எருமை இழிவல்ல.. அது பெருமை

தவறு செய்யாத மனிதர்கள் என்று யாரும் இல்லை.அப்படி தவறு செய்பவர்களைத் திட்டுவதற்கு நாம் எளிதில் சில வார்த்தைகளை பயன்படுத்துவோம்.அதில் ஒன்று எருமை.’எருமை மாதிரி போறான் பாரு…என தொடங்கி சூடு சொரணை வரை எருமையையே
இழுத்து வருவோம்.தவறு செய்த ஒருவனை திட்டுவதற்கு தவறே செய்யாத, தொடர்பே இல்லாமல் எருமையை ஏன் இழுக்க வேண்டும்..?


பசு மாடு மட்டும் அதட்டியது நகர்ந்து விடுமா என்ன..?இல்லை பசுவின் வழி காளைகள்தான் சொன்னதும் கேட்டுவிடுமா…?பசுவைப் போல எருமையும் மாடு வகைகளில் ஒரு இனம்தானே…??பிறகு ஏன் எருமைகளுக்கு மட்டும் இத்துனை ஓரவஞ்சனை..?

நீண்ட கொம்புடனும் அடர்ந்த கருமை நிறத்துடன் பெரிய உருவத்துடன் பார்ப்பதற்கு பயம் கொள்ளும்படியாகவும் கம்பீரமாகவும் இருக்கும் இந்த எருமைகள் இம்மண்ணின் புராதான அடையாளங்களில் ஒன்று.

உலகில் தொல் நாகரிகங்களில் ஒன்றான சிந்துவெளி,பழந்தமிழ் இலக்கியமான சங்க இலக்கியம்,திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வாழ்வியல் என இவைகள் அனைத்திலும் எருமை என்பது பெருமைக்குரிய விடயமாகவே இருந்தது. இன்றும் இருக்கிறது.இதைப்பற்றியே இக்கட்டுரை பேச முயல்கிறது.

சிந்துவெளி நாகரிகம்:

தொதவர்களின் வழிபாட்டு இடம்

1924-இல் நாகரிக தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உலகிற்கு அறிவிக்கப்பட்ட சில மாதங்களிலேயே, ” திராவிடர்களின் தோற்றமும் இந்திய நாகரிகத்தின் தொடக்கமும் “( Dravidian origins and beginnings of Indian civilization ) என்ற ஆய்வுக்கட்டுரையை எழுதிய வங்காள மொழி அறிஞர் சுனிதி குமார் சட்டர்ஜி தொடங்கி, சமீபத்தில் வெளிவந்த நீண்ட ஆய்வு நூலான “Journey of a Civilization: indus to Vegai ” என்ற நூலை எழுதிய ஆர்.பாலகிருஷ்ணன் போன்ற இந்திய ஆய்வாளர்களும் பல்வேறு வெளிநாட்டு ஆய்வாளர்களும் சிந்துவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகமே என்கிற கருதுகோளை தங்களின் விரிவான ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர்.

சிந்துவெளி நாகரிகத்தில் எருமை :


அரப்பா நாகரிகப் பகுதிகளில் தொல்லியல் ஆய்வின் மூலம் கிடைத்த முத்திரைகளில் ஒன்று எருமையின் கொம்பினால் ஆன கிரீடத்தை தலையில் சூடிய மனிதன்.மேலும் அம்முத்திரையில் மனிதனை சுற்றி மான்,எருமை,புலி,யானை மற்றும் காண்டாமிருகம் போன்ற விலங்குகள் உள்ளது. இந்த முத்திரை சிந்துவெளி மக்களின் சமய நம்பிக்கையோடு தொடர்புடையதாக ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். சிந்துவெளிப் பகுதியில் எருமை சடங்கு முறைகளோடு தொடர்புடைய ஒரு விலங்காக பார்க்கப்படுகிறது.


செம்பினால் செய்த எருமை உருவபொம்மை சிந்துவெளிப் பகுதியில் தெற்கு பகுதியான தைமாபாதத்தில் கிடைத்துள்ளது. சிந்துவெளி பானைகளில் எருமைகளின் கொம்புகள் பதியப்பட்ட உருவம் கிடைத்துள்ளது.இதிலிருந்து சிந்துவெளி மக்களின் எருமை பயன்பாட்டை நாம் அறியமுடியும்.


கூடுதலாக 6300 ஆண்டுகளுக்கு அதாவது சிந்துவெளி காலக்கட்டத்திற்கு முன்பு மேய்ச்சல் காலகட்டத்தில் நீர் எருமையானது வீட்டு விலங்காக பழக்கப்படுத்தப்பட்டுள்ளது.
சிந்துவெளிப் பகுதியிலிருந்து எருமைகள் கிமு 2500 வாக்கில் மெசபடோமியா பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.மெசபடோமிவின் அக்காடிய மன்னன் சிந்துவெளி மக்களோடு வணிகம் செய்வதற்காக மொழிபெயர்ப்பாளர் ஒருவரை நியமனம் செய்திருக்கிறார். அந்த மொழிபெயர்ப்பாளர் வைத்திருந்த முத்திரைகள் ஒன்றில் எருமைப்பலி சித்தரிக்கப்படும் முத்திரையும் இருந்துள்ளது.இந்நேரத்தில் தொதவர்கள் என்கிற பழங்குடி மக்களின் எருமைப்பலி என்பது நினைவுக் கூரத்தக்கது.( இதைப் பற்றி இக்கட்டுரையின் அடுத்த பகுதியில் காணலாம்.)

சிந்துவெளி மக்களின் உணவு :


அரப்பா நாகரிகப் பகுதிகளில் வாழ்ந்த மக்களின் உணவு பற்றிய சமீபத்திய ஆய்வானது அம்மக்கள் எருமை மற்றும் ஆடு ஆகியவற்றின் மாமிசத்தை பெருமளவில் உட்கொண்டிருக்கலாம் என தெரிவிக்கிறது.

தொதவர்கள் வளர்க்கும் எருமை

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அகழ்வாராய்ச்சித் துறையில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவரும் தற்போது ஃப்ரான்சில் உள்ள CEPAMல் டாக்டர் பட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருப்பவருமான அக்ஷயேதா சூர்யநாராயண், சிந்து சமவெளி மக்களின் உணவுப் பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் முடிவு Lipid residues in pottery from the Indus Civilisation in northwest India என்ற தலைப்பில் தற்போது Journal of Archaeological Science என்ற பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.
பழங்கால மக்கள் பயன்படுத்திய மட்பாண்ட பாத்திரங்களில் எஞ்சியிருக்கும் எச்சங்களை ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் அப்பாத்திரங்களை பயன்படுத்திய மக்கள் உண்ட உணவை கண்டறியமுடியும்.இந்த முறையை பயன்படுத்தி அரப்பா நாகரிகப்பகுதிகளில் 172 பானை ஓடுகள் சேகரிக்கப்பட்டன.அதன் விளிம்புகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.ஏனென்றால் உணவு கொதிக்க வைக்கும் போது உணவுப் பொருட்கள் விளிம்பு பகுதிகளில் அதிகமாகப் படியும் என்பதால்.இவ்வாறாக சேகரிக்கப்பட்ட பானை ஓடுகள் 2.5 மில்லி மீட்டர் அளவுக்கு ட்ரில் செய்யப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.இந்த மாதிரிகளை ஐசோடோப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியதன் மூலம் அவை அதிகப்படியாக அசைபோடும் விலங்கின் இறைச்சியை சேர்ந்தவை என்பது தெரியவந்துள்ளது.

கூடுதலாக அங்கு கிடைத்த எலும்புகளில் 50 லிருந்து 60% எருமைகளுடையது. 10 சதவீத எலும்புகள் ஆடுகளுடையவை. இதன்மூலம் அரப்பா நாகரிகப் பகுதிகளில் வசித்த மக்கள் மாட்டிறைச்சியை விருப்ப உணவாக உட்கொண்டிருக்கக்கூடும் என்பதை அக்ஷயேதா கண்டறிந்துள்ளார்.

அக்ஷயேதா அவர்களின் ஆய்வு முடிவுகள், ஹரப்பா பகுதிகளில் கிடைத்த முத்திரைகள், மெசபடோமியா பகுதி சான்றுகள் ஆகியவற்றைக் கொண்டு பார்க்கும் போது ஒரு விடயம் நமக்கு நன்றாக விளங்குகிறது.அது அரப்பா நாகரிகப் பகுதிகளின் மாடுகளில் எருமைகளே அதிகம் இருந்துள்ளது. மேலும் அம்மக்களின் உணவு,வழிபாட்டு நம்பிக்கை, சடங்குகள்,பொருளாதாரம் அனைத்திலும் எருமைகளை முக்கியத்துவம் பெற்றுள்ளன என்பதே …!

