பாகிஸ்தான் - இலங்கை

இம்ரான் கானின் இலங்கை பயணத்தின் புவிசார் அரசியல் என்ன?

கடந்த வாரம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். கொழும்புவில் நடைபெற்ற பாகிஸ்தான்- இலங்கை வர்த்தக முதலீட்டு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற அவர், சில முக்கியமான ஒப்பந்தங்களை இலங்கை அரசுடன் கையெழுத்திட்டிருக்கிறார். 

இரு நாடுகளுக்கிடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாக பேசப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வணிகத்தை எட்டுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

கெளதார் துறைமுகத்துடன் இலங்கை துறைமுகங்களை இணைக்கும் முயற்சி

இதனை அடிப்படையாக வைத்து இலங்கை துறைமுகங்களை பாகிஸ்தானின் தென் பகுதியில் அமைந்திருக்கும் கெளதார் துறைமுகத்துடன் இணைப்பதற்கான முயற்சியை இரு தரப்பும் தொடங்க உள்ளன. 

பாகிஸ்தானின் கெளதார் துறைமுகம் ‘சீனா- பாகிஸ்தான் பொருளாதார முனையத்தின் (China Pakistan Economic Corridor)’ மிக முக்கியமான அம்சமாகும். இத்துறைமுகத்துடன் இலங்கையை இணைப்பதன் மூலம் மேற்காசிய சந்தையுடன் அதனை இணைக்க முடியுமென பேசப்பட்டுள்ளது. 

இருநாட்டு உறவை ராணுவ நிலைக்கு வளர்க்கும் முயற்சி

மேலும் இப்பயணத்தின் போது இரு நாடுகளுக்கிடையேயான உறவை வர்த்தகத்திலிருந்து, ராணுவ நிலைக்கு மேலும் வளர்த்தெடுக்க இச்சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டிருக்கிறது. மிக முக்கியமாக ராணுவத் தளவாட கொள்முதலுக்கென்று இலங்கைக்கு 50 கோடி அமெரிக்க டாலர்களை கடன் வழங்கியிருக்கிறது பாகிஸ்தான். 

முன்னதாக இந்தியா, ஜப்பான், இலங்கை கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமான, கொழும்பு துறைமுக கிழக்கு- சரக்கு பெட்டக முனையத் திட்டத்திலிருந்து இந்தியா மற்றும் ஜப்பானை இலங்கை நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சீனா-அமெரிக்கா பனிப்போரால் தீர்மானிக்கப்படும் வெளியுறவுக் கொள்கைகள்

சீனாவின் ‘ஒரே மண்டலம் ஒரே பாதை (One Belt One Road)’ திட்டத்தின் விளைவாக, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனா- மியான்மார்- பாகிஸ்தான்- இலங்கை நாடுகளுக்கிடையேயான உறவுகள் வலுப்பெற்று வருகின்றன. இதனை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்கா- இந்தியா- ஜப்பான்- ஆஸ்திரேலிய நாடுகள் தங்கள் கூட்டு இந்தோ- பசுபிக் கடற் பிராந்திய உறவை வலுப்படுத்தி வருகின்றன. இதற்கேற்றார் போல் இரு முகாம்களின் வெளியுறவுக் கொள்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன. 

பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை பயணத்திற்கு முந்தைய வாரம் தான், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாலத்தீவு மற்றும் மொரிசியஸூக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்பயணத்தின் போது அந்நாடுகளுக்கு, ரானுவத் தளவாட கொள்முதலுக்காக இந்திய அரசு சில மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் கொடுத்திருந்தது கவனிக்கதக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *