சோப்பு,பற்பசை மற்றும் உடல் நறுமணத்திற்கான வாசனை திரவியங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் டிரைக்லோசான் (Triclosan) எனும் ரசாயனம் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் தன்மை உடையது என்று ஹைதராபாத் ஐ.ஐ.டி நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
IIT ஹைதரபாத் ஆய்வு
கடந்த டிசம்பர் 15-ம் தேதி ஹைதராபாத் ஐ.ஐ.டி நிறுவனத்தின் உயிர் தொழில்நுட்பவியல் துறை சோப்பு, பற்பசை மற்றும் உடல் நறுமணத்திற்கு பயன்படுத்தப்படும் வாசனை திரவியங்களில் டிரைக்லோசான் எனும் ரசாயனத்தின் இருப்பு குறித்தும், அதனால் மனித உடலில் ஏற்படும் பாதிப்பு குறித்தும் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்டுள்ள அளவை விட 500 மடங்கு குறைந்த அளவு டிரைக்லோசான் சேர்த்தால் கூட நரம்பு தொடர்பான பாதிப்பை ஏற்படுத்தவல்லது என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
எதற்காக டிரைக்லோசான் பயன்படுத்தப்படுகிறது?
சோப்பு, பற்பசை போன்ற பொருட்களில் நுண்ணுயிர் வளர்வதைத் தடுத்து நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக இந்த பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் டிரைக்லோசான் எனும் ரசாயனப் பொருளை பயன்படுத்துகின்றன.
இந்த ரசாயனமானது பொருட்களின் நீண்டகால இருப்பிற்காக பயன்பட்டாலும், தினசரி பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பதால் மரபணு, நரம்பியல் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. டிரைக்லோசான் கலக்கப்பட்ட சோப்பு, பற்பசை போன்றவற்றை நாம் பயன்படுத்தும்போது, இந்த ரசாயனமானது வாய் மற்றும் தோல் வழியாக உள்ளிழுக்கப்படுகிறது.
டிரைக்லோசானின் பாதிப்புகள்
இந்த ரசாயனமானது மனித உடல் செல்களில் தேங்கும்போது நரம்பு மண்டலத்தின் அடிப்படை ஆதார சக்தியாக விளங்கக்கூயூடிய நியூரான்கள் எனப்படும் நரம்பு செல்களை தாக்குகிறது. நரம்பு செல்களின் இயல்பான செயல்பாடுகளை பாதிக்கிறது.
மேலும் நரம்பு செல்கள் உணர்சசிகளை பெறுவது, செயலாற்றுவது, கடத்துவது, மூளை செல்களுக்கிடையேயேயான தகவல் பரிமாற்றத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது (neurodegenerative diseases). மனிதனின் பேச்சு, இயக்கம், ஞாபகசக்தி, சிந்திக்கும் திறன் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அமெரிக்காவில் விதிக்கப்பட்ட தடை
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை (FDA) டிரைக்லோசான் பயன்பாடு குறித்து கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு சோப்புகள், ஹேண்ட் வாஷ், பாடி வாஷ் போன்றவற்றில் டிரைக்லோசான் பயன்படுத்துவதற்கு இத்துறையினால் தடை விதிக்கப்பட்டது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் ஆய்வின் அடிப்படையில் டிரைக்லோசான் பயன்பாடு பின்வரும் விளைவுகளை ஏற்படுத்துகிறது.
- விலங்குகளில் ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தக் கூடிய நுண்ணுயிர்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
- உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கிறது.
- விலங்குகளில் இனப்பெருக்கத்திற்கான விந்தணு மற்றும் டெஸ்டோஸ்டிரான் அளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மேலும் டிரைக்லோசான் மூலமாக ஏற்படக்கூடிய இதர பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மனித உடலில் டிரைக்லோசான் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து குறைவான ஆய்வுகளே நடைபெற்றிருக்கின்றன.
சுற்றுச்சூழலையும் பாதிக்கும் டிரைக்லோசான்
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி 2,000 விதமான பொருட்களில் டிரைக்லோசான் கலக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அவற்றின் மூலமாக 96% டிரைக்லோசான் ரசாயனமானது தண்ணீரில் கலந்து, கழிவு நீர் வழியாக சுற்றுச்சூழலில் கலந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் நன்னீர் வளங்களிலும், ஆறுகளிலும் கூட டிரைக்லோசான் கலந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதன் காரணமாக சில சமயங்களில் காய்கறிகள் மற்றும் மீன்கள் போன்றவற்றிலும் டிரைக்லோசான் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவில் இந்த ரசாயன பயன்பாடு குறித்து விதிமுறைகள் விதிப்பதில் பின்தங்கியுள்ளது.
டிரைக்லோசான் பயன்படுத்தப்படும் பொருட்களில் அதுகுறித்து எச்சரிக்கை தகவலை குறிப்பிட வேண்டும் என்றும், டிரைக்லோசான் பயன்பாட்டை தடை செய்திட வேண்டும் என்றும் ஐ.ஐ.டி ஹைதராபாத் நிறுவனத்தின் ஆய்வறிக்கை பரிந்துரை செய்திருக்கிறது.