தற்போது வெளிவந்திருக்கும் ASER (Annual Status of Education Report) எனப்படும் ஆண்டு கல்வி அறிக்கையில் நாடு முழுவதும் வெறும் 11% சதவீத மாணவர்களுக்கே ஆன்லைன் வகுப்புகள் கிடைத்துள்ளன எனும் தகவல் தெரியவந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாகவும், பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாலும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என்னென்ன சவாலை எதிர்கொண்டார்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பு செப்டம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டது. 26 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 52,227 குடும்பங்கள் மற்றும் ஐந்து முதல் 16 வயது வரையுள்ள 59,251 குழந்தைகளிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மேலும் 8,963 அரசுப் பள்ளிகளிலும் இது நடத்தப்பட்டது.
அந்த ஆய்வின் சில முக்கிய விடயங்கள்:
ஸ்மார்ட்போன் பயன்பாடு
- 10-ல் ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கியிருக்கிறார்கள்.
- ஊரகப் பகுதிகளில் ஸ்மார்ட்போன் பயன்பாடு 2018-ம் ஆண்டு 36.5% சதவீதமாக இருந்திருக்கிறது. தற்போது 61.8% சதவீதமாக உயர்ந்திருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
- ஆனால் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் வீடுகளில் 56.4 சதவீத வீடுகளில் மட்டுமே ஸ்மார்ட்போன் இருப்பதாகவும், தனியார் பள்ளி மாணவர்களின் வீடுகளில் 74.2 சதவீத வீடுகளில் ஸ்மார்ட்போன் இருப்பதாகவும் தெரிகிறது.
- மேலும் அரசுப் பள்ளி மாணவர்களின் வீடுகளில் 56 சதவீத வீடுகளில் மட்டும்தான் தொலைக்காட்சிப் பெட்டி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனியார் பள்ளிகளில் இது 71.9 சதவீதமாக இருக்கிறது.
பள்ளி | ஸ்மார்ட்போன் உள்ள வீடுகள் | தொலைக்காட்சி உள்ள வீடுகள் |
அரசு | 56.4 % | 56 % |
தனியார் | 74.2 % | 71.9 % |
ஆன்லைன் வகுப்பு
- நேரடி ஆன்லைன் வகுப்பு என்பது அரசுப் பள்ளிகளில் 8.1% சதவீத மாணவர்களுக்கும், தனியார் பள்ளிகளில் 17.7% மாணவர்களுக்கும் மட்டுமே கிடைத்துள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இரண்டும் சேர்ந்த சராசரி என்பது வெறும் 11% சதவீதமாகத்தான் இருக்கிறது.
- 21.5% சதவீத பதிவு செய்யபட்ட காணொளிகள் மூலமாக வகுப்புகள் பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
- பெரும்பாலான மாணவர்கள் அதாவது 59.7% சதவீத மாணவர்கள் புத்தகங்கள் வழியாக தாங்களாக கற்றுக் கொள்ளும் சூழலே இருந்திருக்கிறது. இதில் சில இடங்களிலும், பெற்றோர்களும், சகோதரர்களும், ஆசிரியர்களும், தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் உதவியதாக கூறப்படுகிறது.
தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாறும் மாணவர்கள் அதிகரிப்பு
- குறிப்பாக தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட நிதிச் சிக்கலும் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
- 2018-ம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் ஆண் மாணவர்களின் சேர்க்கை விகிதம் 62.8 சதவீதமாகவும், மாணவிகளின் சேர்க்கை விகிதம் 70 சதவீதமாகவும் இருந்திருக்கிறது. இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் 66.4 சதவீதமாகவும், மாணவிகளின் சேர்க்கை விகிதம் 73 சதவீதமாகவும் உயர்ந்திருக்கிறது.
- தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை 2018-ம் ஆண்டு மாணவர்களின் சேர்க்கை விகிதம் 37.2 சதவீதமாகவும், மாணவிகளின் சேர்க்கை விகிதம் 30 சதவீதமாகவும் இருந்திருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் 33.6 சதவீதமாகவும், மாணவிகளின் சேர்க்கை விகிதம் 27 சதவீதமாகவும் குறைந்திருக்கிறது.
- தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு நிறைய மாணவர்கள் மாறியிருக்கக் கூடும் என்பது தெரிகிறது.
பள்ளி | ஆண்(2018) | பெண்(2018) | ஆண்(2020) | பெண்(2020) |
அரசு | 62.8 % | 70 % | 66.4 % | 73 % |
தனியார் | 37.2 % | 30 % | 33.6 % | 27 % |
பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவர்கள் அதிகரிப்பு
- பள்ளிகளில் சேராத அல்லது பள்ளிப் படிப்பை சிறுவயதிலேயே கைவிட்டு நின்றுவிட்ட மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இது ஒரு ஆபத்தான வருத்தர்குரிய விடயமாக பார்க்கப்படுகிறது.
- 2018-ம் ஆண்டு 3.7 சதவீத மாணவர்களும், 4.2 சதவீத மாணவிகளும் பள்ளிக் கல்வியை கைவிட்டு இடைநின்றிருந்தனர். இந்த ஆண்டு இந்த விகிதம் 5.3 சதவீத மாணவர்கள், 5.7 சதவீத மாணவிகள் என்று அதிகரித்துள்ளது.
- பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களில் 19.5 சதவீத மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.