இக்கட்டுரையின் முதல் பாகத்தினைப் படிக்க:
எருமை இழிவல்ல.. அது பெருமை
என் ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு சிறு கிராமம். அங்கு வேளாண்மையே முக்கியத் தொழில், பெரும்பான்மையானவர்கள் சிறு-குறு விவசாயிகளே. விவசாயத்தோடு சேர்ந்த ஆடு, மாடு, கோழி வளர்ப்பிலும் ஈடுபட்டிருப்பார்கள்.
இதிலிருந்து வரும் வருமானமே அவர்களின் இரண்டாம் நிலை வருமானம். விவசாயம் பொய்த்துப் போகிற காலங்களில் கால்நடைகளின் மூலம் வரும் வருமானம் அவர்களின் உணவு மற்றும் அனைத்து தேவைகளுக்குமான சிறு ஆதாரம்.
நிலம் வைத்திருக்கும் விவசாயியின் நிலைமை இப்படியென்றால்,நிலம் இல்லாத தினக்கூலிகளின் வாழ்வில் கால்நடைகளே மிக முக்கிய பொருளாதார ஆதாரம், அதிலும் கறவைமாடு வளர்ப்பு என்பது மிக முக்கியமான வருவாய் மூலதனம்.
கறவை மாடு வைத்திருக்கும் ஒருவருக்கான பாலின் விலை நிர்ணயம் என்பது, பாலில் உள்ள கொழுப்பு சத்தின் விகித அளவை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. பசுமாட்டு பாலின் கொழுப்பு விகிதத்தை விட, எருமை மாட்டு பாலின் கொழுப்பு விகிதம் அதிகம். அதே நேரத்தில் மாடுகளின் பராமரிப்பு செலவில் பசுவை விட எருமை பராமரிப்பு செலவும் மிகக்குறைவு. மேலும் பசுக்களில் இன்று கலப்பின சீமை பசுக்கள் வந்துவிட்டன. அவற்றின் பராமரிப்பு செலவு அவை கொடுக்கும் பாலின் வருவாயை விட அதிகம். ஆனால் கலப்பின அல்லது அரியவகை அந்நிய சீமை எருமை என்ற ஒன்றே கிடையாது.
இப்படி எல்லா வகையிலும் நிறைகளே நிறைந்த எருமை வளர்ப்பு எப்படி குறைந்தது? எருமைகள் ஏன் பசுவாக்கப்பட்டன? எந்த விதத்திலும் குறைவில்லாத எருமைகள் இன்று கிராமங்களில் குறைந்து பசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் என்ன? இப்படிதான் ஆண்டாண்டு காலமாகவே இருந்ததா, இல்லை இந்த மாற்றம் இடையில் ஏற்பட்டதா? என்ற வினாக்களுக்கு எல்லாம் விடை காண நாம் தமிழரின் தொல் வரலாற்று சான்றுக்குள் சற்று செல்ல வேண்டும்.
தமிழரின் தொல் வாழ்வியலின் நிகழ்வுகளையும்,சங்க காலத்திற்கு முன்னால் வாழ்ந்த நம் முன்னோர்களின் வாழ்வியல் மற்றும் நிலக்கூறுகள் போன்றவற்றையும் மீட்டுருவாக்கம் செய்து எழுதப்பட்ட இலக்கியமான சங்க இலக்கியத்திலும், தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்திலும் எருமைகள் பற்றி பெருமைப்படவே பேசப்பட்டுள்ளது.
தொல்காப்பியம்
அகம் புறம் என மனிதனின் வாழ்க்கை முறைக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் தனது பொருளதிகாரத்தில் உயிரினம் சார்ந்த மரபியல் பற்றி பேசுகிறது.
உயிரினங்களின் இளமைப் பெயர்கள்
உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை பகுத்து இலக்கணம் எழுதியதோடு அவற்றின் இளமைப் பெயர்களையும் குறிப்பிடுகிறது. இதில் சிறப்பு என்னவென்றால் இந்த நிலத்தில் இல்லாத ’கவரிமான்’ என்ற இமயமலையில் வாழும் உயிரினத்தின் இளமைப் பெயரையும், பாலைவனத்தில் வாழும் ஒட்டகத்தின் இளமைப் பெயரையும் கூட கூறுகிறது.
பார்ப்பும் (பறவைக் குஞ்சு), பறழும், குட்டியும், குருளையும், கன்றும், பிள்ளையும், மகவும், மறியும், குழவியும் என்னும் ஒன்பதும் இளமையை குறிக்கும் சிறப்பினையுடைய மரபிலக்கணப் பெயர்களாகும்.
“மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பில்
பார்ப்பும் பறழுங் குட்டியும் குருளையும்
கன்றும் பிள்ளையும் மகவும் மறியுமென்று
ஒன்பதுங் குழவியோ டிளமைப் பெயரே……”
(தொல் : பொருளதிகாரம் -545)
இவற்றுள் ‘கன்று’ என்னும் இளமைப் பெயர் வரும் உயிரினங்களின் வரிசையானது. யானை, குதிரை, கழுதை, கடமை (காட்டுப்பசு), மான், எருமை, மரை, கராம் (கரடி), கவரி (கவரிமான்), ஒட்டகம்.
‘யானையும் குதிரையும் கழுதையும் கடமையும்
மானோ டைந்தும் கன்றெனற் குரிய.’ – (559)
‘எருமையும் மரையும் வரையா ராண்டே.’ –(560)
‘கவரியும் கராமும் நிகரவற் றுள்ளே.’ – (561)
‘ஒட்டகம் அவற்றோ டொருவழி நிலையும்.’ – (562)
மேலும் மனிதர்களின் குழந்தைகளைக் குறிக்கும் ‘குழவி’ எனும் மரபுப் பெயர் எருமைகளின் கன்றுகளை குறிக்கவும் தொல்காப்பியம் பயன்படுத்துகிறது. இப்படி மரபு வழியில் உயர்திணையான மனித குழந்தைகளை குறிக்கும் சொல்லே எருமை கன்றுக்குமான சொல்லாக கொண்ட மரபே நம்முடைய மரபு.
“குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை.’ – (563)
‘ஆவும் எருமையும் அதுசொலப் படுமே.’ – (564).
ஐங்குறுநூறு-எருமைப்பத்து
எட்டுதொகை நூலான ஐங்குறுநூற்றின் மருதத் திணைக்கான நூறு பாடல்களில் பத்து பாடல்கள் ‘எருமைபத்து’ என எருமை பற்றியே பாடப்பட்டுள்ளது. இதை எழுதியவர் ஓரம்போகியார். இங்கு எருமை மருத நிலத்தின் கருப்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொல்காப்பிய அகப்பொருள் இலக்கணத்தில் ஐந்து திணைகளில் வாழும் மற்றும் விளங்கும் பொருட்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். அதில் வயலும் வயல் சார்ந்த மருதத்தின் கருப்பொருளாக எருமை குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றால் எருமை என்பது அந்நில மக்களின் வாழ்வியலில் எத்தனை முக்கியமானதாக இருந்திருக்கும் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். ஆனால் இன்று வயலும் வயல் சார்ந்த காவிரி டெல்டா பகுதிகளில் எருமைகள் இருப்பதற்கான அடையாளமே இல்லை.
போர் வீரனின் கம்பீர தோரணை
இக்காலகட்டத்தில் எருமையை இழிவோடு தொடர்புப்படுத்தியே பேசப்படுகிறது. ஆனால் அகநானூறு பாடலில் ஓரம்போகியார்,
“மீன் விளையாடும் பொய்கை நீரில் ஆம்பல் பூக்களை மேய்ந்த முறுக்குக் கொம்பினையுடைய எருமை, பகலெல்லாம் சேற்றில் முதுகு படியத் தூங்கிக் கிடந்துவிட்டு, பொழுதுபோகும் வேளையில், கொழுத்த விரால் மீன் பிறழும்படி, பகன்றைக் கொடியை உடம்பில் சூடிக்கொண்டு, போர் வீரனைப் போல புறப்பட்டு வரும்” என எருமையை போர் வீரனோடு ஒப்பிட்டு பாடியிருப்பார்.
அப்பாடல்…
“துறை மீன் வழங்கும் பெரு நீர்ப் பொய்கை,
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு
ஈர்ந் தண் எருமைச் சுவல் படு முது போத்து,
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி, பொழுது பட,
பைந் நிண வராஅல் குறையப் பெயர்தந்து,
குரூஉக் கொடிப் பகன்றை சூடி, மூதூர்ப்
போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன்…”
(அகநானூறு : 316)
மங்கலப் பொருள்
எருமைகள் குறுக்கே வந்தாலோ, கனவில் வந்தாலோ சகுனம் சரியில்லை என்று அவைகளை அமங்கலக் குறியீடாக இன்றைய காலங்களில் நாம் பார்க்கும் மனநிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்களின் வாழ்வியலில் எருமைகளின் கொம்புகள் மங்கலப் பொருளாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
எருமைக் கொம்பை வழிபடல்
ஆயர் தம் வீட்டில் திருமணம் முதலிய நிகழ்வு நிகழும்போது செம்மண் பூசுவர். இளமணலை வீட்டின் முன்பக்கம் பரப்புவர். பெண் எருமைக் கொம்பை வீட்டில் வைத்து அதைத் தெய்வமாக வழிபடுவர்.
