லசந்த விக்ரமதுங்க

என் மரணத்தின் பாதையை நான் அறிவேன்; கொல்லப்படுவதற்கு முன்பே தன் மரண சாசனத்தை எழுதிய பத்திரிக்கையாளர் லசந்த விக்ரமதுங்க

2009-ம் ஆண்டு இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் லசந்த விக்ரமதுங்க அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

லசந்த விக்ரமதுங்க இலங்கையின் சுதந்திர ஊடகவியலாளரும் பத்திரிகை ஆசிரியரும், வழக்கறிஞரும் ஆவார். 5 ஏப்ரல் 1958 அன்று பிறந்தவர் இவர். கொழும்பில் இருந்து வெளியாகும் த சண்டே லீடர் என்ற ஆங்கில இதழ், மற்றும் புதன் தோறும் வெளிவரும் “மார்னிங் லீடர்” வார ஏட்டின் ஆசிரியராகவும் இருந்து வந்தார். 

மிகவும் இளவயதிலேயே “சன்’ பத்திரிகையில் ஒரு செய்தியாளராகச் சேர்ந்து தனது ஊடகத்துறை வாழ்வை ஆரம்பித்தவர். 1982-ம் ஆண்டில் ’தி ஐலண்ட்’ பத்திரிகையில் இணைந்தார். அதேநேரம் அரசியலிலும் தன்னை இணைத்துக் கொண்டார். 1989-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு வடக்குத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனாலும் அவர் வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் ஆஸ்திரேலியா சென்று சிறிது காலம் தங்கிய பின்னர் மீண்டும் இலங்கை திரும்பி 1994-ம் ஆண்டில் சண்டே லீடர் பத்திரிகையை ஆரம்பித்தார்.

அரசை துணிச்சலோடு அம்பலப்படுத்திய தீரம்

ஊழல், முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் என எது நடந்தாலும், அதை சரியாக நேர்மையாக அம்பலப்படுத்தினார். சுனாமி நிதியாக வந்த கோடிக்கணக்கான பணத்தை மகிந்த ராஜபக்சே தனது பினாமி கணக்குக்கு மாற்றியதை சண்டே லீடர் வெளிப்படுத்தியது.  

இறுதி போர்க்காலத்தில் நிகழ்ந்த ஆயுத கொள்முதல் ஊழல்களை சண்டே லீடர்  அம்பலமாக்கியது. அரசாங்கம் யுத்த வெற்றியைக் கொண்டே அரசியல் நடத்தமுடியும் என்று பிரதமர் சொல்லியது சண்டே லீடரில் வெளியானது.

சொந்த மக்களையே குண்டு போட்டு கொல்லுகிற அரசாங்கம் என்றும், யுத்தவெற்றி இனவெறியைத் தூண்டுகிறது என்றும், இவ்வளவு உயிர்களை காவுகொடுத்து ஒரு வெற்றி தேவைதானா என்றும் அவர் எழுதிய கட்டுரைகள் தான் அவரை அரசு தரப்பு கொல்வதற்கு காரணமானது. 

கொலை செய்ய நடந்த முயற்சிகள்

லசந்தவைக் கொலை செய்வதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 1995 பெப்ரவரியில் லசந்த அவரது வாகனத்திற்குள் வைத்துத் தாக்கப்பட்டார். 1998 ஜூனில் அவரது வீட்டின் மீது கிரனேட் வீசப்பட்டது. 2005 அக்டோபரிலும் 2007 நவம்பரிலும் சண்டே லீடர் அச்சகத்திற்கு தீவைத்து நிர்மூலமாக்கச் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த சம்பவங்களில் எந்தவொரு  தொடர்பிலும்  காவல்துறை விசாரணைகளை நடத்தவில்லை 

வழக்கம் போல இவர் 2009, ஜனவரி 8 வியாழக்கிழமை காலை 09:30 மணியளவில் கொழும்பு கல்கிசையில் உள்ள ‘லீடர் பப்ளிகேஷன்’ அலுவலகத்திற்கு தனது வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்கப்பட்டார் 

தலையிலும் மார்பிலும் குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் இவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைக்குட்பட்டாலும், பிற்பகல் 1.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது கொலைக்கு எதிராக உலகம் முழுவதுமுள்ள ஜனநாயக சக்திகள் கண்டனம் தெரிவுத்தனர்.

மரண சாசனமாய் அமைந்த இறுதிக் கட்டுரை

ஜனவரி 11-ம் தேதி வெளியாக வேண்டிய ‘சண்டே லீடர்’ பத்திரிகைக்கு, “மரணத்தின் பாதையை நான் அறிவேன்” என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தை ஜனவரி 7-ம் தேதியே லசந்த எழுதுவிட்டார். இந்த தலையங்கம் அவர் இறந்தபின் பிரசுரமானது. லசந்த விக்கிரமதுங்க எழுதிய அந்த இறுதி கட்டுரையில் தன் மரணத்திற்குப் பின் என்ன நடக்கும் என்றும் தெளிவாக எழுதியிருந்தார்.

என் மரணத்தின் பாதையை நான் அறிவேன். தன் மீதான  ஒவ்வொரு தாக்குதலும் அரசாங்கத் தூண்டுதலில் நடந்தது என்று எண்ண எனக்கு காரணங்கள் இருந்தன. இறுதியாக நான் கொல்லப்படுகையில் இந்த அரசாங்கம்தான் என்னைக் கொல்லப்போகின்றது. என்று எழுதியவர் மேலும் 

”சுதந்திரத்தின் கரங்களை ஒடுக்குவதற்கு அரசு முதன்மையாக எடுத்திருக்கும் கருவியாக கொலை அமைந்துள்ளது. இப்போது பத்திரிகையாளர்கள், நாளை நீதிபதிகள். இதில் எவருக்கும் முன்னெப்போதையும்விட சிக்கல் அதிகமாயும்  தப்பும் வாய்ப்பு குறைவாகவும் உள்ளது” என்று கூறினார்

அதில் மகிந்தா! என்று தனது கடந்த கால நண்பனாக இருந்த  ராஜபக்சேவை நோக்கி என் மரணத்திற்கு பின் நீ போலியான சத்தத்தை எழுப்பிக்கொண்டு,  காவல்துறை அழைத்து வேகமாக விசாரணை மேற்கொள்வாய். கடந்த காலங்களில் நீ உத்தரவிட்ட விசாரணைகளைப் போலவே இப்போதும் நடக்கும். ஆனால், ஒன்றும் வெளியில் வராது. நம் இருவருக்கும் தெரியும், என் மரணத்துக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று. 

ஆனால், துணிந்து அவர் பெயரைச் சொல்ல முடியாது உன்னால். என் வாழ்க்கையில் மட்டுமல்ல, உன்னைப் பொறுத்து இதுதான் உனக்கும். உன் காலத்தில்தான் என் மரணம் நடந்தது என்பதை எந்த நேரத்திலும் உன்னால் மறக்க முடியாது!  

மனிதநேயம் வளம் பெறும். எத்தனை ராஜபக்சேக்கள் இணைந்தாலும் அதை அழிக்க முடியாது என்றும் கூறியிருந்தார்  

படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவுக்கு ஐநாவின் கல்வி மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ 2009-ம் ஆண்டுக்கான உலக பத்திரிக்கை சுதந்திர விருதை வழங்கியுள்ளது. இவ்விருது 2009, மே 3 ஆம் நாளன்று உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் கத்தார் நாட்டில் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *