அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள், கேபிடல் என்றழைக்கக்கூடிய அமெரிக்காவின் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபைக்குள் புகுந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுப்பட்டிருக்கின்றனர்.
இந்த வன்முறை வெறியாட்டம் காரணமாக நான்கு பேர் இறந்துள்ளனர்.
கடந்த நவம்பர் 7-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானது. கடும் இழுபறிக்கு இடையே ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் அதிக சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஜோ பைடன் 51.4% வாக்குகளும், குடியரசுக் கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அமெரிக்க அதிபருமான டிரம்ப் 46.9% வாக்குகளும் பெற்றிருந்தனர்.
தேர்தல் முடிவு வெளியாகி, தனது தோல்வி தெரிய வந்த நிலையிலிருந்தே அதிபர் டிரம்ப், தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்திருப்பதாகக் கூறினார்.
தேர்தல் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்தையும் நாடினார். ஆனால் அதிபர் டிரம்பின் மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
வரும் 20-ம் தேதி புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ள நிலையில், அதிபர் தேர்தலில் அவரின் வெற்றியை அங்கீகரிக்கும் விதமாக செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை வியாழக் கிழமை கூடியது. இந்நிலையில் இதனை எதிர்த்து டிரம்ப் ஆதரவாளர்கள் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைக்குள் நுழைந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுப்பட்டிருக்கின்றனர்.
- முன்னதாக வலதுசாரிகளான குடியரசுக் கட்சியினர் மற்றும் டிரம்ப் ஆதரவாளர்கள், ஜோ பிடனை அமெரிக்க அதிபராக அங்கீகரிக்கும் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபையைக் கண்டித்து பேரணி ஒன்றுக்கு திட்டமிட்டிருந்தனர்.
- இப்பேரணியில் உரையாற்றிய அதிபர் டிரம்ப், தானே வெற்றி பெற்றதாகவும், ஆனால் நாம் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். குறிப்பிட்ட பேரணியில் தானும் பங்கேற்க போவதாக கூறிய டிரம்ப், பின்னர் பேரணியில் கலந்துகொள்ளாமல் வெள்ளை மாளிகைக்கு சென்றார்.
- ஆனால் பேரணியில் திரண்டவர்கள் கேபிடலை முற்றுகையிட்டு, செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையை சூறையாடினர்.
- இதனை ஆதரித்து அதிபர் டிரம்ப் ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். இதன் காரணமாக ட்விட்டர் நிர்வாகம் டிரம்பின் ட்விட்டர் கணக்கை ஒரு நாள் தடை செய்துள்ளது; பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிரந்தரமாக தடை செய்துள்ளது.
- மேலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் அதிபர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்களும் ‘அமெரிக்க-வலதுசாரிகளின்’ கேபிடல்-வன்முறை வெறியாட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- கேபிடலை சூறையாடிய கும்பலைச் சேர்ந்தவர்களில் இந்திய கொடியும் ஏந்தியிருந்தது சர்ச்சையாகி உள்ளது.
அதிகரிக்கும் வலதுசாரிகளின் வன்முறை போக்கு
கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் வலதுசாரிகளினுடைய வன்முறைப் போக்கு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் 2018-ம் ஆண்டில் மட்டும் 20 பேர் வலதுசாரிகளின் வன்முறை நிகழ்வுகளினால் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 13 பேர் கொல்லப்பட்ட பிட்ஸ்பர்க் சியன்கோக் சம்பவமானது, அதிபர் டிரம்ப் தொடர்ந்து செய்து வரும் வந்தேறி பிரச்சாரத்தின் தூண்டுதலின் காரணமாக நிகழ்த்தப்பட்டது ஆகும்.
அமெரிக்காவில் கொரோனா ஊரடங்கின் போது கூட, “ஊரடங்கு மற்றும் தனிநபர் இடைவெளிக்கு எதிரான “Anti-social distancing and anti-stay-at-home order” கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.
உலகின் அதிசிறந்த ஜனநாயக நாடாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, அமெரிக்க சார் ஆட்சி மாற்றத்திற்காக லத்தீன்-அமெரிக்க, ஆப்ரிக்க, அரபு நாடுகள் உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளில் அமெரிக்கா நிகழ்த்திய வன்முறை யுக்தி, இன்று உள்நாட்டிலும் செயல்படுத்தப்படுத்த வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.
பிற நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கைகளில் அமெரிக்கா கடைபிடித்து வரும் வலதுசாரிய வன்முறைப் போக்கை, டிரம்ப் தனது ஆட்சிக் காலத்தில் அமெரிக்க- சமூக மயமாக்கியிருக்கிறார். அதுவே, அமெரிக்க வலதுசாரிகளினுடைய இத்தகைய வன்முறை வெறியாட்டத்திற்கு காரணமாகும்.