சிரியா

சிரியாவில் அமெரிக்கா நடத்தியுள்ள வான் தாக்குதல்; ட்ரம்ப்பை பின்தொடரும் பைடன்

சிரியாவில் இயங்கி வரும் அமைப்பொன்றின் முகாமில் அமெரிக்கா வான் தாக்குதலை நடத்தியிருக்கிறது. சிரியா – ஈராக் எல்லைப் பகுதியில் அமைந்திருந்த கதைக் ஹெசபுல்லா என்கிற அமைப்பின் முகாமை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. கதைக் ஹெசபுல்லா அமைப்பு ஈரான் ஆதரவு அமைப்பு என சொல்லப்படுகிறது. 

ISIS-ஐ எதிர்க்கும் கதைக் ஹெசபுல்லா

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான பிராந்திய அரசியல் போட்டியில், சிரியா மற்றும் ஈராக் பகுதிகளில் அமைந்திருக்கும் அமெரிக்காவின் படைத்தள முகாம்களுக்கு கதைக் ஹெசபுல்லா மூலம் ஈரான் நெருக்கடி கொடுத்து வந்தது. மேலும் அமெரிக்க ஆதரவு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை கதைக் ஹெசபுல்லா எதிர்கொண்டு வந்தது.

கதைக் ஹெசபுல்லா அமைப்பு கடந்த மாதங்களில் ஈராக்கிலுள்ள அமெரிக்க முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியிருக்கிறது. அதற்கு எதிர்வினையாக தற்போது அமெரிக்கா அந்த அமைப்பின் முகாம் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. 

ஈரான் தேசிய பாதுகாப்பு செயலர் என்ன சொல்கிறார்?

அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஆளான கதைக் ஹெசபுல்லா, அப்பிராந்தியத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வந்தது. எனவே அமெரிக்காவின் இத்தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்துள்ள ஈரான் தேசிய பாதுகாப்பு செயலாளர் அலி ஷம்கானி (Ali Shamkhani), “அமெரிக்காவின் இச்செயலானது குறிப்பிட்ட பிராந்தியத்தில் தீவிரவாதத்தை தீவிரப்படுத்தி வலிமைப்படுத்துவதற்கே உதவும்” என கூறியுள்ளார். 

ரஷ்யாவோ, “அமெரிக்காவின் இச்செயல் சிரியாவின் இறையாண்மைக்கு எதிரானது” எனக்கூறி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. 

ஈரான் – அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்த முறிவின் விளைவு

2015-ம் ஆண்டு ஈரான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட ஐ.நா நிரந்தர உறுப்பு நாடுகளுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே அணு ஆயுத உற்பத்தி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. இதன்படி ஈரான் தனது அணு ஆயுத உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும், ஈரான் மீதான தடைகளைக் குறிப்பிட்ட நாடுகள் நீக்கவும் ஒப்பந்தம் செய்து கொண்டன. குறிப்பிட்ட இவ்வொப்பந்தத்தை 2018-ம் ஆண்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஒருதலைபட்சமாக முறித்துக் கொண்டது; தொடர்ந்து, ஈரான் மீது பல்வேறு தடைகளை அறிவித்தது. 

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே அசாதாரண சூழல் உருவானது. 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதி ஈரான் ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானி அமெரிக்காவின் வான் தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிகழ்வானது இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றச் சூழலை உருவாக்கியது. இம்மோதல் போக்கின் காரணமாக கடந்த மாதம் ஈரான் மீண்டும் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிகளில் ஈடுப்பட்டது. 

ட்ரம்பையே பின்தொடரும் பைடன்

அமெரிக்காவின் புதிய அதிபராக பைடன் பதவியேற்றவுடன் இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கான விருப்பத்தை தெரிவித்தன. 

இந்நிலையில் இந்த விமான தாக்குதல் மூலம் ஈரான் குறித்த தனது நிலைப்பாட்டை அமெரிக்க பைடன் அரசு சூசகமாக வெளிப்படுத்தியிருக்கிறது. மேலும் வளைகுடா நாடுகள் பலவற்றில் போர் நடவடிக்கைகளில் ஈடுபடும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் தொடர்ச்சியை ஜோ பைடன் சிரியாவில் வான் தாக்குதல் மூலம் தொடங்கி, தொடர்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *