மனநலம்

மனநலமே உடல்நலம்; நோய்களை குணமாக்கும் மன ஆரோக்கியம்

இன்று உலக மன நல நாள். அதை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals

“மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே”  

மனம் பற்றிய அகத்தியர் பாடல் இது.

மனச்சமநிலை பற்றிய அவசியத்தை உணர்த்துகிறார்.  உடலும் மனமும் பிரிக்க முடியாதவை. உடல் கண்ணுக்கு தெரியும் மனம். மனம் கண்ணுக்கு தெரியாத உடல்.இதில் ஒன்றில் ஏற்படும் மாற்றம் மற்றொன்றில் பிரதிபலிக்கும்.எனவே மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நிச்சயம் தொடர்புண்டு.

மனதால் உடலில் இருக்கும் நோயை  குணமாக்கவும் முடியும். இல்லாத நோயை உண்டாக்கவும் முடியும். மனதை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதை பொறுத்தே உடல் நோய்கள் குணமாவாதும் நோய்கள் வராமல்   தடுக்கப்படுவதும் நிகழ்கிறது.  

மனதில் ஏற்படும் மாற்றமே வேதி மாற்றமாகி உடலில் பிரதிபலிக்கிறது

மனதில் ஏற்படும் மாற்றமானது வேதியியல் மாற்றமடைகிறது. பிறகு வேதியியல் மாற்றமானது உடலியல் மாற்றமாகிறது. இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்வோம். நாம் இயல்பாக நடந்து சென்று கொண்டிருக்கிறோம். எதிரே ஒருவர் வேகமாக அலறிக்கொண்டு ஓடி வருகிறார். என்ன என்று கேட்கும்போது மதம் பிடித்த யானை ஒன்று இந்த வழியில் வந்துகொண்டிருக்கிறது என்று சொல்லிக்கொண்டே ஓடுகிறார். இப்போது நம் மனநிலை என்னவாக இருக்கும்? 

மெதுவாக நடந்து செல்லும் நமக்கு யானை வருவது குறித்தான பயம் மனதில் எழுகிறது. ஓடத் தொடங்குவோம். இதில் யானை குறித்தான பயம் என்பது மனதில் ஏற்படும் மாற்றம். இந்த மாற்றமானது உடலில் ஹார்மோன் தூண்டல்  எனும் வேதி மாற்றத்தை ஏற்படுத்துகிறது. தற்போது உடல் அதிவேகமாக ஓடுவதற்கான ஹார்மோன்கள் சுரக்கிறது. இயல்பாக நடக்கத் தேவைப்படும் ஆற்றலை விட தற்போது ஓடுவதற்கு தேவையான அதிகப்படியான ஆற்றல் வேதியியல் மாற்றம் காரணமாக உடலுக்கு கிடைக்கிறது. வேதியியல் மாற்றம் காரணமாக உடலானது வேகமாக இயங்கத் தொடங்குகிறது. 

இங்கு மனதில் ஏற்பட்ட மாற்றம் பிறகு வேதியியல் மாற்றமாக ஹார்மோன் சுரக்கப்படுகிறது. இந்த வேதியல் மாற்றம் காரணமாக உடல் வேகமாக இயங்க தொடங்குகிறது. இதன் மூலம் மனதில் ஏற்படும் மாற்றமானது உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உணரமுடிகிறது. இதே போலத்தான் பயத்தில் சிறுநீர் பிரிவதும் நடக்கிறது.  

மனதில் ஏற்படும் பயம் நோய் குணமாக்கலையும் தாமதப்படுத்துகிறது

நோயால் அவதிப்படுவோருக்கு மருந்து கொடுப்பதைவிட மிக முக்கியமானது மன ரீதியான தைரியம் அளிப்பது. நவீன மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரேட்டஸ் கூற்றுப்படி மருத்துவம் என்பது “அரிதாக குணப்படுத்துவது,பெரும்பாலும் சுகம் தருவது, எப்போதும் ஆறுதல் தருவது”  Cure rarely, comfort mostly, but console always”   

நோய் குறித்தான பயம் என்பது நோய் குணமாக்கலுக்கு தடையாக இருக்கிறது. நோய் பற்றி மன ரீதியாக பயமில்லாமல் தைரியமாக இருக்கும்போது நோய் குணமாதல் நோக்கிய வேதியியல் மாற்றம் ஏற்பட்டு உடலில் நலமடைதல் எனும் உடலியல் மாற்றம் ஏற்படுகிறது. 

மனதில் ஏற்படும் சோர்வானது உடலை பாதிக்கிறது. அதேபோல உடலில் ஏற்படும் பாதிப்பானது மனதை பாதிக்கிறது. நோயால் பாதிக்கப்பட்டோர்  எப்போதும் மனரீதியாக பலமாக இருக்குமாறு மருத்துவர் ஆலோசனைகள் வழங்குவது உடல் விரைவில் குணமடைய முக்கியக் காரணமாக அமைகிறது. 

ஒருவேளை மருத்துவர் நோயாளியின் மனநிலையில் பயம் ஏற்படும் அளவிற்கு நோய் குறித்து பயத்தை ஏற்படுத்துவாரானால் உடல் குணமடைவதில் தாமதம் ஏற்படுகிறது. சில நேரங்களில் நோயின் தீவிரம் அதிகமாகிறது. 

மனமே ஒவ்வொரு செல்லையும் இயக்குகிறது

மனம் என்பது நமது ஒவ்வொரு செல்லிலும் இருக்கிறது. நாம் மற்றவர்களை நேசிக்கும் மனமுடையவராக இருக்குபோது நமது செல்கள் ஒவ்வொன்றும் ஒன்றையொன்று நேசிக்கிறது. ஒருங்கிணைந்து செயலாற்றுகிறது. நாம் பிறரை வெறுப்பவராக இருந்தால் நம் செல்களிலும் அதே மனநிலை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு செல்லும் மற்றொரு செல்லை வெறுக்கிறது. செல்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற மறுக்கிறது.  

மனிதனின் மனநிலை  நீரில் பிரதிபலிப்பதாக ஜப்பானிய விஞ்ஞானி மசாரோ எமட்டோ தனது ஆய்வை முன் வைத்தார். மனித உடலானது மூன்று பங்கு வரை நீரால் ஆனது. எனவே மனநிலையானது உடல் மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.  

மனநலத்தை காக்க 

 • பிறரை நேசிப்பது 
 • மன  அழுத்தம் ஏற்படாதவாறு வாழ்க்கை சூழலை அமைத்துக்கொள்ளுதல் 
 • நோய்கள்  குறித்தான பயத்தை விடுவது 
 • நோய் குணமாகும் என்ற நம்பிக்கையோடு இருப்பது 
 • நடந்ததை நினைத்து மீண்டும் மீண்டும் நினைத்து வருந்தாமல் இருப்பது  
 • மனதை பாதிக்கும் செயல்களை தவிர்ப்பது 
 • உடலில் ஏற்படும் சிறு சிறு தொந்தரவுகளை தீவிரமாக ஆராய்ந்து அது குறித்தான பயத்தில் சிக்கக்கூடாது.
 • மனதிற்கு பிடித்த நற்செயல்களை செய்வது
 • உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் உணவில் தவிர்ப்பது
 • உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் உடலின் குணமாக்கும் ஆற்றலை  புரிந்துகொள்வது
 • மனச்சமநிலையில் இருப்பது 
 • மனதில் ஏற்படும் எண்ணங்கள் அனைத்தையும் சிந்தனையாக மாற்றாமல் தேவையற்ற எண்ணங்களை கடந்து மனம் சமநிலையில் இருப்பது 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *