
சிறைசென்றவர். அதேசமயத்தில் இன்றைய பாஜாகாவின் தாய் அமைப்பான RSSன்
அரசியல் நிலைப்பாடு என்பது பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக வேலை செய்வதாக
இருந்தது.
காமராஜர் பாஜக சித்தாந்த உறவு எப்படிப்பட்டது?
காமராஜர் மதசார்பற்ற அரசியலை பின்பற்றியவர், பாஜக இந்துத்துவ அரசியலை பின்பற்றும் அமைப்பு. காமராஜர் அனைவருக்கும் கல்வியை நடைமுறைப்படுத்தியவர், அணைத்து சாதிகளுக்குமான இட ஒதுக்கீட்டை
ஆதரித்தவர், பாஜக இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் இயக்கம். காமராஜர் பசு அரசியலை எதிர்த்து பேசியவர், பாஜக பசு அரசியலை செயல்படுத்தும் கட்சி.
அதற்காக 1966 நவம்பர் 7 காமராஜரின் டெல்லி வீட்டையும் எரித்த வரலாறு
பாஜகவின் முன்னோர்களுடையது. அனைத்திற்கும் மேலாக பாஜகவின் தாய் அமைப்பான
RSS ன் சித்தாந்தத்தை கடுமையாக விமர்சனம் செய்தவர் காமராஜர். இப்படி பாஜகவோடு எல்லா வகையிலும் எதிர்நிலையில் இருக்கும் காமராஜரை தேர்தல் லாபத்திற்காக அருவருப்பான முறையில் திருடி இருக்கிறது பாஜக.ஒவ்வொரு பொருலும், புதிய கண்டுபிடிப்பும், தொழில்நுட்பமும், அறிவும்
பாட்டர்ன் ரைட்ஸ் செய்யப்படும் இன்றைய முதலாளித்துவ உலகில் அதன் எந்த நெறிமுறைகளையும் காலில்போட்டு மிதிக்கும் செயலை தொடர்ந்து திமிரோடு
செய்துவருகிறது பாஜக.
மக்களின் அறியாமையை பயன்படுத்தி ஏமாற்றும் பாஜகவின் இந்த
திருட்ட்டுத்தனத்தை தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுதும் நாம் காணலாம்.
மேற்குவங்காளத்தை பொறுத்தவரை சுபாஷ் சந்திர போஸை திருடுவது, இத்தனைக்கும்
விடுதலைப்போராட்ட காலத்தில் சுபாஷ் சந்திரபோஸின் இந்தியதேசிய விடுதலைப்படைக்கு எதிராக பிரிட்டிஷுபடைக்கு உதவவேண்டும் பாஜகவின் ஜனசங்க
முன்னோடிகள் அறிக்கைகள் விட்டிருக்கிறார்கள்.
பஞ்சாபை அரசியலுக்கு சுதந்திரத்திற்காக தூக்குமேடை ஏறிய இடதுசாரி நாத்திகராக மாவீரன் பகத் சிங்கை திருடுவது.
குஜராத் அரசியலுக்கு சர்தார் வல்லபாய் படேலை திருடுவது.
ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளுக்காக அம்பேத்காரை திருடுவது.
இங்கே தமிழ்நாட்டில் எம்ஜியாரை திருடுவது, திருவள்ளுவரை திருடுவது என்று
மக்கள் செல்வாக்கு மிக்க அடையாளங்களை திருடும் போக்கை இந்தியாமுழுவதும்
செய்துவருகிறது பாஜக.
திருடும் மரபு பாஜகவிற்கு எங்கிருந்து வருகிறது?
இந்த திருடும் பழக்கத்தை பாஜக தன்னுடைய பிராமணிய மரபில் இருந்து பெறுகிறது. ஏனென்றால் இந்திய வரலாற்றில் பிராமணியத்தின் திருட்டு என்பது மிக நீண்டதாக இருக்கிறது. ஆரியர்கள் வருகைக்கு முன்பு இந்தியா முழுவதும்
பரவி வாழ்ந்த பழங்குடிகளின் பல்வேறு சமய, கலாச்சார, பண்பாட்டு அடையாளங்கள் பார்பனீயத்தால் திருடப்பட்டிருக்கின்றன. பின் நிறுவன
மதங்களாக வேதமரபை எதிர்த்து தோன்றிய பவுத்த சமண சமயங்களின் அடைளங்கள்
ஏராளமானவற்றை பார்ப்பனீயம் திருடிய வரலாற்றை இந்தியாமுழுதும் உள்ள
பல்வேறு அறிஞர்கள் ஆதாரபூர்வமாக விளக்கியிருக்கிறார்கள். வேதமரபை எதிர்த்த புத்தரையே விஷ்ணுவின் அவதாரமாக திருடியிருக்கிறார்கள். சைவ சமய
கோட்பாடுகளை திருடியிருக்கிறார்கள். மால் கோட்பாட்டை
திருடியிருக்கிறார்கள். வங்காளத்தில் காளி,கர்நாடகாவில் மகிஷாசுரன், கேரளாவில் மஹாபலி, தமிழ்நாட்டில் மாரியம்மன் வரைக்கும் சம்ஸ்கிருத மரபு
இந்தியாவில் திருடிய கடவுள்களின் பட்டியல் நீண்டது.
இந்த திருட்டு மரபில் இருந்து ஆதர்ஷம் பெரும் பாஜக இன்றைய நவீன அரசியலிலும் அதே பாணியை எந்த கூச்சமும் இல்லாமல் கையாள்கிறது. இயல்பில் மனிதசமூகம் குறைந்தபட்ச அறத்தையும் நியாயத்தையும் நம்பக்கூடியது,
அதன்முன் பாஜகவின் அறமற்ற இந்த திருட்டை அம்பலப்படுத்தி அரசியல் செய்யவேண்டிய அரசியல் கட்சிகளின் பலவீனமாக இருப்பதால் பாஜக பலமடைந்து
மீண்டும் மீண்டும் திருடுகிறது.
.