டெல்லியின் மூன்று எல்லைகளான சிங்கு, காசிபூர் மற்றும் திக்ரி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தினைத் துவங்கி நான்கு மாதங்கள் நிறைவடைந்திருப்பதை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
- தேர்தல் நடைபெறும் மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டும் முழு அடைப்பு நடத்தப்படாது என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
- விவசாயிகளின் பாரத் பந்திற்கு காங்கிரஸ், இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ், YSR காங்கிரஸ், தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
முழுஅடைப்புப் போராட்டத்தின் அப்டேட்கள்
இன்று காலை 6 மணி துவங்கி மாலை 6 மணி வரையில் 12 மணிநேரத்திற்கு முழு அடைப்பு நடைபெறுகிறது. விவசாய சட்டங்கள் மூன்றையும் திரும்பப் பெற வேண்டும் என்றும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
- பல மாநிலங்களில் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. டெல்லி மற்றும் உத்திரப்பிரதேசத்திற்கு இடையேயான எல்லைப் பகுதியான காசிபூர் பகுதியின் சாலையை விவசாயிகள் முடக்கியுள்ளனர்.
- GT சாலை மற்றும் ஹரியானாவில் உள்ள ஷாபூர் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தையும் மறித்துள்ளனர். 4 மாதங்களுக்கும் மேலாக அமைதியாகப் போராடிவரும் விவசாயிகள், காசிபூர் எல்லையில் தங்கள் போராட்டத்தில் பாரம்பரிய நடத்தினை ஆடியும், பாடியும் வருகிறார்கள்.
- பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் பல பகுதிகளில் வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்திருப்பதால் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலானது சண்டிகர் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது.


- தொழிற்சங்கங்கள், போக்குவரத்து சங்கங்கள் மற்றும் இதர சங்கங்கள் உள்ளிட்டவையும் முழுஅடைப்பிற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
- ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்ற அவசர ஊர்திகள் மட்டும் தடையில்லாமல் இயங்குவதற்கு அனுமதிக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
- ஒடிசா அரசாங்கம் முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி மாநிலம் முழுவதும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. உக்தால் பல்கலைக்கழகம் தேர்வுகளையும் ஒத்தி வைத்துள்ளது.
- மகாராஷ்டிராவில் 100-க்கும் மேற்பட்ட சங்கங்கள் இணைந்து விவசாய அங்காடிகளை மூடிவைப்பதாக அறிவித்துள்ளன.
- கர்நாடகாவில் பெங்களூர் மாநகர காவல்துறை முக்கிய விவசாய தலைவர்கள் அனைவரையும் கைது செய்திருக்கிறது.
- உத்திரப் பிரதேசத்தில் அகில இந்திய கிசான் சபாவின் பொதுச்செயலாளர் முகுத் சிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். உத்திரப்பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்கள் அகில இந்திய கிசான் சபாவின் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
- ஆந்திராவில் அனைத்து அரசு அலுவலகங்களும் 1 மணி வரை மூடியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு தரப்பினரும் போராட்டத்தினை ஆதரித்துள்ளனர்.
- இதுவரையில் போராட்டத்தில் 302 விவசாயிகள் இறந்திருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.
பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கும் பாஜக அரசு விவசாய சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறது. விவசாயிகளும் சட்டங்களை திரும்பப் பெறாமல் போராட்டத்தினை முடிப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர்.