சீனா பாகிஸ்தான்

சீனா – பாகிஸ்தான் புதிய ராணுவ ஒப்பந்தம் பின்னணி என்ன?

சீனா தனது போர் விமானங்கள் மற்றும் துருப்புகளை பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தானின் விமானப் படைகள் பாகிஸ்தானில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளன. பாகிஸ்தான் சிந்தியிலுள்ள தட்டா மாவட்டத்தில் போஹ்லாரி விமானப் படைத்தளத்தில் இக்கூட்டுப் பயிற்சி நடக்கவுள்ளது. 

பாகிஸ்தாடை விமானப் படைத்தளத்தில் சீன போர் விமானங்கள்

இந்நிலையில் நேற்று, நாடுகளுக்கிடையேயான போர் விமானங்களின் நகர்வுகளைப் பற்றி பதிவிடும் ட்விட்டர் பக்கம், “போஹ்லாரி விமானப் படைத்தளத்தில் சீனாவின் போர் விமானங்கள் காணப்பட்டதாக” பதிவிட்டுள்ளது.

கையெழுத்திடப்பட்ட ராணுவ ஒப்பந்தம்

கடந்த நவ.30-ம் தேதி சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வெய் ஃபெங்கேவினுடைய ( Wei Fenghe) பாகிஸ்தான் பயணத்தின் போது இவ்வொப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. 

இவ்வொப்பந்தம் பற்றிக் கூறிய வெய் பெங்கே, “இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையேயான ராணுவ உறவை உயரிய நிலைக்கு இட்டுச் செல்லும். இரு நாடுகளுக்கும் பொதுவான பிரச்சனைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள உதவும். இவ்விரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைக் காப்பதும், இப்பிராந்தியத்தின் அமைதி நிலையை நிலைநாட்டுவதுமே இந்த ஒப்பந்ததின் நோக்கம்” என கூறியிருந்தார். 

சீனாவின் One Belt One Road திட்டமும், பாகிஸ்தானும்

சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே அனைத்துமட்ட உறவுகளும் வலுப்பெற்று வருகின்றன. சீனாவின் வணிகக் கட்டமைப்புத் திட்டமான ”ஒரே மண்டலம் ஒரே பாதை (One Belt One Road)” திட்டம் பாகிஸ்தானை மையப்படுத்தியும் உள்ளது. இதற்காகவென்றே சீனா- பாகிஸ்தான் பொருளாதார வழிப்பாதை திட்டம் (China Pakistan Economic Corridor- CPEC) திட்டமானது இருநாடுகளுக்கிடையே ஒப்பந்தமாகி செயற்பட்டு வருகிறது. இத்திட்டமானது சீனாவை பாகிஸ்தான் வழியாக அரேபியப் பெருங்கடலுடன் இணைக்கும் சரக்கு போக்குவரத்துத் திட்டமாகும்.

இத்திட்டத்தின் மூலம் சீனாவின் மேற்குப் பகுதியை பாகிஸ்தானின் சாலை மற்றும் ரயில் பாதைகள் வழியாக அரேபியப் பெருங்கடலுடன் இணைப்பது. பலுசிஸ்தான் மாகாணத்திலுள்ள கவதார் துறைமுகத்தை மையப்படுத்தி இத்திட்டம் உருவாக்கப்பட்டது. 

சீனாவிலிருந்து ஐரோப்பிய நாடுகள் வரைக்குமான துறைமுகங்களை இணைக்கும் சீனாவின் முத்துமாலை திட்டத்தில், மியான்மாரின் க்யாபிக்யு மற்றும் இலங்கைத் தீவின் அம்பந்தோட்டா துறைமுகம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக, சீனாவின் துறைமுக இணைப்பாக கவதார் துறைமுகம் உள்ளது. 

சீனாவின் நான்கரை லட்சம் கோடி முதலீடு

4.43 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய சீனா- பாகிஸ்தான் பொருளாதார வழிப்பாதை திட்டம் சீனாவின் நிதி முதலீட்டில் செயற்படுத்தப்படுவதாகும். 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம் படிப்படியாக முழுமையடைந்து வருகிறது. 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதன்முதலாக சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சரக்கு சீனா- பாகிஸ்தான் பொருளாதார வழிப்பாதையைப் பயன்படுத்தி கவதார் துறைமுகத்தின் மூலம் ஆப்ரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்தியாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் ஒப்பந்தம்

CPEC வழிப்பாதைக்கான பாதுகாப்பு கேந்திரமாகவே போஹ்லாரி விமானப்படைத்தளம் அமைக்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட போஹ்லாரி விமானப்படைத்தளம், வான் மற்றும் கடற்வழி தாக்குதல் நடத்துவதற்கான அமைவிடத் திட்டத்துடன் உருவாக்கப்பட்டது. இந்த விமானப் படைத்தளத்தில் கடந்த ஆண்டும் சீனா- பாகிஸ்தான் வான்படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுப்பட்டன. கடந்த மாத இறுதியில் கையெழுத்தான சீனா- பாகிஸ்தான் ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தமானது, மிக முக்கியமாக CPEC வழிப்பாதைக்கான ராணுவப் பாதுகாப்பு நோக்கில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. 

சீனாவின் மேற்கெல்லை மற்றும் மேற்குப் பிராந்தியத்தின் ராணுவ நலனின் அடிப்படையிலேயே சீனா – பாகிஸ்தான் ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. அமெரிக்கசார் வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருக்கும் இந்தியாவிற்கு சீனாவின் இக்குறிப்பிட்ட ராணுவ ஒப்பந்தம் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும். 

அமெரிக்க-சீனா முரண்பாட்டில் கூர்மையடையும் இந்தியா-பாக் முரண்பாடு

அமெரிக்கா- சீனாவிற்கிடையேயான புவிசார் அரசியல் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இவ்விரு நாடுகளுக்கிடையேயான முரண்பாடானது தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தியிருக்கிறது. 

சீனாவை எதிர்கொள்ள இந்தியாவுடன் சமீபத்திய BECA மற்றும் COMCASA ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு ராணுவ ஒப்பந்தங்களை அமெரிக்கா கையெழுத்திட்டது. இந்தியா – அமெரிக்கா ராணுவ ஒப்பந்தமானது, பாகிஸ்தானையும், சீனாவை வணிக உறவு நிலையிலிருந்து, அதற்கடுத்த கட்டமாக ராணுவ உறவை வலுப்படுத்துவதை நோக்கி நகர்த்தியியிருக்கிறது.

இதனையடுத்து சீனாவும், பாகிஸ்தானும் தற்போது ராணுவப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் குறித்த முழுமையான விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை. 

அமெரிக்கா/இந்தியா – சீனா/ பாகிஸ்தான் அணிகளின் முரண்பாடானது காஷ்மீரிலும், அருணாச்சலப் பிரதேச எல்லைகளிலும், அசாதாரண சூழலாக வெளிப்படுகின்றன. விரைவில் இந்த ஒப்பந்தங்களினால் இந்த அசாதாரண சூழல் மேலும் தீவிரமடையக் கூடிய நிலை தென்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *