பெரியாரும் தமிழறிஞர்களும்

பெரியாருந் தமிழறிஞர்களும்: பாகம் 2 – வே.மு.பொதியவெற்பன்

பெரியாரும் ‘தொல்லாணை நல்லாசிரிய’த் தமிழறிஞர் மூவரும் (1.’தனித்தமிழ் இயக்க மூலவர்’, ‘சைவத்தமிறிஞர்’ மறைமலையடிகள், 2.’பல்கலைப் புலவர்’ காசு பிள்ளை, 3.’திராவிட மொழிநூன் மூதறிஞர்’ ஞா.தேவநேயப்பாவாணர்.)

5.பெரியாரும் மறைமலையடிகளாரும்

மறைமலையடிகள்

தமிழவன் சொல்லுமாப் போலே சீடர்கள் இடையே மோதல்கள் நேர்ந்தாலும் அய்யாவுக்கும் அடிகளார்க்குமிடையே கருத்து முரண்பாடுகளை மீறிய புரிந்துணர்வின் அலைநீளம் ஒத்திசைந்தே அமைந்தியன்றது எனலாம். இது பெரியாரின் மற்றைமை பேணவல்ல மகத்தான பண்பின் பெறுபேறே எனலாம். முரண்பட்ட ஆச்சாரியாருடனேயே அய்யா பாராட்டிய இப்பண்பு சனாதனவைரிகளான ஞானியார்,மறைமலை,குன்றக்குடி அடிகளார் வகையறாவுடனும்; பா•வே•மாணிக்க நாயக்கர், கா•சு•பிள்ளை,திரு•வி•க• ஆகியோருடனான அணுகுமுறையில் அணுக்கமான நட்பு இழையோடிக்கிடந்ததில் வியப்பேதுமில்லையே.

தமிழ்பண்பாட்டாய்வில் தலையோங்கிய அதிகாரிகளாகவும், சமயவியல் ஆய்வு வகையில் திராவிட இயக்கத்தார்க்கு இடையூறு நேருங்கால் தமைத்தாங்கி அரவணைக்கும் நம்பகமான முப்பெருந் தமிழறிஞர்களாக கா•சு•பிள்ளை, மறைமலையடிகள், திரு•வி•க• மூவரையுமே கணித்தார். இதில் வியத்தகு உண்மை யாதெனில் சைவசித்தாந்தியர் நோக்கிலுங் கூட இம்மூவருமே தொல்லாணை நல்லாசிரியக் கட்டளைக்கற்களாக மதிக்கப் பெற்றனர் என்பதே:

“புராண வரலாறுகளைப் பகுத்தறிந்து புரிந்துகொள்வதே நல்லது; பொய்யானவற்றைத் துணிந்து பொய்யென்று கூறி மறுக்கத் தயங்குவோமாயின் உண்மை நிகழ்ச்சிகளையும் கூட ஏற்பதற்கு பலர் தயங்குவார்கள். திரு•வி•க•, மறைமலையடிகள், கா•சு•பிள்ளை போன்ற சைவசித்தாந்தப் பேரறிஞர்கள் கூறுகின்ற கருத்துகளையும் தெளிவாகக்கற்று இவ்வகையில் முடிவெடுப்பது பயனுடையதாக இருக்கும்”-கு•வைத்தியநாதன் (‘சைவ சித்தாந்த வினாவிடை’).

“உயர்திரு சுவாமி வேதாசலம் அவர்களும் (மறைமலையடிகள்) திருவாளர் கா•சு• பிள்ளை அவர்களும் தமிழ்நாட்டிலேயே தமிழ்மக்களின் நாகரிக விசயமாய் தக்க ஆராய்ச்சியுள்ளவர்கள். ஏனையவர்களை இவர்களுக்கு மீறினவர்கள் என்று சொல்லமுடியாது என்பது நமது அபிப்ராயம்.”

“உயர்திரு சுவாமி வேதாசலம் அவர்களும் திருவாளர்களான திரு•வி•க• முதலியார் இவர்கள் நம்முடைய சுயமரியாதை, சமத்துவம், மனிதத்தன்மை ஆகிய கொள்கைகளுக்கு உடன்பட்டவர்கள் என்றும்; மத,சமய ஆராய்ச்சி விசயமாக யாராவது நமக்கு இடையூறு செய்யவந்தால் நாம் அவர்களையும் லட்சியம் செய்யப்போவதில்லை ஆனாலும்; அப்பேர்பேர்ப்பட்ட இடையூறுகளுக்கும் அம்முறையிலுங் கூட, நமக்கு இப்பெரியார்கள் பின்புலமாய் இருக்கிறார்கள் என்கிற தைரியத்திலேயே அவர்களை மலைபோல் நம்பி வருகிறோம்.”
-ஈ.வெ.ராமசாமி (‘பெரியார் பார்வை’ இதழ்த்தொகுப்பு)

இவ்வாறே அடிகளார் பெரியாரைப் பற்றி எடுத்துரைப்பதும் இருவர்க்கும் இடையிலான புரிந்துணர்வை நமக்குணர்த்தப் போதுமானதாகும்:

“சாதி சமயப்பூசல்களையொழித்து, எவ்வுயிரும் என்னுயிர் போல், எண்ணியிரங்கித் திருவருள் நெறிநின்று ஒழுகுதலாகிய பழந்தமிழ்க்கொள்கையே சைவநன்மக்கட்குரிய உண்மைக்கொள்கையாயிருந்தும் 35 ஆண்டுகளுக்குமுன், சொற்பொழிவாலும், நூல்களாலும் யான் அதனை விளக்கிய காலையில் எதிர்த்தும் என்னைப் பகைத்தும் எனக்குத் தீது செய்தவர்கள் சைவர்களில் கற்றவர்களே. அஞ்ஞான்று எனக்குதவியாக நிற்பதற்கு எவருமில்லை. பின்னர் பெரியார் ஈ•வெ•இராமசாமி அவர்கள் யான் விளக்கிய கொள்கைகளையே மேலுந்திட்டமாய் எடுத்து விளக்கிப் பேசவும் எழுதவுந் துவங்கிய காலந்தொட்டு, ஆரியச்சேர்க்கையால் தமிழ்மொழிக்குந் தமிழர் கோட்பாட்டிற்கும் தமிழரது வாழ்க்கைக்கும் நேர்ந்த குறைபாட்டை தமிழர் உணர்வாராயினர். ஆதலால் பெரியார் இராமசாமி அவர்களின் தமிழ்த்தொண்டைப் பெரிதும் பாராட்டி அவர்களின் தொண்டைப் பெரிதும் பாராட்டி அவர்கள் நீடினிது வாழ்கவென்று திருவருளை வேண்டி வாழ்த்துகிறேன்.”
– மறைமலையடிகள் (‘பெரியார்பார்வை’ 5-12-19948)

6. பெரியாரும் கா.சு.பிள்ளையும்

கா.சு.பிள்ளை

பெரியாரால் தமிழகத்திலேயே தமிழ்மக்கள் நாகரிக விசயமாய்த் தக்க ஆராய்ச்சியுள்ளவர்கள் ஏனையோரை இவர்களுக்கு மீறினோரெனச் சொல்லமுடியாது எனக் கணிக்கப்பட்டோரே மறைமலையடிகளாரும் கா.சு.பிள்ளையுமாவார். நீதிக்கட்சியாளராக வரிப்புணர்வுடன் இயங்கியவர். இவருடைய வம்சாவழியினரே தி.மு கழகத்தவரான இளமுருகு பொற்செல்வியாவார். இணையர் பெயரைத் தம்பெயரோடு முதன்முதலாக இணைத்துக் கொண்டவர். மூதாதை பெயரால் ‘தமிழ்க்காசு நூலகம்’ நடத்தினார். மாற்றுக்கருத்துடைய இயக்க இதழ்களையும் தம் அரிய நூலகத்தில் ஆவணப்படுத்தியவர். புத்தகக்கண்காட்சிகளில் எமது சிலிக்குயில் புத்தகப் பயணத்திற்கு வந்து ‘புதிய சனநாயகம்’,’ கேடயம்’, எனக்குறிப்பிட்டு மார்க்சிய லெனினிய அமைப்புகளின் அரசியல் இதழ்த்தொகுப்புகளாகத் தெரிவுசெய்தே வாங்குவார்.

கா.சு.பிள்ளை எம்.எல். பிள்ளை எனவும் சுட்டப்பெற்றவர். ‘பல்கலைப்புலவர்’ எனவே போற்றப்பெற்றவர். ஆனாலவர் தம்மைக் கா.சுப்பிரமணியன் என்றே சுட்டிக்கொண்டவர் என்கிறார் கா.சு.பிள்ளை ஆய்வாளரான கருவை பழனிச்சாமி.

அதிகாரபூர்வமாக அரசிதழில் அறிவித்தே மாற்றிவிட்டாலும் ஏ.எஸ்.கே, ஏ.எஸ்.கே ஐயங்காராகவே விளிக்கப்பட்ட கதைபோலத்தான் இவர் கதையுமாம். பெரியாரே அவரை ஐயஙகார் என்றுதான் சுட்டுவார் ஏனய்யா இப்படி எனக் கேட்டால் அவர்பதில்:
“எங்கட்டயும் ஒரு ஐயங்கார் இருக்கார்ன்னு சொல்லிக்கலாம்னு தான்யா!”.

“சைவ சமயப்பற்று இவருக்குத் தந்தை வழிச்சொத்து. இந்த உடைமையை இவர் தமது ஜஸ்டிஸ் கட்சிக் கொள்கைக்கும் திராவிட இயக்கக் கொள்கைக்கும் இணங்க உருவாக்கி வளர்த்தார்.”
– பி.ஸ்ரீ.(‘நானறிந்த தமிழ்மணிகள்’)

ஒன்றினை இங்கே மனங்கொள்ள வேண்டுகின்றேன்.இங்கே திராவிடக் கொள்கை என்பது பார்ப்பனரல்லாதார் – சாதி சமயச்சார்பற்ற அரசியல் எனும் பொருட்டாயே. இது பி.ஸ்ரீ.யால் ஆளப் பெறுகின்றதேயன்றித் திராவிடநாட்டு விடுதலைக் கோட்பாட்டாளர் எனுமப் பொருட்டாய் அல்ல. இந்த அளவிற்கான பொதுப்புத்திதானும் வாய்க்கப்பெறா மாற்றுத் தரப்பினரே இங்கு தமிழ்த்தேசியத்தின் பேராலும் தலித்தியத்தின் பேராலும் திராவிடம்×தமிழ்த்தேசியம் எனும் இருமை எதிர்வைக் கட்டமைத்து மயிர்பிளக்கும் ஆய்வுகளில் மல்லுக்கட்டி வருகின்றனர்.

“கா.சு.பிள்ளையின் தமிழ் இலக்கிய வரலாறு’ நூல் 1930-களிலேயே வெளிவந்துள்ளது. சைவச் சார்புநிலை அவருக்கு இருந்தாலும்,அது மறைமலையடிகளைப் போலத் தமிழ்ப்புலவர் கால ஆராய்ச்சியினைத் திசைதிருப்புமாறு அமையவில்லை.”
-தொ•பரமசிவன்(‘அஞ்சுகம் முத்துவேலர் அறக்கட்டளைச் சொற்பொழிவு.’ – வெளியீடு தமிழ்ப் பல்கலைக்கழகம்)

“தமிழர்களில் பெரும்பாலோர் கொண்டிருந்த சமயநம்பிக்கையோடு ஒட்டி, உறவாடி, வேர்விட்டுத் தழைத்துநின்ற சமக்கிரதத்தின் ஆதிக்கத்தளையை அறுத்தெறிந்தார் பல்கலைப்புலவர் கா.சு.பிள்ளை எனில் அவர்தம் சமயக்கொள்கை தந்த விழிப்புணர்வு மங்கலாகுமா?” -க.அன்பழகன் (‘தமிழ்க்கடல் அலைஓசை’)

“இந்நாட்டிலே தமிழர், ஆரியர் என்ற பிரிவு இக்காலத்திலே ஆராய்ச்சி இல்லாத மக்களுக்குப் புலப்படாதொழியினும், அது பண்டைக் காலத்தில் இருந்ததென்பதும், அது தெளிவு பெறத் தோன்றாது மாற்று வடிவம் கொண்டு இன்றைய நாளிலும் நிலைபெற்றுள்ளதென்பதும் மறுக்க முடியா உண்மையாகும்”- கா.சு. பிள்ளை (‘செந்தமிழ்ச் செல்வி’: 5 – 11)

“இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதி வரை ‘இந்து’ என்ற சொல் அரசியல்முகம் ஒன்றையும், சமயமுகம் ஒன்றையும் கொண்டிருக்கிறது.தமிழ்ச்சமூக வரலாற்றில் இந்த’இரட்டைநாக்கு’ப் பிறக்கும் என்ற பெருங்கேட்டினைச் அறிஞர் கா.சு.பிள்ளை” -தொ.பரமசிவன்(‘வழித்தடங்கள்’)

இத்தகு பெருங்கேட்டுக்கு ஆளாகி நிற்கும் நாம் அத்தகு இரட்டை நாக்குகளுடனேயே தானே நாடோறும் மல்லுக்கட்டியே தீர வேண்டியுள்ளது?

7.பெரியாரும் ஞா. தேவநேயப்பாவாணாரும்

தேவநேயப்பாவாணர்

பாவாணர் அவர்களுக்குத் ‘திராவிட மொழிஞாயிறு’ என்னும் பட்டத்தை வழங்கியவர் பெரியாரே. ஆனால் திராவிடத்தை ஏற்கா ஒருசார் தமிழ்த்தேசியர் அதில் திராவிட என்பதை நீக்கி மொழிஞாயிறு எனவே கையாள்வார். மாறாகப் பெரியார் குறித்த பாவாணர் பார்வை எவ்வாறு அமைந்தியன்றது என்பது குறித்தும்; பாவாணர் மீது பெரியார் எத்தகைய ஈடுபாடு கொண்டிருந்தார் எனவும்; இருவர்க்கும் இடையே புரிந்துணர்வின் அலைநீளம் எவ்வாறு ஒத்திசைந்தது என்பதைப் பற்றியும் பாவாணர் வாக்குமூலமாகவே காண்போம்:

திராவிட மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் பார்வையில் தந்தை பெரியார்

பெரியார் ஒரு பெரியார். அவர் தொண்டு எழுத்துமாற்றமன்று. செயற்கரிய செய்வதே பெரியார் இயல்பு. பிராமணியத்தைப் போக்குவதும் பகுத்தறிவைப் புகட்டுவதும் மூடப் பழக்க வழக்கங்களை ஒழிப்பதும் தமிழரைத் தன்மானத்தோடு வாழச் செய்வதுமே பெரியாரின் உண்மைத் தொண்டு. விடுதலை, குடியரசு முதலிய கிழமையன்களின் (வார இதழ்)எழுத்து மாற்றம் சிக்கனம் பற்றியதே. இன்று பெரியாரின் படைத்தலைவர் போல் தம்மைக் காட்டிக் கொள்பவர் இளையரும் முளையருமாயிருந்த காலத்தே நான் பெரியாரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவன். என்றைக்கு இந்தி கட்டாயப் பாடமாக்கம் தொடங்கப்பட்டதோ அன்றைக்கே எனக்குப் பெரியார் தொடர்பு தொடங்கிற்று. நான் தமிழ்நலம் பற்றி ஏதேனும் சொன்னால், ‘அதெல்லாம் நீங்களே தமிழ்ப்பண்டிதர்களாகச் சேர்ந்து கொண்டு கிளர்ச்சி செய்யுங்கள். நான் உங்களைப் போலப் பண்டிதனல்லேன். படியாத (பாமர) மக்களிடம் சென்று அவர்களுடைய அறியாமையை எடுத்துக்காட்டி என்னாலியன்ற வரை சமுதாயத் தொண்டு செய்பவன்’ என்பார். ஒரு முறை என் ஒப்பியன் மொழிநூல் பற்றி ஈரோட்டிலிருந்து 5 பக்கம் தம் கைப்பட எழுதியிருந்தார். அப்பொத்தகமும் 100 படிகள் என்னிடம் விலைக்கு வாங்கினார். சிலமுறை அவர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியுமிருக்கிறேன்.

ஒருமுறை நான் காட்டுப்பாடியிலிருக்கும் போது எனக்கு வருவாய் இல்லையென்று தெரிந்து என் வீடு தேடி கொஞ்சம் பணம் கொடுக்கவந்து நான் ஊரில் இல்லாததால் அக்கம் பக்கத்தில் உள்ளவரிடம் செய்தியைச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

பின்பு நான் திருச்சிராப்பள்ளி சென்றிருந்த போது நண்பருடன் சேர்ந்து பெரியாரைக் காணச் சென்றேன். அவர் என்னைத் தனியாய்த் தம் மாளிகைக்கு உள்ளே அழைத்து இருநூறு உருபா நன்கொடையாகத் தந்தார். அது ஒரு சிறு தொகையே யாயினும் பிறரிடத்தில் பெறும் ஈராயிரத்திற்குச் சமம் என்பது அவர் சிக்கனத்தை
அறிந்த அனைவரும் உணர்வர்.

நான் பெரியாரை மதிப்பதெல்லாம், எவருக்கும் அஞ்சாமையும் எதையும் பொதுமக்களுக்கு எடுத்து விளக்கும் ஆற்றலும் பற்றியே. கோடிக்கணக்கான மக்களொடு கூடிக்கொண்டு கும்பலில் கோவிந்தா போடுவது போல் பேராயத்தார் (காங்கிரஸார்) ஆங்கிலர் ஆட்சியை எதிர்த்தது அத்துணை ஆண்மையன்று.

கும்பகோணமாயினும் குமரிக்கோட்டக் காசியாயினும், சற்றும் அஞ்சாது பிராமணியத்தைச் சாடுவதிலும் அதன் கொடுமைகளைக் கல்லா மாந்தர்க்கு விளக்கிக் கூறுவதிலும் ஓய்வு சாய்வின்றி இனநலத்தைப் பேணுவதிலும் அவருக்கு ஈடானவர் இதுவரை இருந்ததுமில்லை; இனியிருக்கப் போவதுமில்லை. பிரித்தாணியத்தை யெதிர்த்ததிலும் பிராமணியத்தை யெதிர்த்ததே பேராண்மை.

கலப்புமணம் , பகுத்தறிவுச் செயல், தன்மான வாழ்வு முதலிய உயிர்நாடிக் கொள்கைகளை விட்டு விட்டு எழுத்து மாற்றம் ஒன்றையே மேற்கொள்வது பண்டத்தை விட்டு விட்டுப் படிவத்தைப் பற்றுவதேயாகும்.

தனித்தமிழை வெறுப்பவரும் உண்மையான வரலாற்றை ஒப்புக் கொள்ளாதவரும் இந்தியைப் பொதுமொழியாக ஏற்பவருமான வையாபுரிகளுடன் கூடிக்கொள்வதும் தமிழுக்கு மாறான ஆரிய அமைப்பகங்களுடன் ஒத்துழைப்பதும் மூலமும் படியும் என்பதை அசலும் நகலும் என்றெழுதுவதும் பகுத்தறிவுக் கொள்கையின் அல்லது தன்மான வாழ்வின்பாற்பட்டன வாகா.

பெரியாரின் நடத்தையைப் பின்பற்றாது பெரியார் விழாக் கொண்டாட்டத்தில் ஊர்தொறும் ஊர்வலத்திற் கலந்து கொள்வதும் விடிய விடிய சொற்பொழிவாற்றுவதும் பெரியார் படிமைக்கு மாலையணிவதும் பெயர் விளம்பரத்திற்கே யன்றி வேறெதற்குப் பயனாம்?

இது காறும் தமிழ்நாட்டில் தமிழர்க்கு மூவேறு வகையில் வழிகாட்ட மூவேறு பெரியார் தோன்றியுள்ளனர். அவருள் ஒருவர் ஈ.வே. இராமசாமிப் பெரியார். எழுத்து மாற்றத்தையே அவர் தொண்டாகக் காட்டுபவர் அவர் பெருமைக்கு இழுக்கே தேடுபவராவார். தம் சிறு கொள்கைக்கு வெற்றி பெறவே விழாவைப் பெருவியப்பாகக் கொண்டுள்ளனர்.

அறநூற் பெரியாரும் தனித்தமிழ்ப் பெரியாரும் தன்மானப் பெரியாரும் ஆகிய ‘முப்பெரும் பெரியார் அகவல்’

தமிழகத் தீரே தமிழகத் தீரே
மொழிவர லாறு மொழிவது கேண்மின்
பிராமணி யம்மென்னும் பெருங்கேடு நஞ்சு
நாவலம் முழுவதும் நலங்கெடப் பரவிப்
பைந்தமிழ் திரவிடப் பழங்குடி மக்கள்
நைந்தமை தடுக்க நன்மருத்துவராய்
வள்ளுவர் மறைமலை வன்மறப் பெரியார்
தெள்ளிய மூவர் தென்னகந் தோன்றினர்.
நாற்பொருள் விளக்கும் நடுநிலை யறநூல்
நானிலப் பொதுவாய் நல்கினார் தேவர்
அயற்சொல் களைந்த அருந்தமிழ் நூல்களால்
அடிமையும் மதமும் அளைந்தமை கண்டே
விடுதலை பெறவழி வேறில்லை யென்றே?
கடவுள் இலையெனுங் காரங் கலந்து
மடந்தவிர்த் தனர்தன் மானப் பெரியார்
மூவர் குறிக்கோள் முடிபும் ஒன்றே
அடிமை யொழித்த வல்லதை எழுத்தின்
வடிவை யொழித்தல் பெரியார்க் கில்லை
குறுகிய நோக்கிற் கொள்கை பிறழ்ந்து
பண்டம் விட்டுப் படிவம் பற்றித்
தமிழர் ஒற்றுமை தடுத்துப் பகைவரைத்
தம்மொடு சேர்த்துத் தமிழுணர் விழந்து
பெரியார் பெயரைக் கெடுப்பார்
தெரியார் தம்மால் தீதுறல் அவர்க்கே.

– திராவிட மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர். (செந்தமிழ்ச்செல்வி ஏப்பிரல் 1979)
தொகுப்பு -கரு.தமிழ்தாசன் (முகநூற் பதிவு)

தொடரும்…

– வே.மு.பொதியவெற்பன்

(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)

(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)

பொதியவெற்பன் கட்டுரைகளைப் படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *