இந்திய அரசியற் பொருளாதார வரலாற்றில் பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் இடம் – குருசாமி மயில்வாகனன்

(பெரியவர் வ. உ. சிதம்பரம்பிள்ளையின் 84ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி)

 உலக வரலாற்றில் மனித சமுதாய அமைப்பானது இதுவரை ஐந்து வகைகளைக் கண்டிருப்பதாகப் பேராசான்கள் கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் மற்றும் விளாதிமீர் இல்யீச் லெனின் ஆகியோரால் உருவாக்கப்பட்ட மார்க்சிய – லெனினியம் எனும் சமூக அறிவியல் கொள்கை அறிவிக்கிறது.

அவை 

  1. புராதனப் பொது உடமைச் சமுதாயம்,
  2. ஆண்டான் – அடிமைச் சமுதாயம்,
  3. நிலப்பிரபுத்துவச் சமுதாயம்,
  4. முதலாளித்துவச் சமுதாயம்,
  5. சோசலிசச் சமுதாயம் 

ஆகும். இந்த வகைப்பகுப்பானது அச்சமுதாயத்தின் உற்பத்தி முறைகளைக் கொண்டே வகைப்படுத்தப்படுகிறது.

உற்பத்தி முறை என்பது மனிதர்கள் தாங்கள் வாழ்வதற்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்து கொள்கின்ற அமைப்பு முறையைக் குறிப்பதாகும்.

இந்த ஐவகையான உற்பத்தி முறைகளும் சொல்லப்பட்ட வரிசை முறையில் அடுத்தடுத்து உருவாகும் என்பதில்லை. இடைக்கட்டமாகவும் சில சூழ்நிலைகள் உருவாகலாம்.

உற்பத்தி முறையில் நேர்மறையும் எதிர்மறையும்

உலகிலுள்ள அனைத்தும் நேர்மறையும் எதிர்மறையும் கொண்டதாகும். எல்லா நேர்மறைக்கும் எதிர்மறை உண்டு. எல்லா எதிர்மறைக்கும் நேர்மறை உண்டு. 

நிலப்பிரபுத்துவ சமூக உற்பத்தி முறையை நேர்மறை எனக் கொண்டால் அதற்குள்ளேயே உருவாகின்ற எதிர்மறைக் கூறுகள்தான் முதலாளித்துவ சமூக உற்பத்தி முறைக்கான கூறுகளாகும்.

அதுபோல முதலாளித்துவ சமூக உற்பத்தி முறையை நேர்மறை எனக் கொண்டால் அதற்குள்ளே உருவாகின்ற எதிர்மறைக் கூறுகள்தான் தொழிலாளி வர்க்கக் சமூக உற்பத்தி முறை (சோசலிச)க்கான கூறுகளாகும். 

நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்குள் உருவாகும் முதலாளி வர்க்கக் கூறுகள் வளர்ந்ததும் தக்க தருணத்தில் வெளிப்பட்டு நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை அழித்து முதலாளித்துவ உற்பத்தி முறையினைச் சிறிதுசிறிதாக உருவாக்கி வளர்ப்பதற்காகப் போராடுகின்றன.

அதுபோன்றே முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் உருவாகும் தொழிலாளி வர்க்கக் கூறுகள் வளர்ந்ததும் தக்க தருணத்தில் வெளிப்பட்டு முதலாளித்துவ உற்பத்தி முறையை அழித்து சோசலிச உற்பத்தி முறையினைச் சிறிதுசிறிதாக உருவாக்கி வளர்ப்பதற்காகப் போராடுகின்றன.

புரட்சியின் மூலம் மாற்றமடைந்த சமூக அமைப்புகள்

புரட்சி என்பது ஓர் அரசியற் சொல் ஆகும். பழைய சமூகத்தின் பழைய உற்பத்திமுறையை அழித்து புதிய சமூகத்திற்கான புதிய உற்பத்தி முறையை நிலை நிறுத்துவதற்காக பழைய சமூகத்தின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் புதிய உற்பத்தி முறையின் செயல்தான் புரட்சி ஆகும். இதுவே புரட்சி எனும் சொல்லிற்கான உண்மையான பொருளாகும்.

மாற்றமடைந்து கொண்டிருந்த அடிமை வர்க்கம் நடத்திய புரட்சியின் மூலமாகத்தான் ஆண்டான் – அடிமைச் சமூகமானது நிலப்பிரபுத்துவ அமைப்பிற்குள் நுழைந்தது.

மாற்றமடைந்து கொண்டிருந்த விவசாயி வர்க்கம் நடத்திய புரட்சியின் மூலமாகத்தான் நிலப்பிரபுத்துவ சமூகமானது முதலாளித்துவ அமைப்பிற்குள் நுழைந்தது.

மாற்றமடைந்து கொண்டிருந்த தொழிலாளி வர்க்கம் நடத்திய புரட்சியின் மூலம்தான் முதலாளித்துவ சமூகமானது சோசலிச அமைப்பிற்குள் நுழைந்தது. 

இம்மூன்று வகையான மாற்றங்களும் புரட்சிகளே. ஆக, புரட்சி என்பது சமூகத்தில் சமூக வளர்ச்சியின் இயற்கை விதிகளின்படி இயல்பாக நடைபெற வேண்டிய நிகழ்ச்சிகள் ஆகும்.

ஆனால் ஒவ்வொரு சமூக அமைப்பும் தன்னை மாற்றிக்கொள்ள அனுமதிக்காமல் தொடர்ந்து தன்னையே நிலைநிறுத்திக் கொள்ள விரும்புகின்றன. அதனால் மாற்றத்தைக் கொண்டுவர முயலுகின்ற பிற சக்திகளைப் பலாத்காரமாக ஒடுக்குகின்றன.

ஒரு வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும்போது எதிர்ப்பக்கமாக இருக்கும் இன்னொரு வர்க்கம் இதை எதிர்கொண்டு வீழ்த்துவதற்காகக் கையாளும் வழிமுறைகளானது அதாவது ஒரு புரட்சியை எதிர்கொள்ளும் முறையானது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அது ஆயுதத்தைத் தாங்கியும் எதிர்கொள்ளலாம். அல்லது ஆயுதம் தாங்காமலும் சரணடையலாம். இது இரண்டு வர்க்கங்களுக்கிடையிலான வாழ்வா? சாவா? போராட்டம் என்பதால் அதைக் களத்திற்கு வெளியே இருந்து தீர்மானிக்க முடியாது.

ஆயுதத்தை வைத்துத்தான் தீர்மானம் என எதிர்பார்த்திருந்தால் ஒருவேளை எதிரிகள் ஆயுதம் தாங்கி வந்தால் அதை எதிர்கொள்ள முடியும். ஆனால், ஏற்கனவே எதிரிகள் ஆயுதம் தாங்கியுள்ள சூழலில் ஆயுதம் தவறு எனத் தீர்மானித்துக் கையை வீசிக்கொண்டு களத்தில் இறங்கினால் அவ்வாறு இறங்கும் வர்க்கம் தோல்வியுறவும், அழிந்துபடவுமே நேரும்.

இதில் வன்முறை – மென்முறை; ஹிம்சை – அஹிம்சை; பாவம் – புண்ணியம்; ஜனநாயகம் – சர்வாதிகாரம், என்பதெல்லாம் பொருளற்றவை, போலித்தனமானவை. ஏமாற்றக்கூடியவை.

வரலாற்றில் ஆண்டான் – அடிமைச் சமூகத்தில் அடிமைகளின் வெற்றியை ஆயுதமே தீர்மானித்தது. அதுபோல நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கமானது ஆயுதத்தாலேயே வீழ்த்தியது. தொழிலாளி வர்க்கமும் அவ்வாறே வென்றது. நிற்க, நாம் விசயத்திற்கு வருவோம்.

ரஷ்யப் புரட்சி ஏற்படுத்திய மாற்றம்

சமூக வரலாற்றை அதாவது சமூக வரலாற்றின் இயக்கத்தை மார்க்ஸியம் இவ்வாறு விளக்கியபோது அப்போது உலகை ஆண்டு கொண்டிருந்த முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள் அதை நம்பவில்லை. மாறாக கற்பனைக் கதை என ஏளனம் பேசின. 1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் ஜார் மன்னரது அதிகாரமானது கம்யூனிஸ்டுக் கட்சியால் வீழ்த்தப்பட்டது. அப்போதும்கூட ஏதோ ஒரு எதிர்க் கட்சியினர் நடத்திய ராணுவப் புரட்சி என்றுதான் கருதினார்கள். ஆனால், முதலாளிகளின் சொத்துரிமை ரத்து செய்யப்பட்டதாக சோவியத் ரஷ்யாவில் அறிவிக்கப்பட்டபோதுதான் உலக முதலாளிகளும் உலக முதலாளித்துவவாதிகளும் அதிர்ச்சியடைந்தனர். ’’முதலாளிகள் இல்லாமல் ஒரு நாடா, அப்படியுமிருக்க முடியுமா?’’ எனப் பீதியில் கலங்கினர்.

உலகமெங்கும் உருவாகிக் கொண்டிருந்த தொழிலாளி வர்க்கத்தினரிடம் மார்க்சியக் கருத்துக்கள் புயல்வேகத்தில் பரவியதைக் கண்டு மேலும் அதிர்ச்சிக்குள்ளாயினர். உடனடியாக இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் தாங்கள் சவக்குழிக்குள் விழுவது உறுதி என்பதையும் உணர்ந்து கொண்டனர்.

தொழிலாளரது கூலி மற்றும் பண்டங்களின் விலை ஆகியவற்றை நிர்ணயம் செய்வதையும், மூலதனமிடுவதால் அதற்கான லாபத்தைத் தாங்களே பெறுவதையும் தங்களது வர்க்கப் பிறப்புரிமையாகக் கருதிவந்த அவர்களால் இந்த மாற்றத்தை நம்பவே முடியவில்லை. சமூகத்தின் இயற்கையான வளர்ச்சிப் போக்கைத் தடுத்து தங்களது விருப்பத்திற்கேற்ப மாற்றியிருந்த அவர்கள் இம்மாற்றத்தை முறியடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

ஆனால், அவர்கள் எழுதி வைத்திருந்த உலகப் பொருளாதார வரலாற்றில் அவர்களுக்கான பதில் கிடைக்கவில்லை. மேலும் இவ்வாறான, சொத்துரிமையை ரத்து செய்யும் புரட்சி எவ்வாறு சாத்தியமானது என்பதை எந்த ஒரு முதலாளித்துவப் பொருளாதார, அரசியல் மேதையாலும் விளக்க முடியவில்லை. எனவே இறுதியில் அவர்கள் மார்க்சியத்திடமே தஞ்சமடைந்தனர். அதிலேயே தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் தேடினர். அதைக் கண்டும்பிடித்தனர். 

முதலாளித்துவம் கண்டுபிடித்த வழி

தொழிலாளிகள் ஒன்று திரண்டு தொழிலாளி வர்க்கமாக உருவாவதற்கான கூறுகள் எங்கு நிலவுகின்றன என்பதை மார்க்சியம் எவ்வாறு குறிப்பிடுகின்றது என்பதை அறிந்து கொண்டனர். அக்கூறுகளை அழிக்கத் தொடங்கினர். இன்று உலக முதலாளிகளின் வேலையே இதுதான். தொழிலாளி வர்க்கம் எவ்வாறு அரசதிகாரத்தைக் கைப்பற்றும் வர்க்கமாக உருவாகிறது என்பதற்கு மார்க்சியம் சொன்ன அரசியற் பொருளாதாரக் காரணங்களையும் அதற்கான கூறுகளையும் முறியடிக்கும் விதமாக முதலாளித்துவம் தனது போக்குகளைத் திட்டமிட்டுக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதற்கான இன்றைய ஒரு சிறு உதாரணம், அவுட்சோர்சிங் முறை (Out sourceing System).

குறிப்பாகத் தொழிலாளி வர்க்கத்திடம் தொழிலாளி வர்க்கக் கூறுகள் உருவாகாமல் தடுத்தது; தொழிலாளி வர்க்கப் பண்பாடுகளைச் சிதைத்தது பலவகையான சித்தாந்த மற்றும் நிறுவன வடிவங்களை எடுத்துச் செயல்பட்டது, ஆகியவற்றையும் சொல்லலாம்.

முதலாளித்துவ வர்க்கத்தின் இத்தகைய புதிய வடிவங்களை எதிர்கொள்ள முடியாத புரட்சிக் கட்சியினர் தாங்கள் புரட்சியை நடத்த வேண்டும் என்பதைக் கைவிட்டுச் சில்லறைச் சீர்திருத்தங்களில் சமாதானம் ஆகிக் கொள்வதன் மூலமாகத் தங்களின் புரட்சி ஆசையைத் தீர்த்துக் கொண்டனர். அதற்கான சாக்குப்போக்காக ஜனநாயக வடிவம், வன்முறை எதிர்ப்பு, ஆயுதப் போராட்ட மறுப்பு என சமரச சுத்த சன்மார்க்கவாதிகளைப்போல் பேசித் திரிகின்றனர்.

ஒரு கம்யூனிஸ்டுக் கட்சிக்கான வேலை புரட்சியை நடத்துவதைத் தவிர வேறேதும் இருக்க முடியுமா?

முதலாளித்துவம் செய்த அடுத்த முக்கியமான அதிரடி நடவடிக்கை என்னவென்றால், தான் அடித்து வீழ்த்திய நிலப்பிரபுத்துவ வர்க்கத்துடனான போரைத் தவிர்த்துக் கொண்டு சமரசமாகிக் கொண்டதுதான்.

1917க்குப் பின்னர் காலனியாதிக்கக் காலகட்டத்தின் வளர்ச்சிப்போக்கிலே இவ்வாறான முடிவுகளுக்கு முதலாளித்துவ வர்க்கம் தள்ளப்பட்டதால், அது எடுத்த முடிவானது ஒரு நாட்டின் சுயமான முதலாளித்துவ வளர்ச்சியைத் தடுத்ததில் போய் நின்றது. நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையினை வீழ்த்துவதைத் தடுத்து அதனுடம் சமரசமாகிக் கொண்டு அதை அனுமதிக்கும் போக்கினைக் கடைப்பிடித்தது. அதன்மூலம் தேசிய முதலாளித்துவ வளர்ச்சியினை மட்டுப்படுத்தியது.

ஆனால், நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை அழிக்காமல் முதலாளித்துவ உற்பத்தி முறையை உறுதியுடனான தன்மையில் நிலைநிறுத்த முடியாது என்பதால் இப்படியான சிக்கலில் சிக்கிக்கொண்ட நாடுகள் தங்களது சுயமான வளர்ச்சியை அடையாமல் தேங்கி நின்றன, நிற்கின்றன.

நிலப்பிரபுத்துவத்திலிருந்து மீள முடியாத இந்தியாவின் நிலை

1900களின் தொடக்கத்தில் இந்தியாவிலும் இத்தகைய நிலைமையே நிலவியது. அதிலிருந்து மீள முடியாத நிலையே இன்றும் நீடிக்கிறது.

இந்தியாவில் ஏற்கனவே காலனியாதிக்க அதிகாரமானது நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையினைச் சிதைத்துக் கொண்டிருந்த வேளையில், இப்போது புதிதாக உருவாகும் முதலாளித்துவத்தின் சுயமான வளர்ச்சிக் கூறுகளும் சிதைக்கப்பட்டதன் மூலம் பலவீனமான தன்மை கொண்ட சார்பு வர்க்கமாக முதலாளித்துவ வர்க்கம் வடிவமைந்தது.

இந்தியாவில் நிலவிய இத்தன்மை குறித்து, ‘’இவ்வாறு புதிய உலகத்தைப் பெறாமலும் பழைய உலகத்தை இழந்தும் நிற்கின்ற நிலமையானது இந்தியரது இன்றைய துயரத்திற்கு ஒரு தனித்துவமான சோர்வைக் கொடுக்கிறது. மேலும் பிரிட்டனால் ஆளப்படும் இந்தியாவை, அதன் தொன்மையான மரபுகள் அனைத்திலிருந்தும் அதன் கடந்த கால வரலாறு முழுவதிலிருந்தும் பிரித்து வைத்திருந்தது.’’ (KM & FE collection works. vol.3 pa.194 – 195) எனப் பேராசான் கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

காலனியாதிக்க பொருளாதார முறையின் எதிர்மறைக் கூறு சுதேசியம்

இந்நிலையில், காலனியாதிக்கப் பொருளாதார முறைக்குள் உருவாகிய எதிர்மறைக் கூறுகள் சுயமான முதலாளித்துவப் பொருளாதார உருவாக்கத்தைக் கோருவதற்காக எழுந்து நின்றன. காலனியாதிக்க இந்தியப் பொருளாதாரத்தை ஆய்வு செய்த சோவியத் பொருளாதாரவாதிகள் இந்நிலையைப் பற்றிக் குறிப்பிடும்போது ’பொருளாதாரத்தின் அகநிலைப் போக்குகள்’ எனக் கூறுகின்றனர். இந்தியாவில் அப்போக்கின் செயல்பாட்டுப் பெயராக நாம் குறிப்பிட வேண்டியதுதான், ‘’சுதேசியம்’’.

’சுதேசியம்’ என்பது சாராம்சத்தில் ஒரு முதலாளித்துவ அரசியல் பொருளாதாரக் கொள்கையாகும். சுயமான முதலாளித்துவ வளர்ச்சிக் கூறுகளை நசுக்கிய காலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து உருவானதுதான் சுதேசியப் பொருளாதாரக் கொள்கை ஆகும். இந்தியாவில் அக்கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் பலரிருந்தார்கள்.

ஆனால் அவர்களுள் அக்கொள்கையை மக்கள் மயமாக்கப்பட்ட போராட்ட நடைமுறையில் கொண்டுவந்து நிறுத்திய முதல் இந்தியர், தமிழராய்ப் பிறந்த பெரியவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை ஆவார்.

சுதேசியத்தை மக்கள் மயமாக்கிய தலைவர் வ.உ.சி

தமிழகத்தில் சுயமான முதலாளித்துவ வளர்ச்சிக்காக அறைகூவல் விடுக்கப்பட்ட சுதேசியப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய முதல் மக்கள் தலைவரும் அவர்தான். தான் நடத்துகின்ற போராட்டத்தின் இத்தகைய தன்மை குறித்து அவர் அறிந்திருப்பதற்கான வாய்ப்புகள் அவருக்குக் கிட்டவில்லை. ஆயினும் அவரிடமிருந்த இயல்பான, உண்மையான நாட்டுப்பற்றும் நாட்டு மக்கள்மீது அவர் கொண்டிருந்த அக்கறையும்தான் இவ்வாறான முடிவுகளுக்குக் கொண்டுபோய் அவரை நிறுத்தியிருக்கிறது என்பதை அவரது வாழ்க்கைச் சம்பவங்களைச் சரியாகக் கவனிப்பதன் மூலமாக அறிய முடியும்.

சுதேசியப் பண்டக சாலை, கைத்தொழில் வளர்ச்சிச் சங்கம், தர்ம சங்கம், தர்ம நெசவுச் சாலை மற்றும் சுதேசிய நாவாய்ச் சங்கம் போன்ற அவரது முயற்சிகள் அனைத்தும் அவ்வாறானதே. குறிப்பாக சுதேசிய நாவாய்ச் சங்க முயற்சிகள் குறிப்பிடத்தக்கன. மேலும் அவரால் இயக்கப்பட்ட கோரல் மில் ஆலைத் தொழிலாளர் போராட்டமும் இத்தகைய நோக்கிலானதே. 

வ.உ.சி-க்கும், அவருக்கு முன்பு கப்பல் கம்பெனி துவங்கியவர்களுக்குமான வேறுபாடு

தூத்துக்குடி சுதேசி கப்பல் கம்பெனி தொடங்கப்படுவதற்கு சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்னரே வங்காளத்தில் ரவீந்திரநாத் தாகூர் குடும்பத்தைச் சேர்ந்த ஜியோதிந்தர நாத் என்பவர் 1884இல் ‘Inland River Steam Navigation Companyயைத் தொடங்கி நடத்தினார். ஐந்து கப்பல்களை வாங்கினார். குல்னாவிலிருந்து பாரிசால் வரை பயணிகளையும் கல்கத்தாவரை சரக்குகளையும் அக்கப்பல்கள் கொண்டு சென்றன. பிரிட்டிஷ் கப்பல் கம்பெனியான `ஃப்ளாடில்லா கம்பெனி` அரசுடன் கூட்டுச் சேர்ந்து சுதேசிக் கம்பெனியை நசுக்கியது. இதனால் கம்பெனி வீழ்ச்சியடைந்தது.

அதன் பின்னர் 1905இல் சிட்டாகாங் நகரைச் சேர்ந்தவர்கள் `பெங்கால் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி`யைத் தொடங்கினர். இதுபோல சுமார் இருபது கம்பெனிகள் அப்போது இயங்கின. அவையனைத்துமே பெரியவர் முன்னின்று நடத்திய சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியைப் போன்றே வீழ்ந்தன. இருப்பினும் மற்ற சுதேசியக் கப்பல் விடும் முயற்சிகளுக்கும் பெரியவரது கப்பல் விடும் முயற்சிக்கும் ஒரு வேறுபாடு உண்டு.

அது என்னவெனில் பெரியவருக்கு முன்னர் பிற கம்பெனிகளை நடத்தியவர்கள் எவரும் அரசியலின் பிற அமசங்களில் நேரடியாகக் களத்தில் இறங்கி ஈடுபடாதவர்களாக இருந்தார்கள். ஆனால், பெரியவரோ ஒரு தீவிரமான நடைமுறை அரசியல்வாதியாக இருந்தார். தனது கொள்கையை எவ்விடத்திலும் விட்டுக் கொடுக்காதவராகவும் இருந்தார்.

தமிழகத்தில் தனியொருவராக சுதேசியப் போராட்டத்தை தாங்கியவர்

தமிழகத்தைப் பொறுத்தவரையிலும் தனியொரு மனிதனாக சுதேசியப் போராட்டத்தைத் தாங்கிக் கொண்டிருந்தவர் பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளைதான் என்பதற்கான ஆதாரங்கள் உண்டு. அவரில்லாத நிலையில் சுதேசியப் போராட்டங்கள் தோல்வியடைந்ததும் அவருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனைக்கான தீர்ப்பினில் ஆங்கிலேய நீதிபதிகள் அவர் குறித்து கூறியுள்ள கருத்துக்களுமே அதற்கான ஆதாரங்களாகும்.

போராட்டக் களத்தில் அஞ்சா நெஞ்சனாக நின்ற அவரை அகற்றாமல் காலனியாதிக்கவாதிகள் தங்களுக்கான லாபத்தை நோக்கி ஓரடிகூட எடுத்து வைக்க முடியாது என்பதால்தான் அற்பக் காரணங்களைச் சொல்லிப் பெரியவரைச் சிறையில் தள்ளினார்கள்.

அவர் சிறையிலிருந்த சுமார் ஐந்தே ஆண்டுகளுக்குள் பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்து (அவற்றை சீர்திருத்தம் என அவர்கள் அழைத்துக் கொண்டனர்) ’சுதேசியம்’ எனும் போராட்டக் கொள்கையை வெறும் நுகர்வுக் கொள்கையாக பிரிட்டிஷ் அரசின் கைப்பாவைகளாக இருந்தவர்கள் மாற்றினர். சிறையிலிருந்து வெளிவந்த பெரியவரால் ’சுதேசிய’க் கொள்கையைத் தனிமனித அளவில் கடைப்பிடிக்க முடிந்ததே தவிர, முன்புபோல அதைச் சொல்லி மக்களை அணி திரட்ட முடியவில்லை. அப்படி ஒரு அவசியமே அவருக்கு ஏற்படாத அளவிற்கு சூழ்நிலை மாற்றப்பட்டிருந்தது. 

பிரிட்டிஷாரின் போலிசுக்கு அஞ்சிய தலைவர்கள்

அவர் சிறையிலிருந்து வெளிவந்தபோது அவரை வரவேற்க ஒருவரும் செல்லவில்லை என்பதை ஒரு பெரும் குற்றச்சாட்டாகப் பலர் கூறுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால் அது ஏன் நடந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். மக்கள் வரவேற்கச் செல்லவில்லை என்பதை விடுங்கள். பின்னாளில் தலைவர்களாக அறியப்பட்டவர்களெல்லாம்கூட அப்போது எங்கே போனார்கள்? அவ்வளவு ஏன், 1912லிருந்து சென்னையில் அவர் வாழ்க்கை எனும் செக்கை இழுத்துக்கொண்டிருந்தபோது எந்தத் தலைவன் அவரை ஆதரித்தான்? தமிழகத்தில் அப்போது யாருமேயில்லையா? எல்லோரும் வேற்றுக் கிரகத்திற்குப் போயிருந்தார்களா? இல்லையே?. அதற்கான காரணம் என்ன?.

இரண்டு காரணங்கள் புலப்படுகின்றன. ஒன்று, அவர்கள் போலீஸ், கைது, சிறை ஆகியவற்றிற்காகப் பயந்தார்கள். இரண்டு அவரின் தீவிரமான கொள்கைப் பிடிப்பிற்காகத் தயங்கினார்கள். 

இதில் முதலாவதாகச் சொல்கின்ற பிரிட்டிஷாரின் நெருக்கடி எவ்வாறு இருந்தது என்பது இன்னொரு கட்டுரைக்கான தலைப்பாகும்.

பிரிட்டிஷாரின் போலீசுக்குப் பயந்துதான், பிரிட்டிஷ் அரசு தொடுக்கும் வழக்கிற்குப் பயந்துதான் சிறைக்குப் பயந்துதான் அப்போதைய அனைத்துத் தலைவர்களும் பெரியவரைப் புறக்கணித்தார்கள். தொடர்புகொள்ள அஞ்சினார்கள். ஆதரிக்காமல் ஓடினார்கள்.

மீனாட்சியம்மாளின் தீரம்

கைதுக்கும் சிறைக்கும் பயந்துபோய் பல்வேறு சமாதானங்களைச் சொல்லிக் கொண்டு கடிதங்களை எழுதிக் கொடுத்தவர்களை நாமறிவோம். ஆனால், சிறையில் பெரியவரைக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்பதையறிந்து, விட்டுவிடுங்கள் என்று சொல்லாமல், ‘தீர்ப்பின்படி அவரை உடனே நாடு கடத்துங்கள்` என ஆங்கிலேய அரசிற்குக் கடிதம் எழுதினார் பெரியவரின் மனைவி மீனாட்சியம்மாள். கருணைகோரிக் கடிதம் எழுதிய தன் தந்தையைக் கடிந்துகொண்டானே பகத்சிங், அவனைப்போல.

மீனாட்சியம்மாளின் வாழ்க்கை குறித்து எந்தப் பெண்ணிலைவாதிகளாவது அறிந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறார்களா?.

பெரியவருக்கு ஏற்பட்ட இதே நிலைதான் சுதேசியம் பேசிய புதியகட்சிக்காரர்கள் அனைவருக்கும் அப்போது நிகழ்ந்திருக்கிறது. 

இந்தியச் சூழலானது, பிரிட்டிஷாரின் விருப்பத்திற்குட்பட்டவராக இருந்த காந்தியாரின் கைகளில் மக்கள் திரண்டிருந்த காங்கிரசு தஞ்சமாகிக் கிடந்தது. தமிழகச் சூழலானது, பிராமணர், பிராமணரல்லாதார் விசயங்களை முன்னிலைப்படுத்தியவர்களின் செல்வாக்கில் ஆட்பட்டிருந்தது.

இவ்விருபோக்குகளுமே சுதேசியத்தை ஒப்புக்குப் பேசியது அல்லது பேசாமல் கைவிட்டது.

காங்கிரசிற்குள் வ.உ.சி பேசிய சமூக அரசியல்

காங்கிரசில் இருந்தபோது சமூக நிலைமைகள் குறித்துத் தனது கருத்துக்களைச் சொல்லத் தயங்கிய அல்லது சொல்லாத விசயங்களைப் பெரியார் ஈ.வே.ரா தனி இயக்கம் தொடங்கித் தீவிரமாகச் சொல்லத் தொடங்கினார். ஆனால் அதே விசயங்களை காங்கிரசில் இருந்து கொண்டே பேசிய ஒரே தலைவர் பெரியவர் வ.உ.சிதான். சேலத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் அவர் பேசிய தலைமையுரையே அதற்குச் சாட்சி. ஆனால் அத்துடன் அவர் காங்கிரசுடான உறவினை முறித்துக் கொண்டார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

மாறுதலடைந்திருந்த தமிழகச் சூழலானது பெரியவருக்கு மட்டுமல்ல சுதேசியம் பேசிய அவரது சகாக்களான சுப்ரமணிய பாரதிக்கும் சுப்பிரமணிய சிவத்திற்கும் அதே வரவேற்பைத்தான் கொடுத்தது. பால கங்காதரத் திலகரது போக்கும்கூட பிற்காலங்களில் அப்படியிருந்ததை நாம் அவதானிக்க முடியும்.

திலகருக்கும் வ.உ.சிக்கும் இருந்த வேறுபாடு

திலகரைப் பெருமைப்படுத்துவதற்காகவே அவரைத் தனது அரசியல் குருநாதர் எனப் பெரியவர் குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில் சமூகம் குறித்த கருத்துக்களில் மட்டுமல்லாமல், அரசியற் கருத்துக்களிலும்கூடப் பிற்காலத்தில் இருவருக்கும் சில அடிப்படையான விசயங்களிலேயே மாறுபாடு இருந்திருப்பதைக் கூர்மையாகக் கவனித்தால் நாம் அறிய முடியும். அதனாலேயே திலகரது போராட்ட நடைமுறைகளைப் பெரியவர் தமிழகத்தில் கடைப்பிடிக்கவில்லை. ஒருவேளை அப்போது திலகரது உண்மையான சீடராகப் பெரியவர் இருந்திருந்தால் அவருக்கு வரலாறு கொடுத்திருக்கும் இடம் வேறாக இருந்திருக்கும்.

உண்மை இவ்வாறிருக்க, பெரியவரை இந்துத்துவத் திலகரின் வாரிசாகவும் பிற்போக்கு இந்துத்துவக் கருத்தியலாளராகவும் முற்போக்காளர்கள் என்ற போர்வையில் ஒளிந்துள்ள சில பிற்போக்குவாதிகள் சித்திரிக்க முயல்வது பகுத்தறிவற்ற மூடச்செயலும் கண்டனத்திற்குரிய விஷமச் செயலுமாகும்.

பெரியவரின் சிறைக்குப் பின்னால் சுதேசியத்தின் நிலை

சரி, பெரியவர் சிறை மீண்டதற்குப் பின்னால் தமிழகத்தில் சுதேசியம் கைவிடப்பட்டிருந்ததா? என்றால், ஆம், கைவிடப்பட்டிருந்தது என்பதுதான் உண்மை. அதன்மூலமாக சுயமான முதலாளித்துவக் கூறுகளுக்கான ஆதரவும் கைவிடப்பட்டிருந்தது. அதனால் முதலாளித்துவ வளர்ச்சிக்கான கூறுகளும் மட்டுப்படுத்தப்பட்டன. இந்நிலை தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியா முழுமைக்குமானதாகத்தானிருந்தது. இதற்குத் தூண்டுதலாக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியிருந்தது.

சுதேசியக் கொள்கையானது வளர்த்தெடுக்கப்பட்டு இயக்கமாகி அதன்வழியாக முதலாளித்துவ வர்க்கம் சுயமானதாக வளர்ந்திருக்குமேயானால் சகல வளங்களும் உள்ள இந்தியாவில் முதலாளித்துவ வர்க்கம் வெகு சீக்கிரமாக வளர்ந்திருக்கும். அது வளர்ந்திருப்பதோடு மட்டுமில்லாமல் தொழிலாளி வர்க்கத்தையும் பிரம்மாண்டமானதாக உருவாக்கி வளர்த்தெடுத்திருக்கும். பின்னர் அதனுள் உருவாகும் எதிர்மறைக் கூறுகள் தொழிலாளி வர்க்கத்திற்கு அரசியற் பயிற்சி கொடுத்து அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலைக்குக் கொண்டுபோயிருக்கும்.

இது ஒரு ஊகம்தான். அனால், அவ்வாறு நடந்திருக்கும் எனச் சொல்வதை மறுத்தால் அவ்வாறெல்லாம் நடந்திருக்காது என சொல்லப்படுவதையும் மறுக்க  முடியும்.

எவ்வாறாயினும் இந்தியாவில் சுயமான முதலாளித்துவ வளர்ச்சிக்காக எழும்பிய ’சுதேசியம்’ எனும் கொள்கையானது கைவிடப்பட்டுவிட்டது என்பதைத்தான் வரலாறு நமக்குக் காட்டுகிறது.

சுதேசி கொள்கையின் முன்னோடி வ.உ.சியே என்பது சொல்லப்பட வேண்டும்

இன்றைய நிலையில் `சுதேசியம்’ எனும் கொள்கை அவசியமானதா என்றால் அது ஆய்வுக்குரியதே. ’சுதேசியம்` எனும் முதலாளித்துவக் கொள்கையை விடவும் அதிலிருந்து வளர்ச்சி பெற்ற முற்போக்கான கொள்கைகள் உருவாகிவிட்டன. அக்கொள்கைகளிலும் சுதேசிய மனப்பான்மை இல்லாமலில்லை. மேலும் சுதேசியக் கொள்கையை முதலாளித்துவம் இனிக் கைக்கொள்ளுமா என்பதும் கேள்விக்குரியது. ஆனாலும் வரலாற்றில் சுதேசியக் கொள்கையானது முற்போக்கான கொள்கை என்பதை யாரும் மறுக்க முடியாது.

எனவே, இந்தியாவின் இயல்பான, சுயமான வளர்ச்சிக்கான சுதேசிக் கொள்கைக்காக முன்னோடிச் செயற்பாட்டை ஒரு மக்கள் போராட்டமாக நடத்திக் காட்டிய, அந்த வகையில் இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கிய ஒரே இந்தியத் தலைவர் பெரியவர் வ.உ.சிதம்பரம்பிள்ளைதான்.

அவரை அவர்க்குரிய அந்த இடத்தில் வைத்துப் பேச வேண்டும் என்பதே அவருக்கு நாம் செலுத்தும் மரியாதையும் நன்றியும் கடமையுமாகும். 

அதுமட்டுமல்ல, அதுதான் எதிர்கால விடுதலைக்கான பல்வேறு வழிகளின் ஓர்  அம்சத்தைச் சுட்டிக் காட்டக் கூடியதுமாகும். 

– குருசாமி மயில்வாகனன்

எழுத்தாளர், சமூக ஆய்வாளர், மார்க்சியவாதி என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர். வ.உ.சி அவர்களின் வாழ்க்கை குறித்து தொடர்ச்சியாக எழுதியும், ஆய்வு மேற்கொண்டும் வருபவர்.

தொடர்புக்கு: gmayil64@gmail.com

(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Radicals)

One Reply to “இந்திய அரசியற் பொருளாதார வரலாற்றில் பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் இடம் – குருசாமி மயில்வாகனன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *