விவசாயிகள் போராட்டம் தில்லி

ஆறு மாதம் தங்குவதற்கான உணவுப் பொருட்களுடன் டெல்லியில் போராடக் குவிந்திருக்கும் விவசாயிகள்!

இந்திய ஒன்றிய அரசு நிறைவேற்றிய மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிரான எழுச்சி செப்டம்பர் மாதம் முதல் தொடர்ந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த சட்டங்களை நீக்க வலியுறுத்தி டில்லியை நோக்கி அணிவகுத்து வருகின்றனர்.

நேற்றும்(28/11) பஞ்சாப் மற்றும் பல மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து இந்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டெல்லியின் எல்லைப்புற பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் குவிந்து வந்தனர்.

விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்

டெல்லி எல்லைக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகை, நீர் பீரங்கிகள் கொண்டு தண்ணீர் பீச்சியடித்து போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் விரட்டி வந்தனர். பல்வேறு தரப்புகளில் இருந்து அழுத்தம் வந்ததைத் தொடர்ந்து டில்லி காவல்துறையினால் 27/11/2020 அன்று விவசாயிகள் டில்லியில் உள்ள புராரியில் இருக்கும் நிரங்கரி மைதானத்தில் போராட்டத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டனர். 

கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் திரும்ப செல்ல மாட்டோம்

விவசாயிகள் தங்கள் தலைவர்களுடன் சேர்ந்து அரசு ஒதுக்கிய இடத்திற்கு செல்வதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய இருப்பதாக தெரிவித்த நிலையில், அதில் சிலர் மட்டும் அங்கே செல்ல முடிவு செய்தனர். ஆனால் எல்லையில் கூடியிருந்த விவசாயிகள் தாங்கள் காவல்துறையை நம்பவில்லை என்றும் தங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் தாங்கள் திரும்ப செல்ல மாட்டோம் என உறுதியாக தெரிவித்து வந்தனர்.

இரவு பகல் பாராமல் தொடரும் போராட்டம்

விவசாயிகள் கைகளில் கொடிகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு டெல்லி நகர எல்லைப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கில் இரவு முழுவதும் கடும் குளிரில் கூடியிருந்தனர்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருந்தும் விவசாயிகள் டெல்லி நோக்கி அணிவகுத்து வர தொடங்கினர்.

போராட்டத்திற்கு நடந்து வரும் ஒரு வயதான பாட்டி

“விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் தவறிவிட்டது, நாங்கள் இப்போது டெல்லிக்குச் செல்கிறோம்” என்று உத்திரப்பிரதேச விவசாய சங்க (Bharathiya kissan sangh) செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கிட் ‘ஏ.என்.ஐ ‘(ANI) செய்தியில் தெரிவித்துள்ளார்.

டெல்லி மற்றும் ஹரியானா எல்லைப் பகுதியில் போராட்டங்கள் தொடரும் என விவசாயத் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக பாரதிய கிசான் யூனியனின் பொதுச் செயலாளர் ஹரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். முன்னதாக டெல்லி காவல்துறை ஒதுக்கிய புராரியின் மைதானத்தை மறுத்து விவசாயிகள் ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடர அனுமதிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்தனர்.

ஆறு மாதம் தங்க தயாராக உள்ளோம்

“நாங்கள் ஆறு மாத காலத்திற்கு இங்கு தங்குவதற்கு முழுமையாகத் தயாராகி வந்து உள்ளோம். மேலும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றபடாவிட்டால் நீண்ட நாட்களுக்கு இங்கேயே தங்குவதற்கு தயாராக உள்ளோம்” என்று 25 வயதான விவசாயி தில்பாக் சிங் ‘தி இந்து’ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். 

ஒரு டிரக்கின் உள்ளே மாவு, பருப்பு வகைகள் மற்றும் உருளைக்கிழங்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒரு அடுப்பு பெரிய பாத்திரங்களுடன் வெளியே வைக்கப்பட்டு இருந்தது மற்றும் மெத்தைகள் டிரக்கின் உள்ளேயும் வெளியேயும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மொபைல் போன்களுக்கு சார்ஜ் ஏற்றும் வசதி மற்றும் கூடுதல் பேட்டரிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தண்ணீர் டேங்கர்கள் முறையான இடைவெளியில் நிறுவப்பட்டுள்ளன. மேலும் சாப்பிட விரும்பும் எல்லோருக்கும் டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுவால் இலவசமாக உணவு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

“நாங்கள் புராரியில் உள்ள மைதானத்திற்கு செல்லப் போவதில்லை. ஏனென்றால் நாங்கள் அங்கேயே பல நாட்கள் உட்கார்ந்திருப்போமே தவிர எதுவும் நடக்காது. இங்கே, எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.” என்று 24 வயதான ஹர்விந்தர் சிங் தெரிவித்தார்.

மாணவர்களின் ஆதரவு

பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் மாநில பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த இளம் பெண்கள் குழுவும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு புரட்சிகர பாடல்களைப் பாடி மக்களை உற்சாகமூட்டிய வருகின்றனர்.

“எனது பெற்றோர் இங்கு வரவில்லை. நான் எனது குழுவுடன் போராட்டத்திற்கு வந்துள்ளேன். எனது பெற்றோர் இங்கு வருவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர், ஏனென்றால் அவர்களும் விவசாயிகளே” என்று பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பிஎச்டி பயின்று வரும் ஜஸ்ப்ரீர் கவுர் (28) தெரிவித்தார்.

அமைதி வழியில் தொடரும் போராட்டம்

காவல்துறையினர் அமைத்துள்ள தடுப்புகளைத் தாண்டி யாரும் செல்லவில்லை. “அவர்கள் [காவல்துறை] அங்கே[தடுப்புகளுக்கு அந்த பக்கம்] இருக்கிறார்கள், நாங்கள் இங்கே இருக்கிறோம். எல்லாம் அமைதியாக இருக்கிறது.” என்றார் சிங்கு எல்லையில் இருக்கும் 40 வயதான விவசாயி ஹர்தேவ் சிங் பப்பர்.

போராட்டம் தொடர்பாக நேற்று மட்டும் 11 விவசாய சங்கத் தலைவர்கள் மீது பல்வேறு சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கண்டனங்கள்

“முதலில் எங்கள் விவசாயிகளின் ஜனநாயக உரிமைகளை எம்.எல்.கட்டார் அரசு தடை செய்கிறது. நீர் பீரங்கி, கண்ணீர்ப்புகை மற்றும் லத்திகளை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் டெல்லிக்குச் செல்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதன் மூலம் அரசாங்கம் அவர்களின் காயங்களுக்கு உப்பு தேய்க்கிறது. வெட்கக்கேடானது!” என்று சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த முன்னால் ஒன்றிய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ட்வீட் செய்துள்ளார்.

சிபிஐ (எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சுரி “இந்திய விவசாயிகளின் வலிமையையும், உறுதியையும் படைகளை பயன்படுத்துவதன் மூலம் உடைக்க முடியாது”. என தெரிவித்துள்ளார்.

“இன்று பிரதமர் மோடியின் ஆணவம் ராணுவ வீரர்களை விவசாயிக்களுக்கு எதிராக நிற்க வைத்துள்ளது. இது மிகவும் ஆபத்தானது” என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட் பதிவிட்டு புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *