பீகார் தேர்தல்

நிகழ்தரவுகள்: பீகார் முதல்கட்ட தேர்தல்; இன்று நடந்தவை

  • 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்டமாக 71 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று தொடங்கியது.
  • இதில் 53.46% சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது வாக்கு சதவீதம் 54.94% சதவீதமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த 71 தொகுதிகளில் 2.14 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். மொத்தமாக 1066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 31,371 வாக்குச் சாவடிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. 85,368 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.
  • இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 3-ம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தல் நவம்பர் 7-ம் தேதியும் நடைபெற உள்ளது. இறுதி முடிவுகள் நவம்பர் 10 அன்று அற்விக்கப்பட உள்ளது.
  • தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக 450 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக துணை தேர்தல் ஆணையர் ஆசிஷ் குந்த்ரா தெரிவித்துள்ளார். கொரோனா விதிமுறை மீறல்கள் தொடர்பாக 89 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
  • உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அடுத்தகட்ட தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் பிரச்சாரங்களில் ஈடுபட்டார். அப்போது மேற்கு சம்பரான் மாவட்டத்தில் பரப்புரையின்போது, ”இப்போது இங்கு பீகாரில் உள்ள நீங்கள் ஜம்மு காஷ்மீரில் வீடு கட்ட விரும்பினால் யாரும் உங்களை தடுக்க முடியாது. காங்கிரஸ் இருந்தவரை இதனை உங்களுக்கு மறுத்து வந்தது” என்று பேசினார்.
  • தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ”உங்களுக்கு எந்த வேலைவாய்ப்பும் கிடைக்காது. ஏனென்றால் இங்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவே இல்லை. பீகாரின் இளைஞர்களோ, விவசாயிகளோ திறமையற்றவர்கள் கிடையாது. உங்கள் முதலமைச்சரும், பிரதமரும் பலவீனமானவர்களாக இருப்பதுதான் உங்களுக்கு வேலை கிடைக்காததற்கு காரணம்” என்று பேசினார். வேலைவாய்ப்புகள் தொடர்பாக மோடி பொய்களை சொல்லி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
  • பிரதமர் மோடி பாஜக சார்பாக முசாபர்புர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ”இதற்கு முன்னாள் உங்களை ஆட்சி செய்த கட்சிகள் உங்களுக்கு வறுமையை மட்டுமே கொடுத்துள்ளன. இங்குள்ள இளைஞர்களை இடம்பெயரச் செய்துள்ளன. அக்கட்சிகளின் குடும்பத்தினர் மட்டும் ஆயிரக்கணக்கான கோடிகளை சம்பாதித்துள்ளனர். சுயசார்புடைய பீகார் என்பதனை எவ்வளவு வேகமாக நாம் உருவாக்க முடியும் என்பதனை உங்கள் வாக்குகளே தீர்மானிக்கும்” என்று பேசினார்.
  • ”தேசிய ஜனநாயகக் கூட்டணி சொன்ன வாக்குறுதியை எப்போதும் காப்பாற்றும். அயோத்தியில் மிகப் பெரிய ராமர் கோயில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. ராமர் கோயில் கட்டுவதற்கான தேதியைக் கொடுங்கள் என்று இதற்கு முன்னால் எங்களைப் பார்த்து கேட்டுக் கொண்டிருந்தவர்கள், இப்போது எங்களை பாராட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதுதான் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அடையாளம்” என்று மோடி பேசினார்.
  • பீகார் அமைச்சரும், பாஜக தலைவருமான பிரேம் குமார் வாக்குச் சாவடிக்கு தாமரை சின்னம் பொறித்த முகக்கவசம் அணிந்து வந்தது சர்ச்சைக்கு உள்ளானது. அவர் மீது வழக்கு பதியப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தசரா நிகழ்வின்போது முங்கேர் பகுதி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஷ்வி யாதவ் ”மாநில அரசுக்கு ஜெனரல் டயராக மாறக் கூடிய அனுமதியை எவர் கொடுத்தது” என்று கேள்வி எழுப்பினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *