முடக்கத்தான் கீரை

‘முடக்கத்தான் ரசம் வச்சு மடக்கத்தான் பாக்குறன்’ – மூலிகை குறிப்பு

பெயர்: முடக்கறுத்தான்; முடக்கத்தான் (பேச்சு வழக்கு)
தாவரவியல் பெயர்: Cardiospermum halicacabum
தாவர வகை: கொடி வகைத் தாவரம்

காணக்கிடைக்கும் தன்மை

முடக்கற்றான், கிராமப் புறங்களில் மிகச் சாதாரணமாக காணக் கிடைக்கும் தாவரமாகும். புதர்களிலும், வேலிகளிலும் பற்றிப் படரக்கூடிய தாவரம் இது.  இத்தாவரத்தின் கொடியில் வரிசையான காம்புகளில், பிளவுபட்ட இலைகளைக் கொண்டிருக்கும். காற்றடைத்த பலூன் வடிவத்தில் இருக்கும் இதன் காய்களைக் கொண்டு இத்தாவரத்தை எளிதாகக் கண்டறியலாம்.

பிளாஸ்டிக் பைகளில் காற்றை நிரப்பி உடைப்பது போன்று, இக்காய்களையும் கைகளால் உடைத்தால் ஒலி எழும்பும். இதன் காய்களுக்குள்ளாக காணப்படும் விதை இதய வடிவில் இருக்கும்.

முடக்கற்றான்

பழந்தமிழ் இலக்கியங்களில் முடக்கற்றானின் முக்கியத்துவம்

வாத நோய்கள் தொடர்பான பிரச்சனைக்கு முடக்கற்றான் நல்ல மருந்தாகும். தமிழ் மருத்துவ மரபில் மிக நீண்ட காலமாக முடக்கற்றான் பயன்பாட்டில் உள்ளது. ‘உழிஞை’ என்பது இதன் பண்டைய மரபுப் பெயராகும். 

இத்தாவரம் பற்றிய இலக்கியச் சான்றுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படுகிறது. ” ‘உழிஞை’ என்ற பெயரில் முடக்கறுத்தானின் வளரியல்பு பற்றி ‘நுண்கொடி உழிஞை’ என பதிற்றுப்பத்தும், ‘நெடுங்கொடி உழிஞை’ என புறநானூறும் விவரிக்கின்றன. 

போரின் போது அரணை முற்றுகையிடும் அறிகுறியாக இதன் மலர்களை வீரர்கள் சூடிக் கொள்வார்களாம். உழிஞையின் பெயரில் ஒரு திணையே (உழிஞைத் திணை) அமைந்திருப்பது முடக்கறுத்தானின் பெருமைக்குச் சான்று.” – ‘மூலிகையே மருந்து’ நூலில் சித்த மருத்துவர் விக்ரம் குமார். 

பெயர்க்காரணம்

வெப்ப மண்டல பிராந்தியத் தாவரமான முடக்கறுத்தான் உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடியதாகும். உடலியக்கத்திலுள்ள முடக்கங்களை அறுப்பதால் (அகற்றுவதால்), பயன்பாட்டு விளைவு அடிப்படையில் முடக்கறுத்தான் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. மூட்டுவலி  தொடர்பான பிரச்சனைகளுக்கு முடக்கறுத்தான் பயனளிக்கிறது. 

உணவில் நேரடியாக முடக்கறுத்தான் இலைகள் ‘கீரையாகவும்’, அதனுடைய இலை, வேர் மற்றும் விதைகள் மருந்து தயாரிப்பிலும் பயன்படுகின்றன. 

என்னென்ன உடல்நல சிக்கல்களை போக்குகிறது?

சிறுநீர் வழியே வெளியேறாமல், உடம்பின் மூட்டுகளில் படிந்திருக்கும் கழிவுகளை நீக்குவதற்கு முடக்கற்றான் பயன்படுகிறது. மிகக் குறிப்பாக மூட்டு வலிக்கு காரணமான மூட்டுகளில் படிந்திருக்கும் யூரிக் அமிலப் படிதலை கரைத்து வெளியேற்ற முடக்கற்றான் கீரை பயன்படுகிறது. இதன் காரணமாக மூட்டு வலி பிரச்சனைகளுக்கு முடக்கற்றான் நல்ல தீர்வாகும். 

மூட்டுவலி உள்ளவர்கள் முடக்கற்றான் இலையை விளக்கெண்ணெய்யில் வதக்கி, அதனையில் ஒரு துணியில் கட்டி உடல் தாங்கும் அளவிற்கான இளஞ்சூட்டில் ஒத்தடம் கொடுத்த வர, நாளடைவில் மூட்டு வலி நீங்கும். நல்லெண்ணெய்யுடன் முடக்கற்றான் இலைகளை சேர்த்து காய்ச்சி, ஆறியப் பின் சேகரித்து வைத்து தைலம் போன்றும் பயன்படுத்தலாம். முடக்கற்றான்,  வெளிப்பூச்சாக (External Apply) இம்முறைகளில் பயன்படுகிறது. 

உணவாக எடுத்துக் கொள்ளும் முறைகள்

  • உடம்பிற்குள்ளாக (In take), உணவு முறைகள் வழியே முடக்கற்றானை எடுத்துக்கொள்ள முடியும். கீழ்காணும் முறைகளில் முடக்கற்றானை சமைத்து உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
  • (நான்காக அல்லது விருப்பத்திற்கேற்றார் போல்) நறுக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து முடக்கற்றான் இலைகளை கொதிக்க வைத்து முடக்கற்றான் ரசம்/சூப் செய்யலாம்.  தேவைப்படின் ரசத்திற்கு தக்காளியும், ரசம் மற்றும் சூப்பிற்கு கொத்தமல்லி இலைகளையும் சேர்க்கலாம். 
  • வழக்கம் போல் உப்பு, புளி, மிளகாயுடன் நல்லெண்ணெய்யில் வதக்கிய முடக்கற்றான் இலைகளை சேர்த்து அரைத்து துவையல் செய்யலாம். தேவைப்படின் சுவைக்காக, வறுத்த உளுத்தம் பருப்பையும் மேற்கூறியவற்றுடன் துவையலுக்காக சேர்த்து அரைக்கலாம். 
  • பச்சை மணம் நீங்க, எண்ணெயில் வதக்கிய முடக்கற்றான் இலைகளை  விழுதாக அரைத்து, தோசை மாவுடன் கலந்து முடக்கற்றான் தோசை வார்க்கலாம். தேவைப்படின் சுவைக்காக, கீரையை வதக்கும் பொழுது பூண்டு, மிளகு, சீரகத்தை சேர்த்து வதக்கி, முடக்கற்றான் தோசைக்கான விழுதை அரைக்கலாம். 

முடக்கற்றான் கீரையில் இருக்கும் சத்துகள்

100 கிராம் முடக்கற்றான் கீரையில்,

  • ஆற்றல் – 9.1 கிலோ கலோரிகள்
  • ஈரப்பதம் – 83.3 கிராம்
  • புரதம் – 4.7 கிராம்
  • கார்போஹைட்ரேட் – 9 கிராம்
  • தாதுச்சத்து – 2.3 கிராம்
  • கால்சியம் – 61 மி.கி.
  • கொழுப்பு- 0.6 கிராம்

அளவில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 

பாரம்பரிய உணவுகளில் முக்கிய இடம் வகிக்கும் ‘உணவு மருந்தான’ முடக்கறுத்தானை நமது உணவுகளிலும் சேர்த்து பயன்பெறுவோம். 

தொடக்கத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல் வரி, வாகை சூட வா திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘சர சர சாரக் காத்து’ பாடல் வரியாகும்; பாடலாசிரியர்: வைரமுத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *