RTI எனும் தகவல் அறியும் உரிமை சட்டம் இன்றோடு 15 ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறது. 2005-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டப்பட்டு 12 அக்டோபர் 2005 அன்று நடைமுறைக்கு வந்தது.
இந்த சட்டத்தின் மூலம் நாட்டின் எந்த ஒரு குடிமகனுக்கும், அரசின் எந்த துறையிடமிருந்தும் தகவல்களை கேட்டுப் பெறுவதற்கான உரிமை இருக்கிறது. உடனடியாகவோ அல்லது 30 நாட்களுக்காகவோ கேட்கப்படும் தகவல்கள் அளிக்கப்பட வேண்டும்.
நாளுக்கு நாள் இந்த சட்டத்தின் கூறுகள் பல்வேறு விடயங்களின் மூலம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டே வந்து கொண்டிருக்கின்றன. இந்த 15 ஆண்டுகளில் 2.2 லட்சம் விண்ணப்பங்கள் தகவல் ஆணையங்களால் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்தியாவிலேயே அதிக நிலுவை வைத்துள்ள தகவல் ஆணையமாக 59,000 விண்ணப்பங்களுடன் மகாராஷ்டிரா தகவல் ஆணையம் இருக்கிறது. அடுத்த இடத்தில் 47,923 விண்ணப்பங்களுடன் உத்திரப் பிரதேச ஆணையம் இருக்கிறது. மூன்றாவதாக மத்திய தகவல் ஆணையம் இருக்கிறது. மத்திய தகவல் ஆணையத்தில் 35,653 விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.
தகவல் ஆணையங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து சடார்க் நாக்ரிக் சங்கதான் மற்றும் Centre for Equity Studies (CES) இணைந்து தயாரித்து வெளியிட்டுள்ள அறிக்கை தகவல் ஆணையங்களின் செயல்பாடுகளில் உள்ள பல்வேறு தவறுகளை சுட்டிக் காட்டியுள்ளது.
தகவல் ஆணையங்கள்
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் அடிப்படையில் இரண்டு வகையான தகவல் ஆணையங்கள் உருவாக்கப்பட்டன.
- மத்திய தகவல் ஆணையம் (Central Information Commission)
- மாநில தகவல் ஆணையங்கள் (State Information Commissions)
இந்த தகவல் ஆணையங்கள் அரசு அதிகாரிகளிடமிருந்தும், அரசுத் துறைகளிடமிருந்தும் தகவல்களைப் பெறுவதற்கும், விசாரணைகளை மேற்கொள்வதற்கும் அதிகாரம் பெற்றவர்கள்.
ஆணையர்களே இல்லாத தகவல் ஆணையங்கள்
மத்திய தகவல் ஆணையம் 27 ஆகஸ்ட் 2020 அன்றிலிருந்து தலைமை ஆணையர் இன்றி இயங்கி வருகிறது. மொத்தமுள்ள 29 தகவல் ஆணையங்களில் 9 ஆணையங்கள் தலைமை ஆணையர்கள் இல்லாமல் இயங்கி வருகின்றன.
சட்டப்படி ஒவ்வொரு மாநில தகவல் ஆணையமும் ஒரு தலைமை ஆணையர் மற்றும் 10 இதர ஆணையர்களைக் கொண்டிருக்க வேண்டும். மத்திய தகவல் ஆணையத்திலோ தலைமை ஆணையரே இல்லை. இதர ஆணையர்கள் 5 பேர் மட்டுமே இருக்கிறார்கள். ஒடிசாவில் வெறும் 4 ஆணையர்களே இருக்கிறார்கள், ராஜஸ்தானில் வெறும் மூன்று ஆணையர்களே இருக்கிறார்கள். மணிப்பூர், நாகாலாந்து, தெலுங்கானா, ஜார்க்கண்ட் மற்றும் திரிபுரா மாநிலங்களில் ஆணையர்களே இல்லை.
நிராகரிக்கபட்ட மற்றும் கிடப்பில் உள்ள விண்ணப்பங்கள்
சமீபத்தில் வெளிவந்த சங்கதான் அறிக்கையின்படி, ஏப்ரல் 2019 முதல் ஜூலை 2020 வரையிலான காலகட்டத்தில் 1,78,749 விண்ணப்பங்கள் 21 தகவல் ஆணையங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதே காலகட்டத்தில் 1,92,872 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 2,21,568 விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.
மக்கள் தகவல்களைப் பெறுவதற்காக நீண்ட காலம் காக்க வைக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 29 தகவல் ஆணையங்களில் 25 தகவல் ஆணையங்கள் 2019-ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை இன்னும் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளது.
ஆண்டு அறிக்கை வெளியிடாத ஆணையங்கள்
பஞ்சாப் தகவல் ஆணையம் 2012-க்குப் பின்பிருந்தும், உத்தரகாண்ட், திரிபுரா தகவல் ஆணையங்கள் 2014-ம் ஆண்டிற்கு பின்பிருந்தும், தமிழ்நாடு தகவல் ஆணையம் 2016-க்குப் பின்பிருந்தும் ஆண்டு அறிக்கைகளை வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தினை மீறும் அரசு அதிகாரிகள் மிக அரிதாகவே தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
RTI சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள்
- 2013-ம் ஆண்டு அரசியல் கட்சிகள் RTI வரம்புக்குள் வராது என்று 2013-ம் ஆண்டு முதல் திருத்தம் காங்கிரஸ் ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்டது.
- தகவல் ஆணையர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்பதாக இருந்தது. 2019-ம் ஆண்டு பாஜக ஆட்சியில் அவர்களின் பதவிக்காலத்தினை ஒன்றிய அரசு தான் முடிவு செய்யும் என்று அடுத்த திருத்தத்தினை கொண்டுவந்தனர். இது தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் சுதந்திரமாக செயல்படும் போக்கினை தடுக்கும் செயலாகும் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த திருத்தம் RTI சட்டத்தினை ஒன்றுமில்லாததாக ஆக்கிவிடும் என்று RTI செயல்பாட்டாளார்களால் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
RTI செயல்பாட்டாளர் கொலைகள்
நாடு முழுவதும் RTI செயல்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களுக்கும், கொலைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை RTI செயல்பாட்டாளர்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று பாராளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்.பியான சண்முக சுந்தரம் கேள்வியெழுப்பிய போது, அப்படி எந்த தரவுகளையும் அரசாங்கம் நிர்வகித்து வைக்கவில்லை என்று பாஜக அரசு பதில் அளித்திருக்கிறது.
அரசு செய்யாததை Commonwealth Human Rights Initiative (CHRI) என்ற நிறுவனம் தனது முன்னெடுப்பில் attackonrtiusers.org என்ற இணையதளத்தில் RTI செயல்பாட்டாளர்கள் குறித்தான விவரங்களை ஆவணப்படுத்தியுள்ளது.
இதுவரையில் இந்தியாவில் 87 RTI செயல்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 172 பேர் பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். 185 பேர் மிரட்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். 7 பேர் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
RTI செயல்பாட்டாளர்களைப் பாதுகாப்பதற்கு Whistleblower பாதுகாப்பு திட்டம் இருந்த போதிலும் அதன்படி செயல்பாட்டாளர்களுக்கு அரசு பாதுகாப்பினை வழங்குவதில்லை.
RTI சட்டத்தின் 15 வது ஆண்டான இன்று அரசு சார்பாக விழிப்புணர்வு திட்டங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. பாஜக அரசைச் சேர்ந்த அமைச்சர்களோ, ஆளும்கட்சித் தலைவர்களோ யாரும் RTI குறித்தான தகவல்களை சமூக வலைதளங்களில் கூட பகிரவில்லை.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது அரசுக்கு தனது பொறுப்பினை உணர்த்தக் கூடியதும், குடிமக்களுக்கு அரசினைக் கண்காணிப்பதற்கு வாய்ப்பினை வழங்குவதுமான ஜனநாயகத்தின் மிக முக்கியமான அங்கமாகும். இந்த சட்டத்தினை பாதுகாப்பதும், RTI செயல்பாட்டாளர்களை பாதுகாப்பதும் அனைத்து குடிமக்களின் கடமை ஆகும்.