காவேரி - குண்டாறு

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்கிறது கர்நாடக பாஜக அரசு

காவிரி – குண்டாறு இணைப்பு திட்டம் என்பது காவிரி – அக்னியாறு – தெற்கு வெள்ளாறு – மணிமுத்தாறு – வைகை – குண்டாறு உள்ளிட்ட நதிகளை இணைக்கும் திட்டமாகும். இத்திட்டம் 2008-ம் ஆண்டு தமிழக அரசினால் அறிவிக்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக 21 பிப்ரவரி 2021 அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் புதுக்கோட்டை விராலிமலை அருகே அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

திட்டத்தின் பின்னணி 

புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் 14,400 கோடி ருபாய் செலவில் நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. 

முதல்கட்டமாக கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு வரை 6,941 கோடி ரூபாய் செலவில் 118 கி.மீ தொலைவிற்கு கால்வாய் வெட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 

இந்த இணைப்புத் திட்டத்தின் மூலம் அக்னியாறு, வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை, குண்டாறு ஆகியவற்றின் வெள்ளநீர் மற்றும் காவிரியின் உபரி நீர் ஆகியவற்றை சேகரிக்க முடியும் என்கிறது தமிழக அரசு. 

தீவிரமாக எதிர்க்கும் கர்நாடக பாஜக அரசு

தேர்தல் உறுதிமொழியாக காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தினை எடப்பாடி பழனிச்சாமி அரசு கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், கர்நாடக பாஜக அரசு இத்திட்டத்தினை அனுமதிக்க முடியாது என்று கூறியிருக்கிறது. 

காவிரிப் படுகையில் உள்ள மாநிலங்களிடம் இத்திட்டத்திற்கான எந்த சட்ட அனுமதியையும் தமிழக அரசு பெறவில்லை என்றும், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிறுத்தி மட்டுமே இதனை பேசி வருவதாகவும் கர்நாடக சட்ட அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 

மேலும் இத்திட்டத்தினை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல இருப்பதாகவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. 

அதிமுக-பாஜக கூட்டணியின் இரட்டை நிலைப்பாடுகள்

கர்நாடக அரசு இப்படி சொல்லி வரும் நிலையிலும் அதிமுக தலைவர்கள் இத்திட்டத்தினைக் குறித்து தேர்தல் பிரச்சாரங்களில் பேசி வருகிறார்கள். ஆனால் அதிமுக-வுடன் தமிழ்நாட்டில் கூட்டணியில் உள்ள பாஜக-வோ, கர்நாடக பாஜகவின் கருத்து குறித்து எதுவும் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறது. 

கர்நாடக பாஜக அரசு காவிரி-குண்டாறு எதிர்ப்பதற்கு அதிமுக தலைமையும் பாஜகவிற்கு எந்தவித கண்டனமும், எதிர்ப்பும் தெரிவிக்காமல் கடந்து வருகிறது. மக்களுக்காகத் தான் கூட்டணி என்றால், தமிழ்நாட்டின் திட்டத்திற்கு எதிரான பாஜக-வின் இந்த நிலைப்பாட்டினை எதிர்த்து எப்போது கேள்வி எழுப்பப் போகிறது அதிமுக?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *