மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடையும் 2020-21 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.7 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளதாக அரசு தரப்பு கணித்துள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவு என்று கருதப்படுகிறது.
தேசிய வருமானம் குறித்து ஆய்வு செய்த தேசிய புள்ளிவிவர அலுவலகம் (National Statistical Office) நேற்று வெளியிட்ட அறிக்கையின் படி வருகிற 2020-21ம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.7 சதவீதமாக சுருங்கிவிடும் என்று தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் 4.3 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது இந்த பின்னடைவு சாமானிய மக்களின் வாழ்க்கையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதர அறிக்கைகளின் கணிப்பு
மேலும் ரிசர்வ் வங்கி கணக்கீட்டின்படி 7.5% சதவீதம் குறையும் என்று அளவிடப்பட்டுள்ளது. ஐ.சி.ஆர்.ஏ மற்றும் கிரிசில் போன்ற மதிப்பீட்டு நிறுவனங்கள் 7.8 சதவீதம் மற்றும் 7.7 சதவீதம் வரை குறையும் என்று கணித்துள்ளன.
கடந்த செவ்வாய்கிழமை உலக வங்கி வெளியிட்ட உலகளாவிய பொருளாதார வாய்ப்பு அறிக்கையில், 2021 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 9.6% சுருங்கும் என்று கூறியுள்ளது. இது வீட்டுச் செலவு மற்றும் தனியார் முதலீட்டில் கடுமையான சரிவை பிரதிபலிக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
2011-12ம் ஆண்டு நிலையான விலையை (Constant Prices) அடிப்படையாக வைத்து பார்க்கும்போது வரும் 2020-21 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 134.40 லட்சம் கோடியை எட்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது 2019-20ம் ஆண்டின் தற்காலிக மதிப்பீடான 145.66 லட்சம் கோடியை விட குறைவானது.
2019-20 ஆம் ஆண்டில் 4.2 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும்போது 2020-21 ஆம் ஆண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மைனஸ்7.7% சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
எந்தெந்த துறைகள் சரிவை சந்திக்கும்?
நடப்பு நிதியாண்டில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி 9.4 சதவீத சரிவை சந்திக்கும் என்று யூகிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் இந்த துறை 0.03 சதவீதமாக வளர்ச்சி பெற்றிருந்தது.
‘வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு , ஒளிபரப்பு தொடர்பான சேவைகள் சுரங்க மற்றும் குவாரி துறைகள் பின்னடைவை சந்திக்கும் என்று NSO மதிப்பிட்டிருக்கிறது. இந்த துறைகளின் வளர்ச்சி 21.4% குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் வேளாண் துறை 2020-21 ஆம் ஆண்டில் 3.4 சதவீத வளர்ச்சியைக் காணும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இது 2019-20 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 4 சதவீத வளர்ச்சியை விட குறைவாக இருக்கும்.
மத்திய நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில், 2020-21 நிதியாண்டின் மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டுகளில் தொடர்ந்து பொருளாதார நடவடிக்கைகளில் எழுச்சி பெறுவதாகக் கூறியுள்ளது. மேலும் வி-வடிவ ( V-shaped recovery) மீட்சியைக் கணிப்பதாகவும் கூறியுள்ளது.