சென்னை பல்கலைக்கழகத்தில் மெரினா விடுதியில் உணவுக் கட்டணத்திற்கு எதிராகப் போராடிய மாணவர்களை தாக்கி இழிவுபடுத்தியதாகவும், மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் தொல்லியல் துறையின் தலைவர் செளந்தர்ராஜன் மீது மாணவர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். செளந்தர்ராஜனை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தையும் மாணவர்கள் துவங்கியுள்ளனர்.

உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொல்லியல் துறை மாணவர்கள் அளித்துள்ள அறிக்கை பின்வருமாறு:
அன்பார்ந்த மாணவர்களே, பேராசிரியர்களே
சென்னை பல்கலைக்கழக மெரினா விடுதி உணவகக் கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய காரணத்தால், கடந்த மாதம் தொல்லியல் துறை தலைவரும் பேராசிரியருமான சொந்தரராஜனால் திட்டமிட்டு 8 மாணவர்கள் ஃபெயில் செய்யப்பட்டு பழிவாங்கப்பட்டோம். அதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால், தொடர்ந்து இரண்டு நாட்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினோம். அதில் எங்களது தேர்வுத்தாள்களை மீண்டும் வேறொரு பேராசிரியரை அமர்த்தி, திருத்தி மதிப்பெண்கள் வழங்கப்படும் என சிண்டிகேட் உறுப்பினர்கள் மற்றும் பதிவாளரும் உறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டத்தை முடித்துக்கொண்டு அகழாய்வுப் பணியை மேற்கொள்ள வேலூர் சென்றுவிட்டோம்.
தற்சமயம் அகழாய்வுப் பணிகள் முடிவடைந்து கடந்த இரண்டு நாட்களாக எங்களது திருத்தப்பட்ட மதிப்பெண்களை அறிந்துகொள்ள எங்களது துறையை அணுகியபோது ஒரு நாள் முழுவதும் மதிப்பெண்களை சொல்லாமல் “அங்கே போய் பார், இங்கே போய் பார்” என்று அலைக்கழித்தனர். நேற்று மீண்டும் அனைவரும் சென்று காலை முதல் மாலைவரை மதிப்பெண்களை கேட்டு உணவருந்தக்கூட செல்லாமல் துறையிலேயே நின்றோம். அப்போது பல்கலைக்கழக சார்ஜென்ட் துறைத்தலைவரை பதிவாளரை பார்க்க அழைத்து சென்றார். அதன் பிறகு மதிப்பெண்களை வாய்வழியாக அதுவும் வெறும் GRADE ஆக கூறினார்கள். அதில் அனைவருமே தேர்ச்சி அடைந்திருந்தோம்.
எங்களது மதிப்பெண்களை வழக்கமாக பல்கலைக்கழகத்தின் விதிப்படி INTERNAL, மற்றும் EXTERNAL என பிரித்து நோட்டிஸ் போர்டில் போடுங்கள் என்று கூறியதற்கு எங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துறை தலைவர் சௌந்தரராஜன் எங்களை நோக்கி “உன் இஷ்ட மயிருக்கெல்லாம் பண்ண முடியாது, எழவெடுத்தவனுங்களா, பொறுக்கி ரௌடிங்களா வெளிய போங்கடா” என்று மேலும் பல தகாத வார்த்தைகளில் திட்டி மாணவர்கள் இருவரை அராஜகமாக இடித்து தள்ளி அடிக்க வந்தார்.
உடனிருந்த சக மாணவி ஒருவரிடம் தகாத முறையில் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டார். அம்மாணவியும் நாங்களும் எதிர்த்து கேட்கவே உடனே எங்களை வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டு வெளியே சென்றுவிட்டார். தொல்லியல் துறை தலைவர் சௌந்தரராஜன் அவர்கள் மாணவர்களிடம் இழிவாகவும், அராஜகப் போக்குடனும் நடந்துகொண்டது பல்கலைக்கழக பதிவாளருக்கு தெரியும். ஆனால், இது தொடர்பாக அவர் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்பது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது.
பழிவாங்கும் நோக்கத்தில் ஃபெயில் செய்தபோதே தொல்லியல் துறை தலைவர் சௌந்தரராஜனை துறை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கி பதவி தகுதி குறைப்பு செய்திருக்க வேண்டும் (DEPROMOTE). தற்போது எங்களின் பிரச்சனைகள் தெரிந்தும் அதை கேட்க கூட விரும்பாமல் பதிவாளர் திரு. மதிவாணனோ துறை தலைவர் சௌந்தரராஜனின் நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்துகொண்டு அவரை காப்பாற்றி வருகிறார். அந்த துணிச்சலில்தான் துறை தலைவர் சௌந்தரராஜன் சக மாணவியிடம் பாலியல் அத்துமீறலிலும், எங்கள் மீது தாக்குதலிலும் ஈடுப்பட்டிருப்பது.
இத்தகைய இழிசெயலில் ஈடுபட்ட சௌந்தரராஜன் துறை தலைவராக (HOD) மட்டுமல்லாமல், பேராசிரியர் பொறுப்பில் நீடிப்பதற்கே அருகதையற்றவராவார். தமிழக அரசும், சென்னை பல்கலைகழக துணைவேந்தரும் உடனடியாக சௌந்தரராஜனை துறை தலைவர் பொறுப்பிலிருந்தும், பேராசிரியர் தகுதியிலிருந்தும் பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேலும், அவர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உடந்தையாக செயல்பட்டு வரும் பல்கலைக்கழக பதிவாளர் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வரை சென்னை பல்கலைக்கழகத்தில் எங்களின் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இதன் விளைவாக எங்களின் கல்வியை முழுமையாக நிறைவு செய்வதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் எங்களுக்கு ஆதரவாக மாணவர்கள், பேராசிரியர்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
பாதிக்கப்பட்ட தொல்லியல் துறை மாணவர்கள்,
சென்னை பல்கலைக்கழகம்
சேப்பாக்க வளாகம்.
தொடர்புக்கு : 9600162343