பழங்குடிகளின் வாழ்வியலில் எருமைகள் :
புராதன சமூகம் என்று சொல்லக்கூடிய ஆரம்பகால மனித சமூகத்தின் வாழ்வியல் கூறுகளை,பண்புகளை 21ம் நூற்றாண்டின் நவீன காலத்திலும் தொடர்ந்து வருபவர்கள் பழங்குடி மக்கள். அப்பழங்குடி மக்களின் வாழ்க்கையில் எருமைகளின் பங்களிப்பைப் பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.

முரியா :
சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் பகுதியில் காட்டெருமை கொம்புகளை கிரீடமாக அணியும் கோண்டுகளின் ஒரு பிரிவான முரியா என்ற திராவிட பழங்குடி மக்கள் உள்ளனர்.இவர்கள் நடனமாடும்போது இக்கொம்பு கிரீடத்தை அணிகின்றனர். மேலும் சத்தீஸ்கர் பகுதியில் உள்ள கோயா பழங்குடி மக்களிடமும் எருமை கொம்புகள் அணியும் பழக்கம் உள்ளது.இது நமக்கு சிந்துவெளி கொம்பு கிரீடம் அணிந்த முத்திரை மனிதனையே நினைவூட்டுகிறது.

கோண்டுகள் :
நடுத் திராவிட மொழியான குயி மொழி பேசும் ஒடிசாவில் வாழும் கூண்டுகள் தங்களின் மஞ்சள் விளைச்சலின் வளத்தைப் பெருக்க எருமைப்பலி கொடுக்கின்றனர். அவர்கள் எருமைகளில் பால் கறந்து விற்பதை விரும்புவதில்லை. அதற்கு காரணம் பால் கறந்து விற்பது இயற்கைக்கு எதிரான செயல்பாடாக அம்மக்கள் கருதுகின்றனர்.

தொதவர்கள்:
நீலகிரி மலையில் தோதவர் கோத்தர் குறும்பர் படுகர் இருளர் என ஐந்து குடியினர் வாழ்கின்றனர். இதில் படுகர் தவிர மற்றவர்கள் தமிழகப் பழங்குடிகள் பட்டியலில் வரக்கூடியவர்கள்.இவர்கள் பேசும் மொழிகள் திராவிட மொழிக்குடும்பத்தில் வருகிறது.
இந்த ஐந்து குடிகளில் தொதவர்கள் நீலகிரி மலையின் மிக உயர்ந்த உச்சி பகுதிகளில் வாழ்கின்றனர்.
கடல் மட்டத்திலிருந்து 5500 அடி உயரத்தில்,67 மந்துகளில் அதாவது குடியிருப்புகளில் வாழ்கின்றனர்.


தொதவர்கள் எருமைகளை வளர்க்கும் ஆயர்கள்.இவர்கள் மொழியில் எருமைகள் பற்றி நூற்றுக்கும் (100)அதிகமான சொற்கள் உள்ளன. இவர்களிடம் இரண்டு விதமான எருமைகள் உள்ளன. ஒன்று சமய சார்புடைய எருமை.இதனை ஓம் (om)என்ற தெய்வம் 1800 பெருமைகளை படைத்ததாகவும்,அதன் வாலில் தொங்கிக்கொண்டு வந்தவன் தான் முதல் தொதவன் என்பதையும் அவர்கள் நம்புகிறார்கள்.


இரண்டாவதாக சாதாரண எருமை.இதனை (Teikirzi) தெய்கிரிசி என்ற தெய்வம் படைத்ததாக நம்புகின்றனர்.
தங்களின் ஈமச் சடங்குகளில் எருமைகளை பலியிடுகின்றனர். அதன் இறைச்சியை நீலகிரி மலையில் உள்ள மற்ற பழங்குடிகளோடு பகிர்கின்றனர்.கூடவே பால், பால் பொருட்களையும் பகிர்கின்றனர்.எருமைகள் அம்மக்களின் பண்பாட்டில் மட்டுமல்லாது பொருளாதாரத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது.ஒரு பண்பாட்டை வடிவமைப்பதில் சுற்றுச்சூழல் எந்த அளவிற்கு தாக்கம் பெறுகிறதோ,அதே அளவிற்கு பொருளாதாரம் சார்ந்த வாழ்வியலும் தாக்கம் பெறுவதை நாம் கவனிக்க வேண்டியுள்ளதாக மானுடவியலாளர்கள் கூறுவதை இந்நேரத்தில் நினைவில் கொள்வது சிறப்பு.
நான் மேலே கூறியது போல தெய்வத்தன்மை பொருந்திய எருமைகளை அம்மக்கள் புனிதமாக கருதுகிறார்கள்.அது சார்ந்த சடங்குகளில் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுள்ளனர்.

தொதவர்களின் சடங்கு முறைகள் :

தொதவர்களின் குடில்


தொதவர்கள் வாழும் வாழிடப்பகுதிக்கு மந்து என்று பெயர் என்பதை ஏற்கனவே அறிந்தோம். இந்த மந்துகளிலேயே எருமைகளையும் வளர்க்கிறார்கள். “எருமைகளின் குழந்தைகள்”, என மானுடவியலாளர்களால் அழைக்கப்படும் இவர்கள் தங்களின் சமய சார்புடைய எருமைகளை பராமரிக்கும் பகுதிகளை கோயிலாக கருதுகிறார்கள். அம்மாடுகளின் யார் பால் கறக்க வேண்டும் என்பதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறார்கள்.

தொதவர்களின் வாழ்வில் தீக்கடைதல் என்பது மிக முக்கியமான சடங்கு முறையாகும். தீப்பெட்டிகள் அறிமுகமான பின்பும் அம்மக்கள் தங்கள் சடங்குகளில் தீப்பெட்டிகளை பயன்படுத்துவதில்லை.தீக்கடையும் குச்சிகளையே பயன்படுத்துகின்றனர்.இத்தகைய தீக்கடையும் குச்சியும் பால்மாடமும் அவர்களின் புனிதத்தன்மை கொண்டவைகள். ஒரு சிறுவனை பால் கறக்க தகுதி உடையவனாக மாற்றுவதற்கும்,ஒருவனை பால் மாடத்திற்கு உரியவனாக மாற்றுவதற்கும் அம்மக்கள் தீக்கடைந்தே சடங்குகள் செய்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு சடங்கிற்கும் ஒவ்வொரு விதமான தீக்கடையும் குச்சியை பயன்படுத்துகின்றனர் என்கிறார் அவர்களை பற்றி விரிவாக ஆய்வு செய்த ரிவர்ஸ் (1906).


தொதவர்களின் ஈமச்சடங்குகள் பற்றி வால்ஹவுஸ் எழுதியுள்ளார். ஈமச்சடங்குகளில் எருமைகளை அம்மக்கள் பலியிடுகின்றனர். சிதைக்கு வைக்கும் தீக்கடைந்தே உருவாக்குகிறார்கள்.வால்ஹவுஸ் எழுத்திலிருந்து தீக்கடைதல் புனிதமானது என்பதையும்,பிராமணர்களை அம்மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தினர் என்பதையும் அறியமுடிகிறது. அவர் தன் குறிப்புகளில் ஒரு செய்தியை குறிப்பிட்டிருப்பார். அது….
பால்மாடத்தில் தீக்கடையும் கோலை வால்ஹவுஸ் உதவியாளரான ஒரு பிராமணர் தொட்டுவிட்டதால்,அது தீட்டுப்பட்டுவிட்டது என்று தூக்கி போட்டுவிட்டனர் என்று பதிவு செய்துள்ளார்.மேலும் அவர்களின் பால் மாடத்திற்குள் பிராமணர்களை அனுமதிப்பதில்லை என்பதை ஹர்கென்ஸ் அவர்களும் பதிவு செய்துள்ளார்.


தங்களின் தெய்வ நம்பிக்கையான,பொருளாதார வாழ்வாதார மூலமான,பண்பாட்டு அடித்தளமான எருமைகளை எவனொருவன் அமங்கள குறியீடாக,சாவின் சின்னமாக சித்தரித்தானோ…அவனை என் வாழ்விடத்திற்குள்,நம்பிக்கைக்குள் அனுமதிப்பதில்லை என்பதே புரட்சியாகும்.தொதவர்கள் அதை தங்களின் எருமைகளுக்காக செய்கிறார்கள்.

தொதவர் என்கிற திராவிட பழங்குடி மக்களின் வாழ்வியலில் முக்கிய நிகழ்வான தீக்கடை கோலால் தீ உருவாக்கும் முறை
சங்ககாலத்திலும் இருந்துள்ளது என்பதை, ” புல்லென் மாலைச் சிறு தீ ஞெலியும் கல்லா இடையன் “, (புறம் 331) என்ற பாடல் மூலம் அறியலாம். தீக்கடைதல் மட்டுமின்றி எருமைகள் பற்றி பல்வேறு குறிப்புகள் பழந்தமிழ் இலக்கண இலக்கியத்தில் உள்ளது அதனை அடுத்தப்பகுதியில் காணலாம்.

எரிசினக் கொற்றவை

உதவிய நூல்கள்

ஆர். பாலகிருஸ்ணன் கட்டுரைகள்

பக்த்தவச்சல பாரதி தொகுத்த நூல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *