2021-ம் ஆண்டில் உலகின் முக்கிய பணக்காரர்களின் சொத்துகள் கடந்த ஆண்டை விட எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்கிற விவரத்தினை ப்ளூம்பெர்க் (Bloomberg) நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த விவரங்களின் அடிப்படையில் கடந்த ஒரு ஆண்டில் உலகத்தின் அனைத்து பணக்காரர்களைக் காட்டிலும் அதானியின் சொத்து மதிப்பு தான் அதிகமாக உயர்ந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
மொத்த சொத்துகள் அடிப்படையில் பார்க்கும்போது அதானி தற்போது உலக பணக்காரர்கள் வரிசையில் 26-வது இடத்தில் இருக்கிறார். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பானது 16.2 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 1.18 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு ஒரு ஆண்டில் உயர்ந்திருக்கிறது.
ஒரு ஆண்டில் உலகத்தின் முதல் இரண்டு பணக்காரர்களை விட அதிகம் சம்பாதித்த அதானி
உலகத்தின் நம்பர் ஒன் பணக்காரரான அமேசன் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் கடந்த ஆண்டில் 5.52 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழந்திருக்கிறார். எனவே அவரின் சொத்து மதிப்பு சரிவை சந்தித்திருக்கிறது. உலகத்தின் இரண்டாவது பெரிய பணக்காரரான எலான் மஸ்க் (டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்) உடைய சொத்து மதிப்பானது கடந்த ஒரு ஆண்டில் 75,000 கோடி ரூபாய் உயர்ந்திருக்கிறது. இதன் அடிப்படையில் பார்த்தோமானால் கடந்த ஒரு ஆண்டில் உலகத்தின் முதல் இரண்டு பணக்காரர்களைக் காட்டிலும் அதானியின் சொத்து மதிப்பு அதிகம் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மோடியின் நண்பர் அதானி
குஜராத்தைச் சேர்ந்த கெளதம் அதானி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் ஆவார். பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அதானியின் வர்த்தகம் ஏறுமுகத்தில் இருக்கிறது. குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட போது, அகமதபாத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றது அதானியின் விமானத்தில் தான். ஃபைனான்சியல் டைம்ஸ் ஊடகம் அதானியை ’மோடியின் ராக்ஃபெல்லர்’ என்று எழுதியது.
பாஜக ஆட்சியில் அதானிக்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தங்கள்
பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு அதானியின் சொத்து மதிப்பானது 230 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
- 2018-ம் ஆண்டில் இந்தியாவின் 6 முக்கிய விமான நிலையங்களை தனியார்மயமாக்க பாஜக அரசு முடிவு செய்தபோது, விமான நிலையம் சார்ந்து தொழில் ரீதியாக எந்த முன் அனுபவமும் இல்லாத அதானிக்கு இந்த ஒப்பந்தம் கிடைத்திடும் வகையில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. இது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தது. திருவனந்தபுரம் விமான நிலையம் அதானிக்கு வழங்கப்பட்டதற்கு கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஒரே நாளில் எந்த அனுபவமும் இல்லாத அதானி இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிலைய இயக்குநராக மாறினார்.
- நாட்டின் பெரும்பாலான நிலக்கரிச் சுரங்கங்களும் அதானி நிறுவனத்திற்கே அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்தியா முழுதும் ஏலத்திற்கு விடப்பட்ட 19 நிலக்கரிச் சுரங்கங்களில் 12 சுரங்கங்கள் அதானிக்கே அளிக்கப்பட்டன.
- அதேசமயம் மாற்று எரிசக்தி என்று சொல்லக் கூடிய சூரிய மின்சாரத் திட்டங்களையும் அதானி நிறுவனமே பெற்றது. 6 பில்லியன் டாலர் அளவுக்கான முதலீட்டினை அதானி நிறுவனம் சூரிய மின்சக்தித் துறையில் செய்துள்ளது.
- பெரும் கட்டுமான ஒப்பந்தங்களும், அரசாங்க ப்ராஜக்ட்களும் அதானி குழுமத்திற்கே வழங்கப்பட்டன. மிகப்பெரும் துறைமுகங்களையும் மோடி அரசாங்கம் அதானிக்கு பெற்றுத் தந்துள்ளது.
- மோடி அரசு ஆட்சிக்கு வந்த உடனேயே அதானி குழுமத்தின் நிலக்கரி சுரங்க மேம்பாட்டு பணிகளுக்காக SBI வங்கியிலிருந்து ஒரு பில்லியன் டாலர் கடனாக அளிக்கப்பட்டு விமர்சனத்துக்கு உள்ளானதும் குறிப்பிடத்தக்கது.
அதானியின் சொத்துகள்
அதானியின் சொத்துக்களில் பெரும்பாலானவை அதானி மின்சக்தி மற்றும் அதானி துறைமுகங்கள் சார்ந்து இருக்கிறது. இதைத் தவிர தற்போது டேட்டா செண்டர் துறையிலும் அதானி குழுமம் இறங்கியிருக்கிறது.
நேற்று வரையில் அதானியின் மொத்த சொத்து மதிப்பானது 50 பில்லியன் டாலராக இருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் சொல்வதென்றால் 36.39 லட்சம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதானியின் சொத்துகளும், அம்பானியின் சொத்துகளும் மட்டும் எந்த வீழ்ச்சியும் இன்றி ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.