“தருமணல் தாழப்பெய்து, இல்பூவல் ஊட்டி
எருமைப் பெடையொடு எமர்ஈங்கு அயரும்
பெருமணம்”
(கலித்தொகை-114 : 12-14)
(தருமணல் = கொண்டு வந்து குவித்த மணல்; பூவல்ஊட்டி = செம்மண் பூசி; பெடை = கொம்பு)
கொணர்ந்து குவித்த மணலைப் பரப்புகின்றனர்; வீட்டில் செம்மண் பூசுகின்றனர்; தெய்வமாய் வைத்த பெண் எருமையின் கொம்பை வழிபட்டு உறவினர் திருமணம் நிகழ்த்துகின்றனர் என்பது இப்பாடல் வரிகளின் பொருள் ஆகும்.
மங்கலப் பொருளிலிருந்து அமங்கல குறியீடாக மாற்றியது யார்? இந்த பண்பாட்டு மாற்றத்தை நிகழ்த்தியவர்களின் நோக்கம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தேடினோம் என்றால் நம் பண்பாட்டின் வேர்களையும் அதில் ஏற்பட்ட மாற்றம் ஏற்பட்ட காலம் மற்றும் நோக்கம் ஆகியவற்றை தெரிந்துக்கொள்ள முடியும். நம் உரிமை சார்ந்த விடயங்களில் பண்பாட்டின் தாக்கத்தையும் அறிந்துக் கொள்ளமுடியும்.
எருமை சவாரி
எருமையில் யார் சவாரி செய்வார்கள் என்று கேட்டால், உடனே நமக்கு தோன்றுவது ‘எமன்’. ஏனென்றால் அப்படித்தான் இங்கு உள்ள ஒலி, ஒளிபரப்பு சாதனங்கள் நாடகம் என்கிற பெயரில், இதிகாசம் என்கிற பெயரில் நம் சிந்தனைக்குள் புகுத்தியிருக்கிறது.
எருமைகள் வண்டி இழுத்திருக்கிறது. வயலை உழ ஏரோட்டி இருக்கிறது. எருமை குளத்தில் குளிக்கும் போது அதன் மீது சிறுவர்கள் ஏறி சவாரி செய்து விளையாடி இருக்கிறார்கள். இது இன்று நேற்று அல்ல, எருமைகள் வீட்டு விலங்காக பழக்கப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே நடந்திருக்கிறது.
அகநானூற்று பாடல் ஒன்று எருமை மீது உட்கார்ந்து இருக்கும் சிறுவனை பார்க்கும் போது கரும் பாறையின் மீது அமர்ந்து இருக்கும் குட்டி குரங்கு போன்று உள்ளதாக கூறுகிறது.
“என்னெனப் படுங்கொல்-தோழி!-நல்மகிழ்ப்
பேடிப் பெண்கொண்டு!ஆடுகை கடுப்ப
நகுவரப் பணைத்த திரிமருப்பு எருமை
மயிர்க்கவின் கொண்ட மாத்தோல் இரும்புறம்,
சிறுதொழின் மகாஅர் ஏறிச், சேணோர்க்குத்
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன் “
-(அகம் -206)
இப்பாடலின் பொருள்,
‘தோழி! நல்ல களிப்புடனே பேடிப்பெண்ணின் வேடத்தைப்
பூண்டு கூத்தர்கள் ஆடுவார்கள். அப்படி ஆடும்போது
கைகளைப் பின்னாக மேல்நோக்கி வளைத்து அவர்கள்
அபிநயமும் செய்வார்கள். அப்படி வளைந்து மேலே நோக்கிய
தாகப் பின்புறம் விளங்கும் அவர்களின் கைகளைப்போல
எருமையின் கொம்புகள் பின்னாக வளைந்தனவாய் விளங்கும்.
விளக்கமுறப் பெருத்தும் முறுக்குண்டாகவும் அக்கொம்புகள்
காணப்படும். அத்தகைய எருமையினது மயிரோடு அழகு
பெற்றுத் தோன்றும் கரிய தோலினையுடைய முழவுகளின்
பெரிய முதுகிலே, சிறுதொழில்களைச் செய்யும்
சிறுவர்கள் ஏறி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அது
தூரத்திலிருப்பவர்களுக்கு, உருண்டைக் கல்லின்மேலே
இருக்கும் மந்திகளைப் போலத் தோன்றும். அத்தகைய வளமான
ஊருக்கு உரியவன் நம் தலைவன்.
பெருமையிற் சிறந்தோன் எருமை
இந்தத் தலைப்பு பலருக்கும் அதிர்ச்சி அளிக்க கூடியதாகவே இருக்கும். காரணம் எருமை என்றாலே பொதுப்புத்தியில் ஏற்பட்டிருக்கும் உருவகம் தான்! அப்புறம் எப்படி இப்படி ஒரு சொல்லாடலை கையாள முடியும்?
