ஹோமியோபதி

கொரோனா தொற்றை ஹோமியோபதி மருத்துவ முறையில் கையாள முடியும் – உறுதியுடன் பேசும் மருத்துவர் பாலமுருகன்

கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் இப்போது அனைத்து செய்திகளின் பேசுபொருளாக இருக்கின்றன. இரண்டாம் அலையில் ஏற்பட்டதைப் போன்று ஆக்சிஜன் பற்றாக்குறையோ, மருத்துவப் படுக்கைகளின் பற்றாக்குறையோ, மருத்துவர் பற்றாக்குறையோ ஏற்பட்டுவிடக் கூடாது என்று அனைவரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இன்னொரு புறம் மாற்று மருத்துவ முறைகளான சித்த மருத்துவ மற்றும் ஹோமியோபதி சிகிச்சை மையங்களை அரசு அதிகப்படுத்த வேண்டும் என்ற குரல்களும் எழுந்து வருகின்றன. ஹோமியோபதி மருத்துவ முறையினால் கொரோனா பெருந்தொற்றைக் கையாள முடியுமா, அப்படிப்பட்ட சிகிச்சை முறைகள் ஹோமியோபதி மருத்துவத்தில் இருக்கின்றதா என்பதைப் பற்றிய உரையாடலுக்காக காஞ்சிபுரத்தில் தாய்ப்பாசம் ஹோமியோபதி சிகிச்சை மையத்தினை நடத்தி வரும் மருத்துவர் பாலமுருகன் அவர்களை தொடர்பு கொண்டோம். ஹோமியோபதி மருத்துவர் பாலமுருகன் அவர்களுடன் Madras Review சார்பில் நடத்திய உரையாடல்.

ஹோமியோபதி மருத்துவர் பாலமுருகன்

கொரோனா பெருந்தொற்றை ஹோமியோபதி மருத்துவராக எப்படி பார்க்கிறீர்கள்? இதுபோன்ற பெருந்தொற்று காலங்களில் ஹோமியோபதி மருத்துவ முறையை எந்த வகையில் பங்காற்றியிருக்கிறது? தற்போது கொரோனா தொற்றிற்கு எப்படி பயனுள்ளதாக இருக்கிறது?

ஹோமியோபதி மருத்துவத்திற்கென வரலாறு இருக்கிறது. ஸ்பானிஷ் ஃபுளூ பெருந்தொற்று ஏற்பட்ட காலங்களில் கொத்துக்கொத்தாக மனிதர்கள் செத்து மடிந்தார்கள். அல்லோபதி மருத்துவத்தில் மருந்து இல்லாத அந்த காலக்கட்டத்தில் ஹோமோயோபதி மருத்துவம் தான் பெருமளவில்  பயன்பட்டது. அதற்கான ஆதாரங்கள் நிறையவே உள்ளன. கடந்த இருநூறு  ஆண்டுகளில் ஏற்பட்ட பெருந்தொற்று நோய் காலங்களில் சிகிக்சை அளித்து குணமாக்க ஹோமியோபதி மருத்துவம் சிறப்பான பங்காற்றியிருக்கிறது. 

அந்த வரலாற்றின் அடிப்படையிலும் அனுபவத்தின் அடிப்படையிலிருந்து தான் கொரோனா பெருந்தொற்றையும் ஹோமியோபதியில் கையாளுகிறோம். எப்படி அல்லோபதி மருத்துவத்தில் கொரோனா தொற்றிற்கு என தனியாக மருந்து இல்லையோ, அதேபோல ஹோமியோபதியில் தனியான ஒரு மருந்து ஏதுமில்லை. ஆனால் ஹோமியோபதியில் ஏற்கனவே இருக்கிற மருந்துகளைக் கொண்டு சிறப்பாகவே கையாள முடியும். கிட்டத்தட்ட நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மருந்துகள் ஹோமியோபதியில் உள்ளன. இந்த மருந்துகள் மூலமாகவே கொரோனா பெருந்தொற்றை சிறப்பாக கையாள முடியும்.

மரபுவழி மருத்துவங்களான சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், அக்குபங்சர் உள்ளிட்ட மருத்துவ முறைகள் ஐம்பூத தத்துவம், வாதம், பித்தம், கபம் போன்ற தத்துவங்களின் அடிப்படையில் சிகிச்சை செய்யப்படுகிறது. ஹோமியோபதி மருத்துவ முறை என்ன தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது?

இந்தியாவில் AYUSH மருத்துவமுறைகளில் ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம், யோகா மற்றும் இயற்கை மருத்துவங்களில் ஒன்றாக ஹோமியோபதி உள்ளது. ஆனால் ஹோமியோபதி என்பது பாரம்பரிய வைத்திய முறை கிடையாது. ஆங்கில மருத்துவத்திற்கு மாற்றாகவோ அல்லது இணையாகவோ இருக்கக்கூடிய நவீன மருத்துவ முறை தான் ஹோமியோபதி. அல்லோபதி மருத்துவமுறையில் நானோ பார்டிகிள் (மீநுண்துகள்) பற்றி சமீபத்தில் தான் கண்டறிந்துள்ளார்கள். மூலக்கூறுகளை உடைத்து உடைத்து மீநுண்துகள் தான் ஹோமியோபதியில் இருநூரு ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கான அறிவியல் வளர்ச்சி அந்த காலகட்டத்தில் இல்லாத காரணத்தால் ஹோமியோபதி மருந்துகளில் ஆற்றல் மட்டுமே இருப்பதாகக் கூறப்பட்டது. மீநுண்துகள் தொடர்பான அறிவியல் புரட்சி வந்த பிறகு ஹோமியோபதி மருந்துகளில் மீநுண்துகள் இருப்பது நிரூபணம் செய்ய முடிகிறது. 

அல்லோபதி மருத்துவத்தை விட நவீன மருத்துவமாக இருந்தாலும் போதிய பொருளாதார வசதிகள் இல்லாத காரணத்தினால் நிரூபிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளன. ஆனாலும் இன்னும் நிறைய அறிவியல் ஆதாரங்கள் உண்டு. அல்லோபதி பாடத்திட்டங்கள் தான் ஹோமியோபதியில் படிக்கிறோம். அதே உடற்கூறியல், உடலியல், அறுவை சிகிக்சை, நோயியல், நோயறியும் தன்மை கூட கிட்டத்தட்ட அதே தான். அதேபோல லெபாரட்டரி இன்வெஸ்டிகேஷன், ஸ்கேன், X-ray, CT, MRI உள்ளிட்ட நோயறிதல் உபகாரங்கள் கூட அலோபதிக்கு மட்டுமே உரித்தானது அல்ல. இயற்பியல் வளர்ச்சியோடு சேர்ந்து வளர்ந்தது தான் இந்த பரிசோதனைக் கருவிகள். 

இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகள் வளர்ச்சியில் கண்டறியப்பட்ட இதுபோன்ற பரிசோதனைக் கருவிகளை அல்லோபதி மருத்துவத்துறை போல ஹோமியோபதியிலும் நோயறிதலுக்கு பயன்படுத்துகிறோம். வேறுபாடு என்பது அல்லோபதியில் நோயின் தன்மையும், கிருமிகளும் மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால் ஹோமியோபதியில் ஒவ்வொரு நோயாளியிடமும் எப்படி நோயின் தன்மை இருக்கிறது என்பதைப் பார்க்கிறோம். 

ஒரு நோய்க்கிருமி அனைவரையும் பாதிக்கிறது என்றாலும் பாதிப்பின் தன்மை ஒரே மாதிரியாக இருப்பதில்லை. பாதிப்பில் ஒவ்வொருவரிடமும் வேறுபாடு இருக்கிறது. அந்த தனித்தன்மையை முக்கியமானதாகப் பார்க்கிறோம். ஒவ்வொரு தனி நபரையும் தனித்தன்மையாக (Individual Personal care) அணுகி மருந்தளிக்கிறோம். பொதுப்படையாகப் பார்ப்பதில்லை. தற்போதைய சூழல் போல பெருந்தொற்று  காலங்களில் ஒவ்வரு தனி நபரையும்  நோயறிந்து மருந்து கொடுப்பது என்பது சாத்தியமில்லை. லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படையும்போது நோயின் தன்மை எப்படி இருக்கிறது எல்லோரையும் எப்படி  பாதிக்கிறது எனபதை நூறு இருநூறு அல்லது ஆயிரம் பேரிடம்  பரிசோதனை செய்து ஆய்வு செய்யும்போது ஒரு குறிப்பிட்ட நான்கு அல்லது ஐந்து மருந்துகளுக்ககுள் தீர்வு  வந்துவிடும். இப்படியாக AYUSH  துறை ஆய்வு செய்து மிதமான, தீவிர தொற்று என பிரித்து பாதிப்புகளுக்கு தகுந்தாற்போல ஹோமியோபதியில் சிகிச்சை அளிக்கும் முறையை வெளியிட்டிருக்கிறது.

அல்லோபதி சிகிச்சையில் கிருமிகளை அழிப்பதற்கான மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. ஹோமியோபதியில் என்ன மாதிரியான மருந்துகள் கொடுக்கப்படுகின்றன?

கிருமிகளை அழிப்பது நமது வேலையல்ல. அது முடியவும் முடியாது. உலகத்தில் கோடிக்கணக்கான கிருமிகள் உள்ளன. எந்த நோய்க் கிருமியும் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம். அந்த அத்தனை கிருமிகளுக்கும் தடுப்பூசி உருவாக்கிட முடியாது, அழிக்கவும்  முடியாது. நம் கண்கூட  பார்க்க முடிகிற கொசு, கரப்பான் பூச்சி இரண்டாலும் தொந்தரவுகள் இருக்கிறது. இதை அழிப்பதற்கு மனித இனம் நூறு  ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம். ஆனால் இதுவரை அழிக்க முடியவில்லை. கண்ணிற்கு தெரிந்த இவைகளையே நம்மால் அழிக்க முடியாதபோது எப்படி கண்ணிற்கு தெரியாத கிருமிகளை மட்டும் அழித்துவிட முடியும். அது சாத்தியமில்லை. நம்முடைய வேலை என்பது இந்த கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தான். 

வீட்டை சுத்தமாகவும், சுற்றிலும் நீர் தேங்காமலும் பார்த்துக்கொண்டால் கொசு வரப்போவது இல்லை. அதேபோல அழுக்கு சேராமல் குப்பை சேராமல் இருந்தால் கரப்பான் பூச்சி வரப்போவதில்லை. அதேபோல புறச் சூழலையும் அகச்சூழலையும் சரியான முறையில் வைத்திருக்கும்போது நோய்க் கிருமிகளிடமிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ளலாம். அதை செய்வதுதான் ஆரோக்கியமானதாக இருக்குமே தவிர மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்திய கதை போல நோய்க் கிருமிகளுக்கு பயந்து நூற்றுக்கணக்கான தடுப்பூசிகளை உடலுக்குள் செலுத்தும்போது நோய் கிருமிகளை விட தடுப்பூசிகளினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகின்றன.

தற்போது இருக்கும் சூழலில் வேறு வழி இல்லாமல் தடுப்பூசி எடுக்கின்றனர். அரசும் பரிந்துரைக்கிறது. இது ஒரு தற்கால தீர்வாக இருக்கலாம். ஆனால் நமது தொலைநோக்குப் பயணம் என்பது தடுப்பூசிகள் அல்லாத, நோய்கள் இல்லாத  சமூகத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும். நோய்க் கிருமிகளுக்கான தடுப்பூசி என்பது நிரந்தரத் தீர்வாகாது. 

ஹோமியோபதி மருத்துவ முறையானது ஒவ்வொரு நோய்க் கிருமியும் என்ன தன்மையிலான நோய்களை ஏற்படுத்துகிறதோ அதற்கெதிரான நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கும் வேலையை செய்கிறது. Disease specific antibody என்று ஆங்கிலத்தில் சொல்வோம். சரியான மருந்து கொடுத்து அந்த நோய்க்கான தனித்தன்மை வாய்ந்த நோயெதிர்ப்பாற்றலை ஊக்குவிக்கும்போது உடல் தானாகவே நோயை எதிர்த்து போராடத் தொடங்கிவிடும். 

எப்படி மந்தை நோய் எதிர்ப்பாற்றல் பெற்றுவிட்டால் நாம் நோய் தாக்கத்திலிருந்து மீளலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறதோ, அதேபோல தனித்தன்மை வாய்ந்த நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கிவிட்டோம் என்றால் இந்த நோய் தொற்றுகளிலிருந்த நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். பாதிப்பு ஏற்பட்டாலும் தன்மை குறைவாக இருக்கும். பெரிய அளவில் உயிரிழப்புகள்  ஏற்படாது. அதை நோக்கிச் செல்வதுதான் சரியானதாக இருக்குமே தவிர நோய்க் கிருமிகளை அழிப்பதோ எல்லா நோய் கிருமிகளுக்கு தடுப்பு மருந்து உருவாக்குவதோ சாத்தியமற்றது. பொருளாதார ரீதியாகவும் சரியாக இருக்காது.

கொரோனா நோய் தொற்றிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள ஹோமியோபதியில் மருந்துகள் என்ன உள்ளன?

ஆர்சனிக் ஆல்பம் 30 அதைத் தவிர இரண்டாம் அலையில் Bryonia மருந்து அதிகப்படியான தொற்று ஏற்பட்டவர்களுக்கு பொருந்துவதாக உள்ளது. இந்த மருந்துகளின் நோக்கம் என்பது தொற்று ஏற்பட்டாலும் பாதிப்பின் தீவிரம் குறைவாக இருக்கும். உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும். நோய்த் தொற்றிலிருந்து மீண்டதற்ககு பிறகு ஏற்படக்கூடிய கருப்பு பூஞ்சை போன்ற தொந்தரவுகளுக்கு சீகெல் கார், குரோட்டலஸ் ஹாரிடஸ் (crotalus horridus) எனும் பாம்பின் விசத்திலிருந்து எடுக்கக்கூடிய ஹோமியோபதி மருந்துகள் பயனுள்ளதாக இருக்கிறது.

கருப்புப் பூஞ்சை குறித்து…

இது புதிய வகை நோய் கிடையாது. ஏற்கனவே இருப்பது தான். நோயெதிர்ப்பாற்றல் மிகக் குறைவாக உள்ளவர்களைத் தான் இது பெருமளவில் பாதிக்கிறது. சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோய்க்கு சிகிச்சை எடுப்பவர்கள் ஸ்டீராய்டு மருந்துகள் அதிகளவில் எடுத்து வருவார்கள். இதுபோன்ற துயரர்களுக்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையால் தான் ஸ்டீராய்டு பாயன்படுத்துவதாலும், ஆண்டிபயாடிக் பயன்படுத்துவதாலும் இது தாக்குகிறது என்று கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஆக்சிஜன் துணையுடன் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு உபகரணங்கள் சரியான முறையில் பராமரிப்பு இல்லாத காரணத்தாலும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் பெரும்பாலும் இதனால் பாதிக்கப்பட்டவர்களை மிக விரைவில் குணப்படுத்திவிட முடியும். ஹோமியோபதியில் சிறப்பான மருந்துகள் இருக்கிறது.

தீவிர தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியுமா? அதற்கான மருந்துகள் ஹோமியோபதியில்  உள்ளனவா?

சிகிக்சை அளிக்க முடியும் தீவிர தொந்தரவுகளுக்கான மருந்துகள் உள்ளன. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் ஆக்சிஜன் துணையோடு சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை ஏற்படலாம் என்பதால் அல்லோபதி மருத்துவமனை துணையோடு தான் செய்ய முடியும். ஏனெனில் ஆக்சிஜன் வசதிகள் கட்டமைப்பு ஹோமியோபதி மருத்துவமனைகளில் பெருமளவில் இல்லை என்பதால் அல்லோபதி மருத்துவமனைகளின் துணையோடு செய்ய முடியும். அல்லோபதி மருந்துகள் கொடுப்பட்டாலும் கூட அதனுடன் ஹோமியோ மருந்துகளும் கொடுத்துவரும்போது பாதிக்கப்பட்டோர் மிக விரைவில் மீண்டு வந்துவிட முடியும்.

ஆக்சிஜன் தவிர மருந்துகள் என்ற அடிப்படையில் ஹோமியோபதி மருந்துகள் மட்டுமே கொண்டு தீவிர கொரோனா பாதிப்பைக் குணப்படுத்த முடியுமா அல்லது அல்லோபதி மருந்துகளான ஸ்டீராய்டு, ஆண்டிபயாடிக் உள்ளிட்ட மருந்துகளின் உதவியுடன் தான்  சிகிச்சை அளிக்க முடியுமா’?

ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் இருந்தால் ஹோமியோபதி மருந்துகள் மட்டுமே கொண்டு குணப்படுத்த முடியும். பதினெட்டு, பத்தொன்பதாவது நூற்றாண்டுகளில் அமெரிக்காவில் ஐநூறு ஆயிரம் படுக்கைகள் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய ஹோமியோபதி  மருத்துவமனைகள் இருந்தன. பெருந்தொற்றுகள் ஏற்பட்ட காலங்களில் ஹோமியோபதி மருந்துகள் மட்டுமே கொடுக்கப்பட்டு குணப்படுத்தியுள்ளனர். ஒப்பீட்டளவில் அல்லோபதியில் 20  சதவீதம் உயிரிழப்புகள் ஏற்படுமானால், ஹோமியோபதி சிகிச்சையில் நான்கு சதவீத இறப்புகள் மட்டுமே ஏற்பட்டு பெரும்பாலானோர் நோய் தொற்றிலிருந்து மீண்டனர். அதற்குப் பிறகு படிப்படியாக அரசியல் காரணங்களுக்காக ஹோமியோபதி மருத்துவமனைகள் மூடப்பட்டதால் கடந்த நூறு ஆண்டுகளாக அதுமாதிரியான போதுமான தரவுகள் இல்லை. எனவே போதுமான மருத்துவ வசதிகள் மருத்துவமனை இருக்கும்போது ஹோமியோபதி மருந்துகளை மட்டுமே கொண்டு குணப்படுத்த முடியும்.

மேலும் ஹோமியோபதி மருந்துகள் அனைத்து மருத்துவ முறைகளோடும் ஒத்துப்போகக் கூடியது. அல்லோபதி, சித்தா போன்ற அனைத்து மருந்துகளோடும் சேர்த்தும் கொடுக்கலாம். பிற மருத்துவ முறைகளின் மருந்துகளோடு இணைவதாலும் கூட எந்த பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. ஆனால் மற்ற மருத்துவங்களோடு இணைத்து கொடுக்கப்படாமல் தனியாக கொடுத்து சிகிக்சை அளிக்கும்போது தான் ஹோமியோபதியில் உண்மையான செயல்திறன் வெளிப்படும்.

அல்லோபதி மருத்துவ முறையில் தீவிர பாதிப்பு சிகிசையில் ஸ்டிராய்டு  உள்ளிட்ட மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.அதற்கு இணையான மருந்துகள் ஹோமியோபதியில் உள்ளனவா?

ஹோமியோபதியில் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு மருந்துகளை பயன்படுத்துகிறோம். தீவிர நிலையில் பயன்படுத்துவதற்கென்றே பல மருந்துகள் இருக்கிறது. ஸ்டீராய்டுகள் போல பக்க விளைவுகள் ஏற்படுத்துவதில்லை. நோய்த்தன்மை அறிந்து சரியான முறையில் மருந்துகளை கையாளும்போது பக்க விளைவுகள் இல்லாமல் நல்ல குணமாக்குதலை கொடுக்க முடியும்.

கொரோனா தொற்றிற்கான சிகிச்சையில் உங்கள் அனுபவம் பற்றி கூருங்கள். கையாள்வதில் என்னவிதமான நடைமுறை சிக்கல் உள்ளது?

மிதமான பாதிப்புகளுடன் வருபவர்களை எளிதில் குணப்படுத்திவிட முடிகிறது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்பவர்களிடம் அரை மணி நேரத்திற்கு ஒருமுறையோ அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையோ தொடர்ச்சியாக மருந்துகள் கொடுத்து தினசரி கண்காணித்து மருந்துகள் கொடுத்து வெகு விரைவாக தொற்றிலிருந்து மீட்டெடுக்க முடிகிறது. ஆனால் தீவிர நிலையில் மருத்துவமனையில் ICU இல் அனுமதிக்கப்பட்ட பிறகு பாதிக்கப்பட்டோரிடம் பேச முடிவதில்லை. நோயாளியுடனான தொடர்பு இல்லாதபோது மருந்துகளை கொடுத்து சரியாக இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை எடுத்துக்கொள்கிறாரா என்று கண்காணிக்க முடிவதில்லை. இதுபோன்ற துயரர்களை கையாள்வதில் நடைமுறை சிக்கல் உள்ளது.

ஆனால் மருத்துவமனைகளில் ஹோமியோபதி மருத்துவ முறையையும் அனுமதித்தார்கள் என்றால் தீவிர நிலையில் பாத்திக்கப்பட்டவர்களையும்  எளிதில் குணப்படுத்த முடியும். இந்த பெருந்தொற்று மாதிரியான காலங்களில் மருத்துவமுறையை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற வேண்டும். உயிரிழப்புகளை தவிர்க்கத் தான் பார்க்க வேண்டும். எனவே எந்த மருத்துவம் சிறந்தது என்று பார்க்காமல் நம்மிடம் இருக்கும் அனைத்து மருத்துவ முறைகளையும் பயன்படுத்தி உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது தான் நோக்கமாக இருக்க வேண்டும்.எந்த மருத்துவ முறையையும் உயர்வு தாழ்வுடன் பார்க்காமல் சமமாகப் பார்த்து பயன்படுத்தியிருந்தால் இரண்டாம் அலையில் பெரும்பாலான உயிரிழப்புகளை தவிர்த்திருக்க முடியும்.

மூன்றாம் அலை குறித்து உங்கள் பார்வை

உலக சுகாதார நிறுவனம் ஐந்து அலைகள் வரை வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் மூன்றாம் அலையானது இரண்டாம் அலை பாதிப்பு அளவிற்கு தீவிரமாக இருக்காது. ஆனால் குழந்தைகளைத் தாக்குவதற்கான வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுவதால் குழந்தைகளைப் பாதுகாப்பாக கவனிக்க  வேண்டும். கூடுமானவரையில் சானிடைசரைத் தவிர்த்து சோப்பு போட்டு கை கழுவுவது சிறந்தது. தண்ணீர் கிடைக்காத இடங்களில் சானிடைசர் பயன்படுத்தலாம். சானிடைசர் அதிகளவில் பயன்படுத்தும்போது சரும நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

முன்னெச்சரிக்கைக்காக தற்காப்பு மருந்துகளாக ஹோமியோபதியில் என்ன மருந்துகள் உள்ளன?

AYUSH அமைச்சகம் அமைத்த மருத்துவக் குழு ஆய்வு செய்து பரிந்துரை செய்துள்ள ஆர்சனிக் ஆல்பம் 30 நோய் தொற்று வராமல் பாதுகாத்துக்கொள்ள பயனுள்ளதாக இருக்கிறது. காலையில் மூன்று மாத்திரை தொடர்சியாக மூன்று நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம்.

தீவிர மூச்சுத் தொந்தரவிற்கு என்ன மருந்துகள் ஹோமியோபதியில் கொடுக்கப்படுகிறது?

கார்போவெஜ், ஜஸ்டிஸியா, குரோட்டலஸ் காரிடாஸ், ஆண்டிமோனியம் டாட்டாரிகம், Phosphorou இதுபோன்ற நிறைய மருந்துகள் தீவிர நிலை பாதிப்பிற்கு உள்ளன. இந்த வகை மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படியே எடுக்க வேண்டும்.

ஹோமியோபதி துறைக்கு அரசு என்னமாதிரியான உதவிகள் செய்தால் இந்த மருத்துவ முறை மக்களுக்கு எளிமையாக சென்றடையும் ?

ஹோமியோபதி உள்ளிட்ட ஒவ்வொரு மருத்துவ முறைக்கும் தனிப்பட்ட பெரிய மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அந்தந்த மருத்துவ முறையின் தனித்தன்மையான சிறப்புகள் என்னவென்று நிரூபிக்க முடியும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் AYUSH மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும். அப்படி செய்யும்போது சிகிச்சையில் தாமதம் ஏற்படாமல் தொற்று தொடக்க நிலையிலேயே AYUSH மருத்துவர்களை அனுமதிக்கும்போது விரைவில் குணப்படுத்தி உயிர் இழப்புகளை தடுப்பதோடு நோய் பரவலையும்  கட்டுப்படுத்த முடியும். எனவே கொரோனா போன்ற எந்த நோய்த் தொற்றிற்கும் ஹோமியோபதி சித்தா உள்ளிட்ட AYUSH மருத்துவர்களுக்கும் சிகிக்சை அளிக்கும் அனுமதியை வழங்கிட வேண்டும்.

தற்போது புதிய ஆட்சியில் சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற அனைத்து AYUSH மருத்துவ முறைகளுக்கும் சிகிச்சை மையங்கள் அளவில் தொடங்கப்பட வேண்டும். இதை அரசு மிக எளிமையாக செய்ய முடியும். அரசு மருத்துவர்கள் போதிய அளவில் இல்லையெனில் தனியார் மருத்துவர்களுக்கும் அனுமதியளித்து நடைமுறைகளை எளிமைப்படுத்தி கொடுக்கப்பட்டால் அனைத்து பகுதிகளிலும் ஹோமியோபதி சிகிக்சை மையங்கள் உருவாக்கி ஆரம்பகட்ட  பாதிப்பு நிலையிலேயே சிகிக்சையளித்து குணப்படுத்த முடியும்.

நிரந்தர ஆரோக்கியத்திற்கான உங்கள் ஆலோசனைகள்.

சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பது, நல்ல ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்வது, குளிர்சாதன அறைக்குள் உறங்குவதை தவிர்ப்பது நல்லது. ஜன்னல்களை திறந்து வைத்துக்கொண்டு காற்றோட்டமான இடங்களில் உறங்க வேண்டும். வாழ்வியலை சரி செய்வது, புறச்சூழல் மற்றும் அகச்சூழலை சுத்தமாக வைத்துக்கொள்வதுதான் நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நிரந்தரத் தீர்வாக இருக்கும். 

பிளீச்சிங் பவுடர்கள், சானிடைசர் தெரு முழுவதும் தெளிப்பது ,அதிகப்படியான மருந்துகள் பயன்படுத்துவது போன்றவைகள் மட்டுமே எந்த வகையிலும் நோய் கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாக்காது. நோய்க் கிருமிகள் தகவமைத்துக் கொண்டு இன்னும் வீரியமாக தாக்குவதற்கு வழிவகுக்கும். புறச் சூழலை எந்த அளவிற்கு ஆரோக்கியமாக வைத்திருக்கிறோமோ அந்த அளவிற்கு கிருமிகளின் உருமாறும் தன்மை குறைவாகவும் தாக்கம் குறைவானதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *