தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீதம் இடஒதுக்கீட்டினை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தாமதம் செய்வதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினைச் சேர்ந்தவர்கள் சென்னை சைதாப்பேட்டையில் இன்று ஆளுநர் மாளிகையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசுப் பள்ளி மாணவர்களை வஞ்சிப்பதாகவும், தமிழ்நாட்டின் மாநில உரிமைகளை மீறி செயல்பட்டு வருவதாகவும் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் தொடர்ந்து கண்டனக் குரல்களை எழுப்பி வந்த நிலையில் இன்று இந்த போராட்டம் நடைபெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த குரலாக தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதை மதிக்காமல் ஆளுநர் செயல்படுவதாகவும், அவர் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் போராடியவர்கள் தெரிவித்தனர். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் ச.குமரன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.
ஆட்டுக்கு தாடி போல தமிழ்நாட்டிற்கு ஆளுநர் எதற்கு என்ற பேரறிஞர் அண்ணாவின் வாக்கியத்தினையும் அவர்கள் பதாகைகளாக பிடித்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அனைத்து எதிர்கட்சிகளும் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திட தொடர்ந்து குரல் எழுப்பிவரும் நிலையில் ஆளுநருக்கு இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டிய அழுத்தம் அதிகரித்திருக்கிறது.