நன்னீர் மீனினங்கள்

புரதக் குறைபாட்டிற்கு வழிகோலும் நன்னீர் மீனினங்களின் அழிவு

கடந்த சில நாட்களாக தேர்தல் கூட்டணி, பங்குச்சந்தை, கிரிக்கெட்  போன்ற பல தலைப்புச் செய்திகளை நாம் அன்றாடம் கடந்து சென்றிருக்கிறோம். ஆனால் நன்னீர் மீன்கள் பற்றிய ஒரு கவனத்தை ஈர்க்கும் செய்தியை நாம் கவனிக்க மறந்திருக்கிறோம். கடந்த வாரம் 16 சர்வதேச சூழலியல் பாதுகாப்பு அமைப்புகள் வெளியிட்ட புதிய அறிக்கை மனித வாழ்வாதாரத்திற்கு முக்கியமான நன்னீர் மீன்களில் மூன்றில் ஒரு பங்கு மீனினங்கள் விரைவில் அழிந்துபோகும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கிறது.

18,075 நன்னீர் மீனினங்கள்

“உலகால் மறக்கப்பட்ட மீனினங்கள்” (World’s Forgotten Fishes) என்ற ஆராய்ச்சி நிறுவனம் உலகிலுள்ள 18,075 நன்னீர் மீனினங்கள் பற்றிய விவரங்களைத் தொகுத்திருக்கிறது. இந்த நன்னீர் மீன்களின் வகைகளை தொகுத்தால் அது உலகிலுள்ள மீனினங்களில் பாதிக்கும் மேற்பட்டவையாகவும், முதுகெலும்பு உள்ள உயிரினங்களில் கால் பங்கும் இருக்கும் என்றால் அதன் மிகப்பெரிய உயிர் மற்றும் உணவு சங்கிலியின் முக்கியத்துவத்தை அறியலாம். 

‘இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச நிறுவனம்’ (International Union for Conservation of Nature – IUCN) வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி 80 நன்னீர் மீனினங்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாகக் கூறுகிறது. இதில் 16 வகையான மீனினங்கள் கடந்த 2020-ம் ஆண்டில் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

புரோட்டின் சத்தின் முதன்மைக் காரணி

அந்த அறிக்கையின்படி நன்னீரில் வளரும் மீன்களே ஆசியா மற்றும் தென் அமெரிக்கா நிலப்பகுதியில் வசிக்கும் 200 மில்லியன் மக்களுக்கு புரோட்டீன் சத்திற்கான முதன்மை காரணியாக விளங்குகிறது. மேலும் மேற்குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் 60 மில்லியன் மக்களுக்கு நன்னீர் மீன்கள் மூலம் சிறந்த வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. இதில் குறிப்பிடத்தக்கதாக பொழுதுபோக்கிற்காக மீன்பிடிப்பை மேற்கொள்வோரும் ஆண்டிற்கு 100 பில்லியன் டாலர் அளவில் பொருளீட்டுகின்றனர். அதேநேரத்தில் நன்னீர் மீன்வளர்ப்பு 38 பில்லியன் டாலர் மதிப்பிலான தொழிலாக மதிப்பிடப்படுகிறது.

தற்போதுள்ள விவரங்களின்படி கணக்கிட்டால், 1970-களில் இருந்து இடம்பெயரும் நன்னீர் மீன்களின் எண்ணிக்கையானது 76% சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது.  நன்னீர் மீன்களின் பெருக்கத்தில் பேரழிவு தரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பெரியளவிலான மீன்களில் (30 கிலோகிராம் அல்லது 66 பவுண்டுகளுக்கு மேல் கனமானவை) 94% சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளன.

நன்னீர் மீனினங்களின் அழிவிற்கான காரணங்கள்

இந்த அறிக்கையை வெளியிட்ட குழுக்களில் ஒன்றான உலக வனவிலங்கு நிதியத்தின் (World Wildlife Fund -WWF) நன்னீர் விஞ்ஞானி மைக்கேல் தீம் (Michele Thieme), பல ஆண்டுகளாக நன்னீர் சுற்றுச்சூழல் அமைப்பின் சீரழிவு குறித்து ஆய்வு செய்து வருகிறார். அவர் இந்த நன்னீர் மீனினங்களில் ஏற்பட்டுள்ள பேரழிவைப் பற்றி குறிப்பிடும்போது “தரவுகள் மிக தெளிவாக நம்மிடம் இருக்கின்றன. அதன்படி உலகின் மிக நீளமான ஆறுகளின் மூன்றில் இரண்டு பங்கு அணைகளாலும், மற்ற கட்டுமானங்களாலும் ஆங்காங்கு தடை செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது மூன்றில் ஒரு பங்கு ஆறுகள் மட்டுமே அதன்போக்கில் எந்த தடைகளும் இல்லாமல் கடலுடன் இணைகின்றன. நாம் ஏற்படுத்தியிருக்கும் செயற்கை கட்டுமானங்கள் நதியின் போக்கில் துண்டான வெள்ளபோக்கை ஏற்படுத்தியிருக்கின்றன. இத்தகைய செயற்கை கட்டுமானங்கள் நன்னீர் மீன்களுக்கு சுதந்திரமாக, இயற்கையாக இடம்பெயரும் நகர்வை தடை செய்கின்றன. இதனால் விரைவாக மாறக்கூடிய சூழல்களுக்கு ஏற்ப அவை மாற இயலாமல் அழிவை நோக்கி செல்கின்றன” என்கிறார்.

மனித தவறுகளால் நன்னீர் மீன்கள் மிகவும் பாதிக்கப்படுவதில் ஆச்சரியமில்லை என்று அவர் கூறுகிறார். மீனினங்களில் ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு, மீனினங்களின் வாழ்விட அழிவு, இயற்கையாக பாயும் ஆறுகளில் கட்டப்படும் அணைகள், நீர்ப்பாசனத்திற்கான நீரை அதிகமாக திருப்பிவிடுதல் மேலும்  உள்நாட்டு, விவசாய மற்றும் தொழில்துறை மாசுபாடுகளும் சில முக்கிய காரணிகளாகக் குறிப்பிடுகிறார்.

நன்னீர் மீன்கள் நமது வாழ்வில் முக்கியமானவை

“பொதுவாக மற்ற விலங்குகள் அல்லது கடல் மீன்கள்கூட நம் கவனத்தை ஈர்க்கும். ஆனால் நன்னீர் மீன்கள் நம் கவனத்தை ஈர்ப்பதில்லை. நன்னீர் மீன்களுக்கு ‘கண்காணா தொலைவில்’ என்ற சொற்றொடர் நன்கு பொருந்தும். ஏனெனில் அவை ஆறுகள் மற்றும் ஏரிகளின் இருண்ட மேற்பரப்புக்குக் கீழே வாழ்கின்றன” என்று தீம் கூறுகிறார். அவைகள் கடல்நீரில் தெளிவாகப் புலப்படும் பவளப்பாறைகளில் வாழ்வதில்லை. நன்னீர் மீன்கள் நமது வாழ்க்கையில் முக்கியமானவை. அவை இல்லாவிட்டால் உணவுச்சங்கிலி சிதைவுற்று இந்த பூமியின் பரந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் நம் கண்முன்னே நொறுங்கி சிதைவதைக் காண்போம்.

அமெரிக்காவில்தான் அழிவு அதிகம்

நன்னீர் மீனினங்களில் ஏற்பட்டுள்ள 80 உலகளாவிய அழிவுகளில் 19 மீனின வகைகள் அமெரிக்க மீனினங்கள் ஆகும். இந்த எண்ணிக்கை வேறு எந்த நாட்டை விடவும் அதிகம். அமெரிக்கா ஏற்கனவே அதன்  நடுத்தர மற்றும் நீண்ட ஆறுகளை சேதப்படுத்தியிருக்கிறது. இந்த சேதங்கள் நன்னீர் மீனினங்களில் வெளிப்படையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த காலக்கட்டங்களில் ஒவ்வொரு நாடும் தங்களுக்கு தேவையான ஆற்றல் திட்டங்களை திட்டமிடுவதில் முக்கியமான தருணங்களில் உள்ளன. அவர்களுக்கு இன்னும் காற்று மற்றும் சூரியஆற்றல்ஆகியவற்றை ஆராய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. 

அழிவைத் தடுக்க என்ன செய்யலாம்?

இதன்மூலம் அவற்றின் நீர்மின்சக்தி திட்டங்களை நதிகளின் ஓட்டத்திற்கும் மீன்களின் இடம்பெயர்வுக்கும் இடையூறு விளைவிக்காத வண்ணம் மிகவும் நிலையான வழிகளில் திட்டமிடலாம். இதன்மூலம் ஆறுகள் மற்றும் நன்னீர் மீன்களுக்கு அவர்கள் ஏற்கனவே செய்த சேதங்களை தவிர்க்க முடியும்.

5-வது சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான மாநாட்டின் (Convention on Biological Diversity -CBD) பல்லுயிர்கள் பற்றிய அறிக்கையில் நன்னீர் வாழ்விடங்களில் அவற்றின் பன்முகத்தன்மைக்கான அவசரகால மீட்புத் திட்டத்தை பாதுகாப்பு நிபுணர்கள் குழு கோடிட்டுக்காட்டியது. அந்த அறிகையில் முக்கியக் கூறுகளாக  மீன்வளத்தை நிலையான முறையில் நிர்வகித்தல் மற்றும் புனரமைத்தல், மீனினங்களின் முக்கியமான வாழ்விடங்களை பாதுகாத்தல் மற்றும் நீர்நிலையின் மாசுபாட்டைக் குறைத்தல் ஆகியவை அடங்கும். 

இந்த அறிக்கை இயற்கைக்கான புதிய ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டதையும் மேலும் அந்த திட்டத்தில் மக்களும் தங்களது ஈடுபாட்டினை உணர்ந்து செயலாற்றுவார்கள் என்று சூழலியல் ஆய்வாளர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்  .

“நன்னீர் மீன்களைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பது நமக்கும்  தெரியும் என்பதே ஒரு நல்ல செய்தியாகும். ஏனெனில் இதன்மூலம் உலகின் நன்னீர் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கான புதிய ஒப்பந்தத்தை பாதுகாப்பதென்பது, இறந்து கொண்டிருக்கும் நமது ஆறுகள், ஏரிகள் மற்றும் ஈரநிலங்களுக்கு மீண்டும் உயிரைக் கொடுக்கும் ”என்று உலக வனவிலங்கு நிதியத்தின் ஸ்டூவர்ட் ஓர்(Stuart Orr) கூறுகிறார்.

“இந்த ஒப்பந்தம் உறுதியாக நிறைவேற்றப்பட்டால் நன்னீர் மீன் இனங்களை அவற்றின் அழிவின் விளிம்பிலிருந்து மீட்க இயலும் மேலும்  நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களுக்கு உணவு மற்றும் வேலைவாய்ப்புகளை பாதுகாத்தல், கலாச்சார சின்னங்களைப் பாதுகாத்தல், பல்லுயிர் பெருக்கம் மற்றும் நல்வாழ்வு சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் ஆகிய செயல்கள் நன்றாக மேம்படும். இதன் மூலம் மனித இனத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதிப்படுத்தலாம்.” என்கிறார் ஸ்டூவர்ட் .

சூழலியல் மாசுபடாமல் காப்பது என்பது நன்னீர் மீனினங்களின் பேரழிவிலிருந்து மீட்க உதவும். கோடிக்கணக்கான மக்களின் உணவிற்கு ஆதாரமாகவும், பொருளீட்டுவதற்கான வழியாகவும் இருக்கக்கூடிய இந்த நன்னீர் மீனினங்களை காப்பது என்பது மனித உணவுச்சங்கிலிக்கும் இன்றியமையாதது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *