நகோர்னா-கரபாக் எனும் மலைத்தொடர் சூழ்ந்த பகுதிதான் இப்போது ஆர்மீனியாவுக்கும், அசர்பைஜானுக்கும் இடையில் நடக்கும் போரின் மையப் புள்ளியாக இருந்து வருகிறது. ஆர்மீனியாவுக்கும் அசர்பைஜானுக்கும் இடையிலான உரிமைப் பிரச்சினையாக கடந்த இருபது ஆண்டு காலமாக நகோர்னா-கரபாக் பகுதி இருந்து வருகிறது.
நகோர்னா-கராபக் பகுதியின் பரப்பளவு 4,400 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இப்பகுதியில் பெரும்பான்மையாக ஆர்மீனிய மக்கள் வசித்து வருகிறார்கள். 1921-ம் ஆண்டு சோவியத் அரசாங்கம் ஆர்மீனிய மக்கள் பெரும்பான்மையாக இருந்த இப்பகுதியை அசர்பைஜானுடன் இணைத்தது.
சோவியத் ஒன்றியம் இருந்தவரையில் இந்த முரண் கூர்மைப்படாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. 1988-ல் சோவியத் யூனியன் உடையத் துவங்கிய போது, நகோர்னா-கரபாக் சட்டமன்றம் தனது பகுதியினை ஆர்மீனியாவுடன் இணைப்பதற்கான தீர்மானத்தினை நிறைவேற்றியது.
1988-ம் ஆண்டு ஆர்மீனியாவுடன் இணைக்க வலியுறுத்தி நகோர்னா-கரபாக் பகுதியைச் சேர்ந்த ஆர்மீனியர்கள் நடத்திய பேரணி
1989-ம் ஆண்டு பிரச்சினையின்போது அகதியாக குழந்தையுடன் வெளியேறும் ஒரு பெண்மணி
சோவியத் யூனியன் உடைவிற்குப் பிறகு தீவிரமடைந்த பிரச்சினை
1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைவிற்குப் பிறகு ஆர்மீனியாவிற்கும், அசர்பைஜானிற்கும் இந்த பகுதியின் உரிமை கோரல் தொடர்பாக போர் மூண்டது. அப்போது அந்த போரில் 30,000 வரை உயிரிழந்தனர். ஒரு லட்சம் பேர் அகதிகளானார்கள்.
அசர்பைஜானுடனான சண்டையில் ஆர்மீனிய படையினர்
1991-ம் ஆண்டின் போரின் போது நகோர்னா-கரபாக் பகுதியிலிருந்து ஆர்மீனியாவிற்கு இடம்பெயர்ந்த ஆர்மீனிய குடும்பம் ஒன்று/ படம்:AFP
சண்டையின் போது அசர்பைஜானைச் சேர்ந்த ஒரு பெண்மணி அச்சத்தில் குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும் காட்சி
1993-ம் ஆண்டு ஆர்மீனியா நகோர்னா-கரபாக் பகுதியினை தனது நாட்டின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததுடன், அசர்பைஜானின் 20 சதவீத எல்லைப் பகுதியையும் ஆக்கிரமித்தது. இந்நிலையில் 1994-ம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையில் ரஷ்ய அரசு ஒரு அமைதி ஒப்பந்தத்தினைக் கொண்டு வந்தது. அப்போதிலிருந்து அந்த அமைதி ஒப்பந்தம்தான் நடைமுறையில் இருந்து வந்தது.
1991-ம் ஆண்டு போரில் உயிரிழந்த தன் மகனின் கல்லறையில் கதறும் ஆர்மீனியப் பெண்/ படம்:AFP
அதன்பிறகு 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தப்பட்டாலும், அடிக்கடி இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையில் மோதல் போக்குகள் தொடர்ந்து கொண்டே வந்தன.
2016-ம் ஆண்டு மீண்டும் சண்டை தீவிரமடைந்தது. 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நான்கு நாட்கள் சண்டைக்குப் பிறகு இரண்டு நாடுகளும் புதிதாக ஒரு அமைதி ஒப்பந்ததிற்கு வந்தன.
2016-ம் ஆண்டு சண்டையில் உயிரிழந்த ஆர்மீனிய ராணுவ வீரர்கள்
1990களிலிருந்து அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா இணைந்து உருவாக்கிய பேச்சுவார்த்தைக் குழுவானது தொடர்ச்சியாக இரு நாடுகளுக்கும் மத்தியில் பேச்சுவார்த்தையை நடத்தி வந்தது. 2017-ம் ஆண்டு ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் அதிபர்கள் ஜெனீவாவிற்கு வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் எந்தவொரு நிரந்தர தீர்வும் கிட்டவில்லை.
ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் அதிபர்களுடனான சந்திப்பில் ரஷ்ய அதிபர் புதின்
எண்ணெய் வளம் மிகுந்த அசர்பைஜான்
அசர்பைஜான் ஒரு நாளைக்கு 8 லட்சம் எண்ணெய் பீப்பாய்களை உற்பத்தி செய்கிறது. மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவினை ஏற்றுமதி செய்யும் முக்கிய ஏற்றுமதியாளராக அசர்பைஜான் இருக்கிறது.
துருக்கிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயுவினை அனுப்பும் மிகப்பெரிய பைப்லைன்களையும் அசர்பைஜான் கொண்டிருக்கிறது. இந்த பைப்லைன்கள் சண்டை நடக்கும் பகுதிக்கு மிக அருகில் 16 கி.மீ தொலைவிற்குள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆர்மீனியா கிறித்துவ மத அடிப்படையிலான நாடாகவும், அசர்பைஜான் இசுலாம் அடிப்படையிலான நாடாகவும் இருக்கிறது.
துருக்கி, ஈரான், ரஷ்யா தலையீடுகள் என்ன?
அசர்பைஜானுக்கு ஆதரவாக துருக்கி நிற்கிறது. நகோர்னா கரபாக் பகுதிக்கு உரிமை கோருகிற அசர்பைஜானுக்கு ஆதரவாக துருக்கி அதிபரின் அலுவலகம் பல அறிக்கைகளை அளித்து வருகிறது. துருக்கி அசர்பைஜானுக்காக சண்டை போடுவதற்கு மேற்கு ஆசியாவிலிருந்து கூலிப்படைகளை நியமித்து வருவதாகவும் செய்திகள் பல செய்தி நிறுவனங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளன.
முதல் உலகப் போரின் போது துருக்கியின் ஒட்டோமான் பேரரசினால் நடத்தப்பட்ட ஆர்மீனிய இனப்படுகொலைக்கு துருக்கி மன்னிப்பு கோர வேண்டும் என்று தொடர்ச்சியாக ஆர்மீனியா கோரி வருவதும் குறிப்பிடத்தக்கது. ஈரான் நாட்டில் அசெர் பிரிவைச் சேர்ந்த மக்களைக் கொண்டிருப்பதால் ஈரானும் இந்த சண்டையில் தலையிடும் வாய்ப்பு இருக்கிறது.
ஆர்மீனியா-அசர்பைஜான் இரண்டு நாடுகளுடனும் ரஷ்யா உறவினைப் பேணி வருவதால் அமைதி ஒப்பந்தத்தினை மேற்கொள்வதில் விருப்பம் காட்டி வருகிறது. அசர்பைஜானைக் காட்டிலும் ஆர்மீனியாவே அதிகமாக ரஷ்யாவைச் சார்ந்து இருக்கிறது. ஆர்மீனியாவில் ஒரு படைத் தளத்தினையும் ரஷ்யா கொண்டிருக்கிறது.
கடந்த ஒரு வார காலமாக ஆர்மீனியாவிற்கும் அசர்பைஜானுக்கும் இடையிலான சண்டை கடும் தீவிரமடைந்துள்ளது. தொடர் குண்டுவீச்சுகள் இருபுறத்திலும் நடைபெற்று வருகின்றன. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் சண்டை இன்னும் தீவிரமடையும் வாய்ப்பிருக்கிறது.