பெரியார் தமிழறிஞர்கள்

பெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்

பெரியாரும் தமிழறிஞர் நால்வரும்:
(1.மயிலை சீனி வேங்கடசாமி, 2.சாத்தான்குளம் ராகவன், 3.நாவலர் சோமசுந்தர பாரதியார், 4.பாகற்பட்டி வே.மாணிக்க நாயகர்)

1. மயிலை சீனி வேங்கடசாமியும் சாத்தான்குளம் ராகவனும்

மயிலை சீனி வேங்கடசாமி

“சுயமரியாதை இயக்கம் திராவிடஇயக்கங்ளின் நிழலில் கூட ஒதுங்கியிராத தமிழறிஞர்களான மயிலை சீனி வேங்கடசாமி, நாவலர் சோமசுந்தரபாரதியார்…”
– பழ.நெடுமாறன் (‘பாரதிதாசன் பொற்கிழி-தமிழியக்கம்’)

“தமிழின் அவைதிகமரபுகளைப் போற்றித் தன்னுடைய ஆய்வுகளில் வெளிப்படுத்திய மயிலை சீனி வேங்கடசாமி, சாத்தான்குளம் அ,ராகவன் போன்றவர்களை ஈவெரா கணக்கில் எடுத்ததாகத் தெரியவில்லை”
– பொ.வேல்சாமி (‘பொற்காலங்களும் இருண்ட காலங்களும்)

சாத்தான்குளம் அ.ராகவன்

மதிப்பிற்குரிய பெருமக்களான தமிழ்த் தேசியப் போராளி பழ.நெடுமாறன் அய்யா, அவைதிக அறிஞர் பொ.வேல்சாமி போன்றவர்களால் கூட பிறழ்திரிபாகவே உள்வாங்கப்பட்டுள்ளது. தமிழ்ப்பண்பாட்டு ஆய்வாளர்களுக்குப் பெரியாருடனான தொடர்பு என்பது வரலாற்று முரண்நகையே!

உண்மைத்தரப்பைக் காண்போம்:

“பிற்காலத்தில் தமிழிலக்கிய ஆராய்ச்சியின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய மயிலை சீனி வேங்கடசாமி, சாத்தான்குளம் ராகவன் போன்றோர் அக்காலத்தில் ‘குடி அரசு’ இதழில் எழுத்தாளர்களாக இருந்தனர் என்பது நினைத்துப்பார்க்க வேண்டிய செய்தியாகும்”

“1923-இல்’லட்சுமி’ என்னும் இதழில் எழுதத் தொடங்கிய மயிலை சீனி வேங்கடசாமி ‘குடி அரசு’ இதழில் தொடக்கக் காலத்தில் ‘வைட்டமின்கள்’ ‘பல்நாட்டுத் தேசிய கீதங்கள்’ ஆகிய தலைப்புகளில் அரசியல், இலக்கியம் சாராத கட்டுரைகள் எழுதி வந்துள்ளார். பெரியாரின் உள்வட்ட நண்பரான அவருக்கு ஓவியம், சிற்பம், கல்வெட்டு ஆகிய துறைகளில் இயல்பாக நாட்டம் இருந்தது. திராவிட இயக்கத்தின் செல்வாக்கால் வேதமல்லா மரபு சார்ந்த பண்பாட்டினைப் பற்றிய அவரது தேடல் ஆழமாக இருந்தது.”
-தொ•பரமசிவன் (‘தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும்’).

2. பாகற்பட்டி வே.மாணிக்க நாயகரும் நாவலர் சோமசுந்தர பாரதியாரும்

பா.வே.மாணிக்க நாயகர்

“தந்தை பெரியார் அவர்களும் பா•வே• மாணிக்க நாயகரும் விவாதித்து விவாதித்து இந்தியசமூகம் பற்றிய
முடிவில் ஒரே குறியைத்தான் கண்டார்கள். நாயகர் ஒரு மதநம்பிக்கையாளர், மறைமலை அடிகளைப்போல. தந்தை பெரியார் ஒரு மதவைரி. ஆயினும் நாயகரும் மறைமலையடிகளும் நம் அய்யா அவர்களைப் போல சனாதன வைரிகள்.”
– வே.ஆனைமுத்து (‘சிந்தனையாளன்’ 7-9-76)

“திருக்குறளின் பெருமையை சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு எடுத்துக்காட்டியவர் காலஞ்சென்ற தோழர் பா•வே•மாணிக்க நாயகர் ஆவார். அவரும் நானும் அடிக்கடி வேடிக்கையாகவும் விதண்டாவாதமாகவும் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். அந்தச் சமயங்களிலெல்லாம் அவர் திருக்குறள் கருத்துகளைத்தான் எடுத்துக்கூறி என்னை மடக்குவார். அவருடைய விளக்க உரைகளால் திருக்குறளில் அடங்கி்யிருக்கும் கருத்துகளை என்னால் அன்று அறிய முடிந்தது.”

“நமது தலைவரின்(மாநாட்டுத்தலைவர் சோ•லட்சுமிரதன் பாரதியின்) தந்தையாரான எஸ்.சோமசுந்தர பாரதியார் அவர்களைப் போன்ற பெரும் புலவர்கள் திருக்குறளை ஆதாரமாகக் கொண்டு ஆரியர் – தமிழர் வேறுபாடுகளை விளக்கமாக எடுத்துக்கூறுவார்களானால் பல அறிவுக்கியைந்த அற்புதங்கள் வெளிப்படும். அவரைப் போன்ற அறிஞர்கள் பேசக் கேட்டுத்தான் எனக்கும் திருக்குறளின் பெருமை தெரியவந்தது.” ஈவெரா. ‘திருக்குறளும் மனுதர்மமும் ‘-உரைநாள்: 14-3-1948- (‘திருக்குறள் பன்முக வாசிப்பு’)

“இன்று தலைவர் (நாவலர்)பாரதியாரால் தமிழ்நாடும், தன்னுணர்வாளரும் பெற்ற உதவி, ஆக்கம், எழுச்சிகளை நான் மறக்கவில்லை என்பததைக் கூறுவதுடன், இத்தகைய உணர்ச்சிகளை நாங்கள் பெற்றதே அவர் போன்றோரின் அறிவுரைகளைக் கேட்டதனால்தான்.” – சி.என்.அண்ணாதுரை.

சோமசுந்தர பாரதியார்

“அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் என்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியை உங்களுடன் (திராவிடர் கழகத்தார்) எதிர்த்தேன். எடுக்கப்பட்ட இந்திச்சனியனை மறுபடியும் கொண்டுவந்து நுழைத்தது யார்? தமிழ்மந்திரியாயிருந்த அவினாசிலிங்கம் செட்டியார்தான் இந்தியைக் கட்டாயப்பாடமாக்கினார். சர்க்காரைத் தாக்கி உண்மைகளைப் பேசுகிறேனே என்று என்னை அரசியலார் சிறையிலே தள்ளினாலும் நானதற்கு அஞ்சவில்லை”
(கோவையில்27-5-1950 அன்று நிகழ்த்திய முத்தமிழ் வளர்ச்சி மாநாட்டுரை-) (‘அன்னை அஞ்சுகம் தந்தை முத்துவேலர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்)

*

3.’தீபரவட்டும்’ இயக்கத்தை முன்வைத்து, பா.வே.மா.

“1940களில் தமிழ்நாட்டில் கம்பஇராமயண எதிர்நிலைக் கருத்துகள் சொற்பொழிவுகளிலும் மாநாடுகளிலும் எதிரொலித்தன. இன்று வரையிலும் கருத்தமைவில் அதேநிலை உயிர்ப்புடன் இருந்து வருகிறது. இக்கருத்து தமிழ்நாட்டில் திடீரென்று தோன்றிடவில்லை.இதற்குப் பல அறிஞர்கள் காரணர்களாக இருந்து இருக்கின்றனர்.” – வெ.ப.சுப்பிரமணிய முதலியார், ஜே.எம்.நல்லுசாமிப்பிள்ளை, எம்.எஸ்.பூரணலிங்கம்பிள்ளை, மறைமலையடிகள் போன்ற அறிஞர் பெருமக்கள் இராமாயணம் பற்றிய உள்ளுறைப் பொருள் குறித்து ஆய்ந்து எழுதினர்; பேசினர்.”

“இதனைத் தொடர்ந்து பா.வே.மா. 05-02-1931 இல் மறைமலையடிகளின் தலைமையில் பல்லாவரம் பொதுநிலைக் கழகத்தில் ‘கம்பன் புளுகும் வால்மீகியின் வாய்மையும்’ எனும் பொருள் பற்றி ஓர்ஆய்வுரையை நிகழ்த்தினார். இவற்றை எல்லாம் ஆதாரப்படுத்தி தன்மான இயக்கத்தார் இராமாயணம் என்பது கடவுள்மாக்கதையன்று என மெய்ப்பித்து வந்தனர். இக்கருத்தை
எல்லாம் செழுமைப்படுத்தும் வகையில் அறிஞர் அண்ணா ‘நீதி தேவன் மயக்கம்’எனும் ஓர் இலக்கிய விமர்சன நாடகத்தை எழுதினார். இந்நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவரது இந்த உத்தி, கலை, இலக்கிய உலகில் ஒரு புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்தியது”.

“பெரியார் இராமாயண ஆராய்ச்சியில் ஈடுபாடு காட்டியவர்.இந்தியாவிலுள்ள தமக்குக் கிடைத்த அனைத்துவகை இராமாயணங்களையும் ஆய்வுநூல்களையும் கற்றுத் தெளிந்து அவற்றின் பிழிவுகளை ‘இராமாயண ஆராய்ச்சி’ என்றும் ‘என் இராமாயணப்பாத்திரங்கள்’ என்றும் இரு நூல்களை எழுதி வெளியிட்டார்.

ஓர்ஆராய்ச்சிக்கட்டுரையில் பா.வே.மா. வினை மேற்கோள்காட்டி எழுதி இருக்கிறார். ஆய்வின் அடிப்படையில் இராமாயணம் தன்மான இயக்கத்தினரால் நாடகமாகவும் நடிக்கப்பட்டது. தருக்கங்கள் நிகழ்ந்தன. அவை நூல்களாகவும் வெளிவந்து இருக்கின்றன.”
– க.திருநாவுக்கரசு (‘தன்னேரிலாத தமிழ்-தனித்தமிழ் இயக்க நூற்றாண்டுவிழாமலர்)

“திராவிட இயக்கத்தவர்க்கு இராமாயணம் என்பது சமூக உளவியல் ஒதுக்கம் (Taboo) ஆகும். இவற்றுக்குப் பலமுனைத் தாக்குதல் நடந்தது. இவற்றுள் குறிப்படத்தக்கவை கீமாயணம்’ என்ற நாடகம், ‘இராவண காவியம்’ என்ற காப்பியம், ‘தீ பரவட்டும்’ என்ற கட்டுரை நூல் மற்றும் ‘கம்பரசம்’ என்ற ரசனை நூல். இராமன் வடவர்களின் குறியீடு”
– தி.சு.நடராசன்(‘தமிழின்அடையாளம்’)

கம்பராமாயணத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ‘தீ பரவட்டும்’ இயக்கத்தின் விளைவாக அது வேறு சில கலை இலக்கிய, பதிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படவும் எதிர்த்தலைக்காரணியாக அமைந்தது.

“இக்காலப் பகுதியின் (முப்பதுகள்) மற்றொரு நிகழ்வு, கம்பராமாயணத்துக்கு அரசியல் உலகில் எழுந்த எதிர்ப்பும், இலக்கிய உலகில் எழுந்த ஆதரவுமாகும். கம்பராமாயணத்துக்குத் திருத்திய பதிப்பு ஒன்று வெளியிட வேண்டும் என்ற முயற்சியினை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்குத் ‘தீ பரவட்டும்’ இயக்கமே காரணமாக இருந்தது. வஉசியின் நண்பரான சி.கே.சுப்பிரமணிய முதலியார் பெரியபுராணத்திற்கு விரிந்த உரையுடனும் குறிப்புகளுடனும் ஒரு பதிப்பு வெளியிட முனைந்ததற்கும் எதிர்த்தலைக்காரணியாக நின்றது இந்த இயக்கமே.”
– தொ.பரமசிவன் (‘அன்னைஅஞ்சுகம் தந்தை முத்துவேலர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்)

*

4. பல்கலைச்செல்வர் பா.வே.மா

பாவேமா• ‘பல்கலைச்செல்வர்’என்றே போற்றப்பெற்றவர். அரசு உதவிப்பொறியாளர். நீதிக்கட்சியாளர். பெரியாரின் அணுக்கத்தோழர். ஒலி இலக்கணம்,மெய்யியல், விலங்குநூல், ஒகம் எனவாங்கு பல்துறைகளிலும் கோலோச்சியவர். பிடில், வீணை, புல்லாங்குழல் கருவியிசைக்கலைஞர். எழுத்துச்சீர்திருத்த முன்னோடி. நீரில் பலமணி நேரம் மிதக்க வல்லவர். கணிதவியலில் கணிதவரைகட்ட (கால்கோ கிராப்) கண்டுபிடிப்பாளர்.வேளாண்மையில் ஒட்டுப்பதியமுறையில் புதுவண்ணச் சீத்தாப்பழத்தையும், மல்கோவா மாங்கனியையும் கண்டுபிடித்தவர். இவ்வகையில் G.D.நாயுடுவிற்கே முன்னோடி. மேட்டூர்அணையைக்கட்ட இடத்தேர்வுசெய்தவர். சிறந்த சொற்பொழிவாளரும் ஆவார்.

“எஞ்சீனியர் மாணிக்கநாயக்கர் கூர்த்தமதியினர். அவர் ஒரு பெரிய ஊற்று. அதனின்றும் புதுமைகள் சுரந்த வண்ணம் இருக்கும். நாயக்கரின் ஆராய்ச்சிகள் தமிழின் தனித்தன்மையை நிலைநிறுத்துவன. அவ்வாராய்ச்சியில் மிகமிகச் சிலவே வெளிவந்தன. எல்லாம் வெளிவந்திருப்பின், சரித்திர உலகில் தமிழ்நாடு ஒரு தனி மதிப்புப் பெற்றிருக்கும்”-திரு.வி.க.

“பா.வே.மாணிக்கனார், ‘மொழி முதற்றமிழர் கடவுள் கொள்கை’ எனும் கட்டுரை ஒன்றை எழுதி இருக்கின்றார். தொல்காப்பியப் புறத்திணை இயலில்,’கொடிநிலை, கந்தழி, வள்ளி என வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” என்றொரு நூற்பா உண்டு.

இதை ஆய்ந்த பாவேமா ‘உருவின்றிய முப்பொருள்களே முதற்பொருள்கள் என்றும், உருவத் தெய்வங்கள் எல்லாம் ஒவ்வொரு பான்மையின் சிறப்புத்தன்மைகளைத் தமிழர்கள் உருவகப்படுத்தித் தெய்வமென்று பெயர் வைத்து வழிபாடு செய்து வந்தனரன்றிக் கல்லுருவங்களை, மண்ணுருவங்களை வழிபாடு செய்யவில்லை என்பது ஆராய்ச்சியில் பல சான்றுகளாலும் ஐயமறத் தோன்றுகிறது அவருடைய புகழ்’என்று எழுதினார்.”
-க.திருநாவுக்கரசு

அவருடைய உருவகப் பகடிக்கதைச் சொற்பொழிவான,’Bitwixt ourselves in the Madras zoo’ பற்றி வியந்துபாராட்டி க.திருநாவுக்கரசு, வே.ஆனைமுத்து, அ.கா.பெருமாள் மூவருமே எழுதியுள்ளனர். இதற்கு மேலாக அதுபற்றி எடுத்துரைக்க. இங்கே இடமில்லை.

“பெருந்தமிழறிஞரும் ரிட்டையரான சூப்ரண்ட்டெண்டிங் எஞ்சீனியரும் சிவபுரம ்ஜமீன்தாருமான திரு.பா.வே.மாணிக்க நாயக்கர் அவர்கள் காலஞ்சென்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைகிறோம். இவர் தமிழ்மொழியில் சிறந்த ஆராய்ச்சியாளராகவும், பார்ப்பனரல்லாதார்க்கு நன்மையும் உண்டாகி இருக்கக்கூடும். இந்த நன்மைகளை நம் மக்கள் அடைவதற்கில்லாமல் திடீரென்று மாரடைப்பு வியாதியால் இறந்தது பெருநஷ்டமேயாகும்”
– ஈ.வே.ராமசாமி(‘குடிஅரசு 03-01-1932).
25-02-1871 to 25-12-1931

– வே.மு.பொதியவெற்பன்

(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)

(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)

பொதியவெற்பன் கட்டுரைகளைப் படிக்க

One Reply to “பெரியாரும் தமிழறிஞர்களும்: பாகம் 1 – வே.மு.பொதியவெற்பன்”

  1. இந்திய இலக்கியச் சிற்பிகள்……. வரிசையில் நான் எழுதிய மயிலை சீனி. வேங்கடசாமி நூலில்
    பெரியாருடன் அவருக்கு இருந்த தொடர்பு குறித்த அவரது தீபம் பேட்டி ஒன்றைப் பதிவு செய்துள்ளேன்.
    அவர் தன்னை சுயமரியாதை இயக்கச் சார்பாளன் என்றே கருதினார். எனது நூலில் பதிவுகள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *