நவம்பர் 28, 2010 அன்று அமெரிக்காவின் ரகசிய கேபிள்களைக் கொண்ட 2,51,287 ஆவணங்கள் விக்கிலீக்சினால் வெளியிடப்பட்டன. அமெரிக்கத் தூதரகங்களிலிருந்து அரசு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட தகவல்களும் வெளியிடப்பட்டன. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்தான பல்வேறு திட்டங்களை அந்த கேபிள்கள் அம்பலப்படுத்தின. இது உலகம் முழுதும் பெரும் பரபரப்பை உருவாக்கியது. தற்போது 10 ஆண்டுகள் கடந்து இன்றும் அசாஞ்சே எனும் பெயர் அமெரிக்க அரசுக்கு அச்சம் தருவதாகவே இருக்கிறது.
ஐ.நா பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட ஐ.நா அதிகாரிகளையும் அமெரிக்கா வேவு பார்க்க உத்தரவிட்டிருந்ததும் வெளிவந்தது. ஈரானின் அணுசக்தித் துறைக்கு எதிரான அமெரிக்காவின் திட்டங்களும் அந்த ஆவணங்களில் அம்பலமாயின.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர் ஆவணங்கள்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சேவினால் 2006-ம் ஆண்டு விக்கிலீக்ஸ் துவங்கப்பட்டது. 2010-ம் ஆண்டு ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய போர் குறித்த பல்வேறு ரகசிய ஆவணங்களை வெளியிட்டதன் மூலம் விக்கிலீக்ஸ் உலகத்தின் கவனத்திற்கு வந்தது.
அமெரிக்காவின் ஹெலிகாப்டர் படையினர் இருவர் ஈராக்கின் பாக்தாத் நகரில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காணொளியினை விக்கிலீக்ஸ் வெளியிட்டு பரபரப்பை உருவாக்கியது. அந்த துப்பாக்கிச் சூட்டில் ராய்ட்டர்ஸ் ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களும் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.
ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தினர் நிகழ்த்திய ஏராளமான போர்க்குற்ற நடவடிக்கைகளையும், அமெரிக்காவின் திட்டத்தையும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் வெளிச்சம் போட்டு காட்டின.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்காவின் ஈராக் போர் தகவல்கள் 3,91,832 ஆவணங்களைக் கொண்டிருந்தது. மொத்தம் கொல்லப்பட்ட 1,09,000 பேரில் 66,081 பேர் அப்பாவி பொதுமக்கள் என்று அந்த ஆவணங்கள் பதிவு செய்தன.
அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் போர் ஆவணங்களாக 91,000 ரகசிய ஆவணங்களில் 75,000 ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. இந்த ஆவணங்கள் ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் எப்படியெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்பதை அம்பலப்படுத்தியது.
அமெரிக்க ராணுவத்தின் உளவுத்துறையில் பணிபுரிந்த செல்சியா மேனிங் என்பவர், அமெரிக்கா ஈராக் மக்கள் மீது நடத்திய போர் நடவடிக்கைகளை வெறுத்து, ரகசிய ஆவணங்களை எடுத்து அசாஞ்சேவுக்கு அனுப்பி வைத்தார்.

அசாஞ்சே மீதான விசாரணை
அமெரிக்கா விக்கிலீக்ஸ் மீதான விசாரணைக்கு உத்தரவிட்டது. நவம்பர் 2010-ல் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீது ஸ்வீடன் நாட்டில் பாலியல் வழக்கு பதியப்பட்டு, சர்வதேச கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஸ்வீடனில் இருந்து நாடு கடத்தி தம்மை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்வதற்காகவே இந்த வழக்கு பதியப்பட்டதாக அசாஞ்சே தெரிவித்தார்.
ஈக்வேடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்த அசாஞ்சே
அசாஞ்சே 2012-ம் ஆண்டு லண்டனில் உள்ள ஈக்வேடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். அப்போதைய ஈக்வேடார் அதிபர் ரஃபேல் கொர்ரியா அவருக்கு தஞ்சம் வழங்கினார். கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் அசாஞ்சே ஈக்வேடார் தூதரகத்தின் உள்ளேயே இருந்தார்.
அசாஞ்சே தூதரகத்திற்கு உள்ளேயே இருந்து கொண்டே விக்கிலீக்சின் பணிகளையும் தொடர்ந்தார். 2016-ம் ஆண்டு ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.
ஈக்வேடாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வலதுசாரி கட்சி ஆட்சியில் அமர்ந்தவுடன் 2019 ஏப்ரல் மாதத்தில் அவருக்கு வழங்கப்பட்ட தஞ்சத்தினை ரத்து செய்தது.
லண்டனில் கைது செய்யப்பட்ட அசாஞ்சே
உடனே அவரை லண்டன் காவல்துறை கைது செய்து இழுத்துச் சென்றது. அசாஞ்சே பிணை சட்டத்தினை மீறியதாக அவருக்கு 50 வார சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அசாஞ்சே லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.
அமெரிக்க அரசு அசாஞ்சே மீதான வழக்கின் விசாரணையினை மீண்டும் துவக்கியது. அசாஞ்சேவின் மீது உளவாளிகள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நியூயார்க் டைம்ஸ், வாஷிங்க்டன் போஸ்ட் போன்ற பத்திரிக்கைகள் அமெரிக்க அரசின் செயலை பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறி கண்டித்தன.
அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு கொண்டு செல்லும் முயற்சி
2019 மே மாதம் 2-ம் தேதி அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் இங்கிலாந்திற்கு அமெரிக்கா கோரிக்கை வைத்தது. அந்த விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு அனுப்பக் கூடாது என்று இங்கிலாந்தில் மனித உரிமை ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
தற்போது லண்டன் பெல்மார்ஷ் சிறையில் தீவிரவாதிகளையும், கொலைகாரர்களையும் சிறைவைக்கக் கூடிய அதிஉயர் பாதுகாப்பு செல்லில் அசாஞ்சே வைக்கப்பட்டுள்ளார். ஒருவேளை அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படும் பட்சத்தில் அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளுக்கு அவருக்கு 175 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
தொடர்ச்சியாக அசாஞ்சேவின் வழக்கறிஞர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு அனுப்பக் கூடாது என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள்.