மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

24 ஆண்டுகளுக்கும் மேலாக அமல்படுத்தப்படாத மாற்றுத் திறனாளிகளுக்கான 3% இட ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் இருக்கும் 22 பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் 1996-ம் ஆண்டிலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கான 3% இடஒதுக்கீட்டு உரிமையை அமல்படுத்தப்படாமல் இருப்பதாக அதனைக் கேள்வி எழுப்பி பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி துறையைச் சேர்ந்த பி.வெங்கடேசன் இந்த பொது நல வழக்கைத் தொடுத்துள்ளார். தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் இடங்கள் உட்பட இடஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்படும் இடங்கள் அனைத்தையும் உடனே நிரப்ப பல்கலைக்கழகங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென வழக்கு தொடுத்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகளின் சமூக மற்றும் அரசியல் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிவரும் டிசம்பர் 3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தீபக் அவர்களிடம் இந்த வழக்கு தொடர்பாக பேசினோம். 

பேராசிரியர் தீபக் / படம்: Facebook/deepak.nathan.71

1996-ம் ஆண்டிற்கு முன்பிருந்தே இந்த 3% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தபடவில்லை. இது ஒரு மிகப் பெரிய சிக்கல் என்று தெரிவித்தார். “நீதிபதிகளுக்கு இது குறித்தான தெளிவான பார்வை கிடையாது. மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை அடையாளப்படுத்தாத காரணத்தினால் இந்த வழக்கு இறுதியில் தோல்வியில் முடியும் வாய்ப்பிருக்கிறது” என்றார். 

இந்த 3% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு தேசிய பார்வையற்றோர் மாற்றுத்திறனாளர் கூட்டமைப்பு (National Federation of the Blind) மூலமாக உச்சநீதிமன்றம் வரை சென்று முறையிடப்பட்டுள்ளது. அதில் கண்டறியப்பட்டுள்ள பணியிடங்களில் இருந்து வரக்கூடிய காலியிடங்களில் தான் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடாக இருந்தது. 

ஆனால் 2012-ம் ஆண்டு நீதிபதி சதாசிவம் அமர்வு இடஒதுக்கீட்டை முன்னர் அரசு குறிப்பிட்ட அந்த முறையில் அமல்படுத்தக் கூடாது எனவும், 100-க்கு 3% என்றால் எந்த பணியாக இருந்தாலும் அதில் முழுமையாக 3% ஒதுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தது. அதாவது காவல்துறைக்கு ஆள் எடுத்தால் கூட, 100 கான்ஸ்டபிள்களின் பணி நியமனத்தின் போது அதில் 3 இடங்களுக்கான வேலைகளை Ministerial service எனப்படும் அலுவலகப் பணிக்கான வேலைகளாக மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு அது சட்டமாகவும் வந்தது. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை என்பதைவிட வரவிட மறுக்கிறார்கள் என்பதே உண்மை என தெரிவித்தார்.

இந்த சிக்கல்களுக்கு முக்கியக் காரணம் பெரிய அதிகாரவர்க்கத்தினரே, ஏனென்றால் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு இந்த 3 சதவீதத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் பெரிய  உடன்பாடில்லை. ஒரு மக்கள் நல அரசு அமைந்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்றார். அரசு இதற்கு துணையாக நிற்க வேண்டும். முதலமைச்சர், பிரதமர் போன்றோர் இதற்கு ஆதரவாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த நிலைமை மாறும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *