நரேந்திர மோடி தலைமையில் 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபின் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்குடன் பல ஜனநாயக மீறல்களை செய்து ஆட்சிக் கவிழ்ப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சிதான் இன்று புதுச்சேரியில் நடந்திருக்கிறது.
அருணாச்சலப் பிரதேசத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு
அருணாச்சலப் பிரதேசத்தில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நபம் துகி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. மொத்தம் 60 உறுப்பினர்கள் உள்ள சட்டப்பேரவையில் 44 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரசைச் சேர்ந்தவர்கள்.
ஆனால் இந்த ஆட்சியின் இறுதிக்காலத்தில் 2016-ம் ஆண்டு காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவரான கலிகோபுல் மற்றும் 21 சட்டமன்ற உறுப்பினர்களையும் காங்கிரசில் இருந்து பிரித்தெடுத்து, அதன்பின் ஆட்சியைக் கவிழ்த்து, பாஜக உறுப்பினர்கள் 13 பேரின் ஆதரவுடன் கலிகோபுலை முதலைச்சர் ஆக்கியது பாஜக.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று ஆட்சிக் கவிழ்ப்பு செல்லாது என்று நபம் துகி தீர்ப்பு வாங்கிய சில தினத்தில் காங்கிரஸ் சார்பில் பெமா காண்டு முதலைமச்சர் ஆக்கப்பட்டார். 2016 செப்டம்பரில் முதலமைச்சர் பெமா காண்டு உட்பட அனைத்து காங்கிரஸ் உறுபினர்களையும் காங்கிரசிலிருந்து பிரித்து அருணாச்சல் மக்கள் கட்சிக்கு கொண்டு சென்ற பாஜக, 2016 டிசம்பரில் அவர்களை பாஜகவில் சேர்த்தது. 43 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் மேலும் இரண்டு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களுமாக மொத்தம் 45 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவோடு 11 உறுபினர்களைக் கொண்ட பாஜக தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. ஒரு முதலைமைச்சர் ஒரே ஆண்டு மூன்று கட்சிகளுக்குச் சென்ற கேலிக்கூத்து நடந்தது.
முன்னாள் முதல்வர் நபம் துகி மட்டுமே தற்போது காங்கிரசில் எஞ்சியுள்ள சட்டமன்ற உறுப்பினராவார். இறுதியில் பாஜகவை நம்பி காங்கிரசை விட்டு வந்த கலிகொபில், முதலைமச்சர் இல்லத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவாவில் ஆட்சியமைத்த பாஜக
கோவாவில் 2017 தேர்தலின் போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேநேரத்தில் தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக காங்கிரஸ் இருந்தது. ஆனால் 2-வது கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர். அத்துடன் பாஜகவினர் 10 காங்கிரஸ் சட்டமன்ற உறுபினர்களை அழைத்துச் சென்று ஆட்சியமைத்தனர். அவர்களில் மூவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.
மணிப்பூரில் ஆட்சியமைத்த முறை
மணிப்பூரில் 2017-ம் ஆண்டில் தேர்தல் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் வெற்றிபெற்றது. பா.ஜ.க 21 இடங்களில் வெற்றிபெற்றது. அதன்பின், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஷியாம்குமார் சிங் பாஜகவில் சேர்ந்தார். நாகா மக்கள் முன்னணியின் சட்டமன்ற உறுப்பினர்கள், தேசிய மக்கள் முன்னணியின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் லோக் ஜனசக்தியின் தலா ஒரு சட்டமன்ற உறுப்பினர், ஒரு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரின் ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சி அமைத்தது. இதற்கிடையில் ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரசிலிருந்து பிரிந்து பா.ஜ.க-வில் சேர்ந்தனர்.
கர்நாடகாவில் ஆட்சிக் கவிழ்ப்பு
2018-ம் ஆண்டு கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்து காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் (மஜத) ஆட்சி அமைத்தனர்.
இருப்பினும் கர்நாடகாவில் 14 மாதங்களிலேயே பாஜக ஆட்சியைக் கவிழ்த்தது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் 13 பேர் மற்றும் மஜத சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் உட்பட மொத்தம் 17 பேரை ராஜினாமா செய்ய வைத்து சட்டப்பேரவையில் காங்கிரஸ் – மஜத கூட்டணி. பெரும்பான்மையை இழக்க வைத்தது.
இதைத் தொடர்ந்து பாஜக-வின் எடியூரப்பா அங்கு மீண்டும் முதல்வரானார். இதன்பிறகு ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. 15 இடங்களில் பாஜக 12-ல் வெற்றி பெற்றது. பாஜக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட 15 பேரில் 13 பேர் காங்கிரஸ் மற்றும் மஜதவில் இருந்து கட்சி மாறியவர்கள். அதில் 11 பேர் வெற்றி பெற்றனர். இந்த 11 பேரில் 10 பேர் தற்போது கர்நாடகத்தில் அமைச்சர்களாக உள்ளனர்.
சிக்கிம் எதிர்க்கட்சியை அபகரித்து கணக்கைத் துவக்கிய பாஜக
சிக்கிமில் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று, மே மாதம் அதன் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், மொத்தமுள்ள 32 இடங்களில் பிராந்தியக் கட்சிகளான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 17 இடங்களிலும், சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
முன்னாள் முதல்வர் பவன்குமார் சாம்லிங் உட்பட சிக்கிம் ஜனநாயக முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் தலா 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் சிக்கிம் ஜனநாயகக் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்றிருந்த போதிலும், அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 ஆக இருந்தது. இந்த நிலையில், சிக்கிம் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த 13 சட்டமன்ற உறுப்பினர்களில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி பாஜக-வில் இணைந்தனர். இதன்மூலம் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் ஒரு இடத்தில் கூட தேர்வு செய்யப்படாமல் 2 சதவீத வாக்குகள் கூட பெறாத பாஜக அம்மாநிலப் பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.
சிக்கிம் ஜனநாயக முன்னணியின் மேலும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக-வின் அழுத்தத்தால் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதன்மூலம் மக்களால் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்ட சிக்கிம் ஜனநாயக முன்னணி சார்பில் தற்போது முன்னாள் முதல்வர் பவன்குமார் மட்டுமே சிக்கிம் சட்டமன்றப் பேரவையில் ஒற்றை சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இதன்பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் 3 இடங்களில் பாஜக 2 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்பிறகே பாஜக அங்கு தேர்தல்மூலம் தனக்கான முதல் கணக்கை முறையாகத் தொடங்கியது.
இப்படி மாநிலங்களுக்கு மாநிலம் படையெடுத்து வருவதுபோல, பாஜக தனக்கான செல்வாக்கு இல்லாதபோதிலும் செல்வாக்கு மிகுந்த எதிர்க்கட்சியினரை தன்பக்கம் இழுத்துக்கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றி வந்தது.
தமிழ்நாட்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காமல் பார்த்துக் கொண்டது
2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி ”முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை” எனக்கூறி டி.டி.வி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் அன்றைய தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்தனர். ”தமிழக அரசு உடனடியாகப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்” எனக் கோரி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்றம் முதலில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு செப்டம்பர் மாதம் வரை தடை விதித்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமலே டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 2019-ம் ஆண்டு இடைத்தேர்தலில் அதிமுக வென்று மீண்டும் பெரும்பான்மை பெரும் வரை, பாஜக தன் அதிகாரங்களைப் பயன்படுத்தி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலே பார்த்துக் கொண்டது.
பெரும்பான்மை இல்லாத அதிமுக அரசை ஜனநாயக அறத்தை மீறி பாதுகாத்த பாஜக இன்று புதுசேரியில் இரண்டே நாட்களில் ஆட்சியைக் கவிழ்த்துள்ளது.
பாண்டிச்சேரியில் ஆட்சிக் கவிழ்ப்பு
புதுச்சேரியில் 2016-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 30 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் தவிர மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு 3 பேரை சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்கலாம். இந்த நிலையில் புதுவை அரசின் பரிந்துரையின்றி பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக மத்திய அரசு நியமித்தது.
நியமன எம்.எல்.ஏக்களாக நியமிக்கப்பட்ட பாஜகவினர்
அவர்களுக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் பதவிப் பிரமாணம் செய்து வைக்காத நிலையில் கவர்னர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவ்விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது. அப்போது புதுச்சேரி பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரை மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும் என்றும், நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரத்தில் புதுச்சேரி அரசு தலையிடத் தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.
பாண்டிச்சேரியில் மக்களை சந்தித்து தேர்தலில் கடந்த காலங்களில் வெற்றிகள் ஏதும் பெறமுடியாத பாஜக நியமனங்கள் வழியாக சட்டமன்ற எண்ணிக்கையைத் துவங்கியது.
ஆட்சி அமைக்கப்பட்ட நாளில் இருந்தே ஆளுநர் கிரண்பேடியின் அதிகாரங்கள் வழியாக மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசிற்கு பல்வேறு நெருக்கடிகளை பாஜக கொடுத்துவந்தது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை இழுத்த பாஜக
காங்கிரஸ் அரசின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 18 ஆக இருந்தபோது பாஜக ஆதரவுடன் ஆட்சிக்கு எதிராக பேசிக் கொண்டிருந்ததால் 2020 ஜூன் 10-ம் தேதி புதுச்சேரி பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனவேலுவை தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர்.
வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நமச்சிவாயம் மற்றும் உசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தான் ஆகிய இருவரும் 2021 ஜனவரி 25-ம் தேதி பதவி விலகினர். அடுத்த சில தினங்களில் பாஜக தேசியத் தலைவர் நட்டா தலைமையில் இருவரும் பாஜக-வில் இணைந்தனர்.
அதனைத் தொடர்ந்து ஏனாம் பிராந்திய சட்டமன்ற உறுப்பினர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கடந்த 15-ம் தேதி பதவி விலகினார்.
அடுத்த நாளே பிப்ரவரி 16-ம் தேதி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜான்குமார் பதவி விலகினார்.
நாராயணசாமியின் அரசு கவிழ்ந்தது
பிப்ரவரி 16-ம் தேதி இரவு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்த கிரண்பேடியை விடுவித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தார். தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு பிப்ரவரி 16-ம் தேதி இரவு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை கூடுதல் பொறுப்பாக குடியரசு தலைவர் ஒப்படைத்தார்.
இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 17-ம் தேதி மாலை புதுச்சேரி வந்த தமிழிசை சௌந்தரராஜன், பிப்ரவரி 18-ம் தேதி காலை 9 மணிக்கு துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றார். பிப்ரவரி 22-ஆம் தேதிக்குள் (இன்று) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென பதிவியேற்ற முதல் நாளான பிப்ரவரி 18-ம் தேதியே தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டார்.
காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவைச் சேர்ந்த தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.வெங்கடேசனும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிநாராயணன் ஆகியோரும் பதவி விலகியபின் காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிகை 9 ஆகவும், திமுகவின் எண்ணிக்கை 2 ஆகவும் குறைந்தது. இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து ஆட்சியை இழந்துள்ளது புதுச்சேரி காங்கிரஸ் அரசு.
அடிப்படையில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு இந்தியா முழுவதும் ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருக்கிறது.