‘முடியும்’,என்கிறது தமிழர் மரபும் வாழ்வியலும். அண்ணல் என்றால் தமிழ் பேரகராதி பல உயர்ந்த அர்த்தங்களைத் தருகிறது. அவற்றுல் சில…
அரசன் -King, தலைமை – Superiority, பெருமையிற் சிறந்தோன்-Great man , Superior, கடவுள் -God, இப்படியாக..
சரி அண்ணல் என்பதற்குத்தானே இத்தனை உயர்ந்த அர்த்தங்களும்.இங்கே எருமை எப்படி வந்தது? இந்தக் கேள்வி இயல்பாக எழக்கூடியதுதான்.
எருமையை அகநானூறு ‘அண்ணல் ஏறு’ என்கிறது.
” வலி மிகு முன்பின் அண்ணல் ஏறு
பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி,
மடக் கண் எருமை மாண் நாகு தழீஇ,
படப்பை நண்ணி, பழனத்து அல்கும்
கலி மகிழ் ஊரன்….. “
( அகம் -146)
பாடலின் பொருள்: வலிமை மிகுந்து உடலுரம் பெற்ற சிறந்த எருமைக் கடா பகலில் பூத்திருக்கும் பொய்கையில் கிடந்துவிட்டுத் திரும்பிய பின்னர் தன் பெண்-எருமையைத் தழுவி அழைத்துக்கொண்டு தோட்டத்தில் உள்ள சோலையில் தங்கி மகிழ்ச்சிகொள்ளும் ஊரினை உடைய தலைவன் நீ.
அண்ணல் என்கிற இவ்வளவு உயர்வான இடத்தில் எருமையை ஏன் வைத்தார்கள் அக்காலத் தமிழ் மக்கள் என்கிற கேள்விக்கான விடையிலேயே நம் தொன்மத்தின் வேர்கள் உள்ளன.
சிந்துவெளி மக்களின் பொருளாதாரமாக, உணவாக, சமய நம்பிக்கையாகவும்; தொல்தமிழர்கள் அண்ணல் எனவும் போர் வீரனாகவும் கொண்டாடும் உயிரினமாகவும், இன்றுவரை தொதவப் பழங்குடிகளின் வாழ்வாதாரமாக, தெய்வமாகவும் இருந்த இருக்கிற எருமை இனத்தின் பெருமை, எண்ணிக்கை குறைவு என்பது நம் பண்பாட்டின் தோல்வியே.
இது பண்பாட்டு தோல்வி மட்டுமல்ல இன அழிப்பும். கூடவே இன்றைய சூழலில் வேளாண்மை, கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் மக்களின் தற்சார்பு பொருளாதாரத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் செயலே.
இந்தியாவில் பால் உற்பத்தி
உலகின் மொத்த பால் உற்பத்தியில் 20.17 விழுக்காடு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் பசு மற்றும் எருமை மாடுகளின் பங்களிப்பும் உள்ளது. 2018-2019 புள்ளி விவரப்படி இந்தியாவில் பால் உற்பத்தியில் 48.9% எருமைப்பால்.
இந்தியாவின் மொத்த பால் உற்பத்தி (2018-2019) 187.75 மில்லியன் மெட்ரிக் டன். அதில் எருமைப்பால் 91.82 மில்லியன் மெட்ரிக் டன். பசு மாட்டு பாலில் 51.25 மில்லியன் மெட்ரிக் டன் கலப்பு மாடுகள் எனப்படும் சீமை பசு மாடுகளின் பால். மீதம் 38.5 7 மில்லியன் மெட்ரிக் டன் பால்தான் நாட்டு மாட்டுப்பால்.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது எருமை மாட்டின் பங்களிப்பு மற்றும் அவை முழுக்க நாட்டு மாட்டினங்கள். இப்படி இந்திய பொருளாதாரத்தில் பசுவிற்கு குறையாத பங்களிப்பை எருமை மாட்டினங்கள் செய்கின்றன.
உலக அளவில் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் மாட்டிறைச்சியில் இந்தியாவின் எருமை மாட்டிறைச்சி அதிகம். காரணம் இதன் விலை குறைவு.
எந்த விதத்திலும் பசுவை விட குறைவில்லாத அனைத்து தகுதி நிறைகளும் கொண்ட எருமைகளின் இன்றைய நிலைக்கான காரணத்தை அனைத்து நிலைகளிலும் ஆராய்வதே அற்கான நீதி. எருமைக்கான நீதி என்பது நம் பண்பாடுகளின் மீது இன்றுவரை நிகழ்த்தப்படும் தாக்குதலுக்கான எதிர்வினை.
– எரிசினக் கொற்றவை
உதவிய நூல்கள்:
ஆர். பாலகிருஸ்ணன் கட்டுரைகள்
பக்த்தவச்சல பாரதி தொகுத்த நூல்கள்