சென்னை நந்தனம் அருகே அமைந்திருக்கும் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 44வது புத்தக கண்காட்சி கோலாகலமாக ஆரம்பமானது. தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து சிறப்புரையாற்றினார்.எப்போதும் பொங்கல் விடுமுறை காலத்தில் புத்தக கண்காட்சி நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக புத்தக கண்காட்சி நிகழ்வு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
கொரோனா தொற்றுக்கு நடுவே புத்தக கண்காட்சி நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளது பபாசி. அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு இந்த ஆண்டு புத்தககண்காட்சி நடைபெற உள்ளது. மார்ச் 9ம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்வில் 650 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி துவங்கி இரவு 8 மணி வரை, மார்ச் 9ம் தேதி வரை இந்நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்த புத்தக கண்காட்சியை முன்னிட்டு தினம் ஒரு எழுத்தாளார் பரிந்துரைக்கும் ஐந்து நூல்களை நூல் உலா என்ற தலைப்பில் வெளியிட இருக்கிறோம்
திரைப்பட இயக்குநராகவும், எழுத்தாளராகவும் திகழும் லஷ்மி சரவணகுமார், நீல நதி
யாக்கை,வசுந்தரா என்னும் நீலவானப் பறவை ,மச்சம்
உப்பு நாய்கள் ,கானகன் ,நீலப்படம் ,கொமோரா
உப்பு நாய்கள் ரூஹ் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.
‘கானகம்’ எனும் நாவலுக்கு கடந்த 2016ஆம் ஆண்டுக்கான ‘யுவபுரஸ்கார்’ விருதினை சாகித்ய அகாடமி வழங்கியது. எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் பின்வரும் நூல்களை பரிந்துரைக்கிறா்.
கருப்பர்களின் காலம்
நீலம் பதிப்பகத்தில் வந்திருக்கிற ஒரு மொழிபெயர்ப்பு கவிதை தொகுப்பு.இது கருப்பர்களின் காலம் எனும் கவிதை தொகுப்பு.
இது மிக முக்கியமான கவிதை தொகுப்பு ஏன் அப்படினா ஆப்பிரிக்காவின் கவிதைகளை மொழி பெயர்த்திருக்கிறார்கள். குறிப்பாக ஆப்பிரிக்கப் பெண்கள் எழுதிய கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
தமிழில் black literature என்ற இலக்கியமே மிக மிகக் குறைவு. அதிலும் பெண்களின் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது.ஆதலால் இந்நூல்
இந்த புத்தகக் கண்காட்சியின் மிக முக்கியமான புத்தகமாக இருக்கும்.
மதுரையின் அரசியல் வரலாறு 1868
“மதுரையின் அரசியல் வரலாறு 1868” சந்தியா பதிப்பகத்திலிருந்து வந்திருக்கிறது.பாண்டிய மன்னர்கள்,பாளையக்காரர்கள் நாயக்கர்கள் என பல மன்னர்களுக்கு பிறகு பிரிட்டிஷ்காரர்கள் மதுரையை ஆக்கிரமித்த காலகட்டம் முக்கியமான காலகட்டம்.அது குறித்து அரசியல் பேசக் கூடிய ஒரு முக்கியமான புத்தகம் இது
முகமூடிகளின் பள்ளத்தாக்கு
தருண் தேஜ்பால் எழுதிய “முகமூடிகளின் பள்ளத்தாக்கு”. தமிழில் சாரு நிவேதிதா மொழிபெயர்த்திருக்கிறார்.இந்த நாவல் நாவலின் மொழி நடைக்கான ரொம்ப முக்கியமான நாவல்.நான் ஆங்கிலத்தில் வாசித்திருக்கிறேன்.புனைவு இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள்,கதைகள் எழுத விரும்பும் இளம் எழுத்தாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
புயல் பறவை
விடியல் பதிப்பகத்தில் இருந்து வந்திருக்கிற “புயல் பறவை” புத்தகம் கேப்டன் மலரவன் புலிகள் இயக்கத்தில் ஒரு போராளியாக இருந்தவர்.புலிகள் இயக்கத்தைப் பற்றி தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும் இன்னும் நாம் நெருங்கிப் போய் பார்க்கக்கூடிய சில பார்வைகளை தரக்கூடிய ஒரு புத்தகம் அதனால் இதனை பரிந்துரைக்கிறேன்.
ஆவி ஆன்மா மறுபிறப்பு மற்றும் தியான மோசடிகள்
விடியல் பதிப்பகத்திலிருந்து இன்னொரு புத்தகம் “ஆவி ஆன்மா மறுபிறப்பு மற்றும் தியான மோசடிகள்” . ஆன்மீகம் என்ற பெயரில் கார்பரேட் சாமிகள் எப்படி இந்த மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை விலாவரியாக ஆய்வு மனப்பான்மையில் பேசக்கூடிய நூல் இது.