இந்திய உணவுக் கழகம்

ஊரடங்கு காலத்தில் அரசு சேமிப்புக் கிடங்குகளில் 1550 டன் உணவு தானியங்கள் வீணாக்கப்பட்டுள்ளது

கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் மட்டும் இந்திய உணவுக் கழகத்தின் சேமிப்புக் கிடங்குகளில் 1550 டன் உணவு தானியங்கள் வீணாகியிருப்பது தெரிய வந்துள்ளது. இதனை இந்திய நுகர்வோர் மற்றும் உணவுத் துறை அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

வேலையில்லாமல் பட்டினியால் சாவதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் குழந்தைகளோடு ஆயிரக்கணக்கான கி.மீ சொந்த கிராமங்களுக்கு நடந்து கொண்டிருந்த காலத்தில் இது நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாடு முழுதும் பலர் வருமானமின்றி பசியால் அலைந்து கொண்டிருந்த நாட்களில்தான் உணவு தானியங்கள் வீணாகியுள்ளது. 

நுகர்வோர் அமைச்சகம் வெளியிட்டுள்ள  தகவலின் படி மே மாதம் 26 டன் உணவுப் பொருட்களும், ஜூன் மாதம் 1456 டன்களும், ஜூலை மாதம் 41 டன்களும், ஆகஸ்ட் மாதம் 51 டன்களும் உணவு தானியங்கள் வீணாகி இருக்கிறது. ஆனால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. அப்பொழுதே  மக்களிடம் பகிர்ந்தளித்திருந்தால் பல லட்சம் மக்களின் பட்டினியைத் தடுத்திருக்கலாம்.

இந்திய உணவுக் கழகத்தின் சேமிப்பு கிடங்குகள் மிக அதிக பாதுகாப்போடு தான் இருக்கும். மேலும் பூச்சுக்கொல்லிகள் நவீன முறையில் பயன்படுத்தப்பட்டு தான்  பாதுகாக்கப்படும். பெரும் இயற்கை சேதம் மற்றும் போக்குவரத்து விபத்துகளில் சிறிய அளவில் வீணாவது இயல்புதான். ஆனால் 1550 டன்கள் என்ற அளவுக்கு வீணாவது என்பது பெரிய இழப்பு. இது பல்வேறு  சந்தேகங்களை ஏற்படுத்துவதாய் இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் நவீன விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தி உணவு தானியங்கள் பாதுகாக்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

இதே காலகட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பெருந்தொற்றில் ஊரடங்கின் காரணமாக ஒரு குடும்பத்திற்கு ஐந்து கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். நிர்மலா சீத்தாராமன் அவர்களின் அறிவிப்பின் படி, ஒதுக்கியதாக சொல்லப்பட்ட எட்டு லட்சம் கோடி உணவு தானியங்களில் 2.64 லட்சம் டன் மட்டுமே ஆகஸ்ட் 31 வரை விநியோகிக்கப்பட்டுள்ளது.

ஜுலை மாதம் மட்டும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட உணவு தானியங்கள் 15,223 டன்  மட்டுமே. ஆனால் இந்த நான்கு மாதங்களில் வீணாகிப்போன உணவு தானியங்கள் இந்த அளவில் 10 சதவீதத்திற்கும் அதிகம். ஆகஸ்ட் மாதம் விநியோகம் செய்யப்பட்ட உணவு தானியங்கள் 7,643  டன்  மட்டுமே. இதில் இன்னோரு செய்தி என்னவென்றால் குஜாராத் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியத்தில் 88% மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னும் விநியோகம் செய்யப்பட்டிருப்பது வெறும் ஒரு சதவீதம் தான்.  

இந்த பெருந்தொற்று காலத்தில் பட்டினியில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பல ஆயிரம் கி.மீ நடந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு. விநியோகம் செய்யபட்ட உணவு தானியங்களின் அளவில் 10 சதவீதம்  வீணடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *