தண்ணீர் மேலாண்மைக்கான சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்திய ஒன்றிய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள 2019-ம் ஆண்டிற்கான தேசிய தண்ணீர் விருதுகள் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது.
தேசிய தண்ணீர் மசோதா 2012-ற்கு ஏற்ப மாநிலத்தின் தண்ணீர் கொள்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளதா, விவசாயத்திற்கான தண்ணீர் கட்டமைப்புகள், மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள், நீர் நிலைகள் மேலாண்மை, கழிவுநீர் மறுசுழற்சி மேலாண்மை போன்ற பல்வேறு தகுதி நிலைகளின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது. நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இந்த விருது வழங்கப்பட்டது.
- இந்த பட்டியலில் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் பெற்றுள்ளன.
- சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த பஞ்சாயத்து, சிறந்த நகராட்சி, சிறந்த ஆய்வு, சிறந்த செய்தித்தாள் என 21 வகைகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- நதிகளை மீட்கும் மாவட்டங்களுக்கான விருதில் தென்னிந்தியாவின் மாவட்டங்களில் வேலூர் மற்றும் கரூர் மாவட்டங்கள் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளன.
- தண்ணீரைப் பாதுகாக்கும் மாவட்டங்களுக்கான விருதில் பெரம்பலூர் மாவட்டம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
- தண்ணீர் மேலாண்மை குறித்த சிறந்த ஊராட்சிக்கான பட்டியலில் தூத்துக்குடி மாவட்டத்தின் சாஸ்தாவிநல்லூர் கிராமம் முதலிடம் பெற்றுள்ளது.
- தண்ணீர் மேலாண்மைக்கான சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியலில் மதுரை மாநகராட்சி முதலிடம் பெற்றுள்ளது.
- புதுச்சேரி காட்டேரிகுப்பத்தைச் சேர்ந்த இந்திராகாந்தி அரசு உயர்நிலைப் பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.