மோடி மார்க் சூக்கர்பெர்க்

ஃபேஸ்புக் நிறுவனம் பாஜகவின் Fake IDகளை மட்டும் முடக்கவில்லை; வெளியான ஆவணம்

பாஜக எம்.பி ஒருவர் தனது செல்வாக்கினை உயர்த்திக் காட்டுவதற்காக பல்வேறு ஃபேக் ஐடிகளை உள்ளடக்கிய நெட்வொர்க் ஒன்றினை நடத்தி வந்திருக்கிறார். இதனை ஃபேஸ்புக் பணியாளரான சோஃபி சேங் (Sophie Zhang) ஒருவர் கண்டறிந்து, அதனை முடக்குவதற்காக நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியிருக்கிறார்.

முதலில் அந்த ஃபேக் ஐடி நெட்வொர்க் யாருடையது என்று தெரியாமல் அந்த நெட்வொர்க் மீது நடவடிக்கை எடுக்க முன்வந்த நிறுவனம், பின்னர் அது பாஜக எம்.பி. ஒருவரின் நெட்வொர்க் என்று தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்காமல் தவிர்த்தாக சோஃபி சேங் ஆவணங்களை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ’தி கார்டியன்’ ஊடகம் விரிவான செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

சம்மந்தப்பட்ட பாஜக எம்.பியின் பெயரை கார்டியன் செய்தி அறிக்கை இன்னும் வெளியிடவில்லை. 

கண்டறியப்பட்ட நான்கு சர்ச்சைக்குரிய போலி நெட்வொர்க்குகள்

சோஃபி சேங் பேஸ்புக் நிறுவனத்தில் Data Scientist ஆக பணிபுரிந்து வந்தவர். அவர் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நான்கு சர்ச்சைக்குரிய ஃபேக் ஐடி நெட்வொர்க்குகளை கண்டறிந்தார். அவை இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களின் ஃபேஸ்புக் பக்கங்களில் போலியாக லைக்குகள், கமெண்ட்கள், பகிர்வுகள் போன்றவற்றை ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டிருந்ததையும் கண்டறிந்தார். 

சோஃபி சேங்

அதில் இரண்டு நெட்வொர்க்குகள் பாஜக-வைச் சேர்ந்தவையாக இருந்தன. மற்ற இரண்டு நெட்வொர்க்குகள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவையாக இருந்தன.

ஃபேக் ஐடிகளை லாக் செய்யக் கோரி ஊழியர் அனுப்பிய புகார்

முதலில் இக்குழுக்களை பரிசீலித்த ஃபேஸ்புக் நிறுவனத்தின் ‘அச்சுறுத்தல் தடுப்புக்கான கண்காணிப்புக் குழு (Threat intelligence team)’ இந்த நெட்வொர்க்குகள் போலி நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தது. இந்த நெட்வொர்க்கில் வரும் கணக்குகளை லாக் செய்து, அவர்களின் அடையாள அட்டையைக் கேட்டு உறுதி செய்த பின்னரே மீண்டும் ஆக்டிவ் செய்ய வேண்டும் என்று சோஃபி சேங் பரிந்துரைத்தார். 

500 ஐடிகள் லாக் செய்யப்பட்டது; பாஜகவின் ஐடிகள் என தெரிந்தவை லாக் செய்யப்படவில்லை

2019 டிசம்பர் 19-ம் தேதி மூன்று நெட்வொர்க்குகளைச் சேர்ந்த 500 ஃபேஸ்புக் கணக்குகள் லாக் செய்யப்பட்டன. அடுத்த நாள் நான்காவது நெட்வொர்க்கைச் சேர்ந்த 50 கணக்குகளை லாக் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது அது நிறுத்தப்பட்டது. 

அதில் இருந்தது பாஜக எம்.பி. ஒருவரின் ஃபேஸ்புக் கணக்கு என்பது தெரியவந்தது. அந்த கணக்கில் இருந்துதான் 50 ஃபேக் ஐடிகளும் ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்த கணக்குகளை லாக் செய்யக் கோரி சோஃபி சேங் மீண்டும் புகார் அனுப்பினார். ஆனால் அவருக்கு எந்த பதிலும் நிறுவனம் அளிக்கவில்லை.

சித்தரிப்புப் படம்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஐடிகள் மட்டும் முடக்கப்பட்டது

தொடர்ந்து பலமுறை முயற்சித்தும் அந்த போலி கணக்குகள் லாக் செய்யப்படவுமில்லை. அவருக்கு பேஸ்புக் நிறுவனம் எந்த பதிலையும் அளிக்கவுமில்லை.

ஆனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட ஃபேக் ஐடி நெட்வொர்க்குகள் மீது மட்டும் துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் 2020 டெல்லி தேர்தலின் போது அந்த நெட்வொர்க் மீண்டும் உருவாக்கப்பட்டபோது மீண்டும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

ஆனால் பாஜக எம்.பியின் ஃபேக் நெட்வொர்க் மட்டும் நீக்கப்படவேயில்லை என்பதாக சோஃபி சேங் தெரிவித்துள்ளார். 

குற்றச்சாட்டை மறுத்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம்

இதுகுறித்து கார்டியன் செய்தி நிறுவனம் ஃபேஸ்புக் நிறுவனத்திடம் கேட்டபோது, இக்குற்றச்சாட்டினை அந்நிறுவனம் மறுத்துள்ளது. 2020 மே மாதத்தில் சில ஐடிகளை லாக் செய்திருப்பதாகவும், மற்ற ஐடிகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. 

இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆதரவாக ஃபேஸ்புக் செயல்படுவதாக ஏற்கனவே WSJ வெளியிட்ட ஆவணம்

ஏற்கனவே ஃபேஸ்புக் இந்தியா நிறுவனம் பாஜக தலைவர்களின் வெறுப்புப் பிரச்சாரங்களை நீக்க மறுத்ததாக Wall Street Journal ஊடகம் ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இந்துத்துவ அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க மறுத்ததாக ஆவணங்களை WSJ வெளியிட்டது. ஃபேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் பொறுப்பாளராய் இருந்த அங்கி தாஸ் என்பவர், தேர்தல் காலங்களில் பாஜகவிற்கு ஆதரவாக ஃபேஸ்புக் நிறுவனத்தை செயல்பட வைத்தார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அங்கி தாஸ், பொதுச்சேவையில் ஈடுபடப்போவதாகச் சொல்லி பதவி விலகினார். 

இந்நிலையில் தற்போது இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த்வர்களுக்கு ஆதரவாக பேஸ்புக் செயல்படுவதாக மற்றுமொரு ஆவணம் வெளியாகி இருப்பது அந்நிறுவனத்தை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *