சுப்பையா சண்முகம்

பெண்ணின் வீட்டுக் கதவில் சிறுநீர் கழித்த பாஜக மாணவரணி தலைவர் மதுரை எய்ம்ஸ் உறுப்பினராக நியமனம்

தனியாக இருந்த பெண்ணின் வீட்டு கதவில் சிறுநீர் கழித்த பாஜக மாணவர் அமைப்பின் தலைவரான சுப்பையா சண்முகம் மதுரை எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்திற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யின் தேசியத் தலைவரான சுப்பையா சண்முகம் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவர் ஆதம்பாக்கத்தில் உள்ள அபார்ட்மண்ட் ஒன்றில் வசித்து வருகிறார். அதே அபார்ட்மண்டில் 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் தனியாக வசித்து வருகிறார். 

அபார்ட்மண்ட்டில் அந்த பெண்மணிக்கு ஒதுக்கப்பட்டிருந்த பார்க்கிங் இடத்தில் தனது வாகனத்தை நிறுத்திக் கொள்வதற்காக சுப்பையா பேசியிருக்கிறார். அதனை அந்த பெண்மணி ஏற்றுக் கொள்ளாததால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் சுப்பையா. அதன்பிறகு தான் பயன்படுத்திய மாஸ்க் உள்ளிட்ட தன் வீட்டின் குப்பைகளை எல்லாம் அந்த பெண்மணியின் வீட்டின் முன்பு கொட்டிவிட்டு சென்றிருக்கிறார். அத்தோடு நில்லாமல் மிக இழிவான முறையில் அந்த பெண்மணியின் வீட்டு கதவில் சிறுநீர் கழித்திருக்கிறார் சுப்பையா.

இது அந்த அபார்ட்மண்ட் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. சுப்பையாவின் மீது அந்த பெண்மணி காவல்துறையில் புகாரும் அளித்திருந்தார். பின்னர் அந்த புகாரை அந்த பெண்மணி திரும்பப் பெற்றுக் கொண்டாலும், புகாரை திரும்பப் பெருமாறு தங்களுக்கு பெரும் அழுத்தம் வந்ததாக அந்த பெண்மணியின் உறவினர் தெரிவித்தார். 

பாஜக மாணவரணி தலைவரான சுப்பையா அந்த பெண்மணியின் வீட்டுக் கதவில் சிறுநீர் கழிப்பது வீடியோவில் பதிவாகி அம்பலமான பின்பும், சுப்பையா அந்த வீடியோ போலியானது என்றும், மார்ஃபிங் செய்துவிட்டார்கள் என்றும் கூறிவந்தார். 

இந்த நிலையில் ஒன்றிய அரசு, மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்திற்கான குழுவை அமைத்திருப்பதாகவும், அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் வெளியிட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவரான வி.எம்.கடோச் மதுரை எய்ம்ஸ்-க்கும் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

அக்குழுவின் உறுப்பினர்கள் பட்டியலில், பெண்ணின் வீட்டுக் கதவில் சிறுநீர் கழித்து மோசமாக நடந்துகொண்ட பாஜக மாணவரணி தலைவர் சுப்பையா சண்முகத்தின் பெயரும் இடம்பெற்றிருப்பது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. இதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். ஒரு வயதான பெண்மணியிடம் இழிவாக நடந்து கொண்டதற்கு பரிசாக சுப்பையாவிற்கு இந்த பதவி அளிக்கப்பட்டிருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி, ”இது நாகரீகமற்ற நடத்தைக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரமா என்றும், மற்ற பாஜக உறுப்பினர்களும் இதே நாகரீகமற்ற வழிகளைப் பின்பற்ற ஊக்குவிக்கும் நடவடிக்கையா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

மதுரை நாடளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக ABVP சுப்பையா சண்முகத்தை நியமித்திருப்பது அவர் செய்த இழி செயலுக்கு கொடுக்கப்படும் பரிசா?” என்று கேட்டுள்ளார்.

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகுமார், ”பெண்ணை துன்புறுத்திய வழக்கு பதியப்பட்டவர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக நியமனம்: இது பெண்களை அவமதிப்பதில்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சுப்பையா சண்முகம் எனும் தவறான நபரை அக்குழுவிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. #RemoveSubbiahShanmugam என்ற ஹேஷ்டேக்கினை பயன்படுத்தி ஏராளமானோர் ட்வீட்டுகளை பதிவிட்டு வருகிறார்கள். 

மேலும் இந்த குழுவின் உறுப்பினர் நியமனத்தில் மூன்று எம்.பி-க்களும் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் எந்த காரணமும் தெரிவிக்கப்படாமல் அப்பதவிகள் காலியாக விடப்பட்டிருப்பது ஏன் என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *