எத்தியோப்பியா

ஆப்ரிக்காவின் இதயமான எத்தியோப்பியாவில் நடக்கும் சண்டையின் பின்னணி என்ன?

ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் எத்தியோப்பியா நாட்டின் ஒரு பகுதியான டிக்ரே(Tigray) மீது அந்நாட்டின் பிரதமர் அபிய் அகமது அலி இம்மாத தொடக்கத்தில் ராணுவ நடவடிக்கைகளை தொடங்க உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை ’டிக்ரே மக்கள் புரட்சிக் குழு’வினை (TPLF – Tigray People’s Liberation Force) ஒடுக்குவதற்காக தொடங்கப்பட்டது என்று பிரதமர் அபிய் அகமது தெரிவித்திருந்தார். இந்த நடவடிக்கையானது தற்போது எத்தியோப்பியா நாட்டில் பூதாகரமாக வெடித்து உள்நாட்டு இன யுத்தத்திற்கு வழிவகுத்துள்ளது. இந்த உள்நாட்டுப் போரின் வரலாற்று பின்புலத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

உலக வரைபடத்தில் எத்தியோப்பியா
சண்டை நடக்கும் டிக்ரே பகுதி
 • எத்தியோப்பியா 55 நாடுகளின் கூட்டமைப்பான ஆப்ரிக்க யூனியனின் தலைமையகமாக இருந்து வருகிறது. இது ஆப்ரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய நாடாகும்.
 • எத்தியோப்பியாவில் முடியாட்சி 1974 ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் Derg எனும் தற்காலிக சோசலிச அரசு எத்தியோப்பியாவின் ஆட்சியைத் தொடர்ந்தது. அப்போது டிக்ரே பகுதியில் செயல்பட்டு வந்த மார்க்சிய அடிப்படையிலான புரட்சிக் குழுவானது டிக்ரே தேசிய இன மக்களுக்கு எத்தியோப்பிற்குள்ளாக உள்ளக சுயநிர்ணய உரிமையைக் கோரியது. Derg ராணுவம் எத்தியோப்பியாவின் தேசிய இன சிக்கலையும் தீர்க்காது, சோசலிசப் புரட்சியையும் நடத்தாது என்று டிக்ரே புரட்சிக் குழு உறுதியாக நம்பியது. டிக்ரே மக்களின் சுயநிர்ணய உரிமையையும், சுயாட்சியையும் வலியுறுத்தி 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் டிக்ரே மக்கள் புரட்சிக் குழு (TPLF – Tigray People’s Liberation Force). 
 • 1991 ஆம் ஆண்டு Derg ஆட்சியை எத்தியோப்பியா மக்கள் முடிவுக்குக் கொண்டு வந்தனர். Derg – கிற்கு முடிவு கட்டிய எத்தியோப்பியர்களில் முக்கியப் பங்காற்றியவர்கள் டிக்ரே புரட்சி குழுவினர். இதனைத் தொடர்ந்து டிக்ரே புரட்சிக் குழுவினர் தேசத்தின் ஹீரோக்களாகக் கொண்டாடப்பட்டனர்.
 • அதே 1991 ஆம் ஆண்டே டிக்ரே புரட்சிக் குழுவின் தலைவர் மெல்ஸ் ஜெனவி (Meles Zenawi) எத்தியோப்பியாவின் இடைக்கால அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் 1995 ஆம் ஆண்டு எத்தியோப்பியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமராக பதவி ஏற்றார். பின் எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி ( EPRDF – Ethiopian people’s revolutionary Democratic Front) எனும் கூட்டணி ஆட்சி உருவாக்கி ஆட்சி செய்து வந்தார் மெல்ஸ் ஜெனவி. எத்தியோப்பியா நாட்டின் இன கூட்டாட்சி அமைப்பை கட்டியெழுப்பியவராக பார்க்கப்பட்ட அவர் 2012 ஆம் ஆண்டு வரை அதிகாரத்தில் இருந்தார்.
 • காலப்போக்கில் எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி (EPRDF – Ethiopian people’s revolutionary Democratic Front) அரசு சர்வாதிகாரமாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு அடிக்கடி  பிராந்தியங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வந்தன. 
 • 2018 ஆம் ஆண்டு எத்தியோப்பிய  மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி, முன்னாள் உளவாளியான அபிய் அகமது அலி -யை பிரதமராக நியமித்தது. 
 • எத்தியோப்பியாவில் டிக்ரே(Tigray) இன மக்கள் 6% வாழ்கிறார்கள். ஒரோமோஸ் (Oromos) இன மக்கள் 34% மற்றும் அம்ஹரஸ் (Amharas) இன மக்கள் 27% வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் எத்தியோப்பிய  மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி கூட்டணியில் டிக்ரே புரட்சி குழு கட்சியினரே பலம் வாய்ந்தவர்களாகவும் ஒரோமோஸ் (Oromos)இன மக்கள் ஓராம் கட்டபடுவதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. பிரதமர் அபிய் எத்தியோப்பியாவின் பெரும்பான்மை இனமான ஒரோமோஸ் (Oromos) இனத்தைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 • இதனைத்தொடர்ந்து டிக்ரே புரட்சி குழு உறுப்பினர்களை முக்கிய அரசு பதவிகளிலிருந்து நீக்குவது, டிக்ரே புரட்சி குழு கைது செய்து வைத்திருந்த கைதிகளை விடுதலை செய்தது போன்ற  பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் பிரதமர் அபிய் அகமது ஈடுபட்டார்.
 • இதோடு நில்லாமல் பிரதமர் அபிய் புரோஸ்பெரிடி கட்சி (Prosperity Party) என்கிற புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கினார். இந்த கூட்டணியில் டிக்ரே புரட்சி குழு தவிர மற்றவர்கள் இணைந்தனர். மேலும் கட்சியின் தலைமை நாட்டின் தலைநகரான ஆடிஸ் அபாபா – வில் இருந்து மெய்க்கைலி (டிக்ரே பகுதியின் தலைநகரத்திற்கு) மாற்றப்பட்டது.
 • கடந்த நவம்பர் 3 ஆம் தேதி டிக்ரே புரட்சிக் குழுவின் இராணுவத்தினர் டிக்ரே பகுதியில் செயல்பட்டு வந்த எத்தியோப்பிய ராணுவத் தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தி அதை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் பிரதமர் அபிய் அகமது டிக்ரே பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை தொடங்குவதற்கு கட்டளையிட்டார். 
 • டிக்ரே புரட்சிக் குழுவை பலவீனப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் முக்கியமானது பிரதமர் அபிய் அகமது எரித்திரியா(Eritrea) நாட்டு அரசை சந்தித்தது. எரித்ரியா 1993-ம் ஆண்டு எத்தியோப்பியாவிலிருந்து பிரிந்து சென்ற நாடாகும். எரித்ரிய விடுதலை போராட்டத்தின் போது டிக்ரே புரட்சிக் குழு அவர்களுக்கு துணை நின்ற போதும், பின்னாட்களில் டிக்ரே புரட்சிக் குழுவிற்கும், எரித்ரிய அரசுக்கும் இடையில் பல்வேறு கசப்புகள் இருந்து வருகின்றன. டிக்ரே பகுதி எரித்திரியா நாட்டுடன் மிகப் பெரிய எல்லைகளைக் கொண்டுள்ளதால் எல்லை ரீதியான பிரச்சினையும் தொடர்ந்து வருகிறது. பிரதமர் அபிய்- யின் நடவடிக்கைகளின் பின்னணியில் எரித்திரிய அரசு இருப்பதாக டிக்ரே புரட்சி குழு குற்றம் சாட்டுகிறது. 
 • டிக்ரே புரட்சிக் குழு முன்னாள் சூடான் நாட்டின் சர்வாதிகாரியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தது. தற்போது சூடானில் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கும் அரசுடன் டிக்ரே புரட்சி குழு மீண்டும் நட்புறவை ஏற்படுத்துமாயின் பிரதமர் அபிய்- யின் ராணுவ நடவடிக்கைகள் பிரதமருக்கு எதிராக திரும்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இனி வரும் நாட்களில் ஆப்பிரிக்காவின் கொம்பு என அழைக்கப்படும் (Horn Of Africa) பகுதியில் இனி சச்சரவுகளுக்கு பஞ்சமிருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *