பாண்டிச்சேரி பாஜக

தேர்தலுக்காக ஆதார் தகவல்களை திருடி 952 வாட்சப் குழுக்களை உருவாக்கிய பாஜக!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வாக்காளர்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண் உள்ளிட்ட தனிநபர் தகவல்களை சட்டவிரோதமாக எடுத்து பாஜக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. 

ஆதாரிலிருந்து பெறப்பட்ட வாக்களார்களின் அலைபேசி எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. வாக்களார்களை பகுதிவாரியாக பிரித்து அவர்களின் அலைபேசி எண்களை கொண்டு 952 வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது பாஜக. இக்குழுக்கள் அனைத்தும் ஒரே எண் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது. 

மேலும் அந்த அலைபேசி எண்களுக்கு அழைப்பு விடுத்து வாக்காளர் பெயர், பகுதி உள்ளிட்ட விபரங்களைக் கூறி அத்தொகுதியின் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும் கூறியுள்ளது. 

உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு

இது குறித்த இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தினர் கொடுத்த புகாருக்கு தேர்தல் ஆணையம் உரிய முக்கியத்துவம் அளிக்காத நிலையில், அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 

வழக்கு விசாரணையின்போது வாதிட்ட மனுதாரரின் வழக்கறிஞர் பாஜக-வின் இத்தகைய பிரச்சாரத்துக்கு உடனடியாக தடை விதிக்கக் கோரினார். 

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி்மன்றம் இதனை தீவிர பிரச்சினையாகக் கருதி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரியது. புதுச்சேரி பாஜக-வின் மீதான புகாரை விசாரிக்கத் தவறிய தேர்தல் ஆணையத்திற்கு கண்டத்தைத் தெரிவித்துள்ளது. மேலும் தனிநபர் உரிமைகளுக்கும், சட்டத்துக்கும் புறம்பான பாஜகவின் இச்செயல் குறித்து தேர்தல் ஆணையம் உடனடியாக விசாரித்து இரண்டு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இன்றைய தகவல் தொழில்நுட்ப காலத்தில் தகவல் திரட்டுகள் (Data Base) மிக முக்கியமான விடயமாக, மிகப்பெரும் வணிகமாக உள்ளன. தனிநபர் தகவல்களை திரட்டும் ஆதார் திட்டம் கொண்டு வரப்பட்டபோதே, ஆதாரினால் தனிநபர் தகவல்களுக்கு போதிய பாதுகாப்பு இருக்காது என்று விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆதார் தகவல் திருட்டில் ஈடுபட்டிருக்கும் பாஜகவின் அரசியல் தனிநபர் தகவல் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தலாகவும். தேர்தல் ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *