(‘கருப்புப்பிரதிகள்’ வெளியீடாக வெளிவர உள்ள என் ‘பெரியாரும் தமிழியல் ஆய்வறிஞர்களும்’ எனும் சிறு நூலின் முன்னுரை’ – வே.மு.பொதியவெற்பன்)
“மொழி – தமிழ் மொழி பற்றிய பெரியாரின் சிந்திப்புச் சட்டகம், வேறு எதனையும் விட மிக மோசமாகச் சிதைத்துப் – புரிந்துகொள்ளப்படுகிறது.” – க.காமராசன் (‘பெரியாரும் சில தத்துவ விசாரணைகளும்’)
அ.தலையில் இருக்க வேண்டியது அறவே இல்லை
“புலவர் என்றால் சொந்தபுத்தி இல்லாதவன் என்றுதான் உரைகூறுவேன்.” இவ்வாறு புலவர் பற்றிய தன் கருத்தைப் பெரியார் கூறக் காரணபூதமானவர். உவேசாவே! அந்தக் காலத்தில் அவர்கள் குடும்பத்தையும் அவரையும் அறியாதவர் இல்லை என உவேசா உள்ளிட்ட தமிழ்ப் புலவர்களுக்கு அவரவர் தமிழ்த் தொண்டுக்கு அவர் உதவி புரிந்ததைக் குறிப்பிடுவார் பெரியார். பின்பொருமுறை ரயிலில் பயணிக்கையில் அவினாசியில் நடந்த சமய மாநாட்டுக்குத் தலைமை தாங்க, அதே ரயிலில் பயணித்த உவேசா தமைச் சந்தித்த அனுபவத்தை நினைவு கூர்ந்து அவர் மத நோக்கிலான தமிழ்ப்பணியைப் பேசுமுகமாகவே இவ்வாறு குறிப்பிட்டார்:
“தமிழ்ப்புலவர்கள் ‘தகுதி எல்லாம்’ இலக்கியங்களை உருப்போட்டு ஒரு சொல்லுக்குப் பல சொல் சொல்லி மக்களை மருளச்செய்து காசு வாங்குவதுதான் உயர்ந்த தொழிலாகும்” எனத் தொடரும் போதுதான் புலவர் பற்றிய கருத்தாக இதனை முன்வைத்தார். பின்னரும், “இன்று தமிழில் ‘மேதாவிகள்’ டாக்டர்கள் ஏராளமாக ஆகிவிட்டார்கள்.பூச்சும்,பொட்டும், நாமமும்தான் அவர்கள் தலையில் விளங்குகிறதே தவிர, தலையில் இருக்க வேண்டியது அறவே இல்லை. புலவரை இடித்துரைக்க இந்த நாட்டில் என்னைத்தவிர வேறு எவரும் முன்வரப் பயப்படுகிறார்கள்.” -ஈ.வெ.ராமசாமி.
பெரியார் பார்வையில் உவேசா குறித்த விரிவான கட்டுரை இந்நூலின் இறுதியில் இடம்பெற்றுள்ளது. அதனைப் பார்ப்பனர் என்ற காழ்ப்புணர்வோடு பெரியார் முன்வைத்ததாகக் குற்றஞ்சாட்டுவார் காணத் தவறிய தரப்புகளையும் காண்போம்:
உவேசாவைக் கடுமையாக விமர்சித்தாலும், அதில் அவரைத் தோழர் என விளித்து, “விடாமுயற்சியுடன் தமிழ்ப்புத்தகங்களை அதிலும் பழைய சங்க இலக்கியங்கள் என்பன பலவற்றை ஒழுங்கான முறையில் சீர்திருத்தி வெளியிட்டமைக்காகத் தமிழபிமானிகள் அவருக்கு நன்றி பாராட்டவேண்டும் என்பதை நாமும் மனனப்பூர்வமாக ஆதரிக்கின்றோம்.”
“தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கணங்களையும் மற்றும் பல இலக்கியங்களையும் மிகுந்த பிரயாசையுடன் தேடி வெளியிட்ட காலஞ்சென்ற சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களைப்பற்றி இந்தப் பார்ப்பனர்கள் ஒரு வார்த்தையேனும் பேசுவது உண்டா?” – ஈ.வெ.ராமசாமி (‘குடி அரசு’- 3/3/ 1935)
1935 -இலேயே பெரியார் அறிந்திருந்த சிவைதாவை அண்மைக்காலத்தில் கூட உவேசாவுக்கும் சிவைதாவே முன்னோடி என்பதனை அறியமாட்டாதோராகவோ; அல்லது இருட்டடிக்கக் கூடியோராகவோ வெங்கட் சாமிநாதன், ஜெயமோகன்,’நாணயம்’ சீனிவாசன் ஆகியோரும் காணக்கிடப்பதுங் கண்கூடே. (இத்தொடர்பில் மேலதிகப் புரிதல்களுக்கு என் ‘சொல்லின் மந்திரமும் சொல் ஓய்ந்த மௌனமும்’ நூலிற்காண்க.)
“மேல்நாடுகளில் பண்டிதர் என்றால் புத்துலகச் சிற்பிகளாக இருப்பார்கள். நம் நாட்டில் பண்டிதர்கள் என்றால் பழமைக்கு இழுத்துக்கொண்டு போகும் பாட்டிக்கதை வீரர்களாக இருக்கிறார்கள். பண்டு என்ற சொல்லில் இருந்து, அதாவது பண்டையர்கள் என்பதுதான் பண்டிதர்கள் என்ற சொல்லாகத் திரிந்தது என்று மூலம் கண்டுபிடிக்கத் தக்கவர்களாக இருக்கிறார்கள்.”
ஆ’உலகானுபவக் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர்’
“தமிழ்ப் புலவர்களை, மேதாவிகளைத் தெரியாதவன் அல்ல; தமிழ் இலக்கியங்களின் தன்மையை உணராதவனல்ல. இன்றைய புலவர்கள், தமிழ் அபிமானிகள் தியரடிகல் (Theoretical) புத்தகம் படித்த புலவர்கள் என்றால், நான் பிராக்டிகல் (Practical) – அனுபவ – தமிழ்அறிவு உடையவன் என்று கருதியிருப்பவன்.”
பெரியாரின் அனுபவத் தமிழறிவு எத்தகையது எனக் காண்போமே:
“அவர் (பெரியார்) பற்றற்றவர். அவர் புத்தகங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டவர் அல்லர். அவர் தனது கடைசிக்காலம் வரை தீராத வாசிப்புப் பழக்கம் உடையராக இருந்தபோதிலும் அவர் நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டவர். மக்களிடமிருந்து கற்றுக்கொண்டவர். அவர் அனுபவங்களின் மாணவர்.” -தொ.பரமசிவன் (‘செவ்வி’)”
“அவர் உலகானுபவம் என்னும் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும் உபமானங்களும் கதைகளும் கற்பனைகளும் கிடைக்கின்றனவோ நான் அறியேன்”- கல்கி (‘அந்திமழை’ – ஆக.2013)
இ.’வளர்ச்சி அபிமானம் தான் முக்கியம்!
தமிழ் என்றால் காட்டுமிராண்டி மொழி, நியூசன்ஸ்; நம் மொழி சாதியக்காப்பாத்தும் மொழி; பழம்பெருமை பாராட்டும் தமிழ்ப்பற்று சமுகத்துரோகம்,தமிழ்ப்பித்து, தாய்ப்பால் பைத்தியம் என்றெல்லாம் கடுமையாகவே சாடினார். இதற்குக்காரணம் பின் -காலனியச் சூழலில் அறுபதுகள் வாக்கில் மபொசி வகையறாவினர் பழம்பெருமை பாராட்டி ஆங்கிலத்தொடர்பை அறவே விட்டொழிக்க வாதிட்டதை எதிர்கொள்ளுமுகமாகவே நவீன உலகவாழ்க்கைக்குச் சற்றும் பயன்படாதெனத் தமிழை விட்டொழித்து ஆங்கிலம் பயிலுமாறவர் வாதாட நேர்ந்தது என்கிறார் க.காமராசன். (பெரியாரும் சில தத்துவ விசாரணைகளும்’)
“எனக்கு மொழியபிமானம், இலக்கிய அபிமானம் என்பது எல்லாம் கிடையாது, வெறும் மனிதாபிமானம் தான் உண்டு. அதுவும் வளர்ச்சி அபிமானம் தான் முக்கியம்.” (‘மொழியும் அறிவும்’)
ஆக இந்த’வளர்ச்சி அபிமானம் தான் முக்கியம் ‘ என்பதே பெரியாரின் மொழி குறித்த சிந்தனைச்சட்டகத்தைப் புரிந்துகொள்ளுமுகமான கடவுவாசகமாகும். இத்தகு வளர்ச்சி அபிமானமே நம்மை பழம்பெருமை பாராட்டலில் இருந்து மீட்டெடுத்தே மொழியெனும் போர்க்கருவியை உலகப் போட்டிப் போராட்டத்துக்கு ஈடு கொடுத்தே தாக்குப் பிடிக்குமாறு காலதேச வர்த்தமானத்துக்கேற்பப் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதே பெரியாரின் உள்ளார்ந்த ஆதங்கத்தின் உட்கிடையாகும். எனவேதான் அவர் அதற்கேற்பத் தமிழை நவீனப்படுத்தவும், எளிமை ஆக்கவுமே மீளமீள வலியுறுத்திய வண்ணமே இருக்கலானார்:
“பழமையிலுள்ள மோகத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். தமிழைப் புதுமொழியாக்கச் சகல முயற்சிகளும் எடுத்துக்கொள்ள வேண்டும். நம் மொழியில் இல்லாத ஒரு கருத்தை, நம் மொழியில் ஏற்க வேண்டிய அவசியம் ஏற்படும் போது அக்கருத்துக்கு உண்டான வார்த்தைகளைத் தோற்றுவிப்பதில் நாம் ஜாக்ரதையாகப் பணியாற்ற வேண்டும். நாம் கண்டுபிடிக்கும் அல்லது உண்டாக்கும் வார்த்தை, கூறவேண்டிய கருத்தைத் தெளிவாக விளக்கம் செய்வதாகவும், சுலபமாக உச்சரிக்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும்.”
“தமிழ் மன்னர்கள் ஆரியமதத்தை ஏற்றுக்கொண்டதால், அம்மதக் கருத்துக்களை விளக்கத் தமிழில் சொற்கள் இல்லாது போகவே அதிகமாக வடமொழிச் சொற்களைக் கையாள ஆரம்பித்தனர்.”
*
தமிழியல் ஆய்வறிஞர் உடனான பெரியார் அணுகுமுறை மதத்தலையீடு × சனாதன எதிர்ப்பு இருமை எதிர்வே. தமிழில் இல்லா ஒரு கருத்து அல்லது கருத்தியலைத் தமிழுக்குக் கொணர்கையில் தமிழியல் ஆய்வறிஞர் ஒன்பதின்மர் உடனான தம் அணுகுமுறையைப் உவேசாவின் மதத்தலையீட்டையும்; ஏனை எண்மர் (1.மயிலை சீனி வேங்கடசாமி, 2.சாத்தான்குளம் இராகவன், 3. நாவலர் சோமசுந்தர பாரதியார், 4.பா.வே.மாணிக்க நாயக்கர்,5.மறைமலையடிகளார், 6.கா.சுப்பிரமணியனார் (கா.சு.பிள்ளை,) 7.ஞா.தேவநேயப் பாவாணர், 8.மா.இராமாணிக்கனார்) சனாதன எதிர்ப்பையும் முன்னிறுத்தியே முன்னெடுத்துள்ளார்.
இவர்கள் பார்வையில் பெரியாரும், பெரியார் பார்வையில் இவர்களும்; தமிழன்பர் மாநாடு, மறைமலை அடிகளாரின் ‘அறிவுரைக்கொத்து’ நூலுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு,’ தீ பரவட்டும்’ இயக்கம் ஆகிய வரலாற்று முகாமையான நிகழ்வுகளை ஒட்டிப் பெரியாருக்கும் தமிழியல் ஆய்வறிஞர்களுக்கும் இடையிலான ஊடாட்டங்கள்; ‘தீபரவட்டும்’ இயக்கத்தை எதிர்த்தலைக் காரணியாகக் கொண்டு தோன்றிய கலை இலக்கிய முயற்சிகள் ஆகியனவும் இந்த எண்மரைப் பற்றிய கட்டுரைகளில் சித்திரிக்கப்பட்டுள்ளன.
ஈற்றயல் கட்டுரையாக ‘பெரியார் பார்வையில் உவேசா’ இடம்பெற்றுள்ளது. அக்கட்டுரையும் இக்கட்டுரையும் க.காமராசனின் முற்சுட்டிய நூலின் ஆதாரத்திலான புதியதிறப்புகளும் அவற்றிற்கான மேலதிகத்துலக்கங்கள் ஆகவும் அமைந்தியலக் கூடியனவே.
இறுதிக்கட்டுரையாக ‘பெரியாருக்குள்ளும் ஓர் உரையாசிரியர்’ இடம்பெற்றுள்ளது. அக்கட்டுரையில் கலைச்சொல்லாக்கம், மொழியாக்கம் பற்றிய கணிப்புகளும்; அவருடைய அனுபவத் தலையீட்டுக் குறளுரைகளும் இடம் பெற்றுள்ளன. நவீன பரிமேலழகர்களான நம் பேராசியப் பெருமக்கள் உரைகள்கூடப் பிறழ்திரிபாக முன்முடிவுகளுடன் பிரதியைத் தன் ஆதிக்கத்தின் கீழ்க் கொணரவே முயலும் உரைவிளக்கம் (Interpretaion)ஆகவே காணக்கிடக்கின்றன.
மாறாகப் பெரியாரின் குறளுரைகளோ அவர் மொழியிலேயே கூறுவதானால் ‘பட்டாங்கமாய் உண்மைகளை உண்மை ஆக்கக்கூடியனவே’. நவீனமாய் உரைப்பதானால் அவை உரைவிளக்கத்தால் அடித்து ஒடுக்கப்படுகின்ற ஆதிக்கஎதிர்ப்புக் கூறுகளை இனங்காண வல்ல தலையீட்டுமொழி (Interrupion Or Intervention) ஆகவே காணக்கிடக்கின்றன.
*
நேற்று மபொசி செய்த லீலைகளை எல்லாம் இன்று, குணா, சீமான், பெ.மணியரசன் ஆகியோர் தமிழ்த்தேசியத்தின் பேரிலான இனவாத,மதவாதமாகவும்; ஸ்டாலின் ராஜாங்கமும், டி.தர்மராஜ்ஜும் முறையே ‘உள்ளூர் அரசியல்’,’ ஒரு நூற்றாண்டு நினைவுமறதி’ எனும் பேரால் அயோத்திததாசரை முன்வைத்தே மாயாவதி பாணி வெகுஜன் பார்முலாவையுமே தத்தம் அரசியலாகக் கடைவிரிக்கின்றனர். ஆக எவ்வகையிலான பெரியாரிய, திராவிட எதிர்ப்பாளர்க்கும் கடைசிப்புகலிடம் பார்ப்பனியத்திடம் பரிபூர்ண சரணாகதியே!
“.தமிழ் அறிவுலகத்தின் இருபிரிவுகள்: 1. ஆரியத்தை ஆதரித்துத் தம்மை வாழவைத்துக் கொள்வோர், 2. ஆரியத்தை எதிர்த்துத் தமிழரை வாழவைப்போர்.”
“நமக்காகப் பாடுபட்டவர்களை நம் எதிரிகளாக நம்ப வைப்பதில் இனப்பகைவர்கள் இன்றுவரை முயற்சி குறையாமல் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதை அப்படியே நம்புவோர் அதனை அப்படியே கிளிப்பிள்ளை போலத் திருப்பி ஒப்புவிப்பார்கள்.” – ஞா.தேவநேயப் பாவாணர்
இனப்பகைவர்களை இனங்காணவும் எதிர்கொள்ளவும் இக் கையேடு கைக்கருவியாகும்.
– வே.மு.பொதியவெற்பன்
(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)
(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)
பொதியவெற்பன் கட்டுரைகளைப் படிக்க
மிகவும் பயனுள்ள பல தகவல்களை ஐயாவின் எழுத்துகளில் இருந்து பெறப்படுகிறது.வாழ்த்துகள் ஐயா