மூக்குத்தி அம்மன் டிரைலர் விமர்சனம்

அம்மனுக்கு கருவாடு படைப்பார்கள்; ஆர்.ஜே.பாலாஜிக்கு தெரியாதா? மூக்குத்தி அம்மன் ட்ரைலர் விமர்சனம்

“நான் புனித அப்பத்தை புசிப்பேன், நோன்பு கஞ்சியை குடிப்பேன், ஆனால் ஒருபோதும் அம்மனுக்கு ஊத்தும் கூழை குடிக்க மாட்டேன்” என்ற வசனத்தோடு தொடங்குகிறது ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்திருக்கும் மூக்குத்தி அம்மன் ட்ரைலர். 

கிட்டத்தட்ட படத்தின் ஒன் லைனாக இருக்கும் இந்த வசனம் காலம் காலமாக ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ அமைப்பினர் வைக்கும் வாதம்தான். இத்தோடு தன் பட ட்ரைலரை தொடங்குவதன் மூலம் தனக்குள் இருக்கும் சாஃப்ட் சங்கித்தனத்தை மறைக்க முடியாமல் வெளிப்படுத்துகிறார் பாலாஜி.

சங்கித்தனம் என்ற வார்த்தையை பாலாஜியை நோக்கி பயன்படுத்துவது கொஞ்சம் அதிகமாகத் தோன்றுகிறதா? தொடர்ச்சியாக அம்மன்களை முன்வைத்து பக்திப் படங்களை எடுத்த இராமநாராயணன் அவர்களை யாரும் இந்துத்துவவாதி என்றோ, சங்கி என்றோ யாரும் சொல்லவில்லை. ஏனென்றால் அப்படங்கள் பக்தியையும், நம்பிக்கையையும் மட்டுமே பேசின. இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் முன்வைக்கும் அரசியலை அப்படங்கள் உயர்த்திப் பிடிக்கவில்லை. பாஜகவின் இந்துத்துவ அரசியலை எதிர்ப்பதைப் போல டிரைலரின் இறுதிக் காட்சியில் ஒரு வசனத்தை வைத்துவிட்டு, இந்துத்துவவாதிகள் பேசும் அதே அரசியலை அம்மனாக கதாபாத்திரம் ஏற்றிருக்கும் நயன்தாராவின் வாயாலும், பிற கதாபாத்திரங்கள் வாயிலாகவும் பேச வைத்திருக்கிறார் பாலாஜி.

சரி அந்த குறிப்பிட்ட வசனத்தின் அரசியல் என்ன?

தமிழ்நாட்டில் மதச்சார்பின்மை பேசும் ஜனநாயகவாதிகளை நோக்கி வைக்கப்படும் அவதூறு இது. கிறித்தவ, இஸ்லாமிய மதங்களை விட்டுவிட்டு இந்து மதத்தை மட்டும் இழிவு செய்கிறார்கள் என்பதை சிம்பலைஸ் செய்யும் வசனம்தான் கிறித்தவ, இஸ்லாமிய உணவுகளை புசித்துவிட்டு இந்துக்களின் உணவை மறுக்கிறார்கள் என்பது. மேலோட்டமாக பார்ப்பதற்கு உண்மையைப் போல் தோன்றும் இந்த வசனத்திற்கு பின்னால் ஒரு தந்திரம் இருக்கிறது.

கிறித்துவ, இஸ்லாமிய உணவுகளுக்கு எதிராக ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு படைக்கும் நெய் பலகாரத்தையோ, சிதம்பரம் நடராஜருக்கு படைக்கும் உணவையோ நிறுத்தவில்லை. தந்திரமாக அம்மனின் கூழை நிறுத்துகிறார்கள். 

அதாவது இஸ்லாமிய, கிறித்தவ மத சிறுபான்மையினருக்கு எதிராக இடைநிலை சாதி இந்துக்கள் மற்றும் பட்டியலின மக்களை நிறுத்தும் ஆர்.எஸ்.எஸ்-ன் அதேவகை தந்திரத்தைப் போன்றதுதான் இது. அதன்மூலம் தங்கள் பார்ப்பனிய உணவையும், பண்பாட்டையும் கல்லெறி படாமல் பாதுகாக்கும் தந்திரம்தான் இது.

உண்மையில் பாலாஜி குறிவைத்திருக்கும் ஜனநாயகவாதிகள் யாரும் அம்மனின் உணவை நிராகரிக்கவில்லை. உண்மையில் அம்மனின் உணவை நிராகரித்தவர்கள் பார்ப்பனிய சித்தாந்தவாதிகளே. சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் அம்மன் கோயிலுக்கு படைத்த கூழையும், கருவாட்டையும் உண்பார்களா என்பது மட்டும் இங்கு பேசப்படுவதில்லை. கோவிகளில் ஆடு, கோழி உயிர்பலி தடைச்சட்டத்தை அம்மையார் ஜெயலலிதா மூலமாக அமல்படுத்தி அம்மனின் உணவை நிராகரித்தவர்கள் இந்த சனாதனிகளே.

சொல்லப்போனால் அம்மனே இந்து சனாதனிகளை நிராகரித்த தெய்வம்தான். இன்றைக்கும் பாலாஜிகளுக்கு பிடித்த சமஸ்கிருதமும் பார்ப்பனர்களும் நுழையமுடியாத கருவறையாக இருப்பது கிராமங்களில் இருக்கும் அம்மன் கோவில்கள்தான்.

அம்மன்களும் இஸ்லாமிய, கிறித்துவ மக்களும், பார்ப்பனர்களும்

தமிழகத்தில் இஸ்லாமியர்கள் பண்பாட்டு உறவோடு இருக்கும் ஏராளமான அம்மன் கோவில்களில் இருக்கின்றன. இஸ்லாமிய கிறித்தவ மக்கள் பங்கெடுக்கும் கோவில் திருவிழாக்கள் ஏராளம் இருக்கின்றன. மதுரை சுற்றுவட்டார மக்களின் புகழ்பெற்ற கள்ளழகரோடு தொடர்புடைய துலுக்க நாச்சியார் சடங்குகள் தமிழகத்தில் பார்ப்பனரல்லாத சாதிகள் பண்பாட்டு அளவில் எவ்வளவு நெருக்கமாக பிற மதத்தினரோடு இருந்து வருகிறார்கள் என்பதற்கு உதாரணம்.

தமிழகத்தின் அம்மன் வழிபாட்டு முறை கொண்டிருக்கும் தனித்துவமான இந்த பண்பாட்டு பிணைப்பைப் பற்றிய எந்த புரிதலும் இல்லாமல், இந்துத்துவ அரசியல்வாதிகள் விதைக்கும் பாசிச கருத்துகளை முற்போக்கு வேடத்தில் பேசிக்காட்டுகிறார் ஆர்.ஜே.பாலாஜி.

அடுத்ததாக இன்னொரு வசனம். “கடவுள் இல்லைனு சொல்றான் பாரு. அவன் OK, ஆனா ஒருகடவுளை உயர்த்தி ஒரு கடவுளை தாழ்த்துறான் பாரு, அவன் டேஞ்சர்” என்று. உண்மையில் கடவுள் இல்லையென்று சொல்பவர்கள் ஸ்மார்த்த பார்ப்பனர்கள்தான். ஒருகடவுளை உயர்த்த பிற கடவுளை தாழ்த்துவதும் அவர்கள் உயர்த்திப் பிடிக்கும் வேத பண்பாடுதான். நாம் வணங்கும் அம்மன்கள் கூட அவர்களுக்கு இழிவான கடவுள்தான்.

ட்ரைலரின் இடையிடையே வரும் நீட், கோச்சிங் சென்டர், ஆன்லைன் கிளாஸ் போன்றவை தங்கள் இந்துத்துவ முகம் தெரியாமல் மையமாகவே காட்டிக்கொள்ள கமல் போன்றவர்கள் பயன்படுத்தும் முற்போக்கு வடைகள்தான்.

ட்ரைலரில் போலி மதவாதிகளை கிண்டல் செய்ய பாலாஜி வரிசைப்படுத்திய காட்சியை வைத்து புரிந்துகொள்ளலாம். ஒரு கிறித்துவ மத போதகர், லோக்கல் விபூதி சாமியார்கள், அப்புறம் கார்ப்பரேட் ஜக்கி வகையறாக்கள். ஆனால் இந்துமதத்தின் ரெப்ரசென்ட்டேஷனாக சொல்லிக்கொள்ளும் காஞ்சி மடாதிபதிகள் மட்டும் மிஸ்ஸிங். உண்மையில் போலிகள் வரிசையில் அவர்களைத்தான் காட்டியிருக்க வேண்டும். இது எதேச்சையானது அல்ல. இதுதான் சங்கிகளின் தந்திரம். உண்மையில் நம்மை, நம் கடவுளை, நம் உணவை இழிவு செய்வதாக இருப்பது பார்ப்பனிய வேதப் பண்பாடுதான்.

இந்துத்துவ சாதிய வர்ண கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்கும் ஜனநாயகவாதிகளுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் பேசும் அதே அரசியலை சூத்திர, பட்டியலின மக்கள் வணங்கும் கடவுளான அம்மனை வைத்துக் கொண்டு பேசுவதன் மூலம் ஒரு சாஃப்ட் சங்கியாக ஆர்.ஜே.பாலாஜி செயல்பட்டு வருவதாகவே இந்த ட்ரைலர் உணர்த்துகிறது. முழு திரைப்படம் வெளிவந்த பிறகுதான் பாலாஜி சாஃப்ட் சங்கியாக இருக்கிறாரா அல்லது முழு சந்திரமுகியாக மாறிவிட்டாரா என்பது தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *