சித்த மருத்துவம் கொரோனா

கோவிட்-19 அறிகுறிகள் மற்றும் தற்காப்பு கண்காணிப்பு முறைகள், கொரோனாவுக்கு பின்பு செய்ய வேண்டியவை! – சித்த மருத்துவர் விளக்கம்

அவலூர்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சித்த மருத்துவர் பாலசுப்பிரமணியன் அவர்கள் கொரோனாவை எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும், கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் செய்ய வேண்டியது குறித்தும் எழுதியுள்ள கட்டுரை.

நோயின் முக்கிய அறிகுறிகள்

• காய்ச்சல்

• உடல் சோர்வு

• வறட்டு இருமல்

• தலைவலி

• சளி

• நாக்கில் சுவை இழப்பு

• மூச்சுத் திணறல்

• மூக்கில் நுகர்வுத் தன்மை இழப்பு

கொரோனா வைரஸின் மூன்று நிலைகள்

1. முதல் நிலை 

எந்த அறிகுறியும் தெரியாது (Asymptomatic / Mild Symptomatic)

2. இரண்டாம் நிலை 

சாதாரண அறிகுறிகள் (Moderate Symptomatic)

 • இரத்தத்தில் பிராண வாயு அளவினை தெரிவிக்கும் கருவி (Pulse Oximeter) மூலம் பிராண வாயுவின் அளவு 95%க்கும் குறைவாக இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேரவேண்டும். விழித்திருங்கள் – விலகி இருங்கள் – வீட்டிலேயே இருங்கள்.

3. மூன்றாம் நிலை 

கடுமையான அறிகுறிகள் (Severe Symptomatic)

 • அதிகமாக மூச்சு வாங்குதல்
 • அதிகமாக நாடி துடிப்பு (More than 100/Minute)
 • ஒரு நிமிடத்திற்கான சுவாச எண்ணிக்கை 24 எண்ணிக்கை குறைவாக இருத்தல்
 • மயக்க நிலை

மேற்கண்ட அறிகுறி / அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தீவிர கண்காணிப்புப் பிரிவில் சேர்க்கவேண்டும்.

தற்காப்பு கண்காணிப்பு முறைகள்

வீட்டு மருத்துவப் பெட்டியில் இருக்க வேண்டிய பொருட்கள்

• தெர்மா மீட்டர்

• முகக்கவசம்

• கையுறை

• கைகளுக்கு கிருமி நாசினி

• பிராணவாயு அளவிடும் கருவி (Pulse Oximeter)

தினமும் கண்காணிக்கப்பட வேண்டியவை

தங்களது உடல் நிலையை காலையிலும், மாலையிலும் கீழ்க்கண்ட வகையில் கண்காணிக்க வேண்டும். மேலும், கீழ்குறிப்பிட்ட அளவுகள் குறைந்தோ அல்லது மேற்பட்டோ இருந்தால், உடனே மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

 • உடலின் வெப்பநிலை 98.4 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
 • நாடித்துடிப்பு நிமிடத்திற்கு 70 லிருந்து 80 க்குள் இருக்க வேண்டும்.
 • சுவாசம் சராசரியாக நிமிடத்திற்கு பெரியோருக்கு 16-18 முறைக்குள் மற்றும் சிறியவர்களுக்கு 20-25க்குள் இருக்க வேண்டும்.
 • இரத்தத்தில் பிராணவாயு அளவு 95% முதல் 100% வரை இருக்க வேண்டும்.
சித்த மருத்துவர் பாலசுப்பிரமணியன்

சீனாவில் கொரோனாவை நிர்வகித்த மருத்துவர்கள் எழுதிய கட்டுரையின் குறிப்புகள்

முதலில் இருமல், சுரம் மற்றும் வறட்டு இருமலுடன் கூடிய ஐய வளி சுரம் (கப குறைந்த வாதம்) என்றும், மூன்று வயது வந்த நோயாளிகள் கடுமையான நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு டிசம்பர் 27 அன்று வுஹானில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நோயாளி 1

டிசம்பர் 23, 2019 அன்று காய்ச்சல் (வெப்பநிலை 37 டிகிரி முதல் 38 டிகிரி  வரை) நோயாளி எவ்வித குறிப்பிடத்தக்க நோய் மருத்துவ வரலாறும் இன்றி சுரம் மற்றும் மார்பு உளைதல் மற்றும் இருமல் ஆகிய குறிகுணங்கள் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 4 நாட்களுக்குப் பிறகு இருமல் மற்றும் மார்பில் உள்ள உளைச்சல் அதிகரித்தது. ஆனால் சுரம் குறைந்து காணப்பட்டது. கம்ப்யூட்டர்டு டோமோகிராஃபிக் (சி.டி) கருவி ஆய்வின் மூலம் நிமோனியா என்று நோய் கணிப்பு செய்யப்பட்டது. அவர் கடல் உணவு மொத்த சந்தையில் சில்லறை விற்பனையாளர் ஆவார்.

நோயாளி 2

முதலில் சுரம் மற்றும் இருமல் ஆகிய குறிகுணங்கள் டிசம்பர் 20, 2019 அன்று காணப்பட்டது. 7 நாட்களில் மூச்சுத் தடை தொடர்ந்து அடுத்த 2 நாட்களில் தீவிரமடைந்தது. அதைத்தொடர்ந்து இயந்திர சுவாசம் அளிக்கப்பட்டது. அவரும் கடல் உணவு சந்தைக்கு அடிக்கடி வருபவராக இருந்தார். 3 நோயாளிகள் குணமடைந்து 2020 ஜனவரி 15 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்டனர். நோயாளி 2 ஜனவரி 9, 2020 அன்று மரணமடைந்தார். பயாப்ஸி மாதிரிகள் எதுவும் பெறப்படவில்லை. இந்த அறிக்கைகள் நோயின் முன்னேற்றத்தின் தன்மையை நோக்கிய ஒரு சுட்டிக்காட்டியாக உள்ளன. கோவிட் தீவிர நோய்நிலை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்படும் மரணம் பெரும்பாலும் முதியவர்களிடமும், வேறு நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடமுமே காணப்பட்டது.

நோயின் தன்மை

லேசான குறிகுணங்கள், நிமோனியா, தீவிர நிலை ARDS, செப்சிஸ், செப்டிக் அதிர்ச்சி. வயதானவர்கள் மற்றும் வேறு நோயினால் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்நோயானது தீவிர குறிகுணங்களை ஏற்படுத்துகின்றது. அவர்களது நோயின் தன்மையை பின்வருமாறு குறிப்பிடலாம். முதலில் குறிகுணங்கள் அதைத் தொடர்ந்து மிதமான குறிகுணங்களுடன் பாதிக்கப்பட்ட நிலை, பின்னர் தீவிர நிலை அடைதல், அதன்பிறகு லேசாக- படிப்படியாக உடல்நிலை மோசமடைந்து வரும் நோயாளிகளின் பகுதியானோர், வயதான முதியவர்கள் மற்றும் முந்தைய நோய் வரலாறு ஆகியவைனால் உடலின் பலம் குறைந்த நிலையில் உள்ளவர்களாவர்.

குறைந்த அளவிலே பித்தம் இருந்தாலும், அது மார்பில் பித்தத்தின் தாக்கத்தினால் சுரம் முக்குற்ற அபாயகரமான வடிவத்தைப் பெறும். இதனை தாதுக்கள் அழிகின்ற நிலை என்று கூறலாம். உடலின் ஒழுங்கற்ற நோய் எதிர்ப்பு நிலை முக்குற்ற நோய் நிலையில் காணும். இதனால் ஓஜஸ் (Immunity) ஏற்றத்தாழ்வு நிலையை விரைவில் ஏற்ப்பட்டு அதனைத் தொடர்ந்து செப்சிஸிற்கு மற்றும் செப்டிக் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பித்தத்தின் உடலின் தாதுக்களின் தளர்வு மற்றும் பலம் குறைவு ஏற்பட்டு சுரமானது முக்குற்ற சுர நிலையை அடைகிறது. 

வாதம் அதிகரித்த முக்குற்ற நிலை மற்றும் வாத கபம் அகிரித்த முக்குற்ற நிலை என பலம் குறைவு ஏற்பட்டு சுரமானது அதிகரிக்கிறது.

கபவாதம் கூடிய சுரம் அறிகுறிகள் அதிகரித்துக் காணும். சுரத்தைக் குறைத்து, கபத்தை குறைத்து, வாதத்தைக் குறைத்து, வாதத்தை கீழ்முகமாக இயக்கி நோயாளியின் பலத்தைப் பாதுகாத்து, பித்தத்தின் அசைவையும் அதிகரிக்க வேண்டும் அல்லது பரவும் தன்மை கொண்ட குணம் மற்றும் சூடு குணத்தினால் ஏற்படும் சீர்கேடை குறைத்தல் வேண்டும். சீர் செய்யப்படாத பித்தம்! கேடடைந்த பித்தம் தாதுக்களை கேடடையச் செய்யும்.

சிகிச்சை முறைகள்

காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகள், தாதுக்கள் கேடடையாமல் காக்கும் மருந்துகள், மூச்சுக் குழாய் அழற்சி குறைக்கும் மருந்துகள், கபத்தை இளக்கி வெளியேற்றும் மருந்துகள், நோயாளியின் பலம் கூட்டும் மருந்துகள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

 தாதுக்கள் மேலும் கேடடையும் முக்குற்ற காய்ச்சலில் நோயின் உபத்திரவமாகக் (Complication) கூறப்பட்ட மூச்சுத் திணறல் ஏற்படும். 

நோய் தோன்றும் இடம்

கோவிட் 19 அக்னி பலம் இல்லாதவர்களுக்கு வருகிறது. இதுவே நமது மரபு சார் Immunity தத்துவம் ஆகும். ஆனால் அதன் வெளிப்பாடு நுரையீரலில் நடைபெறுகிறது. பித்தத்தின் உஷ்ணம், எண்ணெய்த் தன்மை, திரவத்தன்மை ஆகிய குணங்களினால் கபத்தை இளக்கி நிலையற்றதாக மாற்றுகிறது. நோய் தன்மை நிலையில் பித்தமானது, உடல் தாதுக்களில் தளர்வு மற்றும் பலக்குறைவு ஏற்படுத்தி, தாதுக்களை கேடடையச் செய்து மரணத்தை ஏற்படுத்துகிறது. இது பின்பனிக் காலம் (மாசி மற்றும் பங்குனி), இளவேனில் காலத்தில் (சித்திரை மற்றும் வைகாசி) வருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கொரோனா நோய்த் தடுப்பு வழிமுறைகள்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீரையும், கொரோனாவால் தனிமைபடுத்தபட்டவர்களும், கொரோனாதொற்று ஏற்பட்டவர்களும் கபசுரக் குடிநீர் மற்றும் ஆடாதோடை மணப்பாகு ஆகிய சித்த மருந்துகளை நவீன மருத்துவமுறை மருந்துகளோடு தகுந்த சித்த மருத்துவஅலுவலரின் ஆலோசனையின்படி உட்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும்

I. இயற்கையாக உடலின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க பழச்சாறு

(1) நெல்லிக்காய் சாறு 50 மிலி

(2) துளசி சாறு-50 மிலி

(3) இஞ்சி சாறு10 மிலி

(4) எலுமிச்சை சாறு – 5 மிலி

(5) மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்

(6) சுத்தமான நீர் 150 மிலி

அனைத்தையும் ஒன்று சேர்த்து நன்கு கலந்து பருக வேண்டும்.

அளவு : பெரியவர்களுக்கு – 250 மி.லி இருவேளை, குழந்தைகளுக்கு – 100 மி.லி இருவேளை

II. இயற்கையாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க குடிநீர்

(1) தோல் நீக்கப்பட்ட இஞ்சி – 5 கிராம் 

(2) துளசி இலை – 5 கிராம்

(3) ஒன்றிரண்டாக இடித்த மிளகு -1/4 டீஸ்பூன் 

(4) மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

(5) ஒன்றிரண்டாக இடித்த அதிமதுரம் – 5 கிராம் 

(6) சுத்தமான நீர் – 250 மிலி

அனைத்தையும் ஒன்று சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி சூட்டுடன் பருகவேண்டும்.

அளவு : பெரியவர்களுக்கு – 50 மிலி இருவேளை, குழந்தைகளுக்கு – 20 மிலி இருவேளை.

 • தினமும் யோகாசனம், பிராணயாமம் மற்றும் தியானம் 30 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
 • தினமும் வெந்நீரை குடிக்கவும், வெந்நீரில் அடிக்கடி வாய்கொப்பளிக்கவும்.
 • தொண்டை மற்றும் மூக்கின் வழியாக ஆவி பிடிக்கவும் (Steam Inhalation)
 • உங்கள் இருப்பிடத்திலேயே தினமும் 15 – 20 நிமிடங்கள் காலை 11 மணிக்கு முன் மற்றும் மாலை 4 மணிக்குப் பிறகு சூரிய குளியல் (Sun Bath) மேற்கொள்ளவும்.
 • கைகளை அடிக்கடி சோப்பினைக் கொண்டு 30 விநாடிகள் நன்கு கழுவ வேண்டும்.
 • இருமும் போதும். தும்மும் போதும் கைகுட்டையினைப் பயன்படுத்தவும்.
 • பொது இடங்களில் சமூக விலகலை கடைபிடிக்கவும், முக கவசம் அணியவும்,
 • பொதுமக்கள் தங்களது இல்லங்களில் தனித்திருக்கவும்,
 • தகுந்த காரணமில்லாமல் மருத்துவமனைக்கு அடிக்கடி செல்வதை தவிர்க்கவும்

சுக்கு குடிநீர்

சுக்கு, கடுக்காய், நிலவேம்பு, வேப்பந்தோல், சீந்தில் பேய்ப்புடல் இவற்றை 1 ஸ்பூன் வீதம் எடுத்து 2 லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தண்ணீருக்குப் பதிலாக பருகவும்.

நீராவி பிடித்தல்

நொச்சி இலை, மஞ்சள், கற்பூரவல்லி

வாய் கொப்பளித்தல்

அக்கரா குடிநீர், மாசிக்காய் குடிநீர், திரிபலா கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) குடிநீர்.

புகை விடுதல்

* வெண்கடுகு, சடாமஞ்சள், சாம்பிராணி, குங்கிலியம், பெருங்காயம்

குணமான கொரோனா நோயாளிக்கு அறிவுறுத்தக்கூடிய மருத்துவ சிகிச்சை 

ஆவி பிடித்தல் :

தேவையான பொருட்கள் 

• நொச்சி – 1 கைப்பிடி

• கற்பூரவள்ளி – 1 கைப்பிடி

• துளசி – 1 கைப்பிடி

• மஞ்சள் தூள் – 1 டி ஸ்பூன்

• கிருமி நாசினி தைலம் – 3 சொட்டு

பயன்படுத்தும் முறை :

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கி, அதில் மேல் குறிப்பிட்ட பொருட்களை அனைத்தையும் போட்டு, போர்வை போட்டு மூடி 15 நிமிடங்கள் ஆவி பிடிக்க வேண்டும். தொடர்ந்து முடியாவிட்டால் விட்டு விட்டு பிடிக்கலாம்.

பலன்கள் !

நெஞ்சு சளி குணமாகும், வீசிங், ஆஸ்துமா, நுரையீரல் தொற்றுகளை அழிக்கிறது, சுவாசப்பாதையை தொற்றை அழிக்கிறது. சுவாசப்பாதை விரிவடைந்து மூச்சுத்திணறலை குணமாக்குகிறது.

நல்லெண்ணெய் கொப்பளித்தல் :

இரண்டு தேக்கரண்டி சுத்தமான மரச்செக்கு நல்லெண்ணெயை வாயில் விட்டு 15 நிமிடங்கள் கொப்பளித்து நீர்த்ததும் துப்பிவிட வேண்டும்.

வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு போட்டு தொண்டை நனையும் படி வாய் கொப்பளித்தால் தொண்டையில் வைரஸ் தங்கி இருந்தால் வெளியேறும் அல்லது வேப்பிலை தண்ணீரில் கொதிக்க வைத்து வெதுவதுப்பான உடல் அந்த நீரில் வாய் கொப்பளிக்கலாம்.

கிருமி நாசினி தைலம் :

தேவையான பொருள்

• புதினா உப்பு – 50 கிராம்

• ஒம உப்பு – 10 கிராம்

• பச்சை கற்பூரம் – 10 கிராம்

• பூங் கற்பூரம் – 5 கிராம்

• சோடா உப்பு – 5 கிராம்

செய்முறை:

அனைத்தையும் கண்ணாடி பாட்டலில் ஒன்றாக கலந்து வைத்தால் கிருமி நாசினி தைலம் தயார்.

பலன்கள் :

இந்த தைமாலில் உள்ள மோனேடெர்பீன்ஸ் Hsv 1 வைரஸ்களின் வைரான்களை நேரடியாக தாக்கி அழிக்கிறது என்ற தரவுகள் இருக்கிறது.

நுகர்தல் மூலிகை பொட்டலம்இயற்கை இன்ஹேலர் :

தேவையான பொருட்கள் :

 • ஓமம் – 10 கிராம்
 • பச்சை கற்பூரம் – 10 கிராம்

பயன்படுத்தும் முறை :

இரண்டையும் அப்படியே ஒரு துணியில் போட்டு முடுச்சாக கட்டி அதில் 5 சொட்டு கிருமிநாசினி தைலத்தை விட்டு, 5 முதல் 10 நிமிடங்கள் நுகர வேண்டும். ஒரு நாட்களுக்கு ஒரு முறை கிருமிநாசினி தைலத்தை 5 சொட்டு அந்த முடுச்சில் விட்டு பயன்படுத்தவும், மூன்று நாட்களுக்கு ஒரு முறை முடிச்சில் உள்ளதை மாற்ற வேண்டும்.

வெளியில் எங்கு சென்றாலும், இந்த முடிச்சை எடுத்துச் செல்ல வேண்டும்.

பலன்கள்:

வீசிங் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இது இயற்கை இன்ஹேலராக பயன்படுகிறது, இதை நுகரும் போது மூச்சுத்திணறல் வீசிங்கிற்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது. நுகரும் போது சுவாசப்பாதையில் உள்ள கிருமி வைரஸ்கள் அழிக்கப்படுகிறது. சுவாசப்பாதை விரிவடைகிறது.

கை கழுவ கிருமி நாசினி திரவம் :

தேவையான பொருட்கள்

• வேப்பிலை – 1 கைப்பிடி

• மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

• கல் உப்பு – 1 ஸ்பூன்

• மா இலை – 1 கைப்பிடி

• கிருமி நாசினி தைலம் – 10 சொட்டு

செய்முறை :

தைலத்தை தவிர அனைத்தையும் அரைத்து 500 மிலி நீரில் கலந்து கிருமி நாசினி தைலத்தை விட்டால் தயார்.

பலன்கள் :

கை கால்கள் முகத்தை கழுவலாம், குளிக்கும் நீரில் சிறிதளவு கலந்து குளிக்கலாம். கிருமி வைரஸ்களை அழிக்கிறது.

 சூரிய குளியல் :

உடல் முழுவதும் சூரியன் உதயம் ஆகும் போதும் வரும் வெயிலிலும்

சூரியன் மறையும் போதும் வரும் வெயிலிலும் காலை மாலை உடலில் வெயில் படும் படி ஒரு மணி நேரம் இருக்க வேண்டும்.

பலன்கள் :

வைட்டமின் டி சூரிய ஒளி முலம் கிடைக்கிறது. தோலில் உள்ள தொற்றுக்களை அழிக்கிறது, தோல் நோய்களை குணப்படுத்துகிறது, தைராய்டு குணமாகிறது, எலும்புகளை பலப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

சித்த மருத்துவம் பரிந்துரை செய்யும் தன் சுகாதாரம் பேணுதல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வழிமுறைகள்

 • தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும்.

 • தினமும் இரு வேளை வெந்நீர் பருகவும்.

 • வேப்பிலை, யூக்கலிப்டஸ் தைலம் (அ) நொச்சி இலை மற்றும் மஞ்சள் சேர்த்து தினமும் ஆவிபிடித்தல் வேண்டும்.

 • கை கழுவவதற்கு மஞ்சள், வேப்பிலை, கற்றாழை மற்றும் படிகாரம் சேர்த்த நீரைப் பயன்படுத்த வேண்டும்.

 • காலையில் தோல் சீவிய இஞ்சி, எலுமிச்சை தோலுடன் மிளகு சேர்த்து காய்ச்சி பனங்கற்கண்டு (அ) தேன் கலந்து பருகவும்.

 • சூடான பாலில் மிளகு, மஞ்சள் சேர்த்து இரவில் அருந்த வேண்டும்.

 • தினமும் மாலையில் சுக்கு, கொத்தமல்லி கலந்த பானம் நாட்டுச் சர்க்கரை (அ) பனங்கற்கண்டு (அ) தேன் கலந்து பருகவும்.

 • சிறு தானியங்களான கேழ்வரகு, சாமை, தினை, வரகு, குதிரைவாலி ஆகியவற்றை உணவாக சமைத்து சாப்பிடவும்.

 • கசப்பு சுவையுடைய சுண்டைக்காய், பாகற்காய் போன்றவற்றை உணவில் சேர்க்கவும். வேப்பம்பூ, தூதுவளை ரசம் செய்து சாப்பிடவும்.

 • நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க நெல்லிக்காய், கொய்யாப்பழம், பப்பாளி, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற வைட்டமின் “சி” கலந்த பழங்களை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 • பயறு வகைகளான ஜிங்க் சத்துள்ள நிலக்கடலை, பாதாம்பருப்பு, முந்திரி, கொண்டைக்கடலை போன்றவற்றை சுண்டலாக மாலையில் சாப்பிடலாம்.

 • தினமும் காலை 10 மணிக்குள், மாலை 4 மணிக்குப் பிறகு 15 – 20 நிமிடம் வெயிலில் காய்தல் நல்லது.

நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்பவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய சித்த மருந்துகள்

அமுக்கரா சூரண மாத்திரை

 • குழந்தைகளுக்கு: 3-12 வயது வரை காலை, இரவு 1 மாத்திரை வீதம் ஆகாரத்திற்கு பின் பாலில் அல்லது தேனில் கலந்து 1 மாதம் சாப்பிடவும்,
 • பெரியவர்களுக்கு: 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் காலை, இரவு 2 மாத்திரை வீதம் ஆகாரத்திற்குப் பின் பாலில் அல்லது தேனில் கலந்து 1 மாதம் சாப்பிடவும்.

நெல்லிக்காய் லேகியம்:

 • குழந்தைகளுக்கு: 3 வயது முதல் 12 வயது வரை காலை, இரவு 2 கிராம் முதல் 5 கிராம் வரை ஆகாரத்திற்குப் பிறகு சப்பி சாப்பிடவும். இதனை ஒரு மாதம் சாப்பிடவும்.
 • பெரியவர்களுக்கு: 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் காலை, இரவு 5 கிராம் முதல் 10 கிராம் வரை ஆகாரத்திற்குப் பிறகு சப்பி சாப்பிடவும். இதனை 1 மாதம் சாப்பிடவும்.

– சித்த மருத்துவர் பாலசுப்பிரமணியன், அவலூர்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *