அதானி மியான்மர்

மியான்மர் ராணுவத்தின் கொலைகளுக்கு துணைபோவதாக அதானி குழுமத்தின் மீது நடவடிக்கை

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மியான்மர் நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில் ஆங்சான் சூகியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் அந்த தேர்தலில் பல முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட  அரசை ராணுவம் ஏற்க மறுத்தது. இதனால் மியான்மர் ராணுவம்  ஆங்சான் சூகியின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு ராணுவ ஆட்சியை பிரகடனப்படுத்தியது.

701 பேர் கொலை

மேலும் ஆங் சான் சூகி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ராணுவம் அவசர நிலையை பிரகடனப்படுத்தி மக்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நான்கு மாதத்தில் 701 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3,021 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அமெரிக்காவில் மியான்மரின் பொது நிறுவனங்கள் முடக்கம்

இந்த அடக்குமுறையை எதிர்த்து பல்வேறு நாடுகள் மியான்மர் ராணுவத்தைக் கண்டித்துள்ளது. அமெரிக்காவில் செயல்படும் மியான்மர் பொது நிறுவனங்களை அந்த அரசு முடக்கியுள்ளது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில்தான் இந்தியாவின் அதானி குழுமம் மியான்மர் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு 30 மில்லியன் டாலர் பணம் செலுத்திய செய்தி கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாங்கோனின் துறைமுகம் அமைப்பதற்கான ஒப்பந்தம்

கெளதம் அதானி

மியான்மர் நாட்டின் யாங்கோன் நகரத்தில் ஒரு துறைமுகம் அமைப்பதற்காக அதானி குழுமம் அந்த நாட்டின் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள மியான்மர் பொருளாதாரக் கார்ப்பரேசனுடன் ஒரு நில குத்தகை ஒப்பந்தம் போட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 30 மில்லியன் டாலர்களைக் கட்டணமாக செலுத்துகிறது. யாங்கோன் பிராந்திய முதலீட்டு ஆணையத்தில் இருந்து கசியப்பட்ட ஆவணங்களில்  இருந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது. 

குற்றச்சாட்டுகளை மறுக்கும் அதானி நிறுவனம்

துறைமுகம் கட்டும் நோக்கத்தில் எந்தவித இராணுவத் தலைவர்களுடன் எந்த பேச்சுவார்த்தையிலும் நாங்கள் ஈடுபடவில்லை மேலும் இராணுவத் தலைமையுடன் ஈடுபடுவதாக வெளியாகும் தகவல்களை திட்டவட்டமாக மறுக்கிறோம் என்று கடந்த மாதம் அதானி குழுமம் அறிக்கை வெறியிட்டது.

ஏபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆவணங்கள்

ஆனால் அதானி போர்ட்ஸ் தலைமை நிர்வாகி கரண் அதானி 2019 ஜூலையில் இரணுவத் தலைவர் சீனியர் ஜெனரல் மின்ஆங் ஹ்லேங்கை சந்தித்த புகைபடங்களையும் வீடியோக்களையும் ஏபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

மியான்மர் தளபதிகளுக்கு அமெரிக்காவில் தடை

2017-ம் ஆண்டு உள்நாட்டு கலவரத்தை தூண்டிவிட்டு முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிரான பிரச்சாரத்தில் பங்கு வகித்ததற்காக மின்ஆங் ஹெயிலிங் உட்பட சில தளபதிகளுக்கு அமெரிக்காவில் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் 25-ம் தேதி மியான்மர் பொருளாதாரக் கழகம் மற்றும் மியான்மார் பொதுத்துறை நிறுவனங்களின் மீது அமெரிக்க அரசு பொருளாதார தடை விதித்தது. மியான்மர் ராணுவ அரசின் வணிக நடவடிக்கையை தடுக்கும் வகையில் அமெரிக்க அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

அதானி ஒப்பந்தம் மூலம் மியான்மர் ராணுவத்திற்கு கிடைக்கும் 22 மில்லியன் டாலர்

அதானி குழுமத்துடனான ஒப்பந்தம் மூலமாக மியான்மர் பொருளாதாரக் கழகம் மேலும் 22 மில்லியன் டாலர்களை துறைமுகத்திற்கான “நில அனுமதிக் கட்டணமாக” பெற வாய்ப்புள்ளது. என்று ஆஸ்திரேலிய சர்வதேச நீதித்துறை அமைப்பு மற்றும் ஜஸ்டிஸ் ஃபார் மியான்மர் என்ற அமைப்பும் சேர்ந்து கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இந்த அறிக்கை வெளியிட்ட மனித உரிமை வழக்கறிஞர் ராவன் அராஃப் பின்வருமாறு கூறியுள்ளார்.

”மியான்மார் ராணுவத்துடன் சேர்ந்து செயல்பட வேண்டாம் என்று அதானி குழுமத்திற்கு பல முறை பகிரங்கமாக அறிவிப்பு செய்தோம். இருந்தும் அவர்கள் மியான்மர் பொருளாதாரக் கார்ப்ரேசன் உடனான ஒப்பந்தத்திலிருந்து விலக மறுத்துவிட்டனர். அதானி குழுமம் கொடுக்கும் நிதியை மியான்மர் இராணுவமும் சர்வதேச குற்றங்களுக்காகப் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

S&P பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட அதானி போர்ட்ஸ் நிறுவனம்

ஆஸ்திரேலியாவில் அதானிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் ஒரு புகைப்படம் – File

அதானி துறைமுகம் இராணுவ கூட்டு நிறுவனத்துடன் சேர்ந்து செயல்படுவதாக 2019-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டது. அதில் மனித உரிமை மீறல்கள் காரணமாக இராணுவத்துடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதை அதானி குழுமம் பொருட்படுத்தவில்லை.

இதன் காரணமாக அதானி போர்ட்ஸ் நிறுவனத்தை அமெரிக்கா தனது S&P டாவ் ஜோன்ஸ் குறியீட்டின் நிறுவன பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *